இரு வரிக் கதை – 01

அடர்ந்த காடு, நிலவு மட்டுமே ஒளி, மர நிழல்களின் நடனம், நெருக்கமாய் வாசனைப் பெண் ஒருத்தி சுய ஒளியுடன். “இந்த மரமெல்லாம் என் நண்பர்கள், வெட்கம் மறக்க அந்த மேகத்தினுள் ஒளிந்து கொள்வோம், வா!” என்றாள்.


வேதாளம் சொன்ன கதையல்ல நிசம்!

சேதனனுக்கு நேரத்தைக் கடப்பதே சிரம காரியம். இந்த சாலையை எப்படி கடப்பான்?  தன் முயற்சியில் சற்றும் தளராத சேதனன் மீண்டும் அந்த அகலம் அதிகமுள்ள சாலையைக் கடக்க முயன்றான். அந்த இடத்தைக் கடந்த எந்த சக்கர வாகனமும், எந்த வாகன ஓட்டுனரும், எந்த ஒரு பயணியும், அவனை ஒரு பொருட்டாகவே உணரவில்லை. ஒவ்வொருவனையும் பொருட்படுத்திக் கொண்டிருந்தால் பிறகு அவனை பொருட்படுத்த எவனும் இருக்க மாட்டான் என்பது இங்கே பொருட்கொள்ள வேண்டிய விஷயம். அவனைப் போலவே சக சமுதாயக் கால்நடை ஒன்றும் அங்கே தவித்தான். அவன் ரொம்ப யோசிக்கவில்லை, எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்த சாலையைக் கடக்க ஆரம்பித்தான். சேதனனும் அவன் பின்னாலேயே நடக்க ஆரம்பித்தான். அப்போது வலப்பக்கமிருந்து வேகமாக வந்து கொண்டிருந்த கார் நிறக் கார் ஒன்று இரண்டு அற்பப் பிராணிகள் சாலையைக் கடப்பதைப் பார்த்து சிறிது வேகத்தை குறைத்தது. காரின் வேகத்தைப் பார்த்து முதலில் தயங்கிய அந்த சக மனிதன், கார் வேகம் குறைவதைப் பார்த்து வேகமாக சாலையைக் கடக்கப் பாய்ந்தான். அதே நேரம் அவன் தயங்கியதைப் பார்த்த அந்த கார் நிறக் கார் ஓட்டுனன் தன் காரின் வேகத்தைக் கூட்டினான்.

பிணமாகக் கிடந்த அந்த சக மனிதனை சேதனன் தூக்கிச் சுமந்தவாறு சாலையைக் கடந்தான். எந்த உணர்ச்சியும் காட்டாமல் அந்தக் கார் சாதாரணமாகக் கடந்து சென்ற விதம், தனக்கு இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை என்பதாக இருந்தது. சேதனன் சாலையைக் கடந்து முடிக்கும் போது, தோளில் பிணமாகக் கிடந்தது கனக்கத் தொடங்கியது. ஒரு ஓரமாக இறக்கி வைக்கப் பார்த்தால், அது இறங்க மறுத்தது. இந்த இடத்தில் இருந்து தான் வேதாளம் சொன்ன கதை ஆரம்பம் ஆகிறது.

அந்த சடலத்தில் இருந்து இறங்க மறுத்த வேதாளம் பேசத் தொடங்கியது. “சேதனா! இப்போது நடக்கும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையில் ஓர் ஒற்றை இலக்க சதவிகிதம் மட்டுமே விபத்தாகும், மற்றவையெல்லாம் கொலையும், தற்கொலையுமே ஆகும். தெரியுமா உனக்கு?” எனக் கேட்டது.

“ஊடகங்கள் எல்லாவற்றையும் மிகைப்படுத்தி பேச வைக்கிறது. உன் உணவுப் பழக்கம் பற்றி கொஞ்சம் சொல்லேன்.”  சேதனன் வேதாளத்திடம் கேட்டான்.

“வேதாளத்திற்கு நினைவு தான் உணவு. ஏன் கேட்கிறாய்?”

“யோவ்! இந்த வெயிட் இருக்கியேன்னு கேட்டா!  எறங்குயா கீழ”.

“கோபப்படாதே சேதனா! உன் மூலமாக இந்த உலகிற்கு நீதி சொல்ல வேண்டியிருக்கிறது”.

“நீயுமா? என்ன செய்யணும்னு சொல்லு”.

”நீ இந்த சடலத்தை தோளில் சுமந்தவாறு மருத்துவமனைக்கு நடந்து போ. போகும் வழியில் நான் உனக்கு ஒரு கதை சொல்கிறேன்”.

கதை கேட்பது, கருத்து சொல்வது, இதெல்லாம் சேதனனுக்கு பிடித்த விஷயம். அதனால் “சரி சொல்லு வேதாளமே!” என்று சொன்னவாறே நடக்க ஆரம்பித்தான்.

“சேதனா! இது கற்பனை கதை அல்ல, நடந்த சம்பவம். சிற்றுந்து எனப்படும் மினிபஸ்ஸில் நடந்த சம்பவம் இது. மினிபஸ்களுக்கு சாலை விதிகளில் இருந்து விலக்கு  அளிக்கப்பட்டுள்ளதாகக் கேள்விப்பட்டுள்ளேன். பாதசாரி ஒருவர் கண்ணசைத்தாலே பக்கத்தில் வந்து நின்று அவரை ஏற்றிச் செல்லும். அந்த வகையில் அவை சிறந்த சேவையை அளிக்கின்றன. சம்பவ தினத்தன்று, மதிய நேரம், ஓரளவு கூட்டத்துடன் பயணம் சென்று கொண்டிருந்தது. நண்பகல் நேரமாதலால் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லை. சிற்றுந்தின் ஒட்டுனர் மற்றும் நடத்துனர், இருவருமே இளவயதுக்காரர்கள்.”

“பக்கச்சாலையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மினிபஸ்ஸின் முன்னே வந்து சாலையில் இணைந்து சாலையின் நடுவே மிதமான வேகத்தில் செல்ல ஆரம்பித்தது. மோட்டார் சைக்கிளில் இருந்த இருவருக்கும் முப்பது வயதிற்குள் இருக்கும், லுங்கியும் பனியனும் அணிந்திருந்தார்கள். பின்னால் வந்த மினிபஸ்ஸுக்கு வழிவிடாமல் நடுரோட்டில் அலட்சியமாக ஒட்டினான் அந்த சிவப்பு பனியன்காரன். ஹாரன் சத்தம் கேட்டு அவன் உடல் கொஞ்சம் விரைத்ததே தவிர, ஒதுங்கி வழி விடுவதில்லை என தீர்மானமாக ஓட்டினான். மினிபஸ் ஓட்டுனன் பொறுமை இழக்க ஆரம்பித்தான். அவன் உதிர்த்த கெட்ட வார்த்தைகளை எல்லாம் பின்னால் நின்ற கல்லூரிப் பெண் ஒருத்தி கவனமாகக் குறிப்பெடுத்துக் கொண்டாள் தன் மனத்தில்.”

“மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நீல பனியன்காரன் பின்னால் திரும்பி கோபமாக இருந்த ஓட்டுனனின் முகத்தை பார்த்து விட்டு சிவப்பு பனியன்காரனிடம் ஏதோ சொல்லிச் சிரித்தான். அதை பார்த்த சிற்றுந்து ஓட்டுனனின் கோபம் தலைக்கேறியது. பயணச்சீட்டு கொடுக்க வந்த நடத்துனனிடம் பயணி ஒருவர் “அங்க என்னய்யா ப்ரச்சனை?” என்று கேட்க, முன்னால் வந்து பார்த்த நடத்துனன் ஓட்டுனனிடம் “தூக்குடா அவன” ன்னு சொல்லவும் அடுத்த விநாடி அங்கே எல்லாமே முடிஞ்சு போச்சு. மோட்டார் சைக்கிளில் வந்த இருவருமே பலியாகி விட்டார்கள்”.

“இப்போது என் கேள்வி இதுதான். நடந்தது விபத்தா அல்லது கொலையா? அந்த துர்சம்பவத்திற்கு காரணம் யார்? சிற்றுந்து ஓட்டுனரா? மோட்டார் சைக்கிள் ஓட்டுனரா? அவர் பின்னால் அமர்ந்திருந்தவரா? அல்லது “தூக்குடா அவனை”ன்னு சொன்ன நடத்துனரா? நீ சரியான பதிலை சொன்னால் நான் உன்னை விட்டு விடுவேன்.” என்று வேதாளம் சொன்னது.

கொஞ்சம் யோசித்த சேதனன் “இது போன்ற சூழ்நிலைகள் நிறைய இடங்களில், அநேக சமயங்களில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன, ஒன்றிரண்டைத் தவிர பெரும்பாலானவை அசம்பாவிதம் இல்லாமல் கலைந்து விடுகின்றன. உணர்ச்சி வசப்படாமல் யோசித்தால்  புரியும், இது போன்ற கோபங்கள் சில நிமிடங்களில் மறைந்து விடும். நீ சொன்ன சம்பவத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் இரண்டு பேர், மினி பஸ் ஓட்டியவரும் பைக் ஓட்டியவரும். நடத்துனர் என்ற முறையில் அவருக்கும் அதில் கொஞ்சம் பொறுப்பு இருக்கிறது. ஆனால் “அங்கே என்ன ப்ரச்சனை?”ன்னு கேட்ட அந்த பயணிக்கு இதில் எந்த சம்பந்தமும் கிடையாது. காசு கொடுத்து பயணச்சீட்டு எடுப்பதை விட்டு விட்டு தனக்குத் தேவையில்லாத விஷயத்தில் ஆர்வம் காட்டியது தான் அந்த அசம்பாவிதத்திற்கு காரணம்”.

சேதனனின் பதிலைக் கேட்ட வேதாளம்,  அந்த சடலத்தை விட்டு நீங்கியது. கதையும் பதிலும் கேட்டுக் குழம்பிப் போன அந்த சடலம் எழுந்து ஓடத்தொடங்கியது.


தெளிவு!

அது ஒரு நண்பகல். ஊரெங்கும் ஒரே இருட்டு. வீட்டில் இருந்த மூன்றாவது மாடியில் நான் மட்டும் தனியாக திருமணமாகாத என் மனைவியுடன் இருந்தேன். எங்கள் வீட்டில் இரண்டே தளங்கள், மூன்றாவது மற்றும் ஐந்தாவது. இரவு நீண்ட நேரம் தூங்கிய களைப்பில் என் மனைவி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவளது மூச்சு இனிமையான இசையாக வெளி வந்தது. வியப்புடன் எப்படி என்பது போல் அவளை பார்த்தேன்.

“மூங்கில் மூச்சு” என்றாள்.

எனக்கு மூக்கில் மூச்சு மட்டும் தான் தெரியும். பசி எடுத்தது . ஏதாவது இருக்கிறதா என்று தேடிய போது அவள் சாப்பிட்ட மீதம் கொஞ்சம் இருந்தது. அதை எடுத்து முகர்ந்து பார்த்து பசியாறினேன். அப்போது தான் ஐந்தாவது மாடியில் இருந்து அழைப்பு மணி ஒலித்தது. கீழே இறங்கிப் போய் அங்கிருந்த மெழுகுவர்த்தி ஒன்றை ஊதினேன். வெளிச்சம் பரவியது. வீட்டின் நடுவிலிருந்த ஃப்ரிட்ஜை திறக்க முயன்று, முடியாது என்பதை உணர்ந்தேன்.

“மன்னிக்கவும். எனது கைகளை மாட்டிக் கொள்ள மறந்து விட்டேன். நீங்களாக கதவை திறந்து வாருங்கள்” என்றேன்.

உள்ளே வந்த அந்த பெண்ணுக்கு பதினெட்டு வயது இருக்கும். யோசித்ததில் அவள் எனது முன்னால் காதலி என்பது நினைவில் வந்தது.

அது ஒரு இனிமையான காலம். நாங்கள் இருவரும் ஒரே காகிதத்தில் தேர்வு எழுதினோம், ஒரே ஃபோனில் இருவரும் பேசிக்கொள்வோம், ஒரே பயணச்சீட்டில் பிரயாணம் செய்வோம். ம்ஹூம், இப்போது எதுக்கு அந்த இருபது வருஷத்துக்கு முந்திய கதையெல்லாம்!

“எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டேன்.

“உன் நினைவுகளை சுமந்து கர்ப்பமாகி விட்டேன்” என்றாள்.

அவள் வயிற்றுக்குள் இருந்து ஒரு சிறுவன் எட்டிப் பார்த்து ‘ஆமாம் அப்பா’ என்றான்.

“ரொம்ப சந்தோஷம்” சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன். மறந்து விட்டிருந்த கைகளை எடுத்து வந்திருந்தாள் என் மனைவி.

நிமிர்ந்து பார்க்கவே கூசிற்று எனக்கு.

“இப்போது நாம் என்ன செய்வது ?” முணுமுணுப்புடன் நிமிர்ந்து பார்த்தேன். அங்கிருந்த என் மனைவியை காணவில்லை.

அங்கே சிரித்தபடி இளையராஜா ‘நான் தேடும் செவ்வந்தி பூ இது” பாடிக் கொண்டிருந்தார்.


சபாபதித் தாத்தா

சபாபதித் தாத்தா சாகக் கிடந்தார். அவரை சபாபதி தாத்தான்னும் எழுதலாம். எப்படி எழுதினாலும் அவர் சாகத்தானே போறார். வயசு எண்பதுக்கு மேலே ஆயிடிச்சு. தன்னோட வாழ்நாளில் தான் இது வரை ஏன் பிறந்தோம் என அவர் வருத்தப்பட்டதில்லை. அதனால் ஏன் சாகப் போகிறோங்கிற வருத்தமும் அவருக்கில்லை. அவருக்கே வருத்தம் இல்லாததால் வீட்டில் உள்ளவர்களின் துணை வருத்தங்கள் தேவைப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் வீடே ஒரு வித திருவிழாக்கோலம் கொண்டிருந்தது. சொந்தமெல்லாம் ஒன்று கூடியதால் வந்தக் கோலம். தாத்தாவுக்கு பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் நிறைய.

அவரோட பேத்திகளில் ஒருவளான சியாமளாவும் அவளோட புருஷன் சேதனனும் வந்த போது நிறைந்த வரவேற்பு. “கூட்டம் ரொம்ப அதிகமா தெரியுதே! பேசாம ஒரு மண்டபம் பிடிச்சிருவோமா சியா?”ன்னு கிசு கிசுப்பா கேட்ட சேதனன் காலிலே மிதி வாங்கினான். “உன் லூசுத்தனத்தெல்லாம் ஃபேஸ்புக்கோட வச்சுக்கோ”.

தாத்தா யார் கிட்டவும் ரொம்ப ஒட்ட மாட்டார், ஆனா சேதனனை மட்டும் கூப்பிட்டு வச்சு ரொம்ப பேசுவார். வீட்டில் எல்லாருமே ஆச்சரியப்படுற விஷயம் இது. சேதனனோட முகராசியே அப்படித்தான். வேலைக்கு சேர்ந்து ஒரு வாரத்திலேயே இவன் வேலைக்கு லாயக்கு இல்லைன்னு அவன் அலுவலகத்துக்கு தெரிஞ்சு போச்சு, இருந்தும் நல்ல சம்பளமும் ஒரு இண்டர்நெட் கனெக்‌ஷனும் கொடுத்து நல்லபடியா வச்சிருக்கிறாங்க. சியாமளா அறிமுகம் ஆனதும் அலுவலகத்தில் தான். ப்ளாக்கில் அபத்தமா எழுதுவதே தன்னோட வேலையா இருந்தவன் இப்படி ஒண்ணு எழுதினான்.

வன்புணர்வு என ஒரு வழக்கு அவன் மேல் –
இல்லை, மென்புணர்வு அது என மறுத்தான் அவன்.
இதென்ன நுண்புணர்வு என திகைத்த மக்கள்
கண்புணர்வு கொண்டனர்.

இதைப் படித்த சியாமளாவுக்கு வந்த சந்தேகம்தான் அவர்களுக்குள்ளே அறிமுகம் ஏற்படுத்தியது.

“புணர்வுன்னா என்னதுங்க?”

“?”

“இல்ல. நான் தமிழ் மீடியத்துலயே படிச்சு வந்துட்டேன். அதான் புரியலை.”

“அன்புணர்வு தெரியுமில்ல உங்களுக்கு? திருவள்ளுவர் கூட நிறைய அது பத்தி நெறைய எழுதிருக்கார். அதத்தான் இப்போ சுருக்கமாச் சொல்றோம்.” எப்படியோ சமாளிச்சிட்டான்.

இப்படி ஒரு அப்பாவியைத் தான் கல்யாணம் பண்ணனும்னு அன்னைக்கே முடிவும் பண்ணிட்டான்.

அவனோட சுபாவம் சியாமளா வீட்டில எல்லாருக்குமே ரொம்பப் பிடிச்சுப் போச்சு. தாத்தா மட்டும் மற்றவர்களிடம் போலவே அவனிடமும் பட்டும்படாமல் இருந்தார். சேதனன் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. அவன் பாட்டுக்கு தாத்தா ரூமுக்கு போய் உட்கார்ந்து டீவி பார்ப்பான். அப்படி ஒரு முறை பார்த்த மனோகரா படம்தான் தாத்தாவையும் அவனையும் நெருக்கமா ஆக்கிச்சு. டி.ஆர். ராஜகுமாரியின் வஞ்சனையைப் பார்த்த சேதனன் தன்னை மறந்து கமெண்ட் அடித்தான்.

“இந்த ஒரு பார்வையே போதும். என்னைய இப்படிப் பாத்து தாத்தாவ கொல்லுன்னு சொன்னா, கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டேன்”.

அன்றையிலிருந்து தாத்தாவும் சேதனனும் ரொம்ப அந்நியோன்யம். அவன் வந்தாலே ரெண்டு பேருக்கும் சேர்த்து தின்பண்டங்களும் காப்பியும் தாத்தா ரூமுக்குப் போயிரும். சியாமளாவுக்கு தாத்தா தன் புருஷன் கூட மட்டும் தான் பேசுறார்ங்கிறதுல ரொம்பவே பெருமை.

_____________________________________________________

தாத்தா சாகப்போறது சேதனனுக்கு ரொம்பவே துக்கமான விஷயம் தான், ஆனால் அவன் இது போன்ற உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்வதில்லை. தன் உணர்வு இல்லாமல் ரொம்பவே தளர்ந்து கிடந்தார் தாத்தா. மருத்துவரின் கணக்குப்படி நேத்தே போயிருக்க வேண்டியது, இருக்கவா போகவான்னு இன்னும் ஊசலாடிக்கிட்டுருந்தார். வீட்டில உள்ள பெரியங்க சில பேர் வீட்டுச்சுவரை கொஞ்சம் சுரண்டி மண் எடுத்து பால்ல கரைச்சு தாத்தா வாயில ஊத்தினாங்க. சேதனனுக்குப் புரியலை, என்ன விஷயம்னு கேட்டான்.

“ஏதாவது ஒரு ஆசை பிடிச்சு உயிரை நிப்பாட்டியிருக்கும். இந்த வீடு அவர் ஆசையா கட்டினது இல்லையா, அந்த மண்ண கொஞ்சம் குடுத்தா நிம்மதியா போயிருவார்னு ஒரு நம்பிக்கை”.

கொஞ்ச நேரம் கழிச்சு தாத்தாவுக்கு பிடிச்ச திண்பண்டம் எல்லாத்தையும் ஒரு கலவையா பால்ல கரைச்சு அதையும் தாத்தா வாயில ஊத்தினாங்க. இதையெல்லம் பார்த்துகிட்டேயிருந்த சேதனன் வெளியே போயிட்டு தானும் ஒரு கிண்ணத்தில பாலோட வந்து தாத்தா வாயில ஊத்தினான். ஊத்தும்போதே தாத்தா முகம் கொஞ்சம் அசைவு கொடுத்து அப்படியே அடங்கிருச்சு. ஏதோ திருப்தி தெரிஞ்சது அவர் முகத்தில.

ஊருக்குத் திரும்பினதும் சியாமளா கேட்டாள் “அதெப்படி நீங்க பால் கொடுத்ததும் தாத்தா செத்துப் போனார்?”. “நான் அவருக்குப் பிடிச்ச பேரன்ல! அதனால இருக்கும்” ன்னான். தன் சட்டைப் பையில் இருந்த ஒரு பழைய வாரப்பத்திரிகையின் பக்கத்தை எடுத்துப் பார்த்தான். இன்னும் கொஞ்சம் ஈரம் மிச்சம் இருந்தது.


சேதனன், விமலை மற்றும் கொஞ்சம் தனிமை

“வா. என் மடி மேலே வந்து மண்டியிட்டு உட்கார்” சேதனன் குரலில் கடுமை இல்லை. ஆனால் உறுதி இருந்தது. அவன் கண்கள் மூடிய நிலையிலேயே இருந்தது. மிச்சமிருந்த கொஞ்ச தயக்கத்தையும் கழற்றி விடலாமா என்ற யோசனை தோன்ற ஆரம்பித்து விட்டது விமலைக்கு.

“மன மயக்கத்தினால் வருவது தயக்கம். உனக்கென்று ஒரு யோசனையும் வேண்டாம், நான் சொல்வதை மட்டுமே உன் மனம் கேட்கட்டும்” சேதனனின் வசீகரக்குரலில் விமலை தன்னை மறந்து ஒரு மாய உலகத்துக்குள் நுழைய தயாரானாள்.

தான் இருக்கும் இடத்தை சுற்றிலும் ஒரு முறை பார்த்தாள். அது ஒரு சிறிய அறை, ரொம்ப சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது. மங்கலான வெளிச்சம், செயற்கையான குளிர். தரை முழுவதும் தடிமனான சிவப்பு நிற விரிப்பு ஒன்று பரவி இருந்தது. ஒரு சிறிய மெத்தை மேல் சேதனன் சம்மணமிட்டு அமர்ந்திருந்தான், இடுப்பில் ஒரு நான்கு முழ வேட்டி மடித்து கட்டிய நிலையில் இருந்தது. மேலே சட்டை எதுவும் அணியவில்லை, உடல் முழுவதும் சந்தனம் பூசப்பட்டிருந்தது. கண்கள் மூடிய நிலையில் அவன் முகம் எந்தவொரு சலனமும் இல்லாமல் தெளிவாய் இருந்தது. கழுத்திலே ஒரு மலர் மாலை அணிந்திருந்தான். அறையில் அவர்கள் இருவரைத் தவிர ஒரு சிறிய பொருள் கூட கிடையாது.

“எப்போதும் நீ தான் அதிகம் பேசுவாய், இன்று உன் குரலையே நான் இன்னும் கேட்கவில்லை” கண்கள் இன்னும் மூடிய நிலையிலேயே கேட்டான் சேதனன்.

“அதான் நீ பேசுறியே சேர்த்து” அவள் குரலில் லேசான கிண்டல் இருந்தது.

“பயமாயிருக்கா?”

“இல்லை. என் சம்மதம் இல்லாமல் இங்கே எதுவும் நடக்காது”

“நான் ஒன்றும் செய்யப் போவதில்லை”

“சரி. அப்போ நான் வரட்டுமா?”

“பொறு. ஒரு அனுபவம் உன்னைச் சந்திக்க காத்திருக்கிறது!”

”அது எனக்கு இப்போ தேவை இல்லை.”

“நீ நினைப்பது இல்லை இது. அதை விட இது பெரிய அனுபவம். என் விரல் உன்மேல் படாது”

“சரி சரி. அந்த அனுபவத்தை சீக்கிரம் வரச் சொல்லு.”

விமலை மெதுவாக நடந்து சேதனன் பக்கத்தில் வந்தாள். அவள் சேலை தரையில் உரசிய சத்தம் அவனிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாதது அவளுக்கும் கொஞ்சம் சுவாரசியத்தையும் தைரியத்தையும் கொடுத்தது. லேசாக இருமிக் காட்டினாள்.

“அமரலாமே!” அவன் குரல் இன்னும் என்ன தயக்கம் என்பது போல் இருந்தது.

“உன் முன்னால தானே உட்காரணும்?”

“இல்லை. என் மடியில் வந்து மண்டியிடு. என் மடியை உயிரில்லாத ஒரு தலையணை போல நினைத்துக்கொள்.”

“அது சரி!” இந்த நேரம் சிரிப்பது அபத்தமாய் இருக்குமோ என்று கட்டுப்படுத்திக் கொண்டாள்.

அவள் சேலை நுனியை அவன் காலில் படச் செய்து அவன் முகத்தையே பார்த்தாள்.

“ஆற்றில் இறங்க ஆழம் பார்க்கிறாயா?” கண்களைத் திறக்காமலே கேட்டான்.

“பொம்பளைங்க எதுலயும் ஆழம் பார்த்துத் தான் இறங்குவோம்.”

மெதுவாக தன் கால் முட்டி இரண்டும் அவன் தொடையில் வைத்து அவன் மேல் தன் பாரத்தை ஏற்றினாள். அவன் மேல் பூசியிருந்த சந்தனத்தின் வாசம் அவளை கிறுகிறுக்கச் செய்தது.

“இது கோவில் கடைகளில் விற்கப்படும் வாசனைப் பொருள் இல்லை. அரைக்கப்பட்ட அசல் சந்தனம். அப்புறம் ஒரு முக்கிய விஷயம். நீ நிலை தடுமாறும் போது கைத்தாங்கலுக்காக என்னைத் தொட்டு விடாதே.”

இப்போது தான் அவளுக்கு நிலை தடுமாறும் போல இருந்தது.

“நீ உன் சுட்டு விரலால் என் மேல் உள்ள மாலையை லேசாகத் தொட்டுப் பார். கவனம், ரொம்ப லேசாக மட்டும் தொடு.”

விமலை பயத்தோடு பட்டாசு பற்ற வைப்பது போல் லேசாக தொடப்போனாள். அரை விநாடி கூட தொட்டிருக்க மாட்டாள், விரல் சூடு தாங்காமல் பொத்து விட்டது. பயம் கூடினாலும் அவளுடைய வயது ஆர்வத்தையே வெகுவாகத் தூண்டியது.

“ஏன் இப்படி?”

“சொல்லுகிறேன். உன்னிடம் பதட்டம் தெரிகிறது. அது தேவையில்லாதது மட்டுமில்லை, நம்முடைய அனுபவத்துக்கும் இடைஞ்சலானது. உன் மூச்சை சீராக வைத்துக் கொள்ள முயற்சி செய்.”

அடுத்து ஒரு அரை மணி நேரம் அங்கே மௌனம் மட்டுமே நிலவியது. விமலை ஒரு பத்து நிமிடம் சிறுதுயிலில் ஆழ்ந்து கனவு கூட கண்டு விட்டாள். கனவில் உருவமேயில்லாத ஒருவன் அவள் உடலெங்கும் தொடுவதை உணர்ந்தாள். பதிலுக்கு அவளால் அவனை தொட முடியவில்லை. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பாய்ந்த அந்த தொடுகை அவளுடைய பதில் உணர்வு எதையும் எதிர்பாராமல் தன் போக்கிலே சென்றது. கனவு கலைந்தவளுக்கு தான் அணிந்திருந்த உடைகள் அனைத்தும் இறுக்கமாக தோன்றியது. உடலின் பல பாகங்கள் விரிவடைந்து கடினமாக மாறி, உடைகளெல்லாம் தெறித்து விடும் போல் இருந்தது.

“இதனால உனக்கு என்ன கிடைக்கும்?” பேச்சு கொடுத்தாள்.

“காமத்தை கடந்து செல்வது ஒரு சாதனை. அது அனுபவிச்சா தான் தெரியும்.”

“அதுக்கு ஏன் நான்?”

“அழகான பெண்ணிடம் ஜெயிப்பது தான் பெரிய சாதனை.”

“உன்னால் மனத்தை அடக்க முடிஞ்சதா?”

“அது அடங்கியே தான் உள்ளது. என் மனம் இப்போது மிகவும் ஆனந்தமாக உள்ளது.”

“பெரிய சாதனை தான் நீ செய்யுறது.  எனக்கும் இது பிடிச்சிருக்கு. இன்னும் ஒரு பத்து நிமிஷம் தாங்குவோமே!”

“உனக்கும் இந்த முறை இன்பம் அளிப்பது எனக்கு மகிழ்ச்சி தான். உன் இஷ்டப்பட்ட நேரத்தை எடுத்துக்கொள்.”

விமலை மெதுவாக தன்னுடைய விரலால் அவன் அணிந்திருந்த அந்த மாலையை தொட்டாள். மார்பில் சூடு தாங்காமல் சேதனன் பதறினான்.

“என்ன செய்கிறாய் நீ?” கோபத்தை விட பயம் தான் அதிகம் இருந்தது அவன் குரலில். விமலை விடவில்லை, மாலையை மேலும் வருட ஆரம்பித்தாள். வெப்பம் தாங்காமல் மாலையை கழற்றி வீசி எறிந்தான்.

“இவ்வளவு நேரம் நீ சொன்னதை நான் கேட்டேன். இப்போ நான் சொல்றதை நீ கேட்கணும்” அவன் காதின் பக்கம் குனிந்து கிசு கிசுத்தாள்.

மறுநாள் காலையில் யாரோ வந்து பார்க்கும் போது சேதனன் ரொம்பவே சேதமாகி செத்துப் போயிருந்தான்.


சொல்லக் கூடாத கதை-01

“ஏ மதியம் என்ன சாப்பிட்டே?” இப்படி கேட்டாலே உள்ளதை சொல்லவா இல்லை பொய் சொல்லுவோமான்னு சாந்திதேவி யோசிச்சு தான் பதில் சொல்வாள். கள்ளத்தனம் பண்ணினால் உண்மையா சொல்லுவா?  ஆனாலும் அவளை நேர்ல பார்த்தா கோவமே வர மாடேங்குது. அவ சிரிக்கும்போது உதடு கொஞ்சம் கோணுமே, அதைப் பார்ப்பதால் இருக்குமோ? அப்போ கண்ணும் சேர்ந்து சிரிக்குமே, அதைப் பார்க்கும்போது என்னென்னமோ தோணும்.  ஹூம்.

ரெண்டு வருஷமா பழக்கம், நண்பனுடைய அலுவலகத்தில் வேலை பாக்கிறா.  சேகரன்  இருக்கும்போது அண்ணாம்பா, தனியா இருக்கும்போது டேய் கண்ணா ன்னு கூப்பிடுவா. கொஞ்ச நாளா தனியா சந்திச்சுக்கிட சந்தர்ப்பம் கிடைச்சது. ‘என்ன போன வாரத்துக்கு இப்போ ஒரு இன்ச் குறைஞ்ச மாதிரி இருக்கு’ ன்னேன். பார்வை போன இடத்தை கவனித்தவள் வெட்கப்பட்டாள். ஒரு நொடியில் முகம் மாறியது, முறைத்தாள். கோவப்படுறாளாம்! ‘என்னமோ அளந்து பார்த்த மாதிரிதான்’ முணுமுணுத்தாள். ‘கண் அளக்காததையா  கை அளக்கப்போவுது?’. ‘பாக்கிற பொண்ணெல்லாம்  இப்படிதான் அளப்பீங்களோ?’ பேச்சை வளர்க்கும் ஆசை தெரிந்தது. ‘அது பார்க்கிற மாதிரி இருந்தா அளக்குறதுதான். ஹூம் கையால அளக்கதான் பாக்கிறேன், எங்க முடியுது?’ பெருமூச்சு விட்டேன். ஓங்கி குட்டினாள். அதில் ஆசை இருந்தது.

சேகரன் கிட்ட பேசும்போதுதான் கொஞ்சம் குற்ற உணர்ச்சியா இருக்கும், அன்னியோன்யமா பழக முடியல. சாந்திதேவி கூட பழகுறது போதையாவே ஆயிருச்சு. ஒண்ணா சினிமா பார்த்தப்போ போதை இன்னும் ஏறுச்சு. புழுக்கமா இருக்குங்கிறத கூட காதுக்குள்ளே தான் பேசினாள். கிறுகிறுத்து போச்சு.

‘ஏன்டா சினிமாக்கு போனால் பின்னால உட்கார்ந்திருக்கிறவனெல்லாம் கண்ணு தெரியாதோ?’ சேகரன் சிரிச்சுக்கிடேதான் கேட்டான்.  என்ன சொல்லன்னே தெரியலை. டவுசர் போடுறதுக்கு முன்னாலருந்தே  பிரெண்ட்ஸ். அழுகையே வந்திருச்சு.

இதெல்லாம் நடந்து 12 வருஷம் ஆச்சு. அதுக்கப்புறம் அவன் முகத்துல  முழிக்க வெட்கப்பட்டு சென்னைக்கு வந்து வேலை தேடி பிறகு செட்டில் ஆயாச்சு. ‘டேய்  மாப்ள எப்படி இருக்க?’ ன்னு சேகரன் இன்னைக்கு முன்னால வந்து நின்னப்போ இதெல்லாம் ஞாபகம் வந்து திரு திருன்னு முழிச்சேன். அவன்தான் என்ன உற்ச்சாகப்படுத்தி ‘வாடா டேய் ‘ன்னு வீட்டுக்கு கூட்டிட்டுப் போனான்.

நான் கூச்சப்படுறத பார்த்து அவனே ‘நீ ஏன் இப்படி இருக்கேன்னு தெரியும். விடுறா எனக்கு உன் மேல ஒன்னும் வருத்தம் இல்லை. நீ எனக்கு ஒரு சான்ஸ்  தான் குடுத்துட்டு போன!’ன்னான். புரியாமல் பார்த்தேன். ‘எனக்கும் ஒரு கண் இருந்தது அவ மேல. நீ பழகிறத பார்த்திட்டுதான் பேசாம இருந்தேன். நீங்க சினிமாக்கு போனது எனக்கு தெரியும்னதும் ரொம்ப குற்றவுணர்வோட இருந்தா. இதுதான் சான்ஸ்ன்னு அப்படியே வசப்படுத்திட்டேன். துரோகம்னு பார்த்தா அதை செஞ்சது நான்தான்’.

பின்குறிப்பு – இது ஒரு சிறுகதை. கட்டுரை இல்லை.


ஒரு ஃபேஸ்புக் உரையாடல்

மீனா – ஹாய்

ரமேஷ் – ஹலோ மேடம்!

மீனா – என்னங்க இது? அஃறிணைல கூப்பிடுறீங்க?

ரமேஷ் – ஆமால்ல! மேடம்னா தமிழில் ஆடுன்னு அர்த்தம் வருது. சாரிங்க.

மீனா – சாரியெல்லாம் பெரிய வார்த்தை. உங்க கவிதையெல்லாம் படிச்சுகிட்டு வர்றேன். வாய்ப்பே இல்லைங்க! ரொம்ப நல்லாருக்கு. அதுவும் இன்னைக்கு வந்த கவிதைய படிச்சிட்டு உங்களை பாராட்டலாம்னு தான் சாட்ல கூப்பிட்டேன். தொந்தரவு பண்ணிட்டேனோ?

ரமேஷ் – இதெல்லாம் ஒண்ணும் தொந்தரவு இல்லைங்க.

மீனா – ‘மதியொளி காய்ந்த மேனி கண்டு மதியழிந் தோய்ந்த தனியன்.’ வாய்ப்பே இல்லைங்க! இந்த வரி என்னை என்னவோ பண்ணிருச்சு.

ரமேஷ் – சந்தோஷம்ங்க.

மீனா – என்னங்க இது? உங்க கவிதை என்னை என்னென்னமோ பண்ணுதுங்கிறேன். நீங்க சந்தோஷம்ங்கிறீங்க?

ரமேஷ் – அது ஒண்ணுமில்லை. என் எழுத்து பெண்ணான உங்களை இந்த அளவு பாதிப்பது எனக்கு சந்தோஷம் தானே?

மீனா – நான் ரொம்ப பேசுறேனோ?

ரமேஷ் – இல்லைங்க.

மீனா – இந்த அளவு ஒருத்தர் எழுதனும்னா, அவர் ரொம்ப ரசனை உள்ளவரா இருக்கணும். அனுபவமும் இருக்கணும் இல்லையா?

ரமேஷ் – ரசனை இருக்கணும்கிறது சரிதான். ஆனால் அனுபவம்? அது சந்தேகம் தாங்க.

மீனா – அனுபவம் இல்லாமலா இந்த அளவு ரசிச்சு எழுதுறீங்க?

ரமேஷ் – உங்க கிட்ட சொல்றதுக்கு என்னங்க! வாய்ப்பு கிடைக்கிறவன் அனுபவிக்கிறான். கிடைக்காதவன் இப்படி கவிதை எழுதுறான்.

மீனா – நீங்க நகைச்சுவையா பேசுறீங்க.

ரமேஷ் – அடுத்தவங்க வேதனை பெண்களுக்கு நகைச்சுவை.

மீனா – உங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.

ரமேஷ் – ஸாஃப்ட்வேர்காரன் நான். பொழுது போக்கு கவிதை.

மீனா – திருமணம்?

ரமேஷ் – ஆயிடுச்சுங்க. ரெண்டு பசங்க இருக்காங்க.

மீனா – மனைவி உங்கள் ரசனைக்கேற்றவரா?

ரமேஷ் – என் ரசனைக்கு ஏற்ற பெண்ணெல்லாம் கவிதையில் மட்டுமே.

மீனா – ரொம்ப வெறுத்துப் போய் பேசுறீங்க.

ரமேஷ் – இதெல்லாம் வெளியே பேசக் கூடாது. அதென்னவோ உங்க கிட்ட கொட்டிட்டேன்.

மீனா – என்னாலும் ஒரு விஷயம் சொல்லாமல் இருக்க முடியலை. வெளியில என் அழகை நிறைய பேர் ஜாடைமாடையா வர்ணிக்கிறாங்க. வீட்டில் உள்ளவர் வர்ணிக்க வேண்டாம். ரசிக்கவாச்சும்  வேணாமா?

ரமேஷ் – நீங்கள் திருமணம் ஆனவரா?

மீனா – ஆமாங்க. ஒரு பொண்ணு உண்டு.

ரமேஷ் – நீங்க வேலை பார்க்கிறீங்களா?

மீனா – ஆமாம். பஜாஜ் இன்ஸூரன்ஸ் கம்பெனில.

ரமேஷ் – சென்னை தானா?

மீனா – ஆமாம். நுங்கம்பாக்கம்.

ரமேஷ் – உங்க முழுப்பேர் மீனலோசினியா?

மீனா – அட! உங்களுக்கு எப்படி தெரியும்?

ரமேஷ் – வீட்டில லோசினின்னு கூப்பிடுவாங்களா?

மீனா – நீங்க யாரு?

ரமேஷ் – அடிப்பாவி. நான் ரமேஷ்குமார்.

மீனா – அதென்ன டி போட்டு பேசுறீங்க? நாம டைவர்ஸ் ஆகி நாலு வருஷம் ஆகிடுச்சு.

ரமேஷ் – ஸாரி. நல்லாருக்கியா?

மீனா – இருக்கேன். போன மாசம் கூட அடையார்ல ஒரு பங்களா வாங்கிப் போட்டோம்.

ரமேஷ் – நீ இருக்கிற வசதிக்கு ஏன் வேலைக்குப் போகனும்? உன் ஹஸ்பண்ட் பேரு சுந்தர் தானே?

மீனா – ஆமாம். வேலைக்குப் போனால் தான் கொஞ்சம் நேரம் போகுது. உன் வொய்ப் என்ன பண்றா?

ரமேஷ் – வீட்டில தான் இருக்கா. நான் ஆஃபிஸில் ஓவர் டைம் எடுத்து கவிதை எழுதுறேன்.

மீனா – நாம ரெண்டு பேரும் ஒரு முறை மீட் பண்ணுவோமா? ஸாரி. வேண்டாம்.

ரமேஷ் – வேண்டாம்.

மீனா – வேண்டாம்.

ரமேஷ் – வேண்டாம்.

மீனா – உன்னை ஃபேஸ்புக்கில் இருந்து அன்ஃபிரெண்ட் பண்ணிடறேன்.

ரமேஷ் – நானும் பண்ணிடறேன்.

மீனா – இந்த சாட் ஹிஸ்டரி எல்லாம் டெலீட் பண்ணிடு.

ரமேஷ் – சரி. ஆனா ஒண்ணு.

மீனா – என்ன?

ரமேஷ் – உன்னை மாதிரி வராது!

மீனா – ஆமாம். உன்னை மாதிரி வராது!


பெல்ட் கட்டிய பிள்ளையார்

சதுர்த்தி வந்தாலே வினாயகனுக்கு கொஞ்சம் பயமாயிருக்கும். மோதகம் அவனுக்கு பிடிக்கும் தான், அதுக்காக இவ்வளவா சாப்பிட முடியும்? அவனோட அப்பா சொல்லிட்டார், சதுர்த்தி அன்னிக்கு யார் மோதகம் கொடுத்தாலும் மறுக்காமல் சாப்பிடணும்னு. இந்த முருகனை கூப்பிட்டு கொஞ்சம் ஷேர் பண்ணலாம்னா அவனுக்கு விரதம் தான் பிடிக்கும்.

இந்த உலகமே வினாயகனோட வயித்துக்குள்ள இருக்குதாம். அதனால அவன் வயிறு நிரம்பினா, இந்த உலகத்தில எல்லாருக்கும் தட்டுப்பாடு இல்லாம சாப்பாடு கிடைக்கும். இதை அவங்க அம்மா அவனுக்கு அடிக்கடி சொல்லுவாங்க. அதனாலதான் எவ்வளவு படையல் வச்சாலும் அவனால மறுக்க முடியல.

இப்படித்தான் அந்த சதுர்த்தி அன்னைக்கும் மக்கள் எல்லாம் நிறைய படையல் வச்சிருந்தாங்க. அவல், பொரி, சுண்டல், பொங்கல், மோதகம், கொழுக்கட்டை இப்படி பல வகைகள் வைத்து ஒரே விருந்து. மோதகத்தில் பல தினுசுகள், பல வடிவங்கள். சிலவற்றில் முந்திரி, நெய் எல்லாம் உண்டு, ஆனாலும் வினாயகனுக்கு பிடித்தது எளியவர் வீட்டு மோதகம் தான். அன்னைக்கு ராத்திரி வினாயகனுக்கு நடக்கக் கூட முடியாம வயிறு ரொம்ப ஃபுல் ஆகிடுச்சு. அவனோட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவனை பார்க்க ரொம்ப பாவமா இருந்தது.

“நீ வேணா போய் பூமியை சுத்தி ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வா. எல்லாரும் என்ன செய்யுறாங்கன்னு மேல இருந்து பாரு. உனக்கு பொழுது போன மாதிரியும் இருக்கும், வயிறும் சரியாகி விடும்” அப்படின்னாங்க.

அவனும் தன்னோட வாகனமான எலியின் மேல் ஏறி பூமிக்கு மேல ஒரு ரவுண்ட் வந்தான். நல்ல நிலா வெளிச்சம். நட்சத்திரமெல்லாம் மினு மினுன்னு கோலம் போட்ட மாதிரி இருந்தது. வினாயகன் இதையெல்லாம் ரசிச்சுகிட்டு எலி கூட பேசிக்கிட்டே வந்தான். அப்போ திடீர்ன்னு ஒரு பெரிய பாம்பு, பெரிசுன்ன்னா ரொம்ப பெரிசு, எதிர வந்து எலிய தாக்கப் பார்த்துச்சு. பயந்து போன எலி வினாயகனை விட்டுட்டு ஓடப் பார்த்துச்சு. பாம்பைப் பார்த்த வினாயகனுக்கு ரொம்பவே குஷி ஆகிடுச்சு. எலிய தன்னோட காலுக்குள்ள இறுக்கி பிடிச்சுகிட்டு, சீறி வந்த பாம்பை சரியா கழுத்தில ஒரு பிடி போட்டான். பிடிச்சு கிறு கிறுன்னு நாலு சுத்து சுத்தினான். அப்புறம் அதை எடுத்து தன்னோட இடுப்பில பெல்ட்டா கட்டிகிட்டான்.

பாம்பு கூட போட்ட சண்டைல வயிறு நல்ல செரிமானம் ஆச்சு. இதையெல்லாம் பார்த்துக்கிட்டிருந்த சந்திரன் (அதான் நிலா) சிரிச்சிட்டான். வினாயகனுக்கு கோபம் வந்து அதை முறைச்சு பார்த்தான். பயந்து போன சந்திரன் பூமியோட இன்னொரு பக்கம் போய் ஒளிஞ்சுகிட்டான். பிறகு வினாயகனுக்கு கோபம் தணிஞ்சிருச்சான்னு பார்த்து மெல்ல மெல்ல எட்டி பார்க்க ஆரம்பிச்சான். பிறகு சந்திரனுக்கு இப்படியே ஒளியிறதும் பிறகு எட்டி பார்த்து வர்றதுமா பழக்கம் ஆகிடிச்சு.


ஏ இவளே!

முத்துப்பாண்டிக்கு ரெண்டு பொண்டாட்டி. ஒருத்தி அவளே, இன்னொருத்தி இவளே. அப்படித்தான் அவன் கூப்பிடுவான். மொதல்ல கட்டிக்கிட்டவளை இவளேன்னு கூப்பிட்டுகிட்டிருந்தான். ரெண்டாமவள் வந்ததும் முதலாமவள் அவளே ஆகிட்டா. ரெண்டாமவள் இவளே ஆகிட்டா. இதுவரைக்கும் ரெண்டு பேரையும் அவன் ஒப்பிட்டு பார்த்ததில்லை.  அவளேங்கிறவ நல்ல செவப்பு நிறம், கச்சிதமான அமைப்புள்ளவ. ஆனா கொஞ்சம் பொம்மைத்தனம் இருக்கும். இவளே வேற மாதிரி. மாநிறம், கொஞ்சம் சுமாரா இருப்பா, ஆனா உயிர்ப்புள்ளவ. அவ இருக்கிற எடத்துல யாரும் சோம்பலா இருக்க முடியாது. பேச்சும் சரி, செயலும் சரி ஒரே படபடப்பு தான்.

ஏழு பிள்ளைக அவங்க வீட்டுல. எந்த பிள்ளை யார் பெத்ததுங்கிறது இப்போ முத்துப்பாண்டிக்கு ஞாபகத்துல இல்ல. அதெல்லாம் ஒரு விஷயமா! பிள்ளைகளுக்கே அதப்பத்தி கேள்வி இல்ல.  வீட்டுல சண்ட வருமான்னு கேட்குறீங்களா? சண்ட இல்லாத வீடெல்லாம் ஒரு வீடா!

ஒரு தடவ அவளேயான மூத்தவகிட்ட அந்த தெரு பெரிய மனுஷன் ஒரு ஆளு ஜாடமாடயா வீட்டு அந்தரங்கத்த பத்தி கேக்க, இளையவளுக்கு தெரிய வந்து, இப்போ அந்தாளு சின்ன மனுஷனாயிட்டாரு. இவளே அவர்கிட்ட கேட்ட கேள்விக்கெல்லாம் தெருவுக்கே காது கூசிப்போச்சு.

முத்துப்பாண்டிக்கு தொழில் சொந்தமா ஒரு சின்ன பலசரக்கு கடை. வேலைக்கு சம்பள ஆள் கிடையாது. ”ஏ இவளே! வந்து கொஞ்சம் கடைய பாத்துக்கோ”ன்னா வந்துருவா. இவ வந்ததில ரெண்டு வகைல லாபமாச்சு. நிறைய கடன் கொடுத்தா. கடன் கொடுக்குற வியாபாரத்துல லாபம் அதிகம்ன்னு சொல்லுவா. கடன திரும்ப வாங்குறதில டெரர் மொகம் காண்பிப்பா. கொள்முதலும் இப்ப அவ பொறுப்பா ஆகிடுச்சு. வெலை அடிச்சு பேசுவா. யார் யாருக்கு என்ன வெலைல சப்ளை ஆகுதுன்னு லிஸ்ட் போடுவா. இதெல்லாம் இவளுக்கு எப்படி தெரியும்ன்னு முத்துபாண்டிக்கே புரியலை. “இவளே! நீ இங்க இருக்க வேண்டியவளே இல்ல”ன்னு சொல்லுவான். “அடப் போடா”ம்பா.

கடைல கணக்கெல்லாம் எழுதி வச்சுகிடுறதில்ல. எல்லாம் மனக்கணக்கு தான். கொஞ்ச கொஞ்சமா வீட்டுல துட்டு சேர ஆரம்பிச்சது. அவ வீட்ட பாத்துகிட்டா, இவ கடைய பாத்துகிட்டா. பக்கத்து தெருவில் ஒரு கடை வாடகைக்கு இருக்கிறதா தெரிய வந்ததது. துட்டு எவ்வளவு இருக்குன்னு எண்ணி பாத்தாங்க, ஒரு முப்பதினாயிரம் தேறிச்சு. சரின்னு இன்னொரு கடை ஆரம்பிச்சாங்க. புதுக்கடைய முத்துபாண்டி பாத்துகிட்டான், மொத கடைய இவ பாத்துகிட்டா.

முத்துபாண்டிக்கு கொஞ்சம் சிரமமா தான் இருந்தது. இவ அளவுக்கு அவனுக்கு சாதுர்யம் போதாது. இப்படித்தான் ஒரு நாள் பவுடர்  டப்பா வாங்கிட்டு போன ஒருத்தன் திரும்ப சண்டைக்கு வந்துட்டான்.

“ஒரு டப்பால அஞ்சு ரூவாயா கூட வச்சு விப்பீங்க?”ன்னு ஒரே சண்டை.

அந்த நேரம் வாடிக்கையா சாமான் வாங்குற பெண் உதவிக்கு வந்தது. பதிலுக்கு கூச்சல் போட்டது.

“இன்னொரு கடைல வெல கம்மியா இருந்தா, அதுல என்ன மாசம் போட்டிருக்குன்னு பாத்தியா? அத பாத்துட்டு வா மொதல்ல. பழைய டப்பா வெலைல புது டப்பா குடுப்பாங்களா?”

அவனும் அத நம்பி திரும்ப போயிட்டான்.

“சரி. நான் வாங்குனது எவ்வளவு ஆச்சு?”ன்னு கேட்டா அந்த பொண்ணு.

“நாப்பத்தாறு”

“எனக்கு வாங்க வேற கடை இல்லாமலா ரெண்டு தெரு தள்ளிருக்கிற ஒங்க கடைக்கு வாரேன். இந்தாங்க நாப்பது ரூவா போட்டுக்குங்க.”

“சரி இவளே”ன்னான்.


ஒரு ப்ரீகுவல் கதை

வட்டகிரி, அப்படின்னு ஒரு மலைக்காடு. அங்கே ஒரு முனிவர் முனிவராகவே வாழ்ந்து வந்தார். அவருக்கு பொன்னாசை, பெண்ணாசை எதுவுமே கிடையாது. கடுமையா தவம் செஞ்சு இந்த பிறவிலேயே கடவுளை அடையணும் அப்படிங்கிறதுதான் அவர் ஆசை. அவர்கிட்ட ஒரு சீடன் இருந்தான். முனிவருக்கு வேணுங்கிற எடுபிடி வேலையெல்லாம் செஞ்சிட்டு மிச்ச நேரத்தில தானும் தவம் செய்வான்.

முனிவரோட உண்மையான தவத்தை பார்த்த தேவர்கள் அவரை சொர்க்கத்துக்கு கூப்பிட்டாங்க. ரொம்ப வருஷம் கூடவே இருந்ததால சீடனுக்கும் அனுமதி கிடைச்சது. சொர்க்கத்துக்கு போற வழில சீடனோட சந்தோஷம் அளவு கடந்ததா இருந்தது. பேசிக்கிட்டே வந்தான். “குருவே! சொர்க்கத்துல பணிவிடை செய்ய தேவதைகள் இருப்பாங்க. அவங்கள மாதிரி அழகு நாம பூமில பார்க்கவே முடியாது. இயற்கையாகவே அவங்க மேல ஒரு நறுமணம் இருக்கும். இனிமையான பாடலெல்லாம் பாடுவாங்க”. முனிவர் பதிலேதும் சொல்லவில்லை. உணர்ச்சி எதுவுமே இல்லாமல் வந்தார்.

சொர்க்கத்தில் முனிவருக்கு சரியான வரவேற்பு. தேவாதி தேவர்களெல்லாம் வந்து வாழ்த்தினாங்க. முனிவருக்கு ஒரு சிறப்பான இடம் கொடுக்க முடிவாயிற்று. அங்கே தங்கத்திலான மரங்கள் நிழல் கொடுத்தன. அதன் இலைகளெல்லாம் மரகதம். வைரங்கள் பூக்களாய் பூத்திருந்தன. மணக்க மணக்க அறுசுவை சாப்பாடு. வசதியான படுக்கை. கை கால் அமுக்கி விட முற்றும் துறந்தவளாய் ஒரு அழகான தேவதை.

முனிவருக்கு கிடைத்த உபசாரங்களை பார்த்த சீடனுக்கு ஆனந்தக் கண்ணீர். “வாழ்நாள் முழுவதும் நீங்க செஞ்ச தவத்துக்கு கெடச்ச வரத்த பார்த்தீங்களா.”

இதைக் கேட்ட அவருக்கு ஒரே கோபம். சீடனை பார்த்து “இவ்வளவு வருஷம் என் கூட இருந்து உனக்கு எதுவுமே புரியலை. உனக்கு என்னைப் பத்தியும் தெரியலை. இங்கே நடப்பதும் புரியலை.”

இன்னும் சொன்னார் “ஒண்ணு புரிஞ்சுக்கோ. இதெல்லாம் எனக்கு கெடைக்கிற பரிசு இல்லை. அந்த தேவதைக்கு கெடைக்கும் தண்டனை.”