நாள் தவறாமல் யோகம் செய்வோம்

மனைபுகு வீரும் அகத்திடை நாடி
என இருபத்தஞ்சும் ஈராறு அதனால்
தனை அறிந்து ஏறட்டு தற்குறி ஆறு
வினைஅறி ஆறும் விளங்கிய நாலே – 744

விளக்கம்:
நம் மனம் புற உலகில் அலைவதை நிறுத்தி, அகத்தை நாடி, மனத்தை உள்ளே செலுத்தி யோகப்பயிற்சி செய்வோம். வருடத்தின் பன்னிரெண்டு மாதங்களும், மாதத்தின் 30 நாட்களும், அதாவது நாள் தவறாமல் யோகப்பயிற்சி செய்து வந்தால், தன்னை அறியலாம். தன்னை அறிவதால் ஆறு ஆதாரங்களிலும் யோகநிலையில் பொருந்தி இருந்து சிவம், சக்தி, நாதம், விந்து ஆகியவற்றைப் பற்றி விளங்கிக் கொள்ளலாம்.

இருபத்தஞ்சு – இரு + பத்தஞ்சு (முப்பது நாட்கள் – 1 மாதம்),  ஈராறு – ஈர் + ஆறு (பன்னிரெண்டு மாதங்கள்), ஏற அட்டுதல் – கூடச் சேர்த்தல், தற்குறி ஆறு – ஆறு ஆதாரங்கள்

பயிற்சி தொடங்க ஆகாத நாட்கள்

திருந்து தினம் அத் தினத்தினொடு நின்று
இருந்து அறி நாள் ஒன்று இரண்டு எட்டு மூன்று
பொருந்திய நாளொடு புக்கு அறிந்து ஓங்கி
வருந்துதல் இன்றி மனை புகல் ஆமே – 743

விளக்கம்:
யோகப்பயிற்சி தொடங்க கீழ்கண்ட நாட்களைத் தவிர்த்தல் நலம்.

பிறந்த நட்சத்திரம் வரும் நாள் மற்றும் பிறந்த நட்சத்திரத்தில் இருந்து ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் எட்டாவது நட்சத்திரம் வரும் நாட்கள். மற்ற நாட்களில் இருந்து சிறந்த ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து யோகப்பயிற்சியைத் தொடங்கலாம்.

வயது என்பதே இல்லாமல் இருக்கலாம்

அழிகின்ற ஆண்டு அவை ஐயைஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்றுஎன்ப தாகும்
கழிகின்ற கால்அறு பத்திரண்டு என்பது
எழுகின்ற ஈரைம்பது எண்அற்று இருந்தே – 742

விளக்கம்:
நம்முடைய வாழ்நாளை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். இருபத்து எட்டு வயது வரைக்கும் முதல் பகுதி, முப்பத்து மூன்று வயது வரைக்கும் இரண்டாம் பகுதி, அறுபத்து இரண்டு வயது வரைக்கும் மூன்றாம் பகுதி, நூறு வயது வரைக்கும் நான்காம் பகுதியாகும். யோகத்தில் நின்று சகசிரதளத்தில் சிவபெருமானைக் கண்டவர்கள், மேற்கண்ட நான்கு பகுதிகள் எதிலும் அடங்க மாட்டார்கள். அவர்கள் காலச்சக்கரத்துக்கு அப்பாற்பட்டவர்கள், அவர்கள் தங்களுக்கு வயது ஆவதையே உணர மாட்டார்கள்.

ஐயைஞ்சு மூன்று – இருபத்து எட்டு
ஈரைம்பது  – நூறு

காலம் கழிந்து கொண்டே இருக்கிறது

உற்றறிவு ஐந்தும் உணர்ந்தறிவு ஆறு ஏழும்
கற்றறிவு எட்டும் கலந்தறிவு ஒன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்ற தறியாது அழிகின்ற வாறே – 741

விளக்கம்:
உற்றறிவு ஐந்து – சுவை, ஒளி, ஊறு, நாற்றம், ஓசை ஆகியவற்றால் அறியும் அறிவு
ஆறாவது அறிவு – மனம், அறிவு ஆகியவற்றால் எதையும் பாகுபடுத்தி அறியும் அறிவு
ஏழாவது அறிவு – பாகுபடுத்துவதால் வரும் முடிவைச் சார்ந்து இருத்தல்
எட்டாவது அறிவு – நூல்களைக் கற்று அறியும் அறிவு
ஒன்பதாவது அறிவு – நூல்களில் கற்றவற்றை அனுபவமாக அறியும் அறிவு
பத்தாவது அறிவு – அனுபவமாக உணர்ந்தவற்றைக் பற்றிக் கடைபிடிக்கும் அறிவு

இந்த அறிவுநிலைகளால் பல உலக விஷயங்களில் ஈடுபட்டு, நம்முடைய கால அளவு கழிந்து வீணாவதை உணராமல் இருக்கிறோம்.

காலத்தைக் கடந்து நிற்கலாம்

மதிவட்டம் ஆக வரைஐந்து நாடி
இதுவிட்டு இங்கு ஈராறு அமர்ந்த அதனால்
பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறும்
அதுவிட்டுப் போமாறும் ஆயலுற் றேனே – 740

விளக்கம்:
மதிவட்டம் எனப்படும் சகசிரதளத்தில் வியாபினி முதலான ஐந்து கலைகளை உணர்ந்து, பிறகு அதை விட்டு சிரசில் இருந்து பன்னிரெண்டு அங்குல அளவுக்கு மேல் வசிக்கும் சிவபெருமானை உணர்ந்து யோகம் செய்வோம். ஆராய்ந்து பார்த்தால், சகசிரதளத்துக்கு மேல் கவனம் செலுத்தி யோகம் செய்யும் போது, சிவபெருமானின் அருள் பெற்று, நாம் காலத்தைக் கடந்து நிற்பதை உணரலாம்.

மதிவட்டம் – சகசிரதளம்
வரை ஐந்து – வியாபினி, வியோமரூபை, அநந்தை, அநாசிருதி, உன்மனி
பதிவட்டம் – சிவன் இருக்கும் இடம்

விளையும் வேதசக்தி!

ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற
நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப்பல் கோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரந் தன்னால் ஒடுங்கே – 739

விளக்கம்:
ஆகுஞ்சனம் என்னும் ஆசனத்தில் அமர்ந்து யோகப்பயிற்சி செய்து, அதில் விளையும் வேதசக்தியை அன்போடு ஏற்றுக்கொள்வோம். விளைந்த நெல்லை விதைநெல்லாக பயன்படுத்தி பல இடங்களில் நெல் விளைவிப்பதைப் போல, யோகத்தினால் விளையும் யோகசக்தியைப் பயன்படுத்தி இன்னும் பல உள்ளார்ந்த யோகங்களைப் பயிற்சி கொள்ளலாம். இதனால் பழமையான மந்திரங்கள் வெளிப்படுவதை உள்ளே உணரலாம், அந்த மந்திரங்களில் லயித்து அமைதியாய் இருக்கலாம்.

ஆகுஞ்சனம் – பத்மாசனத்தில் அமர்ந்து மடியில் இரண்டு கைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாய் வைத்து, எருவாயை (குதம்) மேல் ஏற்றி நிற்றல்.
ஊழ் – பழமை

மான்கன்று போன்ற இளமையான தோற்றத்தைப் பெறலாம்

நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்
தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்
ஊன்கண்டு கொண்ட உணர்வு மருந்தாக
மான்கன்று நின்று வளர்கின்ற வாறே – 738

விளக்கம்:
நாம் யோகப்பயிற்சி செய்யும் போது, குண்டலினியாகிய அக்னி, அகாரம், உகாரம், மகாரம், விந்து ஆகிய நான்கு கலைகள், ஏழு ஆதாரங்கள் ஆகியவற்றை உணரலாம். பயிற்சியின் போது நாம் பிராணனை உற்றுக் கவனித்து, உடல் முழுவதும் பிராணனின் இயக்கத்தை உணர வேண்டும். மனம் சிதறாமல் இவ்வாறு பிராண இயக்கத்தை உணர்ந்து வந்தால், மான் கன்று போன்ற இளமையான தோற்றத்தைப் பெறலாம்.

வன்னி – அக்னி
ஊன் – உடல்

சுழலும் பெருங்கூற்றை விரட்டலாம்

சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி
அழலும் இரதத்துள் அங்கியுள் ஈசன்
கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே
நிழலுளுந் தெற்றுளும் நிற்றலும் மாமே – 737

விளக்கம்:
கூற்று எனப்படும் யமன் எப்போதும் எங்கும் சுழன்றபடி இருக்கிறான். நம் உடலின் மூலாதாரத்தில் பிரகாசமாக ஒளிவிட்டு அமர்ந்திருக்கும் ஈசன், சீறியபடி சுற்றிவரும் யமனைத் துரத்தி விடுகிறான். மூலாதாரத்தில் மனம் குவித்து அங்கு இருக்கும் ஈசனின் திருவடியைக் கண்டு யோகப் பயிற்சியை மேற்கொண்டால், நாம் ஈசனின் திருவடி நிழலில் நின்று அந்த சிவபெருமானின் நெருக்கத்தை உணரலாம்.

அழலும் – பிரகாசிக்கும்
இரதம் – உடல்
தெற்று – செறிவு, நெருக்கம்

யோகத்தினால் பெண்கள் விரும்பக்கூடிய உடலைப் பெறலாம்

பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
அண்டத்துள் உற்று அடுத்தடைத்து ஏகிடின்
வண்டிச்சிக் கும்மம் மலர்க்குழல் மாதரார்
கண்டிச்சிக் கும்மந்நற் காயமு மாமே – 736

விளக்கம்:
நம் உடலில், குதத்தில் இருந்து இரு விரற்கிடை அளவுக்கு மேலே இருக்கும் மூலாதாரத்தில் மனம் செலுத்துவோம். சுக்கிலம் வீணாகாதவாறு கண்காணித்து தொடர்ந்து யோகப்பயிற்சி செய்வோம். குண்டலினியை மூலாதாரத்தில் இருந்து அடுத்தடுத்த நிலைக்கு மேல் ஏற்றிப் பயிற்சி செய்து வந்தால், நம்முடைய உடல் வண்டுகள் விரும்பும் பூவைச் சூடும் பெண்கள் விரும்பக்கூடிய வடிவத்தைப் பெறும்.

பிழக்கடை வாசல் – மூலாதாரம்
அண்டத்துள் உற்று – சுக்கிலம் வீணாகாதவாறு கண்காணித்து

உணவைக் குறைத்தால் யோகம் எளிதாகும்

அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை
பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
கண்டங் கறுத்த கபாலியு மாமே – 735

விளக்கம்:
சுக்கிலம் வெளிப்படுவது குறைந்தால், அது சார்ந்த உறுப்புகளுக்கு நல்லது. உடல் மெலிவதால், யோகத்தில் பிராணனை நிலை நிறுத்துதல் எளிதாக இருக்கும். உணவை குறைவாக உட்கொள்வதால், யோகப்பயிற்சியில் பல புதிய உபாயங்களைக் கற்கலாம். இவ்வாறு நாம் கட்டுப்பாட்டுடன் யோகப் பயிற்சி செய்து வந்தால், கறுத்த கழுத்தை உடைய சிவபெருமானின் தன்மையைப் பெறலாம்.

அண்டம் – விதை (சுக்கிலத்தை வெளிப்படுத்தும் விதை)
பிண்டம் – உடல்
உண்டி – உணவு
கண்டங் கறுத்த கபாலி – கறுத்த கழுத்தை உடைய சிவன்