ஏ இவளே!

முத்துப்பாண்டிக்கு ரெண்டு பொண்டாட்டி. ஒருத்தி அவளே, இன்னொருத்தி இவளே. அப்படித்தான் அவன் கூப்பிடுவான். மொதல்ல கட்டிக்கிட்டவளை இவளேன்னு கூப்பிட்டுகிட்டிருந்தான். ரெண்டாமவள் வந்ததும் முதலாமவள் அவளே ஆகிட்டா. ரெண்டாமவள் இவளே ஆகிட்டா. இதுவரைக்கும் ரெண்டு பேரையும் அவன் ஒப்பிட்டு பார்த்ததில்லை.  அவளேங்கிறவ நல்ல செவப்பு நிறம், கச்சிதமான அமைப்புள்ளவ. ஆனா கொஞ்சம் பொம்மைத்தனம் இருக்கும். இவளே வேற மாதிரி. மாநிறம், கொஞ்சம் சுமாரா இருப்பா, ஆனா உயிர்ப்புள்ளவ. அவ இருக்கிற எடத்துல யாரும் சோம்பலா இருக்க முடியாது. பேச்சும் சரி, செயலும் சரி ஒரே படபடப்பு தான்.

ஏழு பிள்ளைக அவங்க வீட்டுல. எந்த பிள்ளை யார் பெத்ததுங்கிறது இப்போ முத்துப்பாண்டிக்கு ஞாபகத்துல இல்ல. அதெல்லாம் ஒரு விஷயமா! பிள்ளைகளுக்கே அதப்பத்தி கேள்வி இல்ல.  வீட்டுல சண்ட வருமான்னு கேட்குறீங்களா? சண்ட இல்லாத வீடெல்லாம் ஒரு வீடா!

ஒரு தடவ அவளேயான மூத்தவகிட்ட அந்த தெரு பெரிய மனுஷன் ஒரு ஆளு ஜாடமாடயா வீட்டு அந்தரங்கத்த பத்தி கேக்க, இளையவளுக்கு தெரிய வந்து, இப்போ அந்தாளு சின்ன மனுஷனாயிட்டாரு. இவளே அவர்கிட்ட கேட்ட கேள்விக்கெல்லாம் தெருவுக்கே காது கூசிப்போச்சு.

முத்துப்பாண்டிக்கு தொழில் சொந்தமா ஒரு சின்ன பலசரக்கு கடை. வேலைக்கு சம்பள ஆள் கிடையாது. ”ஏ இவளே! வந்து கொஞ்சம் கடைய பாத்துக்கோ”ன்னா வந்துருவா. இவ வந்ததில ரெண்டு வகைல லாபமாச்சு. நிறைய கடன் கொடுத்தா. கடன் கொடுக்குற வியாபாரத்துல லாபம் அதிகம்ன்னு சொல்லுவா. கடன திரும்ப வாங்குறதில டெரர் மொகம் காண்பிப்பா. கொள்முதலும் இப்ப அவ பொறுப்பா ஆகிடுச்சு. வெலை அடிச்சு பேசுவா. யார் யாருக்கு என்ன வெலைல சப்ளை ஆகுதுன்னு லிஸ்ட் போடுவா. இதெல்லாம் இவளுக்கு எப்படி தெரியும்ன்னு முத்துபாண்டிக்கே புரியலை. “இவளே! நீ இங்க இருக்க வேண்டியவளே இல்ல”ன்னு சொல்லுவான். “அடப் போடா”ம்பா.

கடைல கணக்கெல்லாம் எழுதி வச்சுகிடுறதில்ல. எல்லாம் மனக்கணக்கு தான். கொஞ்ச கொஞ்சமா வீட்டுல துட்டு சேர ஆரம்பிச்சது. அவ வீட்ட பாத்துகிட்டா, இவ கடைய பாத்துகிட்டா. பக்கத்து தெருவில் ஒரு கடை வாடகைக்கு இருக்கிறதா தெரிய வந்ததது. துட்டு எவ்வளவு இருக்குன்னு எண்ணி பாத்தாங்க, ஒரு முப்பதினாயிரம் தேறிச்சு. சரின்னு இன்னொரு கடை ஆரம்பிச்சாங்க. புதுக்கடைய முத்துபாண்டி பாத்துகிட்டான், மொத கடைய இவ பாத்துகிட்டா.

முத்துபாண்டிக்கு கொஞ்சம் சிரமமா தான் இருந்தது. இவ அளவுக்கு அவனுக்கு சாதுர்யம் போதாது. இப்படித்தான் ஒரு நாள் பவுடர்  டப்பா வாங்கிட்டு போன ஒருத்தன் திரும்ப சண்டைக்கு வந்துட்டான்.

“ஒரு டப்பால அஞ்சு ரூவாயா கூட வச்சு விப்பீங்க?”ன்னு ஒரே சண்டை.

அந்த நேரம் வாடிக்கையா சாமான் வாங்குற பெண் உதவிக்கு வந்தது. பதிலுக்கு கூச்சல் போட்டது.

“இன்னொரு கடைல வெல கம்மியா இருந்தா, அதுல என்ன மாசம் போட்டிருக்குன்னு பாத்தியா? அத பாத்துட்டு வா மொதல்ல. பழைய டப்பா வெலைல புது டப்பா குடுப்பாங்களா?”

அவனும் அத நம்பி திரும்ப போயிட்டான்.

“சரி. நான் வாங்குனது எவ்வளவு ஆச்சு?”ன்னு கேட்டா அந்த பொண்ணு.

“நாப்பத்தாறு”

“எனக்கு வாங்க வேற கடை இல்லாமலா ரெண்டு தெரு தள்ளிருக்கிற ஒங்க கடைக்கு வாரேன். இந்தாங்க நாப்பது ரூவா போட்டுக்குங்க.”

“சரி இவளே”ன்னான்.


ஒரு ப்ரீகுவல் கதை

வட்டகிரி, அப்படின்னு ஒரு மலைக்காடு. அங்கே ஒரு முனிவர் முனிவராகவே வாழ்ந்து வந்தார். அவருக்கு பொன்னாசை, பெண்ணாசை எதுவுமே கிடையாது. கடுமையா தவம் செஞ்சு இந்த பிறவிலேயே கடவுளை அடையணும் அப்படிங்கிறதுதான் அவர் ஆசை. அவர்கிட்ட ஒரு சீடன் இருந்தான். முனிவருக்கு வேணுங்கிற எடுபிடி வேலையெல்லாம் செஞ்சிட்டு மிச்ச நேரத்தில தானும் தவம் செய்வான்.

முனிவரோட உண்மையான தவத்தை பார்த்த தேவர்கள் அவரை சொர்க்கத்துக்கு கூப்பிட்டாங்க. ரொம்ப வருஷம் கூடவே இருந்ததால சீடனுக்கும் அனுமதி கிடைச்சது. சொர்க்கத்துக்கு போற வழில சீடனோட சந்தோஷம் அளவு கடந்ததா இருந்தது. பேசிக்கிட்டே வந்தான். “குருவே! சொர்க்கத்துல பணிவிடை செய்ய தேவதைகள் இருப்பாங்க. அவங்கள மாதிரி அழகு நாம பூமில பார்க்கவே முடியாது. இயற்கையாகவே அவங்க மேல ஒரு நறுமணம் இருக்கும். இனிமையான பாடலெல்லாம் பாடுவாங்க”. முனிவர் பதிலேதும் சொல்லவில்லை. உணர்ச்சி எதுவுமே இல்லாமல் வந்தார்.

சொர்க்கத்தில் முனிவருக்கு சரியான வரவேற்பு. தேவாதி தேவர்களெல்லாம் வந்து வாழ்த்தினாங்க. முனிவருக்கு ஒரு சிறப்பான இடம் கொடுக்க முடிவாயிற்று. அங்கே தங்கத்திலான மரங்கள் நிழல் கொடுத்தன. அதன் இலைகளெல்லாம் மரகதம். வைரங்கள் பூக்களாய் பூத்திருந்தன. மணக்க மணக்க அறுசுவை சாப்பாடு. வசதியான படுக்கை. கை கால் அமுக்கி விட முற்றும் துறந்தவளாய் ஒரு அழகான தேவதை.

முனிவருக்கு கிடைத்த உபசாரங்களை பார்த்த சீடனுக்கு ஆனந்தக் கண்ணீர். “வாழ்நாள் முழுவதும் நீங்க செஞ்ச தவத்துக்கு கெடச்ச வரத்த பார்த்தீங்களா.”

இதைக் கேட்ட அவருக்கு ஒரே கோபம். சீடனை பார்த்து “இவ்வளவு வருஷம் என் கூட இருந்து உனக்கு எதுவுமே புரியலை. உனக்கு என்னைப் பத்தியும் தெரியலை. இங்கே நடப்பதும் புரியலை.”

இன்னும் சொன்னார் “ஒண்ணு புரிஞ்சுக்கோ. இதெல்லாம் எனக்கு கெடைக்கிற பரிசு இல்லை. அந்த தேவதைக்கு கெடைக்கும் தண்டனை.”


தமிழனின் பெருமை சொல்லும் சினிமாக் கதை

அன்றைய விடியற் பொழுது அந்த கிராமத்துக்கு அவ்வளவு சிறப்பானதாய் இல்லை. காலையில் அந்த ஊர் மாரியம்மன் கோவிலுக்குப் போன பூசாரியால் பூட்டை திறக்க முடியவில்லை. அது திருவிழா நடந்து கொண்டிருந்த சமயங்கிறதுனால என்னவோ ஏதோன்னு கூட்டம் கூட ஆரம்பிச்சிருச்சு. ‘பூசாரிக்கு கைல வலு இல்லை போல’ன்னு கேலி பண்ணி ஆளாளுக்கு வந்து திறக்க முயற்சி பண்ணினாங்க. எப்படி எப்படியோ சாவியை திருகி பார்த்தாங்க, எதுக்கும் பூட்டு அசைஞ்சு கொடுக்கலை.

ரொம்ப நேர முயற்சி பண்ணினதுக்கு அப்புறம் பூட்டு ரிப்பேர் செய்யுற காதர் பாயை கூப்பிட முடிவாச்சு. முப்பது வருஷத்துக்கு மேலாக அதே தொழிலாக உள்ள பாய் வந்தவுடன் இதோ பூட்டு திறந்தாச்சுன்னு தான் எல்லாரும் நெனச்சாங்க. கால் மணி நேரம் அரை மணியாச்சு, ஒரு மணி நேரம் ஆச்சு, ஒண்ணும் முடியல. பாய் “பூட்டுல ஒண்ணும் பழுதில்ல. சாவியும் சரியாதான் பிடிக்குது. என்னன்னே புரியலை” ன்னார். கூட்டத்தில கொஞ்சம் பரபரப்பும் நிறைய கிசுகிசுப்பும் பரவ ஆரம்பிச்சுது. ஏதோ சாமி குத்தம்ன்னு ஒரு பரவலான அபிப்பிராயம் உருவாயிற்று.

“பூட்ட ஒடைக்கிறத தவிர வேற வழியில்ல” பாய் சலிப்பாய் சொன்னார்.

“நீங்க ஒடைக்க வேணாம் பாய். ஒரு முஸ்லிம் இந்து கோயில ஒடச்சான்னு சொல்வாங்க” பெரிசு ஒண்ணு தன் கடமையை நினைவு படுத்திக் கொண்டது.

பிறகு லேத் வேலை செய்யும் மாரியப்பனை கூப்பிட்டு கோவில் பூட்டை உடைக்கச் சொன்னார்கள். வெட்டிரும்பும் சுத்தியலுமாய் வந்த மாரியப்பன் கோவில் வாசல் பக்கம் வந்ததும் கொஞ்சம் தயங்கினான்.

“ஏலேய் ஒண்ணும் தப்பில்லேல! திருலா நேரம் இப்படி கோவில பூட்டி வைக்கக் கூடாது. சாமி காரியம்னு நெனச்சு ஒட” இது இன்னொரு பெருசு. அவருக்கென்ன?

பயபக்தியுடன் மாரியம்மனை கும்பிட்டு விட்டு வெட்டிரும்பை பூட்டின் மேல் வைத்து சுத்தியலால் தட்ட ஆரம்பித்தான். நங் நங் ன்னு சத்தம் வந்துச்சே ஒழிய பூட்டு அசைஞ்சு கொடுக்கலை. கூட்டத்தில் இருந்த வயசுப் பொண்ணுங்க பக்கம் இருந்து வந்த கேலிச் சிரிப்பு காதில் விழவும் ரோஷத்தில் கொஞ்சம் வேகத்தை கூட்டினான். முழு பலத்தையும் பிரயோகித்ததில் அந்த வெட்டிரும்பு சில்லு சில்லாய் உடைந்து தெறித்தது. மாரியப்பன் உசிரு கொஞ்ச நேரம் நின்னு போச்சு. இப்போ அந்த பூட்டை பார்க்கவே எல்லோருக்கும் பயமாய் இருந்தது.

கடவுள் நம்பிக்கை இல்லாத பெரியண்ணா கூட ‘ஆத்தா உன்ன ஏதாது பேசிருந்தேன்னா மன்னிச்சிருத்தா’ன்னு மனசுக்குள்ள வேண்ட ஆரம்பிச்சுட்டார். அந்த ஊர் ஹிஸ்ட்ரி வாத்தியார் மட்டும் பயமில்லாமல் ஒரு ஆர்வத்தோட கோவில் வாசலுக்கு வந்து யோசனையோட பார்த்தார். உடைந்த இரும்பு துண்டுகள் கால்களை குத்துவதாய் இருந்தது. மாரியப்பன் ஒரு ஓரமாக அரை நினைவில் தன் மனைவியின் மடியில் படுத்திருந்தான். வாத்தியார் பூட்டை திறக்கவெல்லாம் முயற்சி பண்ணலை. அந்த பூட்டை ஆராய்வதில் தான் ஆர்வமாயிருந்தார். கையிலிருக்கும் டார்ச்சை உபயோகித்து நுணுக்கமாய் பார்த்தார். அந்த பூட்டப்படும் பகுதியை உற்றுப் பார்த்தவருக்கு வேர்க்க ஆரம்பித்தது. நாக்கு, தொண்டையெல்லாம் உலர்ந்தது.

அவசரமாய் சட்டைப்பையில் இருந்த லென்ஸை எடுத்து அதன் வழியாக பார்த்தவர் “அணுகுண்டு வச்சாக் கூட இந்த பூட்ட தெறக்க முடியது”ன்னு சொல்லிட்டு அப்படியே மயங்கி விழுந்திட்டார். அவரை மடியில் தாங்க அவருக்கு சொந்தமாய் மனைவி கிடையாது.

கண் விழிச்சு பார்த்த ஹிஸ்ட்ரி வாத்தியார் அந்த ஊர் மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தார். அந்த சிறிய ஊரில் பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சியாளர்களும் கூடியிருந்தார்கள். வாத்தியார் கண் விழிப்பது தெரிந்ததும் அவரை சுற்றிக் குழுமினார்கள்.

“ஸார் என்ன நடந்தது?”

“மயக்கமடைகிற அளவுக்கு நீங்க என்ன பாத்தீங்க?”

“ஸார் நீங்க என்ன சொன்னாலும் நாங்க நம்ப மாட்டோம். அதான் பேட்டி எடுக்க வந்திருக்கோம். மக்களுக்கு உண்மைய கொண்டு போகணும் அதான் எங்களுக்கு முக்கியம்.”

“ஒலகம் அழியப் போதுன்றாங்களே, அதோட அறிகுறியா இது?”

ஆளாளுக்கு கேள்வி கேட்க தயாரான நேரம் மின்சாரம் தடைபட்டு இருளானது. அந்த இருட்டில் வாத்தியாரின் குரல் கேட்டது.

“மின்சாரத்தை கண்டு பிடித்த தமிழன் இன்று இருளில் இருக்கிறான்”. கொஞ்சம் நிறுத்தி விட்டு சொன்னார்.

“நான் சொல்வது உங்களுக்கு நம்ப முடியாததாய் இருக்கலாம். தமிழன் ஐந்தாம் நூற்றாண்டிலேயே மின்சாரத்தை கண்டுபிடித்து பயன்படுத்தி விட்டான். அதுவும் அணுவிலிருந்து. அதற்கான ஆதாரமெல்லாம் என்னிடம் உள்ளது”.

வந்த பத்திரிக்கையாளரில் ஒருவர் மட்டும் தெளிவாய் இருந்தார். “அதெல்லாம் இருக்கட்டுங்க. இப்போ கோவில் கதவ ஏன் தெறக்க முடியல. அத சொல்லுங்க”.

“நான் சொன்ன மின்சார விஷயத்திற்கும் அதுக்கும் சம்மந்தம் இருக்கு. தமிழனிடம் ஒரு அபூர்வ கலை இருந்தது. அது அழிந்து ஆயிரத்து ஐநூறு வருஷம் ஆயிருச்சு. அந்தக் கலையில் வல்லவனால் தனது தலை முடி ஒன்றினால் எப்படிப்பட்ட பூட்டையும் கட்டிப் போட முடியும். இந்த கோயில் பூட்டும் அப்படித்தான் ஒரு தலை முடியால் கட்டப்பட்டிருக்கு”. இதை கேட்கவும் ஊரே திகைச்சுப் போய் நின்னது.

“நான் தான் கட்டினேன்” அந்த இருட்டில் ஒரு தீக்குசியை உரசி அந்த வெளிச்சத்தில் தன் முகம் காட்டியபடி வந்தான் அந்த தமிழு என்று அழைக்கப்படும் தமிழன்பன்.

“ஏன் தமிழு இப்படி செஞ்சே?” பாசத்தோடு ஒரு பாட்டி கேட்டது.

“நேத்து கோயில் பூசாரி சாமி கும்பிடப் போன என் தங்கச்சிக்கு குங்குமப் ப்ரசாதம் குடுக்கல. அதான் மொத்தமா கோயிலுக்கு ஒரு பூட்ட போட்டேன்.” சொல்லி விட்டு அவனும் அவன் தங்கையும் சேர்ந்து ஒரு குத்தாட்டம் போட்டார்கள்.

(முதல் பாகம் இத்தோடு முடிவுற்றது)