இருக்கிறான்! நம்மால் தான் காண முடிவதில்லை

மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா
அண்ணலும் இவ்வண்ண மாகிநின் றானே.   – (திருமந்திரம் – 440)

விளக்கம்:
ஒரே மண்தான் பலவிதமான பாத்திரங்களாக உருவாகின்றன. அது போல் உலகத்து உயிர்களில் எல்லாம் சிவனே இருக்கிறான். நமது கண்கள் பலவிதமான புறப்பொருட்களைக் காண்கின்றன. ஆனால் தன்னைத் தானே காண முடிவதில்லை. அது போல் நம்மால் நம்முள் இருக்கும் சிவனைக் காண முடிவதில்லை.


கங்கைக்கரையில் நின்றால் பாவம் நீங்கும்

ஒருங்கிய பாசத்துள் உத்தமச் சித்தன்
இருங்கரை மேலிருந் தின்புற நாடி
வருங்கரை ஓரா வகையினிற் கங்கை
அருங்கரை பேணில் அழுக்கற லாமே.   – (திருமந்திரம் – 439)

விளக்கம்:
நாமெல்லாம் உத்தமர்கள் தாம், ஆனால் ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றில் மூழ்கியுள்ளோம். அலை மிகுந்த கடலில், கரை அருகிலிருந்தாலும், மூழ்குபவனுக்கு அது தெரிவதில்லை. அது போல் ஆணவம் முதலியவற்றில் மூழ்கியுள்ள நமக்கு கரையேறி சிவன் திருவடியை நாடி இருக்கும் வழி தெரிவதில்லை. நாம் மாயக்கடலில் மூழ்காமல் கங்கைக்கரையில் நிற்பது போல, மாயையில் சிக்காமல் நின்றால் நம் பாவமெல்லாம் நீங்கப் பெறலாம்.


நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்!

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கும் அரந்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராகி இசைந்திருந் தானே.   – (திருமந்திரம் – 438)

விளக்கம்:
உருத்திரன், திருமால், வாசனை நிறைந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் ஆகியோர் அங்கும் இங்கும் ஓடியாடி இயங்குகிறார்கள். ஆனால் நம் சிவபெருமான் நின்ற இடத்திலேயே எந்தவித செயலும் இன்றி எல்லாவற்றையும் நிகழ்த்துகிறான்.


ஒளித்து வைத்து உள்ளுற உணர்ந்தேன்!

ஒளித்துவைத் தேனுள் ளுறவுணர்ந் தீசனை
வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே
களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியு மாமே.   – (திருமந்திரம் – 437)

விளக்கம்:
“நான் ஈசனை என் மனத்தில் உணர்ந்து, அவனை வழிபடுகிறேன். அவனும் இந்தப் பிறவியிலேயே எனக்கு தன்னை வெளிப்படுத்தி அருள்கிறான்” என்று சொல்கிறார் திருமூலர். நாமும் ஈசனின் மகிழ்ச்சி கலந்த அன்பை உணர்ந்து பெருமை கொள்வோம். நமது வழிபாட்டில் அந்தப் பெருமை வெளிப்பட வேண்டும். ஈசனின் பெருமையை உணர்ந்து அகவழிபாடு செய்தால், அவன் நமக்கும் தன்னை வெளிப்படுத்தி நம் விருப்பத்தை நிறைவேற்றுவான்.

காதன்மை – அன்பு


அத்தனை வேறுபாடுகளிலும் பரவி இருக்கிறான்!

அரைகின் றருள்தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றோடொன் றொவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்
கரக்கின் றவைசெய்த காண்டகை யானே.   – (திருமந்திரம் – 436)

விளக்கம்:
உடலினால் கிடைக்கின்ற பலன்கள் எல்லாம் துன்பம் தருவனவாகும். இந்த உலகம் முழுவதும் எத்தனை விதமான உருவங்கள் இருக்கின்றன? ஒவ்வொருவருக்கும் எத்தனை விதமான ஆசைகள்? அவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று ஒவ்வாததாக இருக்கின்றன. இத்தனை வேறுபாடுகளிலும் நிறைந்து பரவி இருக்கும் நமது சிவபெருமான், தான் செயல்படும் விதத்தை நாம் அறியாதவாறு மறைத்து வைத்துள்ளான்.


இருட்டறையை விட்டு வெளியே வாருங்கள்!

தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானுஞ்
சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும்
இருளும் அறநின் றிருட்டறை யாமே.   – (திருமந்திரம் – 435)

விளக்கம்:
ஆதிப்பிரானான நம்முடைய சிவபெருமான், தெளிவான அறிவு பெற்ற மக்களுக்கும் தேவர்களுக்கும், தன்னைப் பற்றி அறியச் செய்து இன்பம் அளிக்கிறான். அறிவில் தெளிவில்லாத மற்றவர்கள் அறியாமை என்னும் இருட்டறையில் இருக்கிறார்கள். தமது அறைக்கு வெளியே பகலில் சுருளச் செய்யும் சூரியனும், இரவில் சந்திரனும் வெளிச்சம் கொடுத்தவாறு இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. இருட்டறையே தமது உலகம் என்று நினைத்து மயங்குகிறார்கள்.


அவனது செயல்பாட்டைப் புரிந்து கொள்ள முடியாது!

காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை
ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை
ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கைச் செயலணை யாரே.   – (திருமந்திரம் – 434)

விளக்கம்:
நம் கண்ணின் ஒளியாக இருப்பவன் சிவபெருமான். அவனை அன்பாக நினைத்திருப்போம். ஆணாக, பெண்ணாக, அலியாக விளங்கும் ஆதிக்கடவுள் அவன். சுவையை உணரக்கூடிய மனத்தில் அவனை உணர்வோம். நெடுங்காலமாக இருந்து வரும் ஒரு நீர்நிலையின் அத்தனைக் கால செயல்பாட்டையும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. அது போலத்தான் அற்ப ஆயுளைக் கொண்ட நம்மால், மிகப் பழமையானக் கடவுளான அவனது செயல்பாட்டை அறிந்து கொள்ள முடியாது.


நாமெல்லாம் எந்திரர்கள்!

இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த பரிசறி யாரே.   – (திருமந்திரம் – 433)

விளக்கம்:
உருத்திரன், திருமால், இன்பப் பிறவிக்கான உடலைப் படைக்கும் பிரமன் ஆகியோருடன் சேர்ந்து, நமது சிவபெருமான் அருமையான ஒரு எந்திரமாக நம்மை படைத்திருக்கிறான். இதை நாம் உணரவே செய்கிறோம். ஆனால் இந்த எந்திரத்துக்குள், அவன் தன்னை ஒளித்து வைத்திருக்கிறான். அந்தப் பரிசை நாம் அறிந்து கொள்வதில்லை.


இன்பப் பிறவி படைத்த இறைவன்

இன்பப் பிறவி படைத்த இறைவனுந்
துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்
என்பிற் கொளுவி இசைந்துறு தோற்றசை
முன்பிற் கொளுவி முடிகுவ தாமே.   – (திருமந்திரம் – 432)

விளக்கம்:
நாம் இன்பம் அடைவதற்காகப் பிறவியைத் தந்த சிவபெருமான், துன்பம் தரும் பாசப் பற்றினையும் சேர்த்தே தந்திருக்கிறான். எலும்போடு தோலும் தசையும் இசைந்திருப்பதால், இந்த உடல் சிறிது காலத்திற்கு இன்பத்தைத் தருகிறது. பிறகு ஒரு நாள் இந்த உடல் அழிந்து விடுகிறது.


உயிரிலும் உள்ளத்திலும் நீங்காது இருப்பவன்!

உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோ ரடி நீங்கா ஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே.   – (திருமந்திரம் – 431)

விளக்கம்:
நம் உள்ளத்தில் வசிப்பவன் சிவபெருமான். அவன் நம் உயிரிலும் சோதியாகக் கலந்திருக்கிறான். அவனால் நம் மனத்தை விட்டு ஒரு அடி கூட நகர முடியாது. நம் உள்ளமும் நம்மிடம் தான் இருக்கிறது, உயிரும் நம்மிடம் தான் இருக்கிறது. ஆனாலும் அவற்றில் கலந்திருக்கும் நம் பெருமானின் உருவத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை!