மழை பெய்தாலும் கடமை தவறக்கூடாது

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்தண் நியமங்கள் செய்யுமின் என்றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந் தானே. – (திருமந்திரம் – 72)

தன் குளிர்ந்த சடையில் பவளம் சூடியுள்ள சிவபெருமான் நிறைந்த அருள் தருபவன். அந்த சிவபெருமான் தன்னிடம் மிகுந்த அன்பு வைத்திருக்கும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வருக்கும் செய்த உபதேசம் என்னவென்றால் எட்டுத் திசையிலும் பெரிய மழை பெய்தாலும் நியமங்களைத் தவறாமல் செய்ய வேண்டும் என்பதே!


சிவபெருமானிடன் உபதேசம் பெற்றவர்கள்

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே. – (திருமந்திரம் – 71)

பிறப்பு, இறப்பு ஆகிய இரண்டுமே இல்லாத பெருமை உடையவன் சிவபெருமான். அவன் தனது கடந்த கால பெருமையை வெளியே காட்டிக் கொள்வதில்லை. சந்திரன், சூரியன், அக்கினி ஆகிய மூன்று வடிவாகவும் உள்ள சிவபெருமான் சிவயோக முனிவர், பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய மூவர்க்கும், சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வருக்கும் உபதேசம் அருளினான்.


மேன்மை பெற்ற குருநாதர்கள்

நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. – (திருமந்திரம் – 70)

நந்தி பெருமானின் அருள் பெற்ற குருநாதர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வரும் நான்கு திசைகளுக்கு ஒருவராக சென்று தாம் பெற்ற அனுபவங்களை எல்லாம் மற்றவர்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். தம்முடைய ஆன்மிக அனுபவங்களை பிறர்க்கு பகிர்ந்ததால் மேன்மையானவர் ஆனார்கள்.


திருமூலரிடம் உபதேசம் பெற்ற ஏழு பேர்

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி யாமே. – (திருமந்திரம் – 69)

திருமூலரிடம் திருமந்திரத்தை உபதேசமாகப் பெற்றவர்கள் ஏழு பேர். 1. மாலாங்கன், 2. இந்திரன், 3. சோமன், 4. பிரமன், 5. உருத்திரன், 6. காலாங்கி, 7. கஞ்சமலையன்.

(கந்துரு – கட்டுத்தறி. கட்டுத்தறி போல அசையாதிருந்து யோகம் செய்யும் காலாங்கி)


நந்தி அருள் பெற்ற எட்டு பேர்

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே. – (திருமந்திரம் – 67)

நந்தி பெருமான் அருள் பெற்ற குருநாதர்கள் யார் யாரெல்லாம் என்று பார்த்தால் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வர். இவர்களுடன் சிவயோக முனிவர், பதஞ்சலி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய நால்வருடன் சேர்த்து மொத்தம் எட்டு பேருமாகும்.


பந்தங்களிலிருந்து விடுபடும் முறை

அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே. – (திருமந்திரம் – 66)

சிவபெருமான் பந்தங்களிலிருந்து பற்றை நீக்கும் முறையையும், இறைவனின் திருவடியில் பற்று வைக்கும் விதத்தையும் ஆகமங்களின் மூலமாக நமக்கு அருளினான். மேலும் அவ்வாகமங்கள் கண் இமைத்தல் ஒழித்து உயிர் போகின்ற முறையையும் சொல்லித் தருகின்றன. தமிழ் மொழி மற்றும் வடமொழி ஆகியவற்றில் உள்ள இந்த ஆகமங்கள் மூலமாக நாம் இறைவனை உணரலாம்.


ஊழிக்காலம்

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து
ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே. – (திருமந்திரம் – 65)

ஊழிக்காலத்தில் மழைக்காலம், கோடைக்காலம் எல்லாம் நின்று எங்கும் ஒரே பனி மயமாக இருந்தது. ஏரிகளில் எல்லாம் நீர் ஓடாமல் நின்று விட்டது. அந்த ஊழிக்காலத்தில் சிவபெருமான் ஆகமங்களை அன்னை பராசக்திக்கு சமஸ்கிருதத்திலும் தமிழிலும்  அருளினான்.


நந்தியம் பெருமான் சொன்ன ஒன்பது ஆகமங்கள்

பெற்றநல் ஆகமங் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தியம் வாதுளம்
மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந்
துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே. – (திருமந்திரம் – 63)

இருபத்தெட்டு ஆகமங்களுள் ஒன்பது ஆகமங்கள் முக்கியமானவைகாக நந்தியம் பெருமானால் உரைக்கப்பட்டவை. அவை 1. காரணம்,  2. காமிகம்,  3. வீரம்,  4. சிந்தியம்,  5. வாதுளம்,  6. யாமளம்,  7. காலோத்தரம்,  8. சுப்பிரம்,  9 மகுடம்.


ஒன்பது ஆகமங்கள் முக்கியமானவை

சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமமெங்கள் நந்திபெற் றானே. – (திருமந்திரம் – 62)

இருபத்தெட்டு ஆகமங்களுள் ஒன்பது ஆகமங்கள் முக்கியமானவை. அவற்றை சிவமான பரம்பொருளிடம் இருந்து சத்தியும் சதாசிவமும், உள்ளத்துக்கு உகந்த மகேசர், உருத்திரர், தவம் செய்த திருமால், நான்முகன் ஆகியோர் பெற்றார்கள். இவர்களோடு நந்தியம்பெருமானும், அந்த ஒன்பது ஆகமங்களைத் தான் பெற்று நமக்கு உரைத்தான்.


ஆகமங்களில் அறிவாய் விளங்குபவன்

பரனாய் பராபரம் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே. – (திருமந்திரம் – 61)

சிவபெருமான் ஆகமங்களின் மூலமாக பரம்பொருளை காட்டி அருளினான். அவனே இந்த உலகைத் தாங்கி நின்று சிவதர்மத்தை போதிக்கிறான். தேவர்கள் வணங்கி வழிபடும் அந்த நந்திபெருமான் ஆகமங்களில் அறிவாய் விளங்குகிறான்.