நிரந்தர முதல்வர்

பரந்துலகு ஏழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர்கள் எற்றுக்கு இரக்கும்
நிரந்தக மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே. – (திருமந்திரம் – 1888)

விளக்கம்:
ஏழு உலகையும் படைத்து அவற்றில் நிறைந்திருக்கும் சிவபெருமானை சிலர் யாசித்து உண்பவன் என்று சொல்கிறார்கள். படைத்தவனான அவனுக்கு யாசிக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி இகழ்வாக பேசாமல் அந்த சிவபெருமானை நிரந்தரமாக நினைந்திருப்போம். அப்படி நினைந்திருக்கும் அடியாரின் பக்தியினை யாசித்து ஏற்று அவர்களுக்கு தன் திருவடி எட்டுமாறு செய்வான் அவன்.

(இரந்துணி – யாசித்து உண்பவன்,   எற்றுக்கு – எதற்கு,  கழல் – திருவடி)

He created the seven worlds and spread over them
Some people call him a beggar, why he have to beg?
The devotees who constantly think of the lord,
He accept the devotion from them and make them reach His Holy Feet.

அடியார்க்கு அடியார்

அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்
சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன்
அவன்பால் அணுகியே நாடும் அடியார்
இவன்பால் பெருமை இலயமது ஆமே. – (திருமந்திரம் – 1880)

விளக்கம்:
சிவனடியார்களை அணுகி அன்பு செய்பவர்கள் சிவபெருமானை அணுகவும் வல்லவர் ஆவார்கள். சிவனடியாரை நாடி இருக்கும் அடியவர்களுக்கும் சிவனடியாரின் பெருமை வந்து சேரும்.

அடியாரை வணங்குவதும் சிவனை வணங்குவது போன்றதே!

Those who seek love of Lord Siva's followers
can attain Siva's feet too.
The devotees who seek Siva's follower
will get the same reputation of whom they seek.

அணையா விளக்கு அவன்

அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கென்று மேவிநின் றேனே. – (திருமந்திரம் – 48)

விளக்கம்:
அடியார் வணங்கும் தேவர்களின் தலைவன் சிவபெருமான். அந்த முதல்வனை நினைத்து தலையால் வணங்குவேன். இந்த உலகத்தாருக்கு அருளும் எம் தந்தையான முழுமுதற் கடவுள் அவனை அணையாத விளக்காய் நினைத்து பொருந்தி நின்றேனே!

(முன்னி – நினைத்து,  படி – உலகம்,  பரம்பரன் – முழுமுதற் கடவுள்,   விடியா விளக்கு – அணையா விளக்கு)

The Lord of Devas whom the devotees adore,
Seeking Him, I bow my head to worship
The Lord, our Father, he is blessing this whole world.
I seek that ever glowing lamp.

ஒரு அடியார் போதும், நாடே சுபிட்சமாகும்

திகைக்குரி யானொரு தேவனை நாடும்
வகைக்குரி யானொரு வாது இருக்கில்
பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும்
அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே. – (திருமந்திரம் – 1868)

விளக்கம்:
அனைத்து திசைகளுக்கும் உரியவனான சிவபெருமானை, இனத்திற்கு ஒருவராது நாடி இருப்பார் ஆகில், அங்கே பகைவர் என்று யாரும் இருக்க மாட்டார். தவறாமல் மழை பெய்யும். யாருக்கும் மனக்குறை என்பது இராது. அந்த உலகத்தில் கெடுதல் என்பதே இராது.

(திகை – திசை,   அகக்குறை – மனக்குறை)

The Lord spreads over all directions.
If there is a man who pursue the Lord and remain so,
There will be no enmity there, rain will not fail
No dissatisfaction there, evil will not near that world.