இறந்த பிறகு உடலைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை!

காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்
கூத்தன் புறப்பட்டுப் போன இக்கூட்டையே.  – (திருமந்திரம் – 167)

விளக்கம்:
உயிர் இல்லாத நிலையில், நம்முடைய இந்த உடல் வெறும் தோல்பை ஆகும். இந்த உடலினுள்  நின்று உயிர் கொடுத்து உடல் இயக்கத்திற்கு காரணமாய் இருப்பவன் கூத்தன் என்று அழைக்கப்படும் ஈசன். அவன் இந்த உடலை விட்டு நீங்கிய பிறகு, அதாவது நாம் செத்துப் போன பிறகு, இந்த உடலை காக்கை வந்து கொத்தி தின்றால் என்ன? பார்ப்பவர் இகழ்ந்தால் என்ன? தகனம் செய்து பால் ஊற்றினால் என்ன? பலரும் பழித்துப் பேசினால் என்ன? உயிர் இல்லாத இந்த வெறும் கூட்டைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

தொழில் அறச் செய்து – இந்த உடல் நம்முடைய முயற்சி எதுவும் இல்லாமல் தானாக இயங்குகிறது.


சுற்றி எத்தனை படை இருந்தாலும், போகும் உயிரை தடுக்க முடியாது

குடையும் குதிரையும் கொற்றவா ளுங்கொண்டு
இடையும்அக் காலம் இருந்தது நடுவே
புடையு மனிதனார் போக்கும்அப் போதே
அடையும் இடம்வலம் ஆருயி ராமே.  – (திருமந்திரம் –166)

விளக்கம்:
நாடாளும் மன்னர்கள் வெண்கொற்றக் குடையும், வெற்றி தரும் வாளும் கொண்டு குதிரையில் வலம் வரும் காலஅளவு மிகச் சொற்பமானதாகும். அவரைச் சுற்றி அவருடைய படைகளும், மக்களும் சூழ்ந்து இருந்தாலும், அந்த மன்னரின் பிராணன் இட வலம்  மாறி உயிர் பிரிந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது.


ஏழு நரகங்கள்!

மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவந் தொழாமல்
இடர்ப்படந்து ஏழா நரகிற் கிடப்பர்
குடர்ப்பட வெந்தமர் கூப்பிடு மாறே.  – (திருமந்திரம் –165)

விளக்கம்:
மடல் விரிந்த கொன்றை மலரை அணிந்த சிவபெருமான், தன்னை வெளிப்படுத்தாமல் நம்மிடம் ஒளிந்து விளையாடுகிறான். நம்முடைய உடலும், உயிரும் ஒன்றாக இருக்கும் காலத்தில், அதாவது நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே அந்த சிவபெருமானை வணங்கி இருப்போம். பிற உலக விஷயங்களிலேயே தனது வாழ்நாளைச் செலவிடுபவர்கள், யமதூதர் வரும் நேரம், குடல் நடுங்குவார்கள், ஏழு வகையான நரகங்களையும் அனுபவித்து வருந்துவார்கள்.

அள்ளல், ரௌரவம், கும்பீபாகம், கூடசாலம், செந்துத்தானம், பூதி, மாபூதி ஆகியவை ஏழு வகையான நரகங்கள் ஆகும்.


விளக்கு இங்கே! ஒளி எங்கே?

இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான்
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சுஇரு ளாவது அறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.  – (திருமந்திரம் –164)

விளக்கம்:
விளக்கில் எண்ணெய் விடும் பகுதி இடிஞ்சில் எனப்படும். இந்த உடல் என்னும் விளக்கை இங்கேயே விட்டு விட்டு உயிர் என்னும் தீபஒளியை அந்த இயமன் எடுத்துச் செல்கிறான். விளக்கின் எண்ணெய் தீர்ந்து விட்டது என்பதை புரிந்து கொள்ளாதவர்கள் அழுது புலம்புகிறார்கள். காலையில் விடியும் ஒரு நாள் பொழுதில் மாலை இருள் வந்தே தீரும். நம் வாழ்நாளும் அப்படித்தான் என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. நாம் நம் உடலை நிலையானதாக நினைத்து அதையே பற்றிக் கொள்கிறோம். ஒருநாள் உயிர் உடலை விட்டுப் பிரியும் நிலை வரும்போது பதறுகிறோம்.


உலக வாசனை தெரியும் வயது!

முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம் பன்னிரண்டி ஆண்டினில்
கெட்டது எழுபதில் கேடறி யீரே.  – (திருமந்திரம் –163)

விளக்கம்:
நாம் நமது தாயின் வயிற்றில் கருவாக இருந்து, முந்நூறு நாட்களுக்குப் பிறகு பிறக்கிறோம். இதை நம் வாழ்வின் தொடக்கம் என்று நினைக்கிறீர்களா? அது அறியாமை ஆகும். பன்னிரெண்டு வயதில் நமக்கு உலக விஷயங்களின் வாசனை தோன்றுகிறது. பிறகு எழுபது வயதில் நாம் சாகும் வரை அழிவை நோக்கித் தான் சென்று கொண்டிருக்கிறோம். இதைத் தெரிந்து கொள்ளுங்கள்.


தேடிய தீயினில் தீய வைத்தார்கள்

கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
ஆடும் இலையமும் அற்றது அறுதலும்
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்
தேடிய தீயினில் தீயவைத் தார்க்களே.  – (திருமந்திரம் –162)

விளக்கம்:
விதி முடிந்து இறந்து போனவனுடைய உடல், பொலிவை இழந்த கூடம் போலக் கிடந்தது.  அவன் இருதயத்தின் சீரான லயம் நின்று துடிப்பும் அடங்கியது. அங்கே சிவனடியார்கள் திருமுறைகளைப் பாடுகிறார்கள். உறவினர்கள் ஒப்பாரி வைத்து அழுகிறார்கள். பிறகு அந்த உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று தகனத்துக்குத் தேவையான பொருட்களைத் தேடிக் கொண்டு வந்து தீய வைத்தார்கள்.


சிவபெருமான் கட்டித் தரும் வெள்ளிக் கோயில்

மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை
காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு
ஓலையான் மேய்ந்தவர் ஊடு வரியாமை
வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளிகையே.  – (திருமந்திரம் –161)

விளக்கம்:
பிரமனால் கட்டப்பட்ட நம்முடைய இந்த உடல் என்னும் வீடு, சரியான கட்டுமானம் இல்லாதது. இந்த வீட்டிற்கு மேலே கூரை இல்லை. கீழே கூரை தாங்கும் விளிம்பும் இல்லை. ஒப்புக்கு இரண்டு கால்களும், ஒரு முதுகுத்தண்டும் இருக்கின்றன. அவைதான் நம்மை நடமாட வைக்கின்றன. ஆனால் சிவபெருமான் ஒரு சிறந்த வேலையான். அவன் நமக்காக ஒரு வெள்ளிக் கோயிலையே கட்டித்தருகிறான். நாம் இந்த உடலின் மீது பற்று வைக்காமல், அவன் திருவடியையே நாடி இருந்தால், அழிவில்லாத அந்த வெள்ளிக் கோயிலில் குடியிருக்கலாம்.


அத்திப்பழமும் அறைக்கீரை விதையும்

அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைபெய்து கூழட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக் காரே.  – (திருமந்திரம் –160)

விளக்கம்:
இந்தப் பாடலில் நம் உடலை அத்திப்பழத்துடனும், நம் உயிரை அறைக்கீரை விதையுடனும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார் திருமூலர்.

அத்திப்பழமாகிய உடலையும், அறைக்கீரை விதையான உயிரையும் அந்த இறைவன் சமைத்து, நம்மை இந்த உலகில் பிறக்கச் செய்தான். நாம் உயிர் விடும்போது,  நம்முடைய உடல் தன்னுடைய வினைப்பயனை எல்லாம் உயிரிடம் கொடுத்து விடுகிறது. (இதைத்தான் அத்திப்பழத்தை அறைக்கீரை வித்து உண்டது என்கிறார்.) பிறகு இறந்த உடலை அழுகை ஒலியுடன் உறவினர்கள் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வார்கள்.

இறப்பு நம் உடலுக்குத் தான்.  நம்முடைய பாவ, புண்ணியங்கள் நம்மை விட்டு விலகாது.


உடல் வெந்த பிறகு உயிரின் நிலை என்ன?

ஐந்து தலைப்பறி ஆறு சடையுள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேலறி யோமே.  – (திருமந்திரம் –159)

விளக்கம்:
நம் உடலில் மிகவும் முக்கியமானவை ஐம்பொறிகள். அவை கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியவை. மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகியவை ஆறு ஆதார மையங்களாக உள்ளன. எலும்பின் இணைப்புகள் முப்பது, நுண்ணுடம்பு எட்டு, வாயுக்கள் பத்து, தசை நார்கள் ஒன்பது, எலும்புகளின் வரிசை பதினைந்து. இவை அனைத்தும் ஒரு நாள் சுடுகாட்டில் வெந்து சாம்பலாகும். அதற்குப் பிறகு இந்த உயிரின் நிலை என்னவாக இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.


குடம் உடைந்தாலும் பயன்படும் ஆனால் இந்த உடல்?

வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடைந் தால் அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே.  – (திருமந்திரம் –158)

விளக்கம்:
வளம் மிகுந்த முற்றம் போன்றது இந்த உலகம். பிரமன் என்னும் ஒரு குயவன் தன் குளத்தின் மண்ணைக் கொண்டு வந்து இந்த முற்றம் முழுவதும் உயிர்களைப் படைக்கிறான். மனிதன் செய்யும் குடம் உடைந்தால் அதன் ஓடு வேறு எதற்காவது பயன்படும் என்று பாதுகாத்து வைப்போம். ஆனால் பிரமன் செய்யும் இந்த உடல் என்னும் குடம் உடைந்தால் அதை கொஞ்ச நேரம் கூட வைத்திருக்க மாட்டோம். சுடுகாட்டில் கொண்டு போய் வைத்து எரித்து விடுவோம்.