சிவனை உறவினராய் நினைப்பவர்!

தாழ்சடை யான்தன் தமராய் உலகினில்
போர் புகழால் எந்தை பொன்னடி சேருவர்
வாயடை யாவுள்ளம் தேர்வார்க்கு அருள்செய்யும்
கோவடைந்து அந்நெறி கூடலு மாமே. –  (திருமந்திரம் – 546)

விளக்கம்:
நீண்ட சடை கொண்ட சிவபெருமானை தம் உறவினனாய் பாவித்து வாழும் பெரியவர்கள் நிறைந்த புகழைப் பெறுவார்கள். அவர்கள் இறுதியில் தாம் விரும்பிய சிவனடியை அடைவார்கள். நாம் அந்தப் பெரியவர்களைத் தேடிச் சென்று அவர்களுடன் பழகி நம் உள்ளம் தெளியப் பெற வேண்டும். தெளிவடையும் உள்ளத்தை சிவபெருமான் வந்தடைவான். அதனால் நாம் பெரியவர்களின் துணையைப் பெற்று அவர்கள் காட்டும் நன்னெறியில் நடப்போம்.

போர் புகழால் – போர்த்த புகழால்


நன்னெறி தான் அருள் தரும்!

அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிலர்தத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியார் உடன்கூடல் பேரின்ப மாமே. –  (திருமந்திரம் – 545)

விளக்கம்:
விஷயம் தெரிந்தவர்கள் தேவர்களுக்கெல்லாம் தலைவனான சிவபெருமானை நாடிச் சென்று அவனுடன் நெருக்கமாக இருப்பார்கள். நன்னெறி தான் அருள் பெறுவதற்கு சிறந்த வழியாகும். அப்படி நன்னெறியில் நின்று சிவபெருமானை நாடி நிற்பவர்கள் பரமான்மா பற்றிய உண்மையை உணர்வார்கள். அப்படிப்பட்ட பெரியவர்களை நாம் தேடிச்சென்று அவர்கள் காட்டும் வழியில் நடப்போம். அதுவே பேரின்பமாகும்.


திருமூலர் சென்ற இடத்துக்கு நாமும் செல்லலாம்!

தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்
மாமனத்து அங்குஅன்பு வைத்த திலையாகும்
நீஇடர்ப் பட்டிருந்து என்செய்வாய் நெஞ்சமே
போமிடத் து என்னொடும் போதுகண் டாயே. –  (திருமந்திரம் – 544)

விளக்கம்:
தளிர் போன்ற நம்முடைய மனம் உலக விஷயங்களில் சிக்கி இடர்ப்பட்டு வாடிவிடுகிறது. நமது இடர்களுக்குக் காரணம் உலக விஷயங்களில் நாட்டம் கொள்வது தான் என்பதைப் புரிந்து கொண்டு, இறைவனிடம் அன்பு வைத்ததில்லை.

“ஏன் இப்படி உங்கள் மனத்தை இடர்பாட்டிலேயே வைத்திருக்கிறீர்கள்? ஞானம் பெற்ற பெரியவர்களின் துணை கொண்டு உங்கள் மனத்தை இறை வழியில் திருப்புங்கள். அப்படிச் செய்தால் நீங்களும் நான் போகும் இடத்துக்கு வருவீர்கள்” எனத் திருமூலர் சொல்கிறார்.


ஒட வல்லவர்களுடன் நடப்பேன்!

ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
பாடவல் லாரொளி பார்மிசை வாழ்குவன்
தேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடும்
கூடவல் லாரடி கூடுவன் யானே. –  (திருமந்திரம் – 543)

விளக்கம்:
ஆன்மிக பாதையில் ஓட வல்லவர்களுடன், என்னால் ஓட முடியா விட்டாலும் நடக்கவாவது செய்வேன். எனக்கு பாடத் தெரியாவிட்டாலும், சிவபெருமான் குறித்த பாடல்களைக் கேட்டு வாழ்வேன். தேட வல்லார்க்கு அருள் செய்பவன் சிவபெருமான். சிவனருள் பெற்றவர்கள் அவன் திருவடியைச் சரண் அடைவார்கள். என்னால் சிவனடியை அடைய முடியாவிட்டாலும், சிவனடியைத் தேடும் ஞானிகளின் திருவடியைப் பற்றி வணங்குவேன்.


பொறுமை பயில்வது அவசியம்

வல்வகை யானும் மனையிலும் மன்றிலும்
பல்வகை யானும் பயிற்றி பதஞ்செய்யும்
கொல்லையி னின்று குதிகொள்ளும் கூத்தனுக்கு
எல்லையி லாத இலயம்உண் டாமே. –  (திருமந்திரம் – 542)

விளக்கம்:
காட்டில் நின்று குதித்து ஆடும் கூத்தனுக்கு எல்லை இல்லாத பொறுமை உண்டு. அதனால் தான் அவன் லயத்தோடு ஆடுகிறான். நாம் வீட்டிலும் வெளியே பொது இடங்களிலும் உறுதியோடு பொறுமை காக்க வேண்டும். அதற்காக பல வகையிலும் நமது மனத்தை பக்குவப்படுத்தி பயிற்றுவிக்க வேண்டும்.


ஞானியை மன்னனும் வணங்குவான்

ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்
சேனை வளைந்து திசைதொறும் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை விளைந்தருள் எட்டலு மாமே. –  (திருமந்திரம் – 541)

விளக்கம்:
ஞானம் விளைந்த பொறுமை மிக்க ஞானிகள் அனைவராலும் வணங்கப்படுவார்கள். அந்நாட்டின் மன்னனும் தனது சேனைகளுடன் அந்த ஞானி இருக்கும் திசை நோக்கி பணிந்து வணங்குவான். இவ்வளவு பெருமை படைத்த ஞானிகள் நம்மையெல்லாம் படைத்த ஆதிக்கடவுளான சிவபெருமானை அடைவார்கள். மற்றவர்கள் எல்லாம் தமது பொறுமையினாலே ஞானத்தைப் பெறும் போது சிவபெருமானை அடைவார்கள்.


பொறுமை உடைய ஞானி!

ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய
மாலுக்கும் ஆதி பிரமற்கும் .மன்னவன்.
ஞாலத் திவன்மிக நல்லன்என் றாரே. –  (திருமந்திரம் – 540)

விளக்கம்:
தேவலோகத்தின் கொலுமண்டபத்தில் சூழ்ந்திருக்கும் தேவர்கள் எல்லாம் பாலைப் போன்ற தூய்மையான மேனியைக் கொண்ட சிவனின் பாதம் பணிந்தார்கள். அவர்களிடம் சிவபெருமான் சொல்கிறான் – “பொறுமை உடைய ஞானி உலகத்திலேயே மிக நல்லவன் ஆவான். பொறுமை உடையவன் திருமாலையும் பிரமனையும் விட மேலானவன் ஆகிறான்”.


பொறாமை என்னும் பல்லி

பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே. –  (திருமந்திரம் – 539)

விளக்கம்:
பொறாமையைப் பற்றி நிற்பவர்கள் நெஞ்சில் பல்லி ஒன்றுண்டு. பொறாமை கொண்டவர்களால் தன்னைச் சுற்றி உள்ள நல்ல விஷயங்களைக் கவனிக்க முடியாது. நல்ல சுவையையும் நறுமணத்தையும் கூட நுகர முடியாதபடி  அவர்களது மனத்தில் உள்ள பல்லி நாவையும் மூக்கையும் கட்டிப்போடுகிறது. இப்படித் தடைப்பட்டு சிதைகின்ற மனத்தை செழுமைப்படுத்துவது வற்றாத பொறுமையே!


ஞானியை நாடினால் தீவினை தீரும்

ஞானியை நிந்திப் பவனும் நலன் என்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வார் அவன்வயம்
போன பொழுதே புகுஞ்சிவ போகமே. –  (திருமந்திரம் – 538)

விளக்கம்:
சிவஞானிகளை நிந்திப்பவர்கள், இதுவரை தாம் சேர்த்து வைத்த நல்வினைகளின் பலனை இழப்பார்கள். நன்மையை நாடி ஞானிகளை வணங்குபவர்கள், தம்முடைய தீவினைகள் எல்லாம் நீங்கப்பெறுவார்கள். சிவஞானிகளுக்கு அடியவர் ஆனவர்கள் சிவனருளில் திளைப்பார்கள்.


சிவனடியாரை இகழாதீர்!

ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்
ஆண்டான் அடியரை வேண்டாது பேசினோர்
தாம்தாம் விழுவது தாழ்நர காகுமே. –  (திருமந்திரம் – 537)

விளக்கம்:
சிவனடியார்கள் யாருக்கு விரோதமாக இருக்க முடியும்? ஆனால் அனைவரும் சிவனடியார்களை விரோதிகளாகவே பார்க்கிறார்கள். சிவனடியார்கள் பிச்சை எடுத்து உண்பவர்கள், யாருடைய வம்புக்கும் அவர்கள் போவதில்லை. தானுண்டு சிவனுண்டு என இருக்கும் அடியாரை இகழ்ந்து பேசக்கூடாது. அப்படி சிவனடியாரை இகழ்பவர்கள் கீழான நரகத்தை அடைவார்கள்.