பூரண சக்தியில் சிவன் கலந்திருப்பான்

பூரண சத்தி எழுமூன் றறையாக
ஏரணி கன்னியர் ஏழ்நூற்றஞ் சாக்கினர்
நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங்
காரண மாகிக் கலந்து விரிந்ததே. – (திருமந்திரம் – 663)

விளக்கம்:
தியானத்தின் போது பூரண சக்தியானது இருபத்தோர் கூறுகளாகப் பெருகுகிறது. ஒவ்வொரு பங்கிலும் தங்கியிருக்கும் சக்தியானது எழுநூற்று அஞ்சு மடங்காகப் பெருகுகிறது. நாராயணன், பிரமன் முதலிய ஐவருக்கும் தலைவனான சிவபெருமான் சக்தியின் அனைத்துக் கூறுகளிலும் கலந்து விரிந்து இருக்கிறான்.


பிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்

கட்டிட்ட தாமரை நாளத்தில் ஒன்பது
மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
தட்டிட்டு நின்று தளங்களி னூடுபோய்ப்
பொட்டிட்டு நின்றது பூரண மானத. – (திருமந்திரம் – 662)

விளக்கம்:
வாமை, சேட்டை, ரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்பூததமனி, மனோன்மணி ஆகிய ஒன்பது சக்திகள் இப்பிரபஞ்சத்தின் இயக்கதிற்குக் காரணமானவர்கள். இவர்களின் சக்தியாலேயே நாம் பிறவிக்கு ஆளாகிறோம். இந்நவசக்திகள் நமது ஆதாரத் தாமரையின் தண்டைப் பற்றி இருக்கின்றன. நாம் அட்டாங்கயோகத்தில் நின்று குண்டலினியை மேல் எழுப்பி பல தளங்கள் மேலே சென்று புருவமத்தியில் நிறுத்தினால் அங்கே பராசக்தியுடன் பொருந்தி இருக்கலாம். பராசக்தியுடன் பொருந்தும் போது அந்த நவசக்திகளான் வாமை, சேட்டை முதலியவற்றின் செயல் மட்டுப்படும். அதனால் நாம் அடுத்து வரும் பிறவிகளைத் தவிர்க்கலாம்.


யோகத்தினால் காமம் குரோதம் அழியும்

ஓடிச் சென்றங்கே ஒருபொருள் கண்டவர்
நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச்சென் றங்கேயுந் தேனை முகந்துண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே. – (திருமந்திரம் – 661)

விளக்கம்:
மூலாதாரத்தில் இருந்து தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்திற்கு ஓடிச்சென்று அங்கே சிவபெருமானை உணர்ந்தவர்கள் தமது நாடியுள் நாதத்தை உணர்வார்கள். சிவயோகிகள் அந்த யோகத்தினால் ஊறும் அமுதத்தை நுகர்ந்து இன்புறுவார்கள். இந்நிலையிலேயே தொடர்ந்து யோகம் பயின்று வந்தால் நமக்குள் இருக்கும் காமம், குரோதம் போன்ற பகைவர்கள் அழிவார்கள்.


சுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி
வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்
துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால்
விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே. – (திருமந்திரம் – 660)

விளக்கம்:
வலையில் அகப்பட்ட மான் அங்கும் இங்கும் அசைய முடியாமல் நிற்கும் நிலை போல, சுழுமுனையில் மட்டுமே கவனம் செலுத்தி மூச்சுப்பயிற்சி செய்வோம். அதுவே அட்டமாசித்தியை நோக்கிச் செல்லும் தூய வழியாகும். தொடர்ந்து சுழுமுனையில் நின்று மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் சக்தியாக விளங்கும் குண்டலினி தலைஉச்சியில் இருக்கும் சிவபெருமானை சென்று அடையும். இதனால் கிடைக்கும் பலன்கள் எப்படிப்பட்டது என்றால் உண்பதற்கும் விலைக்கு விற்பதற்கும் சேர்த்து விதை கிடைப்பது போன்றதாகும்.


அருள் வழியில் நிற்கும் வழிமுறை

ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்ல
வாங்கி இரவி மதிவழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட
ஆங்கது சொன்னோம் அருள்வழி யோர்க்கே. – (திருமந்திரம் – 659)

விளக்கம்:
சிவபெருமானின் அருள் வழியில் நிற்க விரும்புவர்களுக்கு திருமூலர் சொல்லும் வழிமுறை இதுதான். மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியை சுழுமுனை வழியாக தலை உச்சிக்கு கொண்டு செல்வது, பிங்கலை இடைகலை வழியாக மூச்சுப்பயிற்சி செய்வது, இப்பயிற்சியினால் ஏழு உலகங்களையும் தாங்கி நிற்கலாம் என்னும் உண்மையை உணர்வது ஆகியவையாகும்.


உடல் தரும் துன்பம் நீங்க …

ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்
ஒன்பது நாடி ஒருங்கவல் லார்களுக்
கொன்பது வாசல் உலைநல மாமே. – (திருமந்திரம் – 658)

விளக்கம்:
ஒன்பது வாசல்களைக் கொண்ட இந்த உடல் கொதிக்கும் உலை போல் துன்பப்படுகிறது. நம் உடலின் ஒன்பது நாடிகள் ஒருங்கே கூடும் சுழுமுனையில் மனம் செலுத்தி தொடர்ந்து தியானம் செய்து வந்தால், துன்பம் தரும் இந்த உடல் இன்பம் தருவதாக அமையும்.


நாடித்துடிப்பு இருக்கும் வரையில் சிவனை நினைப்போம்!

நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங் குணர்ந்திருந் தாரே. – (திருமந்திரம் – 657)

விளக்கம்:
ஈசன், திருமால், பிரமன் ஆகியோர், என்றும் சுடர் விடும் சோதியான நம் சிவபெருமானை கண நேரமும் விடாமல் தியானம் செய்கிறார்கள். நாமும் நம் கண்ணிலும் இருதயத்திலும் நாடியின் ஓசையை உணர்ந்திருக்கும் வரை அந்தச் சுடர் விடும் சோதியை நம் சிந்தையில் இடையறாது நிறுத்துவோம்.


கூர்மன் என்னும் காற்று

கண்ணில் வியாதி உரோகந் தனஞ்சயன்
கண்ணில்  இவ்்வாணிகள் காசம் அவனல்லன்
கண்ணினிற் கூர்மன் கலந்திலன் ஆதலால்
கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே. – (திருமந்திரம் – 656)

விளக்கம்:
கண்ணில் ஏற்படும் வீக்கத்திற்கு தனஞ்சயன் என்னும் வாயு சரியாக இயங்காதது காரணம் என்பதை முந்தைய பாடலில் பார்த்தோம். கண் வீக்கத்திற்கு மட்டும் தான் தனஞ்சயன் காரணம் ஆனால் ஆராய்ந்து பார்த்தால் கண்ணில் ஏற்படும் ஆணிகளுக்கு தனஞ்சயன்  காரணம் இல்லை. கண்ணில் கூர்மன் என்னும் காற்று சரியாகப் பொருந்தாவிட்டால் கண்ணின் நரம்பு பாதிக்கப்படும். அதனால் கண்ணில் பார்வைக் குறைபாடு ஏற்படும்.


தனஞ்சயன் சரியாக இயங்கா விட்டால் …

வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமுங் கூனும் முடமுமாம்
வீங்கும் வியாதிகள் கண்ணில் மருவியே. – (திருமந்திரம் – 655)

விளக்கம்:
தனஞ்சயன் என்னும் காற்று நீங்கினால் நம் உயிர் நீங்கி விடும் என்பதை முந்தைய பாடல்களில் பார்த்தோம். தனஞ்சயன் சரியாக இயங்காவிட்டால் ஏற்படும் நோய்களை இந்தப் பாடல் சொல்கிறது. தனஞ்சயன் சரியாக இயங்காவிட்டால், உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் கட்டி, சிரங்கு, குட்டம், சோகை, வாதம், கூன், முடம், கண்ணில் ஏற்படும் வீக்கம் ஆகிய நோய்கள்  ஏற்படலாம்.


தனஞ்சயன் இல்லையென்றால் உயிர் இல்லை!

இருக்குந் தனஞ்சயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற் றிருபத்து நான்கின்
இருக்கு முடலி லிருந்தில தாகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே. – (திருமந்திரம் – 654)

விளக்கம்:
நமது உடலில் இருக்கும் ஒன்பது வாயுக்களோடும் தனஞ்சயன் என்னும் காற்று பொருந்தியிருக்கிறது. தனஞ்சயன் என்னும் காற்று இல்லாவிட்டால் இந்த உடலில் உயிர் இல்லை என்று அர்த்தம். தனஞ்சயன் நீங்கிய உடல் அழுகத் தொடங்கி விடும். இருநூற்று இருபத்து நான்கு உலகங்களிலும் இது தான் நடைமுறை.