அந்தப் பெண் என் கையை ஆசையுடன் எடுத்து தன் கைகளுக்குள் வைத்து அழுத்தினாள். இரண்டு நாட்களாக ஃப்ரீஸரில் இருந்த என் கை சில்லிட்டிருந்தது.
எல்லாவற்றிலும் சிவனின் செயலைக் காணலாம்!
இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்தங்கு
இருந்தார் இழவுவந்து எய்திய சோம்பே. – (திருமந்திரம் – 127)
விளக்கம்:
சித்தர்கள் சிவனின் தன்மை பெற்று தாமே சிவமாகி இருந்தார்கள். அவர்கள் தாம் எங்கிருந்தாலும் அந்த சிவனின் தன்மை மாறாமல் இருந்தார்கள். அவர்கள் தன்னைச் சுற்றி நிகழும் அனைத்து விஷயங்களிலும் சிவனின் செயலைக் கண்டு வியப்பார்கள். அவர்கள் முக்காலத்தின் இயல்பை உணர்ந்து, கடந்த காலத்தைப் பற்றியும் எதிர் காலத்தைப் பற்றியும் எந்தக் கவலையும் இல்லாமல் ‘எல்லாம் சிவன் செயல்’ என்று இருப்பார்கள்.
சிவன் தரும் பரிசு – தெளிவு!
முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்
ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச்
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்து
அப்பரி சாக அமர்ந்திருந் தாரே. – (திருமந்திரம் – 126)
விளக்கம்:
சித்தர்கள் ஆகமங்களால் கூறப்படும் முப்பத்தாறு தத்துவங்களை ஏணியாகக் கொண்டு, ஒப்பில்லாத சிவானந்தத்தைத் தரும் ஒளியில் புகுவார்கள். அங்கே வார்த்தைகளால் சொல்ல முடியாத பெருமையுடைய சிவத்தை தரிசித்து, தன்னுடைய உண்மை நிலையை தெளிந்து உணர்வார்கள். அந்தத் தெளிவு தான் அவர்கள் பெறும் பரிசு ஆகும்.
சித்தர்கள் சிவலோகத்தை இங்கேயே காண்பார்கள்!
சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்
சத்தமும் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே. – (திருமந்திரம் – 125)
விளக்கம்:
உடல் இருக்கும் போதே சிவலோகத்தை இங்கே கண்டவர்கள் சித்தர் ஆவார்கள். அவர்கள் சத்தங்களையும், சத்தங்களின் முடிவையும் தம்முள்ளே காண்பார்கள், அதாவது சத்தங்களைக் கடந்து அமைதியான நிலையை அடைவார்கள். அவர்கள் என்றும் அழிவில்லாதவராக, குற்றமில்லாத தூயவராக, நோய் ஏதும் இல்லாதவராக, தொடர்ந்து நீளும் முத்தி நிலையை அடைவார்கள். அவர்கள் முத்திக்கு வழியாக உள்ளது முப்பத்தாறு தத்துவங்கள் ஆகும்.
முப்பத்தாறு தத்துவங்கள் – ஆன்ம தத்துவம் – 24, வித்தியா தத்துவம் – 7, சிவ தத்துவம் – 5.
இரு வரிக் கதை – 04
புது வீட்டுக்கு குடி வந்த அவர், அன்றிரவு தனது அறையின் விட்டத்தில் இரு காலடித் தடங்கள் ஈரத்தோடு இருப்பதைப் பார்த்து குழப்பமாகப் பயந்தார். அவருடைய ஆறு வயதுப் பெண், தனது சிரிப்பை அடக்க முடியாமல் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்.
இரு வரிக் கதை – 03
“இன்னைக்கு ஒனக்கு அன்லிமிட்டெட் ப்ரௌசிங் ஆஃபர்” என்றபடி கண் சிமிட்டி அழைத்தாள் அவள். புரிந்து செயலில் இறங்கிய அவன், தொப்புள் பக்கம் வந்தவுடன் சந்தேகத்துடன் அவள் முகத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டான்.
இரு வரிக் கதை-02
“அப்பா! என் பெட்ரூம்ல கண்ணாடி போட்ட பையன் ஒருத்தன் வந்து படுத்திருக்கான், யாருன்னே தெரியலே!”. சொன்ன பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது! எனக்கு பெண் குழந்தையே கிடையாது, ஒரே ஒரு பையன் மட்டும் தான், கண்ணாடி அணிந்திருப்பான்.
இரு வரிக் கதை – 01
அடர்ந்த காடு, நிலவு மட்டுமே ஒளி, மர நிழல்களின் நடனம், நெருக்கமாய் வாசனைப் பெண் ஒருத்தி சுய ஒளியுடன். “இந்த மரமெல்லாம் என் நண்பர்கள், வெட்கம் மறக்க அந்த மேகத்தினுள் ஒளிந்து கொள்வோம், வா!” என்றாள்.
சிவசித்தர் ஆகலாம்!
வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவ சித்தர் தாமே. – (திருமந்திரம் – 124)
விளக்கம்:
சிவபெருமானின் திருவடியை வணங்கப் பெற்றவர்களின் மனவெளி அந்த சிவனின் அருள் வெளியில் கலந்து விடும். அந்த சிவனடியாரின் அன்பு சிவபெருமானின் பேரன்பிலே கட்டுண்டு நிற்கும். சிற்றொளியாகிய அடியாரின் அறிவு பேரொளியாகிய சிவஅறிவினில் ஒடுங்கி விடும். இதையெல்லாம் உணர்ந்து தெளிந்தவர்கள் சிவசித்தர் ஆவார்கள்.
(அளி – அன்பு)
தேவர்களும் அறியாத இன்ப உலகம்
அளித்தான் உலகெங்கும் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான் பேரின்பத்து அருள்வெளி தானே. – (திருமந்திரம் – 123)
விளக்கம்:
சிவபெருமான் இந்த உலகம் முழுவதும் தானே நிறைந்துள்ள உண்மையை நமக்கு உணர்த்தி அருளினான். தேவர்களும் அறியாத இன்ப உலகை நமக்குத் தந்தான். சிதம்பரம் கனக சபையில் நடனம் செய்யும் தன் திருவடியை நாம் வணங்க அளித்தான். எல்லாவற்றிற்கும் மேலாக இன்பமயமான அருள்வெளி ஒன்று நமக்கெல்லாம் தந்தானே!