ஒரு அடியார் போதும், நாடே சுபிட்சமாகும்

திகைக்குரி யானொரு தேவனை நாடும்
வகைக்குரி யானொரு வாது இருக்கில்
பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும்
அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே. – (திருமந்திரம் – 1868)

விளக்கம்:
அனைத்து திசைகளுக்கும் உரியவனான சிவபெருமானை, இனத்திற்கு ஒருவராது நாடி இருப்பார் ஆகில், அங்கே பகைவர் என்று யாரும் இருக்க மாட்டார். தவறாமல் மழை பெய்யும். யாருக்கும் மனக்குறை என்பது இராது. அந்த உலகத்தில் கெடுதல் என்பதே இராது.

(திகை – திசை,   அகக்குறை – மனக்குறை)

The Lord spreads over all directions.
If there is a man who pursue the Lord and remain so,
There will be no enmity there, rain will not fail
No dissatisfaction there, evil will not near that world.

முயற்சியும் பலனும்

அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலில் முடிவும் மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே. – (திருமந்திரம் – 11)

விளக்கம்:
இந்த உலகின் பழமையை ஆராய்ந்து பார்த்தால், எம் சிவபெருமானுக்கு நிகரான வேறு ஒரு பெருந்தெய்வத்தை தொலைவிலும் பார்க்க முடியவில்லை, அருகிலும்  பார்க்க முடியவில்லை. நம்முடைய முயற்சியும் அவனே, நம் முயற்சியின் பயனும் அவனே, மற்றும் மழை பொழியும் மேகமும் அவனே. அவன் பெயர் நந்தி ஆகும்.

If we look the antiquity of this world, far and near
we can't see a mightier God than our Siva.
Himself our effort, Himself the fruit of effort,
Himself the rain, Himself the cloud. His name is Nandi.

எல்லாம் சிவனே!

தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே. – (திருமந்திரம்)

விளக்கம்:
இந்த பெரிய நிலப்பரப்பாகிய உலகை தாங்கியவாறு வானமாக நிற்பது சிவபெருமானே! சுடும் தீயாக இருப்பவன் அவனே! சூரியனும் அவனே! சந்திரனும் அவனே! மழையை பொழியும் தாயும் அவனே! பெரிய மலையும் அவனே! குளிர்ந்த கடலும் அவனே!

(இருநிலம் – பெரிய நிலம், அங்கி – தீ, தையல் – சக்தி, தடவரை – பெரிய கடல், தண்கடல் – குளிர்ந்த கடல்)

Lord Shiva, Himself holding this world, stand as the sky,
Himself the Fire, the Sun and the Moon,
Himself the mother giving Rain,
Himself the Big Mountains, the cold Ocean.