ஒளித்து வைத்து உள்ளுற உணர்ந்தேன்!

ஒளித்துவைத் தேனுள் ளுறவுணர்ந் தீசனை
வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே
களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியு மாமே.   – (திருமந்திரம் – 437)

விளக்கம்:
“நான் ஈசனை என் மனத்தில் உணர்ந்து, அவனை வழிபடுகிறேன். அவனும் இந்தப் பிறவியிலேயே எனக்கு தன்னை வெளிப்படுத்தி அருள்கிறான்” என்று சொல்கிறார் திருமூலர். நாமும் ஈசனின் மகிழ்ச்சி கலந்த அன்பை உணர்ந்து பெருமை கொள்வோம். நமது வழிபாட்டில் அந்தப் பெருமை வெளிப்பட வேண்டும். ஈசனின் பெருமையை உணர்ந்து அகவழிபாடு செய்தால், அவன் நமக்கும் தன்னை வெளிப்படுத்தி நம் விருப்பத்தை நிறைவேற்றுவான்.

காதன்மை – அன்பு


அத்தனை வேறுபாடுகளிலும் பரவி இருக்கிறான்!

அரைகின் றருள்தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றோடொன் றொவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்
கரக்கின் றவைசெய்த காண்டகை யானே.   – (திருமந்திரம் – 436)

விளக்கம்:
உடலினால் கிடைக்கின்ற பலன்கள் எல்லாம் துன்பம் தருவனவாகும். இந்த உலகம் முழுவதும் எத்தனை விதமான உருவங்கள் இருக்கின்றன? ஒவ்வொருவருக்கும் எத்தனை விதமான ஆசைகள்? அவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று ஒவ்வாததாக இருக்கின்றன. இத்தனை வேறுபாடுகளிலும் நிறைந்து பரவி இருக்கும் நமது சிவபெருமான், தான் செயல்படும் விதத்தை நாம் அறியாதவாறு மறைத்து வைத்துள்ளான்.


இருட்டறையை விட்டு வெளியே வாருங்கள்!

தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானுஞ்
சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும்
இருளும் அறநின் றிருட்டறை யாமே.   – (திருமந்திரம் – 435)

விளக்கம்:
ஆதிப்பிரானான நம்முடைய சிவபெருமான், தெளிவான அறிவு பெற்ற மக்களுக்கும் தேவர்களுக்கும், தன்னைப் பற்றி அறியச் செய்து இன்பம் அளிக்கிறான். அறிவில் தெளிவில்லாத மற்றவர்கள் அறியாமை என்னும் இருட்டறையில் இருக்கிறார்கள். தமது அறைக்கு வெளியே பகலில் சுருளச் செய்யும் சூரியனும், இரவில் சந்திரனும் வெளிச்சம் கொடுத்தவாறு இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. இருட்டறையே தமது உலகம் என்று நினைத்து மயங்குகிறார்கள்.


அவனது செயல்பாட்டைப் புரிந்து கொள்ள முடியாது!

காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை
ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை
ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கைச் செயலணை யாரே.   – (திருமந்திரம் – 434)

விளக்கம்:
நம் கண்ணின் ஒளியாக இருப்பவன் சிவபெருமான். அவனை அன்பாக நினைத்திருப்போம். ஆணாக, பெண்ணாக, அலியாக விளங்கும் ஆதிக்கடவுள் அவன். சுவையை உணரக்கூடிய மனத்தில் அவனை உணர்வோம். நெடுங்காலமாக இருந்து வரும் ஒரு நீர்நிலையின் அத்தனைக் கால செயல்பாட்டையும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. அது போலத்தான் அற்ப ஆயுளைக் கொண்ட நம்மால், மிகப் பழமையானக் கடவுளான அவனது செயல்பாட்டை அறிந்து கொள்ள முடியாது.


நாமெல்லாம் எந்திரர்கள்!

இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த பரிசறி யாரே.   – (திருமந்திரம் – 433)

விளக்கம்:
உருத்திரன், திருமால், இன்பப் பிறவிக்கான உடலைப் படைக்கும் பிரமன் ஆகியோருடன் சேர்ந்து, நமது சிவபெருமான் அருமையான ஒரு எந்திரமாக நம்மை படைத்திருக்கிறான். இதை நாம் உணரவே செய்கிறோம். ஆனால் இந்த எந்திரத்துக்குள், அவன் தன்னை ஒளித்து வைத்திருக்கிறான். அந்தப் பரிசை நாம் அறிந்து கொள்வதில்லை.


இன்பப் பிறவி படைத்த இறைவன்

இன்பப் பிறவி படைத்த இறைவனுந்
துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்
என்பிற் கொளுவி இசைந்துறு தோற்றசை
முன்பிற் கொளுவி முடிகுவ தாமே.   – (திருமந்திரம் – 432)

விளக்கம்:
நாம் இன்பம் அடைவதற்காகப் பிறவியைத் தந்த சிவபெருமான், துன்பம் தரும் பாசப் பற்றினையும் சேர்த்தே தந்திருக்கிறான். எலும்போடு தோலும் தசையும் இசைந்திருப்பதால், இந்த உடல் சிறிது காலத்திற்கு இன்பத்தைத் தருகிறது. பிறகு ஒரு நாள் இந்த உடல் அழிந்து விடுகிறது.


உயிரிலும் உள்ளத்திலும் நீங்காது இருப்பவன்!

உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோ ரடி நீங்கா ஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே.   – (திருமந்திரம் – 431)

விளக்கம்:
நம் உள்ளத்தில் வசிப்பவன் சிவபெருமான். அவன் நம் உயிரிலும் சோதியாகக் கலந்திருக்கிறான். அவனால் நம் மனத்தை விட்டு ஒரு அடி கூட நகர முடியாது. நம் உள்ளமும் நம்மிடம் தான் இருக்கிறது, உயிரும் நம்மிடம் தான் இருக்கிறது. ஆனாலும் அவற்றில் கலந்திருக்கும் நம் பெருமானின் உருவத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை!


சேர்ந்த வினைகளைச் சுட்டுப் பொசுக்குவோம்!

தீயவைத் தார்மிங்கள் சேரும் வினைதனை
மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தாங்கலந் தெங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தானுணர் வாரவைத் தானே.   – (திருமந்திரம் – 430)

விளக்கம்:
நினைத்த பொழுது எல்லாவற்றையும் மொத்தமாக அழித்து விடக்கூடிய வலிமையான கடவுள் ஒன்றுண்டு. அது நம் சிவபெருமானாகும். நாம் நம்முடைய வினைகளை எல்லாம் சுட்டுப் பொசுக்கி விட்டு நம் பெருமானைச் சார்ந்திருப்போம். நமக்கெல்லாம் உடலைக் கொடுத்த சிவபெருமான், எங்கும் கலந்திருக்கும் தன்னை நினைத்திருக்கும் வழியையும் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். நாம் தான் அதை உணர்ந்து அந்த வழியில் செல்ல வேண்டும்.


எல்லாம் வெற்றிடத்தில் இருந்து தோன்றியவை!

பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா
வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.   – (திருமந்திரம் – 429)

விளக்கம்:
முதலில் ஒரு வெற்றிடம் இருந்தது. அந்த வெற்றிடத்தில் இருந்து உலகம் தோன்றி பலவாறாய் வளர்ந்தது. பேரழிவின் போது இந்த உலகம் அழிந்து போனாலும், அந்தப் பழைய வெற்றிடம் அழியாது. உலகம் தோன்றுவதற்கும் அழிவதற்கும் இடையே உள்ள காலம் மட்டும் தான் பிரமன், திருமால் ஆகியோருக்குத் தொழில் இருக்கிறது. உலகம் அழியும் போது அவர்களது தொழிலும் அழிந்து விடும்.

பாழ் – வெற்றிடம், அழிதல்
செய்தி – தொழில்


வீடுபேறு – நான்காவது நிலை

நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின்
வைத்தசங் காரமும் மன்னும் அனாதியிற்
சுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள்
உய்த்தசங் காரமும் நாலா மதிக்கிலே.   – (திருமந்திரம் – 428)

விளக்கம்:
நித்திய சங்காரம், நமக்கு அன்றையப் பொழுதின் களைப்பிலிருந்து உடலுக்கு இளைப்பாறுதல் தருகிறது. ஆயுட் சங்காரம், உடலுடன் மனம் முதலியவற்றிற்கும் இளைப்பாறுதல் தருகிறது. சருவ சங்காரமே நம்மை உய்விக்கும் சங்காரமாகும். ஏனென்றால் சருவ சங்காரத்தில், பிறத்தல், வாழ்தல், இறத்தல் ஆகிய நிலைகளைத் தாண்டி வீடுபேறு எனும் நான்காவது நிலையை அடைகிறோம்.