ஆவது ஆகட்டும்! அவன் இருக்கிறான்!

ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்யும் இளங்கிளை யோனே.  –  (திருமந்திரம் – 504)

விளக்கம்:
நந்தி என்னும் பெயர் கொண்ட நம் இறைவன், முதன்மையான தகுதி உடைய அடியவரிடம் தன்னைக் வெளிப்படுத்தித் தரிசனம் தருவான். தரிசனம் பெற்ற அடியவர் தம் வாழ்வில் தெளிவு பெற்று ‘நடப்பது நடக்கட்டும், அழிவது அழியட்டும், போவது போகட்டும், வருவது வரட்டும். எது நடந்தாலும் அது இறைவனின் ஆணை’ என தனக்கிடப்பட்ட பணிகளைச் செய்து நிம்மதியாய் இருப்பார்.


நெய் தேவைப்படாத விளக்கு

கைவிட்டி லேன்கரு வாகிய காலத்து
மெய்விட்டி லேன்விகிர் தன்அடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடை யானடி
நெய்விட் டிலாத விடிஞ்சிலு மாமே.  – (திருமந்திரம் – 503)

விளக்கம்:
நான் எப்போதும் சிவபெருமானின் திருவடியை நினைத்தே இருக்கிறேன். தாயின் வயிற்றில் கருவாக இருந்த போதே அவனை நினைத்தபடி இருந்தேன். பொய்யில்லாத மெய்யன்போடு அவன் திருவடியைத் தேடுகிறேன். சிவனடி என்னும் விளக்கு எப்போதும் ஒளி தருவதாகும். அந்த விளக்குக்கு நெய் எதுவும் தேவையில்லை.


ஈசனை உணர்ந்தால் தேவர் ஆகலாம்

கண்டிருந் தாருயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந் தாருயிர் கொள்ளும் குணத்தனை
நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்
சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே.  – (திருமந்திரம் – 502)

விளக்கம்:
ஒரு காலகட்டத்துக்குப் பிறகு காலன் வந்து நம் உயிரை எடுத்துக் கொள்வான் என்னும் உண்மையை வெகு சிலர் தான் புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் நம் உயிரோடு கலந்திருக்கும் அந்த ஈசனை எப்போதும் தம் மனத்தில் வைத்து வழிபடுவார்கள். தன்னை நன்கு உணர்ந்தவர்களுக்கு அருள் செய்திடும் ஈசனைச் சென்று வணங்கி அவன் திருவருளை உணர்வோம். அவனை உணர்ந்தால் தேவர்களின் நிலையை அடையலாம்.


தகுதி அறிந்து தானம் செய்ய வேண்டும்

திலமத் தனையே சிவஞானிக்கு ஈந்தால்
பலமுத்தி சித்தி பரபோக மும்தரும்
நிலமத் தனைபொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்
பலமும்அற் றேபர போகமும் குன்றுமே.  – (திருமந்திரம் – 501)

விளக்கம்:
உண்மையான சிவஞானிகளுக்கு எள்ளளவு தானம் செய்தாலும் கிடைக்கும் பலன் அதிகம். சித்தியும், முத்தியும், மேலான இன்பமும் கிடைக்கும். அஞ்ஞானம் அகலாத மூடர்களுக்கு நிலமளவு பொன்னைத் தானம் செய்தாலும் அது எந்தவிதப் பயனையும் தராது. மேலான இறை இன்பமும் கிடைக்காது போய்விடும்.

தகுதி உள்ளவர்க்கே தானம் செய்ய வேண்டும்.