புலன்களை அடக்காதீர்

அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சும் அடக்கிய அசேதன மாம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே. – (திருமந்திரம் – 2033)

விளக்கம்:
ஐந்து பொறிகளையும் அடக்கு என்று வலியுறுத்துபவர்கள் எதுவும் அறியாதவர்கள். ஐந்தும் அடக்கிய தேவர்கள் அங்கே வானுலகிலும் இல்லை. ஐந்து பொறிகளையும் அடக்கி விட்டால் நாம் சடப் பொருள் போல் ஆகி விடுவோம் என்பதை உணர்ந்து அடக்காமல் இருக்கும் அறிவை அறிந்து கொண்டேனே!

புலனடக்கம் என்பது அவற்றை வேலை செய்யாமல் அடக்குவது என்று அர்த்தம் ஆகாது. அப்படி புலன்களை இயங்காமல் செய்தால் நாம் அறிவற்ற சடப் பொருள் போல ஆகி விடுவோம். அவற்றை சரியான நெறியில் இயங்கச் செய்வதே அறிவுடைய செயலாகும்.

(அசேதனம் – அறிவற்ற சடப் பொருள்)

Those are ignorant, who insist to repress the five senses.
Not even the immortals could not do that.
If we repress the five senses, we'll be a insensible thing.
Thus we learnt not to suppress the senses.

ஐந்து சிங்கங்கள்

அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சுஅக மேபுகும்
அஞ்சின் உகிரும் எயிரும் அறுத்திட்டால்
எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே. – (திருமந்திரம் – 2026)

விளக்கம்:
நம் உடல் ஒரு காடு. அதில் ஐம்பொறிகளாகிய ஐந்து சிங்கங்கள் வாழ்கின்றன. இந்த ஐந்து சிங்கங்களும் வெளியே சென்று மேய்ந்து, பார்ப்பதை எல்லாம் ஆசைப்பட்டு வந்து நம் மனம் புகுந்து பிராண்டுகின்றன. இந்த சிங்கங்களின் நகங்களையும் பற்களையும் பிடுங்கி விட்டால் நாம் இறைவனை அடைவது உறுதி.

(அடவி – காடு,  அகம் – மனம்,    உகிர் – நகம்,  எயிறு – பல்)

Within us five lions are living, they are our five senses
They roam outside and return to our mind.
If we remove the claws and teeth of that lions,
It is sure that we shall reach God.

வரி செலுத்தி ஓய்ந்தோம்

ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள்
ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர்
ஐவரும் ஐந்த சினத்தொட நின்றிடில்
ஐவர்க்கு இறைஇறுத்து ஆற்றகி லோமே. – (திருமந்திரம் – 2027)

விளக்கம்:
ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை நமக்கு ஐந்து அமைச்சர்களாக இருக்கிறார்கள்.  அவர்கள் ஒவ்வொருத்தரின் கீழும் தொண்ணுற்றாறு வீரர்கள் வேலை செய்கிறார்கள். இவர்கள் அத்தனை பேரில் உள்ள ஒவ்வொருவரும் தாம்தான் நம்மை ஆள வேண்டும் என நினைக்கிறார்கள்.

இந்த அமைச்சர்கள் ஐவரும் நம்முடன் ஐந்து வகையான போர் தொடுத்தபடி இருக்கிறார்கள். இவர்களுக்கு நம்மால் வரி செலுத்தி மாளாது.

அரசர்களான நாம் நம் அமைச்சர்களை (ஐம்பொறிகளை) கட்டுபாட்டில் வைத்திருக்க முடியாமல் அவர்களின் போருக்கு பயந்து வரி செலுத்தி வருகிறோம்.

(மைந்தர் – வீரர்)

Our five senses are like five ministers under us.
Each minister have ninety six soldiers, each trying to rule us.
The five ministers are always doing war against us in their ways
Endless is the tax we are paying them.