ஒன்றே செய் அதை நன்றே செய்

இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்
பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி
எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென்
ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே. – (திருமந்திரம் – 1568)

விளக்கம்:
இந்தத் தவம் செய்தால் இந்த பலன் பெறலாம், அந்தத் தவம் செய்தால் அந்த பலன் பெறலாம் என்று நிறைய யோக முறைகளைக் கற்று சிலர் குழப்பிக் கொள்வார்கள். எந்த ஒரு யோகத்தையும் முழுமையாக செய்யாத அவர்களைப் பார்த்து எங்கள் நந்தித் தேவன் எள்ளிச் சிரிப்பான்.

செய்வது எந்த தவமாக இருந்தால் என்ன? அந்த தவம் பிறந்த இடம் எதுவாக இருந்தால் என்ன? செய்யும் தவத்தை மன ஒருமைப்பாடுடன் செய்பவர்கள் விரைவாக முத்தியான ஊரை அடைவார்கள்.

(நகும் – எள்ளிச் சிரிப்பான்,    ஒத்து – ஒருமைப்பட்டு,   ஒல்லை – விரைவாக)

Mad men classify meditation methods into many,
Our Lord Nandi laughs at them in pity.
What though the method? what though its birth place?
Those who practice in harmony will attain God quickly.

முதலைக்கு பயந்து கரடியிடம் மாட்டிக் கொண்ட கதை

ஆற்றிக் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும்
நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே. – (திருமந்திரம் – 1642)

விளக்கம்:
விரதம் இருந்து தவம் செய்ய முயலாதவர் சாஸ்திரம் அறியாதவர் ஆவார். அவர்கள் உணவுக்காக பொருள் தேடி அலைந்து வருந்துகின்றனர். இது எப்படி இருக்கிறது என்றால், ஒருவன் ஆற்றில் கிடக்கும் முதலைக்கு பயந்து ஓடிப் போய் குட்டியை ஈன்றுள்ள கரடியிடம் மாட்டிக் கொள்வதை போலாகும்.

In fear of crocodile, they ran out of river
but get caught by the bear having a cub.
Like this the unlearned people run away from Holy practices,
They are always roaming in search for food.