ஆறு ஆதாரங்களில் அமிர்தம் ஊறும்

ஆறுஅது கால்கொண்டு இரதம் விளைத்திடும்
ஏழுஅது கால்கொண்டு இரட்டி இறக்கிட
எட்டுஅது கால்கொண்டு இடவகை ஒத்தபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே. – (திருமந்திரம் – 703)

விளக்கம்:
மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்களுக்கும் மேல் உள்ள ஏழாவது ஆதாரமான சகசிரதளத்தில், நமது மூச்சுக்காற்றை ஏற்றி இறக்கி பிராணாயாமம் செய்யும் போது, ஆறு ஆதாரங்களிலும் அமிர்தம் ஊறும். எட்டாவது ஆதாரமாகச் சொல்லப்படும் உச்சந்தலையில் இருந்து பன்னிரெண்டு அங்குலம் உயரத்தில் மனம் நிறுத்தி பிராணாயாமம் செய்யும் போது, சுழுமுனையும் சுழுமுனை தவிர்த்த மற்ற ஒன்பது நாடிகளும் ஒரே அளவில் பிராண வாயு பெற்று வளம் பெறும்.

தசநாடிகள் எனச் சொல்லப்படும் பத்து நாடிகள் இவை – பிங்கலை, இடங்கலை, சுழுமுனை, சிகுவை, காந்தாரி, புருடன், அத்தி, அலம்புடை, சங்கினி, குரு என்பதாகும்.


மூச்சுக்காற்றில் பராசக்தி கலந்திருக்கிறாள்

எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்
எழுகின்ற வாயு இடமது சொல்லில்
எழுநூற் றிருபத்தொன் பானது நாலாய்
எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே . – (திருமந்திரம் – 702)

விளக்கம்:
யோக நிலையில், மூலாதாரத்தில் இருந்து எழுகின்ற சோதியுள் நம் நாயகியாகிய பராசக்தி கலந்திருக்கிறாள். நான்கு இதழ்களை உடைய மூலாதாரத்தில் இருந்து சுழுமுனை வழியாக எழுகின்ற குண்டலினி எழுநூற்று இருபத்து ஒன்பது நாடிகளைக் கலந்து செல்கிறது.


மூச்சுக்காற்றே பெருஞ்செல்வம் ஆகும்!

இருநிதி ஆகிய எந்தை இடத்து
இருநிதி வாயு இயங்கு நெறியில்
இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்
இருநிதி வாயு இயங்கும் எழுந்தே . – (திருமந்திரம் – 701)

விளக்கம்:
நம்முடைய தலைவனான சிவபெருமான் வசிக்கும் சகசிரதளமும், பிராணாயாமத்தின் போது இயங்கும் மூச்சுமே நாம் பெற்ற பெருஞ்செல்வம் ஆகும். இவற்றை விட பெரிய செல்வம் வேறேதும் இல்லை. பிராணாயாமத்தினால் நமது மூச்சு இயங்கும் கணக்கு இருநூற்று முப்பத்து எட்டாகக் குறைந்து விடும்.