நெகிழ்ந்து போன வைகை எக்ஸ்பிரஸ்

வழி அனுப்ப வந்தவர்களின் கூச்சல் அடங்கி அப்போது தான் வைகை எக்ஸ்பிரஸ் கொஞ்சம் அமைதியாகி வேகம் பிடித்தது. பயணிகள் தங்களைச் சுற்றி உள்ள முகங்களை ஒரு முறை பார்த்துக் கொண்டார்கள். அவ்வளவு நேரம் இருந்த புழுக்கம் போய் முகத்தில் பட்ட காற்றை உணர்ந்து கொஞ்சம் புன்சிரிப்பை செலவு செய்தார்கள். நாலாவது பெட்டியில் நாப்பத்து ஐந்தாம் இருக்கையில் இருந்த இளவயசுக்காரன் காலை நன்றாக அகட்டியவாறு சரிந்து உட்கார்ந்து இருந்தான். கழுத்தில் ஒரு இரும்புச் சங்கிலி, கொஞ்சம் அழுக்கான டி-சர்ட், கையில் நிறைய மோதிரங்கள் என்று அவனது தோற்றம் பார்ப்பவர்களை கொஞ்சம் பயமுறுத்துவதாக இருந்தது. அவன் சுற்றி இருப்பவர்கள் யாரையும் சட்டை செய்யாமல் மேலேயே வெறித்துப் பார்த்தபடி இருந்தான். கையில் வைத்திருந்த ஃபோனில் ‘நான் யாரு எனக்கேதும் தெரியலையே’ பாட்டு அலறியது. சத்தம் தாங்காமல் பக்கத்தில் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள், அவன் தோற்றத்தை பார்த்தால் எதுவும் சொல்ல பயமாக இருந்தது.

அந்தப் பாட்டு முடிந்தவுடன் ஃபோனை நோண்டி திரும்ப அதே பாடலை ஒலிக்க விட்டு திரும்ப வெறித்தபடி ஆனான். அவன் பக்கத்தில் இருந்த ஜன்னலோரப் பாட்டி அவனைச் சுரண்டினாள்.

“என்னா” என்றான் அவன் எரிச்சலாக.

“நான் ஹார்ட் பேஷண்ட்டுப்பா! பேஸ்மேக்கர் வச்சிருக்காங்க, இவ்வளவு சத்தமெல்லாம் என்னால தாங்க முடியாதுப்பா. கொஞ்சம் சவுண்ட கொறச்சுக்கோ” என்றாள்.

அவளை அலட்சியமாகப் பார்த்து விட்டு மறுபடியும் மேல் நோக்கி வெறிக்க ஆரம்பித்தான். அந்தப் பாட்டு நான்காவது முறையாக ஒலிக்க ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்தவங்க எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்க, ஒரு நடுத்தர வயசு மீசைக்காரர் ‘நான் சொல்றேன்’ என்பது போல கை காட்டினார்.

“தம்பி! அத கொஞ்சம் நிப்பாட்டுப்பா, கொஞ்சம் உன்கிட்ட பேசணும்” என்று ஆரம்பித்தார்.

“என்ன பேசணும் என்கிட்ட?” வேண்டுமென்றே கொஞ்சம் எரிச்சல் காட்டி பேசினான்.

“எந்த ஊருப்பா நீ?”

“மதுர”

“இப்ப மெட்ராஸ் போறியா? என்ன படிச்சிருக்க?”

“பி.எஸ்சி”

“பாத்தா ரொம்ப சோர்ந்து போய் இருக்கியே! நேத்து சரியா சாப்பிடலயோ?”

அவன் பதில் எதுவும் சொல்லவில்லை, ஆனால் முகத்தில் இறுக்கம் தளர்ந்திருந்தது.

“இதப் பாருப்பா, என்ன கவல இருந்தாலும் சாப்பிடாம இருக்கக் கூடாது. பசி வயித்த மட்டுமில்ல, மனசையும் அரிச்சிரும்” மீசைக்காரர் அமைதியாகச் சொன்னார்.

அந்தப் பையனால பொங்கி வந்தக் கண்ணீரை அடக்க முடியவில்லை.

“சாப்பிட்டியான்னு கேக்க எனக்கு யாருமில்லங்க, இப்படி யாரும் கேட்டதில்ல” குரல் உடைந்து அழ ஆரம்பித்தான். அந்தச் சூழ்நிலையே ரொம்ப நெகிழ்ந்து போய் இருந்தது.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அடுத்த வரிசைப் பெண் வேகமாக வந்து அவன் ஃபோனை பிடுங்கினாள். வேகமாக சில நம்பரை அழுத்தி விட்டு திரும்ப தன் இருக்கைக்குப் போனாள். போன வேகத்தில் அந்தப் பையனின் ஃபோன் ஒலித்தது.

“ஒனக்கு யாரும் இல்லன்னு கவலப்படாத, நான் இருக்கேண்டா” என்றாள். ஃபோனே தேவையில்லாமல் அவள் குரல் அங்கே எல்லோருக்கும் கேட்டது.

அங்கே எல்லோருமே அழுது விடுவார்கள் போல இருந்தது. மீசைக்காரர் சண்டை போட்டிருந்த தன் மனைவிக்கு ஃபோன் செய்து பேச ஆரம்பித்தார், ‘உறவு ரீதியாக சவால் விடப்பட்ட ஒருவன்’ என்று ட்விட்டரில் ஒருவர் எழுத ஆரம்பித்தார்.

அந்த ஜன்னலோரத்தில் செத்துப் போயிருந்த கிழவியை யாரும் கவனிக்கவில்லை.

நுனிப்புல்

நுனிப்புல் மேய்வது ஒரு கலை
நுனியோடு நிறுத்திக் கொள்வது தவம்

(வயது வந்தவர்களுக்காக எழுதப்பட்டது)

நாமெல்லாம் உப்பு பொம்மைகள்

அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்ப்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே. – (திருமந்திரம் – 136)

விளக்கம்:
கடல் நீரில் உள்ள உப்புத் தன்மை சூரியனின் வெப்பத்தினால் உப்பு என்கிற பெயருள்ள உருவம் பெறுகிறது. அந்த உப்பு மறுபடியும் நீரில் கலக்கும் போது நீரோடு நீராக மாறி விடும். அது போலவே நம்முடைய சீவனும் சிவத்தினில் இருந்து உருவம் பெற்று வந்துள்ளது. நமது ஆயுள் முடியும் போது, நாம் மறுபடியும் சிவத்தினுள் கலந்து விடுவோம் .

இரு வரிக் கதை – 09

”எல்லாரும் அமைதியா வரிசைல வாங்கப்பா!” சலிப்புடன் சொன்னார் சித்ரகுப்தர். “நீங்க என்ன எங்கள வரிசப்படியா கூட்டிட்டு வந்திருக்கீங்க?” வரிசையில் இருந்து ஒரு இளவயதுக் குரல் கேட்டது.

நமக்கு வேறு போக்கிடம் கிடையாது

சத்தமுதல் ஐந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடறிற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.   – (திருமந்திரம் – 135)

விளக்கம்:
பஞ்ச பூதங்களால் ஆன நம்முடைய உடல், ஐந்து தன்மாத்திரைகளான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவற்றைச்  சார்ந்திருக்கின்றன. ஆனால் நமது ஆன்மாவிற்கு பரமாத்மாவான சிவனை விட்டால் சேர்விடம் வேறு ஏது? சுத்தமான பரவெளியில் நம்முடைய ஆன்மா என்னும் சுடர், பேரொளியாகிய அந்த சிவனைச் சேரும். இதைப் புரிந்து கொண்டு, அந்த சிவனது அருட்கடலில் நாம் கலந்திருப்போம்.

நம்முடைய உடல் தன்னுடைய மூலமான ஐம்பூதங்களைச் சார்ந்திருக்கிறது. அது போல நம்முடைய ஆன்மா, தன்னுடைய மூலமான பரமாத்மாவை சார்கிறது.

ரேகை இல்லாத உதடுகள்

ஆதி கால மனிதனுக்கும் மனிதிக்கும் உதடுகளில் ரேகை இல்லாமல் இருந்தது. இந்த மனிதிங்கிற வார்த்தை தான் மருவி இப்போ மதினின்னு ஆயிடுச்சு. ரேகை இல்லாத உதடுங்க எல்லாம் ஒரு வித மினுமினுப்போட ஈரத்தோட இருந்தது. இதனால ஆண் பெண் இடையே உள்ள அந்த தூண்டுதல் அப்போ கொஞ்சம் அதிகம். இதுல ப்ரச்சனை எங்கே ஆரம்பிச்சதுன்னா, தூண்டுதலின் வேகம் அதிகமா இருந்ததாலயும், உதடுங்க க்ரிப் இல்லாம வழுக்கலா இருந்ததாலயும் அடிபட்டு நிறைய பேருக்கு மூக்கு ஒடைஞ்சு போச்சு. இப்போ கூட பழைய கோவில்கள்ல பாருங்க, நிறைய சிலைகளுக்கு மூக்கு உடைஞ்சிருக்கும். பிறகு பரிணாம வளர்ச்சியில மனுஷனுக்கு உதட்டுல ரேகை வர ஆரம்பிச்சது, ஒரு க்ரிப்பும் கிடச்சது. அதனால தான் இப்போ நம்ம மூக்கு எல்லாம் முழுசா இருக்கு.

அப்ப எல்லாம் பசங்க யாருக்காவது மூக்கு ஒடஞ்சதுன்னா ஃப்ரண்ட்ஸ்ஸுக்கு பார்ட்டி வைக்கணும். மூக்கு சரியாகிற வரைக்கும் வீட்டு பக்கம் தலை காட்ட முடியாது. பொண்ணுங்க பாடு தான் கொஞ்சம் கஷ்டமா இருந்ததாம். ஆனாலும் இதெல்லாம் வயசுக் கோளாருன்னு கண்டுக்காம இருக்கிற மனப்பான்மையும் பெருசுங்ககிட்ட கொஞ்சம் இருந்திருக்கு. இந்த மாதிரி விஷயத்துக்குன்னே ஸ்பெசலிஸ்ட் வைத்தியர்களெல்லாம் இருந்திருக்காங்க. அந்த வைத்தியம் பத்தி அகத்தியர் எழுதின சில சுவடிங்க என்கிட்ட இருக்கு.

நம்ம நாட்டுல சத்தமில்லாம ரகசியமா ஒரு ஆராய்ச்சி நடந்துகிட்டு இருக்கு. செவ்வாய் கிரகத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி ஆளுங்கள கூட்டிட்டு போய் பாதி வழில கழட்டி விட்டா என்னங்கிறது தான் அந்த ஆராய்ச்சி. அங்கே வேலை பார்க்கிற ஒரு பெண் என் கூட படிச்சவ. அவள் சொன்ன தகவல் இது. முன்னெல்லாம் அங்கே உள்ள செக்யூரிட்டி சிஸ்டம் ரெட்டினா ஸ்கேன் பண்ணி தான் ஆளுங்கள உள்ளே விடுமாம். இப்போ ஆதார் அட்டைக்கே ரெட்டினா ஸ்கேன் உபயோகிக்கிறதுனால சிஸ்டத்த மாத்திட்டாங்களாம். டான் ப்ரௌன் கூட இந்த ரெட்டினா ஸ்கேன் பத்தி என்னமோ பெரிய டெக்னாலஜி மாதிரி எழுதி சாகடிச்சிருப்பார். இப்பெல்லாம் செக்யூரிட்டி சிஸ்டம் வேற மாதிரி. வேலைக்கு வர்றவங்க மூடியிருக்கிற கதவை கிஸ் பண்ணனும், சரியான ஆளா இருந்தா கதவு திறக்கும். இல்லேன்னா ஷாக் அடிச்சு அங்கயே சாக வேண்டியது தான். அங்கே உள்ள எல்லாருடைய உதட்டு ரேகைகளும் டேட்டா பேஸ்ல வச்சிருக்காங்க.

இது பத்தி டெக்னிக்கலா இன்னொரு சமயம் எழுதுறேன்.

உபதேசம் பெற தெளிந்த மனம் அவசியம்

புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே.   – (திருமந்திரம் – 134)

விளக்கம்:
குற்றம் இல்லாத பாலில் நெய் கலந்திருப்பதைப் போல, அலையற்ற மனத்தில், குருவாகிய ஆசிரியர் சொல்லும் உபதேசம் பேதமில்லாமல் நிறைந்து நிற்கும். பேச்சற்ற மவுன நிலையில் நாம் அதை உணரலாம். உபதேசப் பொருளை உணர்ந்தோர்க்கு உடம்பு இங்கு அழிந்தாலும், கரையற்ற சோதியாம் மெய்ப்பொருளில் கலந்து விடலாம்.

குழப்பம் இல்லாத தெளிந்த மனத்தில் குருவின் உபதேசம் நன்றாக பதியும். உபதேசப் பொருளை நன்கு உணர்ந்தவர்கள் தன் வாழ்நாள் இறுதியில் மெய்ப்பொருளாம் சிவசோதியோடு கலந்து விடுவார்கள்.

(புரை – குற்றம்,   திரை – அலை,   ஆரியன் – குரு, ஆசிரியர்,    உரையற்று – பேச்சற்று,   சத்து – மெய்ப்பொருள்)