அளவில்லாத காலத்திற்கு அருள் பெறலாம்

விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்து
ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விடாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே.  – (திருமந்திரம் – 305)

விளக்கம்:
சிவபெருமானின் சிறப்பைப் படித்தும் கேட்டும் அறிந்து கொள்வோம்.   அதனால் கிடைக்கும் ஞானத்தினால் ஒழுக்கம் பெறுவோம். ஒழுக்கத்தினால் நம்மிடம் உண்டாகும் மாற்றத்தை சிந்தையில் உணர்வோம். உணர்ந்து ஒழுக்கத்தில் இருந்து வழுக்கி விடாமல் தொடர்ந்து நிலையாக இருந்தோமானால், வானவர் தலைவனான சிவபெருமான் தவறாமல் அருள்வான், அளவில்லாத காலத்திற்கு.


மலரின் வாசனை போல் விளங்குவான்

ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தி
நேசமு மாகும் நிகழொளி யாய்நின்று
வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே.  – (திருமந்திரம் – 304)

விளக்கம்:
ஈசன் பிறப்பையும் இறப்பையும் அருளும் விதத்தைப் பற்றி நாம் பேசியும் பிதற்றியும் மகிழ்வோம். நாம் அப்படி ஈசனின் நினைவிலேயே இருந்தால், அந்தப் பெருமானும் நம்மிடையே நேசமுடன் சிவசோதியாய் விளங்குவான். மலரில் வாசம் நீங்காது இருப்பது போல் அவனும் நம்மை விட்டு நீங்காதிருப்பான்.

மலரின் இயல்பாய் அதன் வாசனை இருப்பது போல் சிவனும் நம்முடைய இயல்பாய் விளங்குவான்.

(பிதற்றி – உரை தடுமாறி (உணர்ச்சி வசப்பட்ட நிலை),   நிகழொளி – சிவசோதி,  கந்தம் – வாசனை)


ஆதிப்பிரான் அவன்!

பெருமான் இவனென்று பேசி இருக்கும்
திருமானிடர் பின்னைத் தேவரும் ஆவர்
வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்
அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே.  – (திருமந்திரம் –303)

விளக்கம்:
சிவனே இந்த உலகில் மூத்தவன் என்பதை உணர்ந்து அவனைப் போற்றிப் புகழ்பவர்கள் சிறப்புடையவர்கள். அவர்கள் தம் வாழ்நாள் முடிந்த பிறகு வானுலகில் தேவர் ஆவார்கள். அரிய தவங்களைச் செய்யும் அந்த ஆதிப்பிரான் தன்னை நோக்கித் தவம் செய்பவர்களுக்கு மகிழ்ந்து அருள் செய்வான்.


சிவனை வேண்டினால் மற்ற தெய்வங்களும் அருள்வார்கள்

மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின்
அயன்பணி கேட்பது அரன்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே.  – (திருமந்திரம் –302)

விளக்கம்:
நந்தியம் பெருமானை வேண்டினால் திருமாலின் அருட்செயலையும் புரிந்து கொள்ளலாம். சிவத்தொண்டு செய்தால் பிரமனின் அருட்செயலையும் புரிந்து கொள்ளலாம். எல்லாமே சிவன் செயல் என்பதைப் புரிந்து கொள்பவர்கள் வானுலகின் தேவர்கள் ஆவார்கள். உலகப்பற்று உடையவர்கள், இவற்றை எல்லாம் விட்டு, செய்யும் செயலுக்கு என்ன பயன் கிடைக்கும் என்று  யோசித்துத் தங்கள் காலத்தை வீணே கழிப்பார்கள்.


திவ்விய மூர்த்தியை அறிவோம்!

தேவர் பிரானைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே.  – (திருமந்திரம் –301)

விளக்கம்:
சிவபெருமான் தேவர்களுக்கு எல்லாம் தலைவன் ஆவான். அந்த திவ்விய மூர்த்தியின் பெருமையைப் பற்றி நாம் அறிந்து கொள்ளவில்லை. அவனது பெருமையை நாம் அறிந்து கொண்டு, அவனைப் பற்றிய நூல்களைப் படிப்போம், அவனைப் பற்றி மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வோம். கற்றும் கேட்டும் அவனை உணர்வோம். உணர்ந்த பின் அவனது புகழைப் பாடி உயர்வு பெறுவோம்.


சிவகதி பெறும் வழி!

அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்
புறங்கேட்டும் பொன்னுரை மேனிஎம் ஈசன்
திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.  – (திருமந்திரம் –300)

விளக்கம்:
சிவகதி பெற நாம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியவை –

  • அறங்களைப் பற்றிய விஷயங்கள்
  • அந்தணர்களின் அறிவுரைகள்
  • வலிமையாக இருப்பதற்கான வழிகள்
  • தேவர்களின் வழிபாட்டு மந்திரங்கள்
  • பிற சமயங்களில் சொல்லப்படும் கருத்துக்கள்
  • பொன் போன்ற மேனி கொண்ட நம் சிவபெருமானின் திறம்

இவற்றை நாம் கேட்டுத் தெரிந்து கொண்டு சிவகதி பெறுவோம்.


உள்ளத்தில் இடம் கொடுப்போம்!

கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்து
உடலுடை யான்பல ஊழிதொ றூழி
அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்
இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே.  – (திருமந்திரம் –299)

விளக்கம்:
கயிலாய மலையில் வசிக்கும் சிவபெருமான், இந்த உலகில் பரந்திருக்கும் கடல் அனைத்தையும் தன்னுடையதாகக் கொண்டவன். ஐந்து பூதங்களையும் உடலாகக் கொண்டவன்.  வெற்றியுடைய காளையில் அமர்ந்திருக்கும், தேவர்களின் தலைவனான அவன், பல யுகங்களாக, தன் உள்ளத்தில் இடம் கொடுத்தவர்களின் மனத்தில்  ஒளியாய் விளங்குகிறான்.

(ஐம்பூதங்கள் – மண், விண், நீர், தீ, காற்று.   அடல் விடை – வெற்றியுடைய காளை)


தேவர்களை விட மிகுந்த பேரின்பம் பெறலாம்

பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே. – (திருமந்திரம் –298)

விளக்கம்:
ஏதாவது ஒன்றை பற்றிக்கொள்ள வேண்டுமென்றால் நாம் அந்த பரமனைப் பற்றிக்கொள்வோம். அந்தப் பற்று முழுமையாக இருந்தால் முதல்வனாம் சிவமெருமானின் அருளைப் பெறலாம். சாமர்த்தியம் மிகுந்த தேவர்களை விட கல்வியின் மூலம் இறைவனை உணர்ந்தவர்கள் மிகுந்த பேரின்பம் பெறுகிறார்கள்.


வழித்துணையாய் வரும் கல்வி

வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே. – (திருமந்திரம் –297)

விளக்கம்:
கல்வி கற்றவர்களின் சிந்தனை நமக்கெல்லாம் வழித்துணையாகவும், நோய் தீர்க்கும் மருந்தாகவும் விளங்குகிறது. கல்வி இல்லாதவர்களின் சிந்தனை இறைவனைப் பற்றிய எண்ணங்களை நீக்கி அறியாமையை விளைவிக்கும். அவற்றை நாம் தவிர்க்க வேண்டும். கல்வி கற்றவர்களுக்கு, அந்த தேவலோகம் முதலிய ஏழு உலகங்களுக்கும் வழித்துணையாய் விளங்கும் அந்த சிவபெருமான்  பெருந்தன்மையுடன் அருள் புரிவான்.


நூல் ஏணி

ஆய்ந்துகொள் வார்க்குஅரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்த மனமல்கு நூலேணி யாமே. – (திருமந்திரம் –296)

விளக்கம்:
சூரியனின் ஒளி எல்லாப் பக்கங்களிலும் பரவி இருந்தாலும், சூரியகாந்தக் கல்லால் மட்டுமே சூரிய ஒளியை உள்வாங்கி நெருப்பை வெளியே சிதற விட முடியும். அது போல இறைவன் எங்கும் பரவி இருக்கிறான் என்றாலும், கல்வி கற்றவர்களாலேயே அந்த இறைவனை உணர முடியும். இளஞ்சந்திரனை தன் நெற்றியில் அணிந்துள்ள சிவபெருமானை அடைய வல்லவர்களுக்கு சிறந்த நூல்களை ஏணியாகப் பற்றிக்கொள்ளக் கூடிய மனம் வாய்க்கும்.