யோகத்தினால் உடல் பொலிவு பெறலாம்

ஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாந்
தாழா நடைபல யோசனை சார்ந்திடுஞ்
சூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை
தாழான ஒன்பதிற் றான்பர காயமே. – (திருமந்திரம் – 647)

விளக்கம்:
தொடர்ந்து ஏழு ஆண்டுகள் யோகத்தில் நிற்பவர்களுக்கு சண்டமாருதம் போல் வேகமாக நடக்கும் திறன் வாய்க்கும். அவர்களால் தளராமல் பல யோசனை தூரம் நடக்க முடியும். எட்டாவது ஆண்டில் யோகத்தினால் சூழப்பட்டிருக்கும் போது முடி நரைப்பதும் தோல் சுருங்குவதும் நின்று விடும். ஒன்பதாம் ஆண்டு யோக வாழ்வில் அமிழ்ந்திருக்கும் போது உடல் தேவ சரீரம் போல் பொலிவுடன் காணப்படும்.


அறிவால் அட்டமாசித்தி கிடைக்காது!

நாடும் பிணியாகு நஞ்சனஞ்சூழ்ந்தக்கால்
நீடுங் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்
பீடொன்றி னால்வாயாச் சித்திபே தத்தின்
நீடுங் துரங்கேட்டல் நீண்முடி வீராறே. – (திருமந்திரம் – 646)

விளக்கம்:
உறவினர்களும் சுற்றத்தாரும் நம்மை சூழ்ந்திருந்தால், நோய் தான் நம்மை நாடி வரும். மிகுந்த கலை அறிவு, மேதைமை, கூர்ந்த ஞானம், வலிமை ஆகியவற்றால் அட்டமாசித்திகளை அடைய முடியாது. உலக வாழ்க்கையில் இருந்து வேறுபட்டு, பன்னிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து யோகத்தில் நின்று, தியானத்தில் மட்டுமே கேட்கக் கூடிய ஒலியைக் கேட்டு இருந்தால் அட்டமாசித்தி கிடைக்கப் பெறலாம்.


மூச்சுப் பயிற்சியால் அட்டமாசித்தி பெறலாம்

மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின்
உதய மதுநா லொழியவோ ரெட்டுப்
பதியுமஈ ராறாண்டு பற்றறப் பார்க்கில்
திதமான ஈராறு சித்திக ளாமே.– (திருமந்திரம் – 645)

விளக்கம்:
மூச்சுப்பயிற்சியின் போது, சந்திரகலை எனப்படும் இடது பக்கம் இழுக்கப் பெறும் மூச்சு பன்னிரெண்டு அங்குல அளவில் இருக்கும். அவற்றில் எட்டு அங்குல அளவு மூச்சு உள்ளே பதிந்து நான்கு அங்குல அளவு பிங்கலை எனப்படும் வலது பக்கம் வெளி வரும். பன்னிரெண்டு ஆண்டுகள் பற்றில்லாமல் தொடர்ந்து மூச்சுப் பயிற்சி செய்து இதைக் கவனித்து வந்தால், அட்டமாசித்தி எனப்படும் எட்டுச் சித்திகளை உறுதியாக அடையலாம்.


கன்மயோகத்தினால் அட்டமாசித்தி பெறலாம்

இருபதி னாயிரத் தெண்ணூறு பேதம்
மருவிய கன்ம மாமந்த யோகந்
தருமிவை காய உழைப்பாகுந் தானே
அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே.  –  (திருமந்திரம் – 644)

விளக்கம்:
கன்ம யோகத்தில் இருபதினாயிரத்து எண்ணூறு வகை உண்டு. கன்ம யோகம் உடல் உழைப்பைத் தருவதோடு கிடைப்பதற்கு அரிதான அட்டமாசித்தியை அளிக்க வல்லது!


மெய்ப்பொருளை உணர்வோம்!

காயாதி பூதங் கலைகால மாயையில்
ஆயா தகல அறிவொன் றனாதியே
ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலு மாமே.  –  (திருமந்திரம் – 643)

விளக்கம்:
வானம் முதலான ஐந்து பூதங்கள், அவற்றைப் பற்றிய கல்வி, காலம், இவற்றால் ஏற்படும் மாயை ஆகியவற்றில் சிக்காமல் அகன்ற அறிவு ஒன்றை நாடுவோம். புற உலகைப் பற்றிய விஷயங்களைத் தேடாமல் மெய்ப்பொருளை நாடுவோம். மெய்ப்பொருளை நாடும் அகன்ற அறிவுடன், தொடக்கமில்லாத அனாதியான  ஓய்வேயில்லாத சிவபெருமானின் தன்மையை உணர்வோம். மெய்ப்பொருளை உணர்ந்தால் அழிவில்லாத பரவெளியை அடையலாம்.


வசித்துவம் – எட்டாம் சித்தி

குரவன் அருளிற் குறிவழி மூலப்
பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே.  –  (திருமந்திரம் – 642)

விளக்கம்:
யோககுருவின் வழிகாட்டுதலின் படி நாம் தியானம் செய்வோம். அத்தியானத்தினால் மூலாதாரத்தில் உள்ள சக்தி சகஸ்ரதளத்தில் இருக்கும் சிவனைச் சேரும். அந்தச் சரியான சமயத்தில் தெளிவு தரும் சாம்பவி, கேசரி ஆகிய யோகங்களைச் செய்பவர்களுக்கு எட்டாம் சித்தியான வசித்துவம் வாய்க்கும். இதை விடச் சிறந்த சிவகதி ஏது?

குரவன் – குரு, பரை – பராசக்தி, சங்கட்டம் – நல்ல சமயம்


அட்டமாசித்தியை விட உயர்ந்த பரிசு ஏது?

பரிசறி வானவர் பண்பன் அடியெனத்
துரிசற நாடியே தூவெளி கண்டேன்
அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி
பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே.  –  (திருமந்திரம் – 641)

விளக்கம்:
அவரவர் பக்குவத்திற்கு ஏற்றபடி அருள் தரும் பண்பு உடையவன் நம் சிவபெருமான். அவனுடைய திருவடியே கதி என நாடி, மனத்தில் எந்தவித சந்தேகமும் இல்லாமல் சரண் அடைந்தேன். அங்கே தூய்மையான பரவெளியைக் கண்டேன். இனி இந்த உலகில் நான் ஆசைப்படக்கூடிய அரிய பொருள் என்று எதுவும் இல்லை. ஏனென்றால் மிக அரிய பரிசான அட்டமாசித்தியை எனக்கு அளித்து என் பிறப்பறுத்தான் என் சிவபெருமான்.


சிவபெருமானை அணிந்து கொள்வேன்!

பணிந்தெண் திசையும் பரமனை நாடித்
துணிந்தெண் திசையுந் தொழுதெம் பிரானை
அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே.  –  (திருமந்திரம் – 640)

விளக்கம்:
அட்டமாசித்தி எனப்படும் எட்டு விதமான மாபெரும் சக்திகளைப் பெற நாம் எட்டுத் திசைகளிலும் சிவபெருமானைத் தேடிச் சென்று முழு நம்பிக்கையுடன் அவனை வணங்க வேண்டும். அன்பு மிகுதியால் சிவபெருமானை நாம் அணிந்து கொள்ள வேண்டும். உலக விஷயங்களின் மேல் உள்ள ஆசைகள் எல்லாம் தணிந்து சிவபெருமானைத் தொழுது இருந்தால் அட்டமாசித்திகளைப் பெற்று அச்சக்திகளை நிலை நிறுத்தலாம்.