உயிரிலே கலந்தவன்

அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுஅற நின்ற கலப்பது உணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்
தணிவற நின்றான் சராசரம் தானே. – (திருமந்திரம் – 2010)

விளக்கம்:
ஆன்மாவில் சிவனும், சிவனில் ஆன்மாவும் ஒன்றாக கலந்திருப்பதை நிறைய பேர் உணர்ந்திருக்கவில்லை. ஒப்பில்லாத ஈசன் அவன், பிரபஞ்சம் முழுவதும் வற்றாமல் எங்கும் நிறைந்திருக்கிறான்.

(அணு – ஆன்மா,    சராசரம் – பிரபஞ்சம்)

He is inside the soul, the souls are inside Him.
Such the Soul and Siva are combined, but most people unaware of this.
Incomparable is His Grace, He spreads everywhere
in this universe, with out any abatement.

அவனுக்கா தெரியாது?

வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன்
தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம்
பொரஇருந் தான்புக லேபுக லாக
வரஇருந் தால்அறி யான்என்ப தாமே. – (திருமந்திரம் – 1889)

விளக்கம்:
தன்னை தேடி வருபவர்களை வரவேற்க வழியிலேயே நின்றிருப்பான் ஈசன். தன் அடியவரான நல்லவர்க்கு இன்பம் தரும் விதமாக தன்னையே தர இருக்கிறான் அவன். தன்னை சரணடைய வருபவரிடம் கலந்து கொள்ள தயாராக இருக்கிறான். அவனைப் போய் அறியாதவன் என்று சொல்லலாமா?

(பொர – பொருந்த,    புகல் – சரண்)

He is standing in the path to receive them who seek Him.
He wants to give Himself to his holy devotees.
He likes to unite with them, who stands waiting
to surrender his feet. How can we say 'He don't know me'!

புலன்களை அடக்காதீர்

அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சும் அடக்கிய அசேதன மாம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே. – (திருமந்திரம் – 2033)

விளக்கம்:
ஐந்து பொறிகளையும் அடக்கு என்று வலியுறுத்துபவர்கள் எதுவும் அறியாதவர்கள். ஐந்தும் அடக்கிய தேவர்கள் அங்கே வானுலகிலும் இல்லை. ஐந்து பொறிகளையும் அடக்கி விட்டால் நாம் சடப் பொருள் போல் ஆகி விடுவோம் என்பதை உணர்ந்து அடக்காமல் இருக்கும் அறிவை அறிந்து கொண்டேனே!

புலனடக்கம் என்பது அவற்றை வேலை செய்யாமல் அடக்குவது என்று அர்த்தம் ஆகாது. அப்படி புலன்களை இயங்காமல் செய்தால் நாம் அறிவற்ற சடப் பொருள் போல ஆகி விடுவோம். அவற்றை சரியான நெறியில் இயங்கச் செய்வதே அறிவுடைய செயலாகும்.

(அசேதனம் – அறிவற்ற சடப் பொருள்)

Those are ignorant, who insist to repress the five senses.
Not even the immortals could not do that.
If we repress the five senses, we'll be a insensible thing.
Thus we learnt not to suppress the senses.