பிராணாயாமம் – என்றும் இளமை

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாந்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே.   – (திருமந்திரம் – 569)

விளக்கம்:
பிராணாயாமப் பயிற்சி செய்பவர்கள், மூச்சுக் காற்றை உள்வாங்கித் தன் வசப்படுத்தி அடக்குவதில் வெற்றி பெற்று விட்டால், அவர்களின் உடல் பளிங்கு போல் மாசு இல்லாது தூய்மையுடையதாக மாறும். வயதினால் முதுமை அடைந்தாலும், இளமையாகத் தோற்றம் அளிப்பார்கள். இதனைத் தெளிந்து குருவின் திருவருளும் பெற்று விட்டால், அவர்கள்  காற்றை விட மென்மையாக, அன்பானவர்களாக இருப்பார்கள்.

பிராணாயாமம் தொடர்ந்து செய்வோம், என்றும் இளமையாக இருப்போம்.

வளி – காற்று,  வயம் – வசம்,   காயம் – உடல்,    வேட்டு – விரும்பத்தக்க,    அளியன் – அன்பானவன்


பிராணாயாமம் செய்யும் முறை

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல்  கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.   – (திருமந்திரம் – 568)

விளக்கம்:
பதினாறு மாத்திரை அளவு இடது பக்க மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பது பூரகம் ஆகும். இழுத்த மூச்சுக் காற்றை அறுபத்தி நான்கு மாத்திரை அளவு உள்ளே நிறுத்தி வைப்பது கும்பகம். வலது பக்க மூக்கு வழியாக முப்பத்தியிரண்டு மாத்திரை அளவில் மூச்சை வெளியே விடுவது ரேசகம் ஆகும். அடுத்த முறை வலப்பக்கம் மூச்சை இழுத்து, உள்ளே நிறுத்தி இடப்பக்கம் மூச்சை வெளியே விடுவது தந்திரமாகும். இவ்வாறு முடிந்த வரை மாறி மாறி பயிற்சி செய்து வர வேண்டும்.

இந்த பிராணாயாமப் பயிற்சியை ஒரு ஆசிரியர் மூலம் முறையாக கற்றுக் கொள்வது அவசியம்.

வாமம் – இடது பக்கம்,   வஞ்சகம் – தந்திரம்


பிராணாயாமத்தில் மனம் லயித்தல் அவசியம்

பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்
பிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை
பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே.   – (திருமந்திரம் – 567)

விளக்கம்:
பிராணாயாமப் பயிற்சியின் போது மனம் மூச்சின் பாதையிலேயே இருக்க வேண்டும். மனமும் மூச்சும் லயித்திருந்தால் பிறப்பும் இறப்பும் இல்லாது போகும். மூச்சை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் மாற்றி மாற்றி பயிற்சி செய்வோம். பயிற்சியின் போது மூச்சின் சம்பாஷணைகளை உணர்ந்து, அவ்வுணர்வு நம்முள் பரவுவதை அனுபவிப்போம். பிராண வாயுவால் அடையக்கூடிய சிறந்த பலனை அடைவோம்.

பிராணாயாமப் பயிற்சியின் போது மனமும் மூச்சும் லயித்திருப்பது அவசியம்.

பேச்சு – சம்பாஷணை,   அறி – உணர்,   வித்து – பரப்புதல்


பிராணாயாமம் மகிழ்வு தரும்

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்
கள்ளுண்ண வேண்டாந் தானே களிதருந்
துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே.   – (திருமந்திரம் – 566)

விளக்கம்:
பறவையை விட விரைவாக ஓடக்கூடிய நம் மூச்சுக்காற்று என்னும் குதிரையை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம். அப்படி கட்டுப்படுத்தினால் கள் உண்ணாமலே மகிழ்வு உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும், சோம்பல் நீக்கி சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். ஆர்வத்தோடு பிராணாயாமப் பயிற்சியை செய்து வந்தால் இவற்றை நாம் உணரலாம் .


உதடும் உயிரும் கரைந்ததே

இனிப்புச் சாரலென வந்து ஒட்டும்
மகிழ்ச்சித் தீண்டலில்
கரைந்ததென் உதடும் உயிரும்.

ஒவ்வொரு துளியிலும்
ஆயிரமாயிரம் நுண்மைகள்.
ஒன்று விடாமல்
ரசித்தேன்
ருசித்தேன்.

இன்னும் கொஞ்சம்
இன்னும் கொஞ்சம்
என கேட்டு வாங்கியும்
வெட்கம் விட்டு கேட்காமலே
எடுத்து அள்ளியும்
ஆசை அடங்குவதாயில்லை.
நானும் விடுவதாயில்லை.

இதையெல்லாம் ஒரு கவிதை
என்று நீங்கள் நம்பினால்
ஐஸ்கிரீம் என்று
தலைப்பிட்டுக் கொள்ளுங்கள்.


குருவருள் இருந்தால் பிராணாயாமம் வசப்படும்

ஆரிய னல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.   – (திருமந்திரம் – 565)

விளக்கம்:
நம்முடைய உடலில் பிராணன், அபானன் என இரண்டு குதிரைகள் ஓடுகின்றன. அறிவுடைய நம் மனம் நல்லவனாக இருந்தாலும், அக்குதிரைகளை இழுத்துப் பிடிக்கும் வழிமுறையை நாம் அறிந்து கொள்ளவில்லை. அறிவு நுட்பம் கொண்ட குருநாதரின் அருள் பெற்றால் அக்குதிரைகளை நம் வசப்படுத்தலாம்.

குருவருள் பெற்றால் பிராணாயாமப் பயிற்சியின் சூட்சுமம் வசப்படும்.

ஆரியன் – அறிவுடையவன்,    விரகு – வழிமுறை


பிராணாயாமத்திற்கு முறையான பயிற்சி அவசியம்

ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண் டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்குங் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே.   – (திருமந்திரம் – 564)

விளக்கம்:
இந்த உடல் என்னும் ஊருக்கும், ஐம்பொறிகளுக்கும் தலைவன் நம்முடைய உயிர் ஆகும். இந்த உயிர் உய்வு பெற பிராணன் என்கிற குதிரை ஒன்று உண்டு. அக்குதிரையை வசப்படுத்தக் கற்றுக் கொண்டு, அதன் மீது ஏறிக் கொள்வோம். அது மெஞ்ஞானம் கொண்ட பயிற்சி உடையவர்க்கு வசப்படும். பயிற்சி இல்லாத பொய்யர்க்கு வசப்படாது தள்ளிவிட்டு தன் இஷ்டப்படி ஓடும்.

நம் மூச்சுக்காற்றை வசப்படுத்துதலே உய்வு பெறும் வழி ஆகும். பிராணாயாமம் செய்ய முறையான பயிற்சியும், மெஞ்ஞானமும் தேவை.

ஐவர் – ஐம்பொறிகள்,   ஊர் – உடல்,  பற்றுக் கொடுக்கும் – வசப்படும்


சிறந்த ஏழு ஆசனங்கள்

பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி
சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழு
முத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே.    – (திருமந்திரம் – 563)

விளக்கம்:
பத்திராசனம், கோமுகாசனம், பத்மாசனம், சிங்காதனம், சொத்திராசனம், வீராசனம், சுகாசனம் ஆகிய ஏழு ஆசனங்களும் மேலானவை. இவற்றையும் சேர்த்து மொத்தம் நூற்று இருபத்தாறு  ஆசனங்கள் உண்டு.

பங்கயம் – பத்மாசனம்,  கேசரி – சிங்காதனம்


சிங்காதனம் செய்யும் முறை

பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி
ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்
கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்
சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.    – (திருமந்திரம் – 562)

விளக்கம்:
முழந்தாளிட்ட நிலையிலே அமர்ந்து  கைகளை முன்னால் நீட்டி, விருப்பத்தோடு வாய் பிளந்த நிலையில், கண்களின் பார்வை மூக்கு நுனியை நோக்கி இருந்தால் அது சிங்காதனம் ஆகும்.

பாணி – கை,    அங்காந்து – வாய் பிளந்த நிலை,   கோதில் – குற்றம் இல்லாத


குக்குட ஆசனம்

ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு
முக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித்
தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற்
குக்குட ஆசனங் கொள்ளலு மாமே.   – (திருமந்திரம் – 561)

விளக்கம்:
இரண்டு பாதங்களையும் ஒரு சேர எதிர் தொடைகளின் மேல் வைத்து, முழங்கையை கீழே ஊன்றி, முயற்சி செய்து உடலை மேலே ஏற்றி, உடல் பாரம் கைகளில் தங்கும்படியாக செய்ய வேண்டும். இந்த நிலையில் அசையாமல் இருந்தால் அது குக்குட ஆசனம் ஆகும்.

பத்மாசனத்தில் அமர்ந்து கைகளை தரையில் ஊன்றி உடலை மேலே ஏற்றி அசையாமல் இருப்பது குக்குட ஆசனம்.

ஒக்க – ஒரு சேர,   ஊரு – தொடை,   முக்கி – முயற்சி செய்து,   துளங்காது – அசையாது