சித்தர்கள் சிவலோகத்தை இங்கேயே காண்பார்கள்!

சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்
சத்தமும் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே. – (திருமந்திரம் – 125)

விளக்கம்:
உடல் இருக்கும் போதே சிவலோகத்தை இங்கே கண்டவர்கள் சித்தர் ஆவார்கள். அவர்கள் சத்தங்களையும், சத்தங்களின் முடிவையும் தம்முள்ளே காண்பார்கள், அதாவது சத்தங்களைக் கடந்து அமைதியான நிலையை அடைவார்கள். அவர்கள் என்றும் அழிவில்லாதவராக, குற்றமில்லாத தூயவராக, நோய் ஏதும் இல்லாதவராக, தொடர்ந்து நீளும் முத்தி நிலையை அடைவார்கள். அவர்கள் முத்திக்கு வழியாக உள்ளது முப்பத்தாறு தத்துவங்கள் ஆகும்.

முப்பத்தாறு தத்துவங்கள் – ஆன்ம தத்துவம் – 24, வித்தியா தத்துவம் – 7, சிவ தத்துவம் – 5.

இரு வரிக் கதை – 04

புது வீட்டுக்கு குடி வந்த அவர், அன்றிரவு தனது அறையின் விட்டத்தில்  இரு காலடித் தடங்கள் ஈரத்தோடு இருப்பதைப் பார்த்து குழப்பமாகப் பயந்தார். அவருடைய ஆறு வயதுப் பெண், தனது சிரிப்பை அடக்க முடியாமல் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்.

இரு வரிக் கதை – 03

 “இன்னைக்கு ஒனக்கு அன்லிமிட்டெட் ப்ரௌசிங் ஆஃபர்” என்றபடி கண் சிமிட்டி அழைத்தாள் அவள். புரிந்து செயலில் இறங்கிய அவன், தொப்புள் பக்கம் வந்தவுடன் சந்தேகத்துடன் அவள் முகத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டான்.

இரு வரிக் கதை-02

 “அப்பா! என் பெட்ரூம்ல கண்ணாடி போட்ட பையன் ஒருத்தன் வந்து படுத்திருக்கான், யாருன்னே தெரியலே!”. சொன்ன பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது! எனக்கு பெண் குழந்தையே கிடையாது, ஒரே ஒரு பையன் மட்டும் தான், கண்ணாடி அணிந்திருப்பான்.

இரு வரிக் கதை – 01

அடர்ந்த காடு, நிலவு மட்டுமே ஒளி, மர நிழல்களின் நடனம், நெருக்கமாய் வாசனைப் பெண் ஒருத்தி சுய ஒளியுடன். “இந்த மரமெல்லாம் என் நண்பர்கள், வெட்கம் மறக்க அந்த மேகத்தினுள் ஒளிந்து கொள்வோம், வா!” என்றாள்.

சிவசித்தர் ஆகலாம்!

வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவ சித்தர் தாமே. – (திருமந்திரம் – 124)

விளக்கம்:
சிவபெருமானின் திருவடியை வணங்கப் பெற்றவர்களின் மனவெளி அந்த சிவனின் அருள் வெளியில் கலந்து விடும். அந்த சிவனடியாரின் அன்பு சிவபெருமானின் பேரன்பிலே கட்டுண்டு நிற்கும். சிற்றொளியாகிய அடியாரின் அறிவு பேரொளியாகிய சிவஅறிவினில் ஒடுங்கி விடும். இதையெல்லாம் உணர்ந்து தெளிந்தவர்கள் சிவசித்தர் ஆவார்கள்.

(அளி – அன்பு)

தேவர்களும் அறியாத இன்ப உலகம்

அளித்தான் உலகெங்கும் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான் பேரின்பத்து அருள்வெளி தானே.  – (திருமந்திரம் – 123)

விளக்கம்:
சிவபெருமான் இந்த உலகம் முழுவதும் தானே நிறைந்துள்ள உண்மையை நமக்கு உணர்த்தி அருளினான். தேவர்களும் அறியாத இன்ப உலகை நமக்குத் தந்தான். சிதம்பரம் கனக சபையில் நடனம் செய்யும் தன்  திருவடியை நாம் வணங்க அளித்தான். எல்லாவற்றிற்கும் மேலாக இன்பமயமான அருள்வெளி ஒன்று நமக்கெல்லாம் தந்தானே!

சிவயோகம்!

சிவயோக மாவது சித்தசித் தென்று
தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகஞ் சாராது அவன்பதி போக
நவயோகம் நந்தி நமக்களித் தானே. – (திருமந்திரம் – 122)

விளக்கம்:
சிவயோகத்தை விரும்புவோர் இறைவன் அறிவுப் பொருள் என்பதையும், இந்த உலகம் அறிவற்ற பொருள் என்பதையும் விவேகத்தால் புரிந்து கொள்ள வேண்டும்.  தீமை அளிக்கும் யோக வழிகளில் செல்லாமல், தவயோகம் செய்து வந்தால் சிவ ஒளியை உள்ளே உணரலாம். அந்த நந்தி பெருமான், தன்னுடைய வீட்டை நாம் அடையும்படியாக, புதுமையான யோகத்தை நமக்கு அளித்தான். அந்த யோக வழியில் சென்று நாம் வீடு பேறு அடையலாம்.

(சித்து – அறிவுப் பொருள் (இறைவன்),  அசித்து – அறிவற்ற பொருள் (உலகம்), பதி – வீடு, நவ யோகம் – புதுமையான யோகம்)

சிவயோகியர்!

வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே. – (திருமந்திரம் – 121)

விளக்கம்:
முந்தைய பாடலில் சொல்லப்பட்டது போல, பிறவிகளுக்குக் காரணமான தீவினைகள் அழியப் பெற்றவர்கள் மேலான நிலை அடைந்து சுத்தமான ஆன்மா ஆவார்கள். அந்த சிவயோகியர்கள், புலன்களும் உயிரும் ஒன்றாக உள்ள உடல் கொண்டிருந்தாலும், புலன்களின் வழியில் மனம் செல்லாது இருப்பார்கள். அதாவது உடலுடன் இருக்கும் போதே செத்தவரைப் போல இருப்பார்கள்.

வறுக்கப்படும் தீவினைகள்

ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்
தீமேவு பல்கர ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே. – (திருமந்திரம் – 120)

விளக்கம்:
நம்முடைய செயல்களில் தீவினைகள் நிறைய கலந்துள்ளன. பசும்பாலில் கலந்துள்ள நீரைப் பிரிக்கும் அன்னப் பறவையைப் போல, நம் சிவபெருமான் சிதம்பரத்தில் உள்ள கனகசபையில் தன்னுடைய ஒப்பில்லாத நடனத்தினால் நம்முடைய தீய வினைகளைப் பிரித்து விடுகிறான். நம்முடைய பிறப்புகளுக்கு காரணமான தீய வினைகள், தீயில் வறுக்கப்பட்ட வித்துக்களாகி விடுகின்றன. வறுக்கப்பட்ட வித்துக்கள் முளைக்காது, அது போல நமக்கு மறுபிறவி என்பது இராது.