சிவனின் உறவினர்

பயன்அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால்நமக்கு அன்னியம் இல்லை
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்
வயனம் பெறுவீர்அவ் வானவ ராலே. – (திருமந்திரம் – 107)

விளக்கம்:
பக்தர்கள் அடையும் பயனை எண்ணிப் பார்க்கும் போது, பிரமனும் திருமாலும் சிவபெருமானுக்கு வேறானவர்கள் இல்லை. அவர்கள் மூன்று கண்களை உடைய சிவனது உறவினர்களே ஆவர். அதனால் அவர்களையும் வணங்கி நாம் பயன் பெறலாம்.

(நயனம் – கண்,  தமர் – சுற்றத்தார்)

சங்கரன் என்றால் சுகம் தருபவன்

சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன் றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே. – (திருமந்திரம் – 106)

விளக்கம்:
சிவன், சதாசிவன், மகேசுரன் என மூன்று பேராகச் சொன்னாலும்,   சதாசிவன், மகேசுரன்,  உருத்திரன், திருமால், பிரமன் என்று ஐந்து பேராகச் சொன்னாலும் எல்லாம் ஒருவரே. சங்கரன் என்னும் ஒரே கடவுள் தான் மூன்றாகவும், ஐந்தாகவும் வகுத்துச் சொல்லப்பட்டு திருச்சிற்றம்பலச் சபையில் விளங்குகிறான். சிவன், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன் எனச் சிவனது நிலைகளை ஒன்பதாகச் சொல்வதும் உண்டு.

தூசு பிடித்தவர் தூர் அறிந்தார்களே

ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம்
பீசம் உலகில் பெருந்தெய்வம் ஆனது
நீசர் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே. – (திருமந்திரம் – 105)

விளக்கம்:
ஈசன் நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளுக்கு அப்பாற்பட்டவன். தாமரை மொக்கு போன்ற அந்த சிவபெருமான்  உலகின் பெருந்தெய்வம் ஆவான். தெய்வ நினைப்பில்லாத நீசர்கள் அது இது என்று பிதற்றுவார்கள். மனத் தூய்மை உடையவர்கள் இறைவனின் வேர் அறிந்தார்களே!

(தூசு பிடித்தவர் – தூய்மையானவர்)

மூவரும் ஒருவரே!

ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதித் துலகம் பிணங்குகின் றார்களே.   –  (திருமந்திரம் – 104)

விளக்கம்:
ஆதிப்பிரானான சிவன், அழகிய மணிவண்ணனாகிய திருமால், தாமரை மலரில் எழுந்தருளும் பிரமன் – இவர்கள் மூவரும் அழித்தல், காத்தல், படைத்தல்  ஆகிய தமது தொழில்களினால் வேறுபட்டுத் தோன்றுகிறார்கள். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் இந்த மூவரும் ஒருவரே என்பது புரியும். இந்த உலகத்தார் உண்மை புரியாமல், இவர்கள் வெவ்வேறானவர்கள் என்று நினைத்து தமக்குள் பிணங்கி நிற்கிறார்களே!

ரஜினிகாந்த், ஓஷோ, டார்வின் மற்றும் திருமூலர்

ஃபேஸ்புக்கில் பார்த்த ஒரு வீடியோ நிறைய விஷயங்களை மனத்தில் அலசச் செய்தது. அந்த வீடியோவில் ரஜினிகாந்த் கடவுள் உண்டா இல்லையா என்பது பற்றி தான் கேட்ட ஒரு சொற்பொழிவை மேற்கோள் காட்டிப் பேசியிருந்தார். அவர் சொன்னது இது தான் – “where there is a creation, there must be a creator. அந்த creator தான் கடவுள்”. இதை கேட்ட போது ஓஷோ நினைவில் வந்தார். அவர் ஏற்கனவே இதற்கு பதில் சொல்லியிருக்கிறார்.

அந்த ஓஷோவின் சொற்பொழிவில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி “கடவுள் இல்லை என்று நிஜமாகவே நம்புகிறீர்களா?” ஓஷோவின் நிதானமான பதில் இது “கடவுள் என்பவர் இல்லை, எனக்கு இது உறுதியாகத் தெரியும். அப்படி ஒருவர் இல்லை என்பதற்காக அந்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். கடவுள் என்னும் ஒருவரின் இருப்பு நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தும்”. மேலும் இது விஷயமாகப் பேசும் போது அவர் சார்லஸ் டார்வினின் சித்தாந்தத்தை கையில் எடுத்து ஒரு அருமையான விளையாட்டு ஆடியிருப்பார்.

“படைப்பு என்பது, ஒரு படைப்பாளியால் செய்து முடிக்கப்பட்ட  வேலையாகும். அவர் அந்த வேலையை முடித்து விட்டு வேறு வேலையை பார்க்கப் போய் விடுவார். அந்த படைப்பு தன்னளவில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும். ஆனால் இந்த உலகம் அப்படிப்பட்ட ஒரு படைப்பு கிடையாது, டார்வினின் தத்துவப்படி இந்த உலகம் தன்னளவில் பரிணாம வளர்ச்சி (evolution) அடைந்து கொண்டே இருக்கிறது, இனியும் அப்படித்தான் இருக்கும். இந்த பரிணாம வளர்ச்சி ஒரு பரிபூரண நிலையை, தன்னுடைய இலக்காக நோக்கி பயணம் செய்கிறது. அந்த பரிபூரண நிலை ஒரு நாளும் கிட்டப்போவதில்லை, இந்த வளர்ச்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதனால் இந்த உலகத்தை creator, creativity என்று தொடர்புபடுத்திப் பேசுவது பொருத்தமில்லாதது” இது ஓஷோவின் வாதம்.

ஓஷோவின் இந்த வாதத்துக்கு பதில் கிடைக்குமா என்று தேடினால், அந்த பதில் திருமூலரிடம் இருக்கிறது.

அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரியயற் காமே.

டார்வின் விஞ்ஞான பூர்வமாகச் சொன்ன விஷயத்தை திருமூலர் எப்படிச் சொல்கிறார் என்று பாருங்கள். “ இந்த உலகம் தன்னளவில் எப்போதுமே இளமையாகவும், அழகோடும், ஒரு எல்லைக்குள்ளேயும் இருக்கிறது. Evolution என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார்! உலகம் தோன்றி கோடிக்கணக்கான வருடம் ஆன பிறகும், நாம் யாரும் இன்னும் இது பழைய உலகம், இந்த உலகத்திற்கு வயசாகி விட்டது என்று சொல்வதில்லை. டார்வினின் வார்த்தையில் இது evolution, திருமூலர் சொல்வது எப்போதும் இளமை. அது மட்டுமில்லை, இந்த உலகத்தின் அழகு (அந்தம்) எப்போதுமே குறையாமல் இருக்கிறது. இதன் வளர்ச்சியில் எல்லாம் ஒரு ஒழுங்கு இருக்கிறது, அதைத்தான் எல்லை (ஈறு) என்கிறார். இது பற்றி கீதையிலும் வியந்து பேசப்படுகிறது. இன்னொரு விஷயம் திருமூலர் இந்தப் பாடலில் சொல்வது ‘அளவியல் காலம்’. இந்த உலகம் இது வரை இருந்த காலம், இனி இருக்கப் போகும் காலம் – இதெல்லாம கணக்கிட முடியாதது, எல்லையில்லாதது ஆகும்.

இதையெல்லாம் சொல்லி விட்டு திருமுலர் வைக்கும் பன்ச் இது தான் “இந்த விஷயங்களை கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கள். அந்த சங்கரன் எவ்வளவு சோர்வில்லாதவன் என்பது உங்களுக்குப் புரியும்”. Got it?

ஓஷோ மாதிரி யாராவது வந்து குழப்புவாங்கன்னு தெரிஞ்சு தான், நம்மாளுங்க எப்பவுமே படைப்பு என்பதை படைத்தல், காத்தல், அழித்தல் – இந்த மூணையும் சேர்த்தே சொல்வாங்க.

தளர்விலன் சங்கரன்!

அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரியயற் காமே.   –  (திருமந்திரம் – 103)

விளக்கம்:
சிவபெருமானால் படைக்கப்பட்ட இந்த உலகம் எப்போதும் இளமையானது, அழகுள்ளது, ஒரு எல்லைக்குள் இருக்கிறது. இந்த உலகின் மொத்த காலமும் கணக்கிட முடியாதது. இதையெல்லாம் உணர்ந்தால் அந்த சங்கரன் சோர்வே இல்லாதவன் என்பது புரியும். அடியார்கள் சொல் அளவில்  பிரமனையும் திருமாலையும் சேர்த்தே புகழ்கிறார்கள், ஆனால் எல்லா பெருமையும் சிவபெருமானையே சேர வேண்டும்.

பிறவிப் பிணி இல்லாத சித்தர்கள்

கலந்தருள் காலாங்கர் தம்பால கோரர்
நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்
புலங்கொள் பரமானந் தர்போக தேவர்
நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே.   –  (திருமந்திரம் – 102)

விளக்கம்:
சிவ அருளில் கலந்திருக்கும் காலாங்கர், அகோரர், நன்மை தரும் மாளிகைத் தேவர், நாதாந்தர், அறிவார்ந்த பரமானந்தர், போக தேவர், நிலைத்த புகழ் உடைய திருமூலர் – இந்த எழுவரும் பிறவிப்பிணி இல்லாத சித்தர்கள்.

சன்மார்க்கம் போதித்த முதன்மையான மடம்

வந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடம்வரை
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.   –  (திருமந்திரம் – 101)

விளக்கம்:
உலகில் சன்மார்க்கம் நிலைபெறும் பொருட்டு வந்த மடங்கள் எண்ணிக்கையில் ஏழு ஆகும். அவற்றில் முதன்மையான மடத்தை தோற்றுவித்தவர் திருமூலர். அவரால் உரைக்கப்பட்டது தான் ஒன்பது தந்திரங்களில் மூவாயிரம் பாடல்கள் கொண்ட இந்த திருமந்திரம் என்னும் அழகிய ஆகமம் ஆகும்.

திருமந்திரம் அனைவருக்கும் பொதுவானது

வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவா யிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது
வைத்த சிறப்புத் தருமிவை தானே.   –  (திருமந்திரம் – 100)

விளக்கம்:
ஒன்பது தந்திரங்கள் கொண்ட இந்த திருமந்திரம் என்னும் நன்னூலின் பரிசு என்னவென்றால், இந்த நூலில் உள்ள மூவாயிரம் பாடல்களைப் படிப்பதன் மூலம் முத்தி நிலை அடையலாம். அறிவுபூர்வமாகச் சொல்லப்பட்ட இந்த மூவாயிரம் பாடல்களும் அனைவருக்கும் பொதுவானதாகும், படிப்பவர்க்கு நன்மை தருவதுமாகும்.

தினமும் காலையில் திருமந்திரம் படிப்போம்

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே.   –  (திருமந்திரம் – 99)

விளக்கம்:
இந்த உலக மக்கள் யாவரும் தெரிந்து கொள்வதற்காக, நந்தி பெருமானின் அருளினால் பாடப்பட்டது, திருமூலரின் மூவாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திரம். இந்த திருமந்திரத்தை தினமும் காலை நேரத்தில், அர்த்தம் புரிந்து படித்து வந்தால், உலகத்தலைவனான சிவபெருமானை அடையலாம்.

(ஞாலம் – உலகம்,  நண்ணுவர் – அடைவர்)