அஞ்ஞானம் நீங்கப் பெறுவோம்!

ஆணவந் துற்ற வவித்தா நனவற்றோர்
காணிய விந்துவா நாத சகலாதி
ஆணவ மாதி யடைந்தோ ரவரன்றே
சேணுயர் சத்தி சிவதத் துவமாமே.  – (திருமந்திரம் – 500)

விளக்கம்:
ஆணவத்தால் ஏற்படும் அறியாமையை நீக்குவது நமது கனவாக மட்டும் இருந்து விடக்கூடாது. நனவிலும் ஆணவத்தை விட்டு அறியாமை நீங்கப் பெற வேண்டும். அப்படி அஞ்ஞானம் நீங்கப் பெற்றவர்கள் தாம் விந்து, நாதம் முதலிய சகல தத்துவங்களையும் தெளிவாக உணர்வார்கள். ஆணவம் முதலிய அழுக்குகள் நீங்கப் பெறாத சகலர்கள் நெடுங்காலம் முயற்சி செய்து சிவதத்துவங்களைப் புரிந்து கொள்வார்கள்.


எல்லோருக்கும் கண்டிப்பாக முத்தி உண்டு!

விஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடிய
அஞ்ஞான கன்மத்தி னால்சுவர் யோனிபுக்
கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய்
மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே.  – (திருமந்திரம் – 499)

விளக்கம்:
விஞ்ஞானகலர் தம்முடைய நல்வினைகளால் உடலும் மனமும் ஒருமித்து சிவபெருமானை தியானித்து முத்தி அடைவார்கள். பிரளயாகலர் தம்முடைய நல்வினைகளால் அடுத்து இன்னும் மேன்மையான பிறவி பெற்று முத்திக்கான முயற்சியில் இருப்பார்கள். சகலர் மறுபடியும் நிறைய பிறவிகள் எடுத்தாலும் இடையிடையே முத்திக்கான முயற்சியை செய்தவாறு இருப்பார்கள். அவர்களும் ஒரு நாள் மெய்ஞானம் பெற்று சிவத்தை அடைவது உறுதி. இதில் சந்தேகம் வேண்டாம்.


ஒன்பது பிரிவினர்!

விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
தஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் சகலராம்
விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே.  – (திருமந்திரம் – 498)

விளக்கம்:
விஞ்ஞானகலர் ஆணவமலத்தை மட்டுமே உடையவர்கள். இவர்கள் கன்மம், மாயை ஆகியவற்றில் சிக்க மாட்டார்கள். பிரளயாகலர் ஆணவம், கன்மம் ஆகிய இரு மலங்களை உடையவர்கள். அஞ்ஞானத்தை விடாதவர்கள் சகலர் ஆவார்கள். இந்த மூன்று வகையிலும் வருபவர்கள் உத்தமம், மத்திமம், அதமம் என மூன்று பிரிவுகளாய் இருக்கிறார்கள். ஆக மொத்தம் மனிதர்கள் ஒன்பது வகையான பிரிவுகளில் வேறுபட்டு நிற்கிறார்கள்.


ஐந்து வகையான பாவங்களை விட்டவர்கள்!

சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்
அவமாகார் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்
பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்
நவமான தத்துவம் நாடிக்கொண் டோரே.  – (திருமந்திரம் – 497)

விளக்கம்:
சிவம் ஆகி ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆகிய ஐந்து வலிமை மிகுந்த மலங்களை வென்றவர்கள் சித்தர்கள் ஆவார்கள். தன் வாழ்நாளை வீணாக்காத அவர்கள் முத்தியை அடைவாரகள். அவர்கள் பசு பாசத்தன்மைகள் நீங்கி அடுத்து பிறவி இல்லாத நிலையை அடைவார்கள். மேலும் அவர்கள் சிவபெருமானின் ஒன்பது தத்துவங்களை நாடி அறிந்து கொள்வார்கள்.


மூன்று வகையான சகலர்

பெத்தெத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது
ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்
மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே.  – (திருமந்திரம் – 496)

விளக்கம்:
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையும் விடாத சகலர்களில் வெகு சிலர் மட்டுமே பக்குவம் அடைவார்கள். அவர்கள் பெத்தத்த சித்தான தனது ஆன்மாவை, முத்தத்து சித்தான சிவத்தோடு பொருந்தச் செய்து சீவன்முத்தர் ஆவார்கள். சகலரில் இரண்டாவது வகையில் வருபவர்கள் சீவன் முத்தர் ஆகும் முயற்சியில் சாதகம் செய்பவர்கள். இவர்கள் தமது முயற்சியில் முத்தி அடைய முடியாவிட்டாலும் மும்மலத்தினால் ஏற்படும் துன்பத்தில் இருந்து தப்பித்துக் கொள்வார்கள். மூன்றாவது வகையினர் எந்தவித முயற்சியும் இல்லாமல் ஆரவாரமான உலக விஷயங்களில் மூழ்கி இருந்து தமது வாழ்நாளை வீணாக்குவார்கள்.


பிரளயாகலர்

இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை
இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்
இரண்டாகு நூற்றெட்டு ருத்திரர் என்பர்
முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே.  – (திருமந்திரம் – 495)

விளக்கம்:
ஊழிகாலத்தில் ஞானம் அடையக்கூடிய பிரளயாகலர் ஆணவம், கன்மம் ஆகிய இரு மலங்களை விடாதவர்கள். அவர்கள் தமது அடுத்த பிறவியில் முக்தி அடைவார்கள். இரண்டாவதாக வரும் பிரளயாகலரை மூன்று வகையினராகப் பிரிக்கலாம். அவர்கள் நூற்றெட்டு பேராக இருக்கும் உருத்திரரின் நிலையை அடைவார்கள். இவர்களுக்கு அடுத்த வகையினரான சகலர் மும்மலங்களையும் உடையவர்கள்.


நான்கு வகையான விஞ்ஞானகலர்!

விஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர்
தஞ்ஞானர் அட்டவித் தேசராஞ் சார்ந்துளோர்
எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்
மெய்ஞ் ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே.  – (திருமந்திரம் – 494)

விளக்கம்:
கன்மத்திலும் மாயையிலும் சிக்காத விஞ்ஞானகலரை நான்கு வகையினராகப் பிரிக்கலாம். தஞ்ஞானர், எஞ்ஞானர், மந்திர நாயகர், மெஞ்ஞானர் என நான்கு வகையினில் அவர்கள் வருவார்கள். தஞ்ஞானர் ஆன்ம ஞானம் உடையவர்கள், ஆனால் ஆணவம் முழுமையாக நீங்கப் பெறாதவர்கள். எஞ்ஞானர் அட்ட வித்தியேசுவர நிலையை நாடி இருப்பவர்கள். மந்திர நாயகர் ஏழு கோடி மகாமந்திரங்களில் நாட்டம் உடையவர்கள். தன்னுடைய ஆணவத்தை முழுமையாக விட்டவர்கள் மெஞ்ஞானர் ஆவர்.


மூவகைச் சீவ வர்க்கம்

விஞ்ஞானர் நால்வரு மெய்ப்பிரள யாகலத்
தஞ்ஞானர் மூவருந் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்
விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே.  – (திருமந்திரம் – 493)

விளக்கம்:
மனிதர்களை விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என மூன்று வகையாக பிரிக்கலாம். தெளிந்த ஞானம் உடைய விஞ்ஞானகலர் ஆணவம் உடையவர். ஊழி காலத்தில் ஞானம் அடையக்கூடிய பிரளயாகலர் ஆணவத்தையும் கன்மத்தையும் உடையவர்கள். உலக வாழ்வில் சிக்கி அறியாமை நிரம்பப் பெற்றவர் சகலர். சகலர் ஆணவம், கன்மம், மாயை ஆகிய முன்றையும் உடையவர் ஆவார். விஞ்ஞானகலரை நான்கு வகையாகவும், பிரளயாகலரை மூன்று வகையாகவும், சகலரை முன்று வகையாகவும் பிரிக்கலாம். இந்த உட்பிரிவுகளைச் சேர்த்தால் மனிதர்கள் பத்து வகையினர் ஆவர்.