சிரமன் தந்த சிரமங்கள்

”தூங்கி எந்திரிச்சாலே அவங்களுக்கு ஏதோ ஆயிடுது!” என்றாள் சிரமி. சிரமனின் மனைவி.

“ஆமாமா! சின்ன வயசுலயே அவன் தூக்கத்துல புலம்புவான்” என்றேன்.

“அய்யோ! இது வேற. நடந்தத சொல்றேன். அன்னைக்கு ஒருநாள் ராத்திரி நல்ல சாப்பாடு..”

“ஹோட்டல்ல தானே?” இடைமறித்தேன்.

முறைக்க நினைத்தவள் தொடர்ந்தாள் “ரொம்ப உற்சாகம் ஆயிட்டாங்க. பெரிய எழுத்தாளர் மாதிரில்லாம் பேச ஆரம்பிச்சிட்டாங்க”

“எழுத்தாளர் மாதிரியா? அவனா? என்ன சொன்னான்?”

“இருங்க யோசிக்கிறேன்… ஆங்… இப்படிச் சொன்னாரு. என்னைப் பலவீனப்படுத்தும் காரணிகள் நல்ல கவிதைகளும், எதிர் பாலினத்தவரின் வட்ட வடிவங்களும்” சொல்லும் போது லேசான வெட்கத்தைப் பார்க்க முடிந்தது. “நான் கூட அசந்துட்டேன், இந்த மனுஷன் இவ்வளவு ரொமான்ஸா பேசுவாரான்னு”.

என்னாலேயே அதை நம்ப முடியவில்லை “இப்படித்தான் வயசான காலத்துல சில பேருக்கு புத்தி கெடும். ஆனா உனக்கு இது நல்ல விஷயம் ஆச்சே”ன்னு கேட்டேன்.

“மறுநாள் தூங்கி எந்திரிச்சதுல இருந்து ஒரே பிரச்சனை தான். அது எப்படி நான் பொம்பளையக் கேவலப்படுத்திப் பேசலாமுன்னு ஒரே புலம்பல். வீட்டுல இருக்குற சாமான்லாம் எடுத்து உடைக்க ஆரம்பிச்சிட்டாங்க. கொஞ்ச நேரம் கழிச்சுத்தான் புரிஞ்சது, வீட்டுல எதெல்லாம் வட்டமா இருக்கோ அதப்பூராவும் உடைக்க ஆரம்பிச்சிட்டாங்க.”

எனக்கு சில மனோதத்துவக் கணக்குகள் தோன்றி, உடனே அதையெல்லாம் அழித்து விட்டேன். அவன் தந்திருக்கும் துன்பங்கள் போதாதா? “சரிம்மா நான் வேணா பேசிப்பாக்குறேன். நான் சொன்னாக் கேப்பான்” என்றேன்.

சிரமி பெருமூச்சு விட்டுச் சொன்னாள் “நான் இவ்வளவும் சொன்னதே நீங்க அவங்கள கொஞ்ச நாளைக்கு பாக்காதீங்கன்னு சொல்லத்தான்”.

”எனக்கென்ன ப்ரச்சனை இதுல? புரியலையே!”

“நேத்து ராத்திரியும் நல்ல சந்தோஷமா இருந்தாங்க. நிறைய பேச ஆரம்பிச்சிட்டாங்க. பூராவும் உங்களப் பத்தியும், சின்ன வயசுல இருந்து உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற நட்ப பத்தியும்.”

“அது நல்ல விஷயம் தானே?”

“ஒரு கட்டத்துல ஓவராப் போயிட்டாங்க. உங்கள சாண்டில்யன் விஜயமாதேவிய வர்ணிக்கிற மாதிரி வர்ணிக்க ஆரம்பிச்சிட்டாங்க. என்னால அத விவரமா சொல்ல முடில. வெட்கமா இருக்கு. இன்னைக்கு காலைல இருந்து தான் நேத்து பேசுனத நெனச்சு புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க. உங்கள நேர்ல பாத்தா என்ன ஆகுமுன்னு தெரில!”


மிஸ். மரணம்

“டக். டக்!”

“யாரது?”

“மிஸ். மரணம் வந்திருக்கிறேன்”

“இன்னொரு நாள் வாம்மா! பொறு மிஸ்ஸுன்னா சொன்ன?”

“ஆமாம். என்னை யாரும் அவ்வளவு எளிதில் புணர்ந்து விட முடியாது”

“அது சரிதான். என்ன விஷயமா வந்திருக்க நீ?”

“உனது வாழ்நாள் எண்ணப்பட்டு விட்டது”

“ஏதும் விசாரணையா இப்ப? அல்லது தீர்ப்பா?”

“இல்லை. நீ உருமாற்றம் ஆகப்போகிறாய்”

“அப்படின்னா? கொஞ்சம் விபரமா சொல்லேன்”

“நடக்கும் போது நீயே தெரிந்து கொள்வாய்”

“அது என்ன எழவாவும் இருந்துட்டுப் போட்டும். இன்னைக்கு வேணாம். இன்னொரு நாள் வச்சுக்குவோம்”

“விளையாடுகிறாயா நீ? நீட்டிப்பத்ற்கு வாழ்நாள் ஒன்றும் உன்னுடைய ….”

“சரி. சரி. நிறுத்தும்மா. நான் ஏற்கனவே கோவத்துல இருக்கேன். கோவமா இருக்கும் போது நான் சாகக்கூடாது”

“நீ சாவதற்கு என்னுடைய கோபம் போதும்”

“நான் சொல்ற்து ஒனக்குப் புரியல. கோவமா இருக்கும் போது செத்தா, என்னால சாவ அனுபவிக்க முடியாது”

“நீ சொல்வது எனக்குப் புரியவில்லை”

“இன்னைக்கு நெறையக் கோவம் என் கண்ண மறச்சுக்கிட்டு இருக்குது. இப்ப செத்தா சாவும் போது என்ன நடக்குதுன்னு என்னால கவனிக்க முடியாது.”

“அதைக் கவனித்து என்ன ஆகப் போகிறது உனக்கு?”

“சாவைக் கட்டிப்பிடிச்சு வரவேற்கனும்னு நெனைக்கேன். சாவ அணு அணுவா ரசிக்கணும். அப்போ எனக்கு வேற எந்த சிந்தனையும் இருக்கக் கூடாது”

“இப்போது எனக்கு உன்னை உடனே கட்டிப்பிடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது மானிடா!”


சொரிமுத்து ஐயனாரின் மகிமை (உண்மைச் சம்பவம்)

“பாபநாசத்துக்குப் போகனும்” என்று உத்தமவில்லி சொன்ன போது கோபமாக வந்தது. அந்தப் படத்தைப் பார்த்து விட்டு அப்போது தான் வெளியே வந்திருந்தோம். “இல்ல! படம் பாத்துட்டு பாபநாசம் அருவிக்குப் போகணும் போல இருக்கு” என்றார். நல்லவேளையாக பாகுபலிக்கு கூட்டிப் போகவில்லை. அந்த வார ஞாயிற்றுக்கிழமையே பாபநாசத்துக்கு கிளம்பியாயிற்று.

செல்லும் வழியில் திட்டத்தில் சின்ன மாறுதல். மணிமுத்தாறு அருவி குழந்தைகள் குளிக்க வசதியாக இருக்கும் என்று. மணிமுத்தாறு அருவியில் குளித்து விட்டு பாபநாசம் மலையேறி காரையார் அணைக்குப் போகும் வழியில் உள்ள சொரிமுத்து ஐயனார் கோவிலுக்கு போன போது காரை பார்க் செய்ய இடம் கிடைக்கவில்லை. அவ்வளவு வேன்கள்! இவ்வளவு கூட்டத்தில் ஐயனாரை பெர்சனலாக பார்க்க முடியாதே எனக் கவலையாக இருந்தது. கோவிலுக்கு உள்ளே போய்ப் பார்த்த போது தான் தெரிந்தது, அவ்வளவு கூட்டமும் கோவிலுக்கு வெளியே சமையலில் பிஸி என்பது.

கோவிலில் கூட்டம் இல்லை, செல்ஃபோனில் சிக்னல் இல்லை. இதைவிட வேறென்ன நிம்மதி வேண்டும்? காட்டுக்குப் போனால் நாட்டில் உள்ள பிரச்சனை எல்லாம் மறந்துதான் போகிறது. நல்ல தரிசனம். பூரணை, புஷ்கலை ஆகியோருடன் இருந்ததால் ஐயனார் சாந்தமாகக் காணப்பட்டார்.

போதுமான நேர தரிசனத்துக்குப் பிறகு பிரகாரத்தைச் சுற்றி வந்தபோது அந்தப் பெண் என் கவனத்தை ஈர்த்தார். காரணம் color, texture and glossiness எல்லாமே சரியான அளவில் அமைந்திருந்தது, அவர் படையலுக்கு எடுத்து வைத்துக்கொண்டிருந்த சர்க்கரைப் பொங்கலில். பொங்கலைப் பொறுத்தவரை, ருசி பார்க்காமல், கண்ணால் பார்த்தே சொல்லி விடலாம் அதன் தரத்தை. அந்தப் பெண் எடுத்து வைத்த பொங்கலின் நிறமும் தளதளப்பும் என் ஐம்புலன்களையும் சோதித்தது.

ஐயனாரை நினைத்துப் பொறாமைப்பட்டவாரே பிரகாரத்தைச் சுற்றி வந்தேன். எதிலுமே மனம் செல்லவில்லை. நினைவு பூராவும் அந்தப் பொங்கல் தான். மனத்தைத் தேற்றிக்கொண்டு வந்து சிறிது நேரம் தியானம் செய்தேன். தியானத்தில் பொங்கலெல்லாம் கரைந்தது. கண் விழித்த போது உத்தமவில்லி ஒரு சிறிய வாழை இலையை என் கையில் வைத்தார். இலையில் நான் பார்த்து ரசித்த அதே பொங்கல்!

ஐயனார் அருள் சொரிவதைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று தான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.


கடவுள் ஸார்!

ஸார்! கடவுள் ஸார்! நாம் கூப்பிடுறது கேட்கலையா ஸார்?

“கேக்குது சேதனன் ஸார். சொல்லுங்க ஸார். என்ன வேணும்?”

“ஸார், ஒரு வரம் வேணும் ஸார்”

“தயங்காம கேளுங்க ஸார்”

“ஒரு ஞாயிறு சாயங்காலம் என்னோட இருக்கணும்”

“என்ன புரோகிராம் சேதனன் ஸார்?”

“நான் எழுதின சில கதைகள நீங்க வாசிக்கணும் கடவுள் ஸார்”

“வாசிச்சா?”

“ஒரு வடையும் டீயும் வாங்கித் தருவேன் ஸார்”

“நல்ல மசாலா டீயா இருக்கட்டும் சேதனன் ஸார்”

“ஆனா ஒரு கண்டிஷன் ஸார். படிக்கும் போது கொஞ்சமும் முகம் சுளிக்கக் கூடாது. சுளிச்சா வடைய பிடுங்கிருவேன்”

“ம்ம். அடுத்த புரோகிராம் என்ன ஸார்?”

“ஒரு சினிமாவுக்கு போறோம் கடவுள் ஸார்”

“என்ன படம் ஸார்?”

“பரதேசி ஸார்”

“ஓ! விகடன் கூட நிறைய மார்க் போட்டிருக்கு. போலாம் ஸார்”

“ஒரு சின்ன விண்ணப்பம் கடவுள் ஸார்”

“சொல்லுங்க ஸார்”

“படம் பார்த்துட்டு ஒரு விமர்சனம் எழுதித் தரணும் ஸார். அதுல யாருமே யோசிக்காத கோணமெல்லாம் இருக்கணும் ஸார்”

“ஓண்ணும் ப்ரச்சனை இல்ல ஸார், சத்யம் சினிமாஸ்ல என்னோட ஆத்துக்காரிக்கும் சேர்த்து டிக்கட் புக் பண்ணிருங்க. போக வர என் டி எல் டாக்ஸிக்கு சொல்லிருங்க”

“ஸார்…”

“ஏன் சேதனன் ஸார் தலைய சொறியுறீங்க?”

“கடவுள் ஸார்! இதுக்கெல்லம் நீங்க காசு கொடுப்பீங்களா? என்கிட்ட வடையும் டீயும் வாங்கத்தான் காசு இருக்கு. நீங்க தான் நெறைய காசு வச்சுருப்பீங்களே ஸார்”

“சேதனன் ஸார்! காசில்லாதவனுக்கு எதுக்கு ஸார் பரதேசியும் விமர்சனமும்? போய் பொழப்பப் பாருங்க ஸார்”

________________________________________________________________________________________________________________________

Note to self – நாளைலருந்து ஒழுங்கா பொழப்பப் பாக்கணும்.


சபாபதித் தாத்தா

சபாபதித் தாத்தா சாகக் கிடந்தார். அவரை சபாபதி தாத்தான்னும் எழுதலாம். எப்படி எழுதினாலும் அவர் சாகத்தானே போறார். வயசு எண்பதுக்கு மேலே ஆயிடிச்சு. தன்னோட வாழ்நாளில் தான் இது வரை ஏன் பிறந்தோம் என அவர் வருத்தப்பட்டதில்லை. அதனால் ஏன் சாகப் போகிறோங்கிற வருத்தமும் அவருக்கில்லை. அவருக்கே வருத்தம் இல்லாததால் வீட்டில் உள்ளவர்களின் துணை வருத்தங்கள் தேவைப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் வீடே ஒரு வித திருவிழாக்கோலம் கொண்டிருந்தது. சொந்தமெல்லாம் ஒன்று கூடியதால் வந்தக் கோலம். தாத்தாவுக்கு பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் நிறைய.

அவரோட பேத்திகளில் ஒருவளான சியாமளாவும் அவளோட புருஷன் சேதனனும் வந்த போது நிறைந்த வரவேற்பு. “கூட்டம் ரொம்ப அதிகமா தெரியுதே! பேசாம ஒரு மண்டபம் பிடிச்சிருவோமா சியா?”ன்னு கிசு கிசுப்பா கேட்ட சேதனன் காலிலே மிதி வாங்கினான். “உன் லூசுத்தனத்தெல்லாம் ஃபேஸ்புக்கோட வச்சுக்கோ”.

தாத்தா யார் கிட்டவும் ரொம்ப ஒட்ட மாட்டார், ஆனா சேதனனை மட்டும் கூப்பிட்டு வச்சு ரொம்ப பேசுவார். வீட்டில் எல்லாருமே ஆச்சரியப்படுற விஷயம் இது. சேதனனோட முகராசியே அப்படித்தான். வேலைக்கு சேர்ந்து ஒரு வாரத்திலேயே இவன் வேலைக்கு லாயக்கு இல்லைன்னு அவன் அலுவலகத்துக்கு தெரிஞ்சு போச்சு, இருந்தும் நல்ல சம்பளமும் ஒரு இண்டர்நெட் கனெக்‌ஷனும் கொடுத்து நல்லபடியா வச்சிருக்கிறாங்க. சியாமளா அறிமுகம் ஆனதும் அலுவலகத்தில் தான். ப்ளாக்கில் அபத்தமா எழுதுவதே தன்னோட வேலையா இருந்தவன் இப்படி ஒண்ணு எழுதினான்.

வன்புணர்வு என ஒரு வழக்கு அவன் மேல் –
இல்லை, மென்புணர்வு அது என மறுத்தான் அவன்.
இதென்ன நுண்புணர்வு என திகைத்த மக்கள்
கண்புணர்வு கொண்டனர்.

இதைப் படித்த சியாமளாவுக்கு வந்த சந்தேகம்தான் அவர்களுக்குள்ளே அறிமுகம் ஏற்படுத்தியது.

“புணர்வுன்னா என்னதுங்க?”

“?”

“இல்ல. நான் தமிழ் மீடியத்துலயே படிச்சு வந்துட்டேன். அதான் புரியலை.”

“அன்புணர்வு தெரியுமில்ல உங்களுக்கு? திருவள்ளுவர் கூட நிறைய அது பத்தி நெறைய எழுதிருக்கார். அதத்தான் இப்போ சுருக்கமாச் சொல்றோம்.” எப்படியோ சமாளிச்சிட்டான்.

இப்படி ஒரு அப்பாவியைத் தான் கல்யாணம் பண்ணனும்னு அன்னைக்கே முடிவும் பண்ணிட்டான்.

அவனோட சுபாவம் சியாமளா வீட்டில எல்லாருக்குமே ரொம்பப் பிடிச்சுப் போச்சு. தாத்தா மட்டும் மற்றவர்களிடம் போலவே அவனிடமும் பட்டும்படாமல் இருந்தார். சேதனன் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. அவன் பாட்டுக்கு தாத்தா ரூமுக்கு போய் உட்கார்ந்து டீவி பார்ப்பான். அப்படி ஒரு முறை பார்த்த மனோகரா படம்தான் தாத்தாவையும் அவனையும் நெருக்கமா ஆக்கிச்சு. டி.ஆர். ராஜகுமாரியின் வஞ்சனையைப் பார்த்த சேதனன் தன்னை மறந்து கமெண்ட் அடித்தான்.

“இந்த ஒரு பார்வையே போதும். என்னைய இப்படிப் பாத்து தாத்தாவ கொல்லுன்னு சொன்னா, கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டேன்”.

அன்றையிலிருந்து தாத்தாவும் சேதனனும் ரொம்ப அந்நியோன்யம். அவன் வந்தாலே ரெண்டு பேருக்கும் சேர்த்து தின்பண்டங்களும் காப்பியும் தாத்தா ரூமுக்குப் போயிரும். சியாமளாவுக்கு தாத்தா தன் புருஷன் கூட மட்டும் தான் பேசுறார்ங்கிறதுல ரொம்பவே பெருமை.

_____________________________________________________

தாத்தா சாகப்போறது சேதனனுக்கு ரொம்பவே துக்கமான விஷயம் தான், ஆனால் அவன் இது போன்ற உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்வதில்லை. தன் உணர்வு இல்லாமல் ரொம்பவே தளர்ந்து கிடந்தார் தாத்தா. மருத்துவரின் கணக்குப்படி நேத்தே போயிருக்க வேண்டியது, இருக்கவா போகவான்னு இன்னும் ஊசலாடிக்கிட்டுருந்தார். வீட்டில உள்ள பெரியங்க சில பேர் வீட்டுச்சுவரை கொஞ்சம் சுரண்டி மண் எடுத்து பால்ல கரைச்சு தாத்தா வாயில ஊத்தினாங்க. சேதனனுக்குப் புரியலை, என்ன விஷயம்னு கேட்டான்.

“ஏதாவது ஒரு ஆசை பிடிச்சு உயிரை நிப்பாட்டியிருக்கும். இந்த வீடு அவர் ஆசையா கட்டினது இல்லையா, அந்த மண்ண கொஞ்சம் குடுத்தா நிம்மதியா போயிருவார்னு ஒரு நம்பிக்கை”.

கொஞ்ச நேரம் கழிச்சு தாத்தாவுக்கு பிடிச்ச திண்பண்டம் எல்லாத்தையும் ஒரு கலவையா பால்ல கரைச்சு அதையும் தாத்தா வாயில ஊத்தினாங்க. இதையெல்லம் பார்த்துகிட்டேயிருந்த சேதனன் வெளியே போயிட்டு தானும் ஒரு கிண்ணத்தில பாலோட வந்து தாத்தா வாயில ஊத்தினான். ஊத்தும்போதே தாத்தா முகம் கொஞ்சம் அசைவு கொடுத்து அப்படியே அடங்கிருச்சு. ஏதோ திருப்தி தெரிஞ்சது அவர் முகத்தில.

ஊருக்குத் திரும்பினதும் சியாமளா கேட்டாள் “அதெப்படி நீங்க பால் கொடுத்ததும் தாத்தா செத்துப் போனார்?”. “நான் அவருக்குப் பிடிச்ச பேரன்ல! அதனால இருக்கும்” ன்னான். தன் சட்டைப் பையில் இருந்த ஒரு பழைய வாரப்பத்திரிகையின் பக்கத்தை எடுத்துப் பார்த்தான். இன்னும் கொஞ்சம் ஈரம் மிச்சம் இருந்தது.


ஊர்வம்பில் தீம்பில்லை

“அந்த மொத வீட்டு கணேசன் பஸ்லேருந்து கீழ விழுந்துட்டானாம். ஆஸ்பத்திரில சீரியஸா இருக்கான்”

“அடப்பாவமே! தான் உண்டு பாட்டில் உண்டுன்னு இருப்பானே. எங்க  வச்சு விழுந்தான்?”

“மெட்ராஸ்லருந்து மதுர வர்ற வழில”

“அவ்ளோ தூரம் படியிலயா நின்னுக்கிட்டு வந்தான்?”

“பஸ்ஸோட டாப்புல படுத்தவன் அசந்து தூங்கிட்டான் போல”

“டாப்புலயா? அவன் ஏங்க அங்க போய் படுத்தான்?”

“கைல காசில்ல போல. யாருக்கும் தெரியாம மேல ஏறி படுத்துகிட்டான்”

“அடப்பாவி! இப்பிடி விழுந்தான்னா பொழைக்க முடியாத? எப்டி இருக்கான் இப்போ?”

“பொழச்சுக்கிட்டானாம். அவன் வீட்ல யாருக்கும் தெரியாது. நீ எதுவும் சொல்லிராத”

“யாரு? அந்த அழகி கிட்டயா? நான் ஏங்க அவகிட்ட பேசப்போறேன்!”

“அவ அழகியா? இந்த விஷயம் இவ்வளவு நாள் தெரியாம போச்சே”

“அப்பிடித்தான அலட்டிக்கிடுறா அவ”

“சரி இருக்கு அலட்றா. இங்க ஏன் தீயுற வாசம் வருது? ஆனா இதில ஒரு காமெடி என்னன்னா…  ஸாரிப்பா அது காமெடி இல்ல. விழுந்தவன் வலியே தெரிலன்றானாம்.”

“ஏன்? அவ்ளோ மப்பா?”

“அவன் சொல்றானாம், என் பொண்டாட்டி பண்றதெல்லாம் நெனச்சுப் பாத்தா இதெல்லாம் ஒரு வலியே இல்ல அப்படின்னு சொன்னானாம்”

“பாவங்க அவன். கல்யாணத்துக்கு முன்னால நல்லாருந்தான். ஒரு கெட்ட பழக்கம் கெடையாது. இந்த அழகி வந்தா, எல்லாம் போச்சு”

கொஞ்ச நேரம் அங்கே அப்பாடாங்கிற மாதிரி இருந்தது. ”இவ கூடத்தான் சண்டை போடுவா, ஆனா இப்படியா?  யோசிச்சுப் பார்த்தா இவள் சண்டையிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யுது.”

“இவரெல்லாம் என்னைக்காச்சும் குடிச்சிருக்கிறாரா? இல்ல வேற எதுவும் கெட்ட பழக்கம்தான் உண்டா? என்ன கொஞ்சம் தொண தொணம்பாரு”

ஒரு ஊர்வம்பின் முடிவு இது.

காதில் வந்து விழுந்த இன்னொரு ஊர்வம்பு  இது.

“ஏடி! உங்க அக்கா திருச்செந்தூர் கடல பாத்திட்டு இவ்ளோ தண்ணியா அப்படின்னுருக்கா. அடுத்த நாள் கடல் பத்தடி உள்ள போயிருச்சு. உன் பவிசையெல்லாம் அவகிட்ட காம்பிச்சிராத”


அனுபவத்துல சொல்றேன்

என்னோட அனுபவத்துல சொல்றேன், கோபத்தை அடக்கி வைக்காதீங்க. இப்படி சொல்றதுனால கோபம் வந்தா எதிர்ல இருக்கிறவங்களை கடிச்சு குதறணும்னு அர்த்தம் இல்லை. ரெண்டு பேர் பேசிக்கிட்டு இருக்கோம், திடீர்னு வார்த்தைகள் உரசிக்கிடுது, அதுலே ஒரு வார்த்தை தன்மானத்தை பதம் பார்க்கும் போது சுருக்குனு கோபம் வரும். சம்பந்தப்பட்டவங்க நமக்கு அடங்கினவங்களா இருக்கும் போது பிரச்சினை இல்லை. மேலே விழுந்து பிறாண்டி வைக்கலாம், பிறகு சமாதானப்படுத்திக்கிடலாம். இதே கோபத்தை உண்டாக்குறது நமக்கு அன்னியரா இருந்தால் பேச்சை நிறுத்திட்டு வந்திருவோம். சம்பந்தப்பட்டவரை நாம் சார்ந்திருக்கும் நிலை இருக்கும் போதுதான் கஷ்டம். கோபிக்க முடியாதது மட்டுமில்லை, அபத்தமா சிரிச்சு சமாளிக்க வேண்டி வரும். அதனால ஒண்ணும் தப்பில்லை.

அனுபவத்துல சொல்றேன், இந்த மாதிரி சூழ்நிலைல கோபப்பட்டுக் காரியத்தை கெடுத்துகிடாதீங்க. முதலாளி, மேனேஜர்,  அதிகாரி, இவங்க கிட்ட ஒரு தடவை முறைச்சுகிட்டோம்னா அப்புறம் நம்மை ஜென்ம விரோதியாத்தான் பார்ப்பாங்க. அந்த நேரம் சூடு, சொரணை எல்லாத்தையும் கொஞ்ச நேரம் மறந்து, ‘அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ ங்கிற பாவனையில் நின்று சமாளிச்சுகிடலாம். அவங்களுக்குத் தெரியும், இவனுக்கு கோபம் இருக்கு, மரியாதைக்காக பேசாம போறான்னு. இந்த குற்ற உணர்ச்சி நாளை நமக்கு சாதகமாகலாம்.

அனுபவத்துல சொல்றேன், இந்த மாதிரி அடக்கி வைச்ச கோபம் உள்ளே குமுறிக்கிட்டே இருக்கும். அதை வீட்டில உள்ளவங்க கிட்ட போய் கொட்டிடாதீங்க. அவங்க எல்லாம் நமக்கு அடங்கின மாதிரி பாவனை பண்றவங்க. போய் அவங்களை சீண்டுனா, அந்த பாவனையெல்லாம் கழட்டி வச்சிருவாங்க.

அனுபவத்துல சொல்றேன், இந்த கோபத்தை எல்லாம் உள்ளே ரொம்ப சேமிச்சு வைக்கக்கூடாது. அது நம்மை மெல்ல கொல்கிற விஷமாம். அதை செலவழிச்சு தீர்க்க நிறைய வழி இருக்கு. ஒரு நோட்டுல சம்பந்தப்பட்டவங்க பேரை எழுதி, அந்த பேரை பேனாவாலேயே ஆசை தீர குத்தலாம். கொஞ்சம் பெரிய கோபம்னா ஒரு தலகாணில அவங்க பேர் எழுதி தலகாணி பிஞ்சு போற அளவுக்கு ஏதாவது செய்யலாம். கொஞ்சம் வரையத் தெரிஞ்சிருந்தா சுவத்தில கோபப்படுத்தினவங்களோட படத்தை வரையலாம், அப்புறம் உள்ளதெல்லாம் உங்க இஷ்டம்தான்.

இதுக்காகவே வீட்டில்  தனி அறை இருந்தால் நல்லதுன்னு ஓஷோ சொல்றார். நான் அனுபவத்துல சொல்றேன்,  இதுக்கான  தனி அறை ஒன்று அவசியம். இந்த முறையில ஆத்திரத்தை உள்ளேயே வைத்து புழுங்க வேண்டியதில்லை, நேரடியாக வெளிப்படுத்தி சங்கடப்படவும் வேண்டியதில்லை. இது நினைத்துப் பார்க்க கொஞ்சம் முட்டாள்தனமாக தோன்றும்.  நாம் முட்டாள்தனமாக நடந்துகொள்வது ஒன்றும் புதிதான செயல் இல்லையே?

அனுபவத்துல சொல்றேன், நான் இப்படி யாரையும் அடிச்சதில்லை. அந்த அளவு என்னை யாரும் கோபப்படுத்தியதில்லை. ஆனாலும் அனுபவத்துல சொல்றேன், என் மனைவிக்கு என் மேல் நிரந்தர கோபம் கிடையாது. அவர் ஓஷோவின் யோசனையை பின்பற்றுகிறார்.


ஒரு பல்லக்கு தூக்குபவனின் கடிதம்

மாதம் தோறும் வெளி வரும் ஒரு பக்தி மாத இதழுக்கு வந்த ஒரு வாசகர் கடிதம் இது.

ஆசிரியர் ஐயா அவர்களுக்கு,

கோடி நமஸ்காரங்கள். இந்த பரந்த பிரபஞ்சத்தில் உள்ள இறைவனின் படைப்புகளில் அடியேன் ஒரு சிறியவன். மாதந்தோறும் வரும் உங்கள் பத்திரிகையை நான் வாரந்தோறும் வாங்கி விடுவேன். தீவிர வாசகன் நான். வாசகன் என்றால் பல்லக்கு தூக்குபவன் என்று அர்த்தம் என்பது தங்களுக்கு தெரியும் தானே. (பாடை தூக்குபவன் என்றும் அர்த்தம் உண்டு. நாம் அதை இங்கே எடுத்துக்கொள்ள வேண்டாம்). முன்பெல்லாம் நான் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். ஒரு முறை வெளியூர் பயணத்திற்காக என் மனைவி உங்கள் பத்திரிகை ஒன்றை வழியில் படிக்க எடுத்து வைத்திருந்தார். நான் கோபத்தில் கடுமையாக திட்டி அதை கொண்டு வரக்கூடாது என்று சொல்லி விட்டேன். பேருந்து நிலையத்தின் கடை ஒன்றில் ஜூனியர் விகடன் கேட்டேன். வாங்கும் நேரம் பேருந்து கிளம்பி விட்டதால் புத்தகத்தை சரியாக பார்க்கவில்லை. பிறகு தான் பார்த்தேன், வீட்டில் நான் வேண்டாமென்று சொன்ன அதே புத்தகம் அது. அட்டையில் ஐயப்பன் படம், என்னைப் பார்த்து சிரித்தவாறு. வேகமாக திரும்பி அந்த கடைக்காரரை பார்த்தேன். அவர் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்தார், என்னைப் பார்த்து ஒரு தெய்வீக சிரிப்பு சிரித்தார். இப்போது நினைத்தாலும் புல்லரிக்க வைக்கும் சம்பவம் அது.

அன்றிலிருந்து உங்கள் பத்திரிகையை தவறாமல் வாங்கி விடுகிறேன். கையில் காசில்லா விட்டாலும் வித்தால் போதும் என்று கடைக்காரர் கொடுத்து விடுகிறார். பக்தி வந்தவுடன் எந்த கோவிலுக்கு போவது என்று தெரியாமல் இருந்தேன். அதற்கும் உங்கள் பத்திரிகை தான் வழி காட்டிற்று. கண்ணை மூடிக்கொண்டு ஒரு பக்கத்தை திறப்பேன், அந்த பக்கத்தில் எந்த கோவிலைப் பற்றி இருக்கிறதோ அந்த கோவிலுக்கு கிளம்பி விடுவேன்.

ஒரு சொம்பு நிறைய பாயாசம் கொடுத்து, அதில் எந்த துளியில் அதிக இனிப்பு என்று கேட்டால் எப்படி சொல்ல முடியாதோ அது போல உங்கள் பத்திரிகையில் எந்த பகுதி சிறப்பு என்பதும் சொல்ல முடியாது. ஆனாலும் அதில் வரும் ராசி பலன் பகுதியை முந்திரி பருப்பென்பேன். அது என் வாழ்க்கைக்கு ஒரு சிறந்த வழி காட்டியாக உள்ளது. ஒரு மாதம் எனக்கு கெடுதலான பலன்களாக போட்டிருந்தது. பரிகாரமாக திருநங்கைகளுக்கு உதவச் சொல்லியிருந்தது ஆறுதல் அளித்தது. ஆனாலும் அந்த நேரம் திருநங்கை யாரும் தென்படவில்லை. அதற்காக பரிகாரம் செய்யாமல் இருக்க முடியுமா? இதெற்கெல்லாம் செலவு பார்த்தால் முடியுமா? இப்போது மருத்துவம் எவ்வளவு முன்னேறியிருக்கு?

என்னுடைய நிறைய ஆன்மீக சந்தேகங்களுக்கு உங்களுடைய பதில்கள் எனக்குள் அறிவு வெளிச்சத்தை பாய்ச்சி உள்ளது. அந்த சந்தேகங்களில் சில இவை.

  • பாம்புக்கு மோதிரம் போட்டால் நாக தோஷம் தீரும் என்று கேள்விப்பட்டேன். அது எந்த கிழமையில் செய்யலாம்?
  • கனவில் கழுதை ஒன்று என்னைப் பார்த்து சிரித்தது. அதன் பலன் யாது?
  • அவிட்ட நட்சத்திரக்காரர் ஆயில்ய நட்சத்திரக்காரரை விவாகரத்து செய்யலாமா?
  • வாய்க்கசப்பு ஏற்படுவது மனக்கசப்பு  நீங்கிடும் அறிகுறி என்கிறார்களே? உண்மையா?
  • 108 விளக்கு ஏற்றினால் விவாதத் தடை நீங்கும் என்று சொல்லியிருந்தீர்கள். ட்விட்டரில் உள்ளவர்கள் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?

எனக்கு தொழில் நிலம் வாங்கி விற்பது.  முதலில் சிறிய வருமானமாக இருந்த நேரம், வழக்கம் போல உங்கள் பத்திரிகை வாங்க கடைக்குப் போனேன். கடைகாரர் தவறுதலாக முந்திய மாத புத்தகத்தை கொடுத்து விட்டார். நானும் வீட்டுக்கு வந்து தான் கவனித்தேன். அப்போது தோன்றிய பிசினஸ் ட்ரிக்தான் தான் இது. ஏற்கனவே விற்ற நிலத்தை இன்னொருவருக்கு விற்றேன். மாட்டிக்கொள்ள இருந்தேன். அந்த நேரம் முதலில் வாங்கியவர் இறந்து விட்டார். அவர் சார்பில் யாரும் இதை தெரிந்திருக்கவில்லை. நான் தப்பித்தேன், கடவுள் நம்பிக்கை கூடிற்று. இப்போது கோடிக்கணக்கில் குவித்து விட்டேன். எல்லாவற்றிற்கும் காரணம் உங்கள் பத்திரிகைதான். பத்திரிகை நின்று விடக்கூடாது என்பதற்காக மாதம் நூறு பிரதி வாங்கி வைக்கிறேன் இப்போது. சர்க்குலேஷன் போதவில்லை என்றால் என்னிடம் சொல்லுங்கள். நான் வாங்கி குவிக்கிறேன்.

இப்போது ஒரு சின்ன பிரச்சனை, உங்களால் கண்டிப்பாக ஆலோசனை சொல்ல முடியும். கிரக நிலை இப்போ சரியில்லை போல. மோசடி செஞ்சிட்டேன்னு சொல்லி போலீஸ்ல தேடுறாங்க, என் பேர்ல நிறைய கேஸ் இருக்கு. சட்டப் பிரச்சனைக்கு சட்டநாதரை வணங்கினால் தீர்வு உண்டு என்று உங்கள் கட்டுரை ஒன்று படித்தேன். அதைப் பற்றி இன்னும் சில விபரங்கள் தேவை.


ஒரு ஃபேஸ்புக் உரையாடல்

மீனா – ஹாய்

ரமேஷ் – ஹலோ மேடம்!

மீனா – என்னங்க இது? அஃறிணைல கூப்பிடுறீங்க?

ரமேஷ் – ஆமால்ல! மேடம்னா தமிழில் ஆடுன்னு அர்த்தம் வருது. சாரிங்க.

மீனா – சாரியெல்லாம் பெரிய வார்த்தை. உங்க கவிதையெல்லாம் படிச்சுகிட்டு வர்றேன். வாய்ப்பே இல்லைங்க! ரொம்ப நல்லாருக்கு. அதுவும் இன்னைக்கு வந்த கவிதைய படிச்சிட்டு உங்களை பாராட்டலாம்னு தான் சாட்ல கூப்பிட்டேன். தொந்தரவு பண்ணிட்டேனோ?

ரமேஷ் – இதெல்லாம் ஒண்ணும் தொந்தரவு இல்லைங்க.

மீனா – ‘மதியொளி காய்ந்த மேனி கண்டு மதியழிந் தோய்ந்த தனியன்.’ வாய்ப்பே இல்லைங்க! இந்த வரி என்னை என்னவோ பண்ணிருச்சு.

ரமேஷ் – சந்தோஷம்ங்க.

மீனா – என்னங்க இது? உங்க கவிதை என்னை என்னென்னமோ பண்ணுதுங்கிறேன். நீங்க சந்தோஷம்ங்கிறீங்க?

ரமேஷ் – அது ஒண்ணுமில்லை. என் எழுத்து பெண்ணான உங்களை இந்த அளவு பாதிப்பது எனக்கு சந்தோஷம் தானே?

மீனா – நான் ரொம்ப பேசுறேனோ?

ரமேஷ் – இல்லைங்க.

மீனா – இந்த அளவு ஒருத்தர் எழுதனும்னா, அவர் ரொம்ப ரசனை உள்ளவரா இருக்கணும். அனுபவமும் இருக்கணும் இல்லையா?

ரமேஷ் – ரசனை இருக்கணும்கிறது சரிதான். ஆனால் அனுபவம்? அது சந்தேகம் தாங்க.

மீனா – அனுபவம் இல்லாமலா இந்த அளவு ரசிச்சு எழுதுறீங்க?

ரமேஷ் – உங்க கிட்ட சொல்றதுக்கு என்னங்க! வாய்ப்பு கிடைக்கிறவன் அனுபவிக்கிறான். கிடைக்காதவன் இப்படி கவிதை எழுதுறான்.

மீனா – நீங்க நகைச்சுவையா பேசுறீங்க.

ரமேஷ் – அடுத்தவங்க வேதனை பெண்களுக்கு நகைச்சுவை.

மீனா – உங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.

ரமேஷ் – ஸாஃப்ட்வேர்காரன் நான். பொழுது போக்கு கவிதை.

மீனா – திருமணம்?

ரமேஷ் – ஆயிடுச்சுங்க. ரெண்டு பசங்க இருக்காங்க.

மீனா – மனைவி உங்கள் ரசனைக்கேற்றவரா?

ரமேஷ் – என் ரசனைக்கு ஏற்ற பெண்ணெல்லாம் கவிதையில் மட்டுமே.

மீனா – ரொம்ப வெறுத்துப் போய் பேசுறீங்க.

ரமேஷ் – இதெல்லாம் வெளியே பேசக் கூடாது. அதென்னவோ உங்க கிட்ட கொட்டிட்டேன்.

மீனா – என்னாலும் ஒரு விஷயம் சொல்லாமல் இருக்க முடியலை. வெளியில என் அழகை நிறைய பேர் ஜாடைமாடையா வர்ணிக்கிறாங்க. வீட்டில் உள்ளவர் வர்ணிக்க வேண்டாம். ரசிக்கவாச்சும்  வேணாமா?

ரமேஷ் – நீங்கள் திருமணம் ஆனவரா?

மீனா – ஆமாங்க. ஒரு பொண்ணு உண்டு.

ரமேஷ் – நீங்க வேலை பார்க்கிறீங்களா?

மீனா – ஆமாம். பஜாஜ் இன்ஸூரன்ஸ் கம்பெனில.

ரமேஷ் – சென்னை தானா?

மீனா – ஆமாம். நுங்கம்பாக்கம்.

ரமேஷ் – உங்க முழுப்பேர் மீனலோசினியா?

மீனா – அட! உங்களுக்கு எப்படி தெரியும்?

ரமேஷ் – வீட்டில லோசினின்னு கூப்பிடுவாங்களா?

மீனா – நீங்க யாரு?

ரமேஷ் – அடிப்பாவி. நான் ரமேஷ்குமார்.

மீனா – அதென்ன டி போட்டு பேசுறீங்க? நாம டைவர்ஸ் ஆகி நாலு வருஷம் ஆகிடுச்சு.

ரமேஷ் – ஸாரி. நல்லாருக்கியா?

மீனா – இருக்கேன். போன மாசம் கூட அடையார்ல ஒரு பங்களா வாங்கிப் போட்டோம்.

ரமேஷ் – நீ இருக்கிற வசதிக்கு ஏன் வேலைக்குப் போகனும்? உன் ஹஸ்பண்ட் பேரு சுந்தர் தானே?

மீனா – ஆமாம். வேலைக்குப் போனால் தான் கொஞ்சம் நேரம் போகுது. உன் வொய்ப் என்ன பண்றா?

ரமேஷ் – வீட்டில தான் இருக்கா. நான் ஆஃபிஸில் ஓவர் டைம் எடுத்து கவிதை எழுதுறேன்.

மீனா – நாம ரெண்டு பேரும் ஒரு முறை மீட் பண்ணுவோமா? ஸாரி. வேண்டாம்.

ரமேஷ் – வேண்டாம்.

மீனா – வேண்டாம்.

ரமேஷ் – வேண்டாம்.

மீனா – உன்னை ஃபேஸ்புக்கில் இருந்து அன்ஃபிரெண்ட் பண்ணிடறேன்.

ரமேஷ் – நானும் பண்ணிடறேன்.

மீனா – இந்த சாட் ஹிஸ்டரி எல்லாம் டெலீட் பண்ணிடு.

ரமேஷ் – சரி. ஆனா ஒண்ணு.

மீனா – என்ன?

ரமேஷ் – உன்னை மாதிரி வராது!

மீனா – ஆமாம். உன்னை மாதிரி வராது!


பெல்ட் கட்டிய பிள்ளையார்

சதுர்த்தி வந்தாலே வினாயகனுக்கு கொஞ்சம் பயமாயிருக்கும். மோதகம் அவனுக்கு பிடிக்கும் தான், அதுக்காக இவ்வளவா சாப்பிட முடியும்? அவனோட அப்பா சொல்லிட்டார், சதுர்த்தி அன்னிக்கு யார் மோதகம் கொடுத்தாலும் மறுக்காமல் சாப்பிடணும்னு. இந்த முருகனை கூப்பிட்டு கொஞ்சம் ஷேர் பண்ணலாம்னா அவனுக்கு விரதம் தான் பிடிக்கும்.

இந்த உலகமே வினாயகனோட வயித்துக்குள்ள இருக்குதாம். அதனால அவன் வயிறு நிரம்பினா, இந்த உலகத்தில எல்லாருக்கும் தட்டுப்பாடு இல்லாம சாப்பாடு கிடைக்கும். இதை அவங்க அம்மா அவனுக்கு அடிக்கடி சொல்லுவாங்க. அதனாலதான் எவ்வளவு படையல் வச்சாலும் அவனால மறுக்க முடியல.

இப்படித்தான் அந்த சதுர்த்தி அன்னைக்கும் மக்கள் எல்லாம் நிறைய படையல் வச்சிருந்தாங்க. அவல், பொரி, சுண்டல், பொங்கல், மோதகம், கொழுக்கட்டை இப்படி பல வகைகள் வைத்து ஒரே விருந்து. மோதகத்தில் பல தினுசுகள், பல வடிவங்கள். சிலவற்றில் முந்திரி, நெய் எல்லாம் உண்டு, ஆனாலும் வினாயகனுக்கு பிடித்தது எளியவர் வீட்டு மோதகம் தான். அன்னைக்கு ராத்திரி வினாயகனுக்கு நடக்கக் கூட முடியாம வயிறு ரொம்ப ஃபுல் ஆகிடுச்சு. அவனோட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவனை பார்க்க ரொம்ப பாவமா இருந்தது.

“நீ வேணா போய் பூமியை சுத்தி ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வா. எல்லாரும் என்ன செய்யுறாங்கன்னு மேல இருந்து பாரு. உனக்கு பொழுது போன மாதிரியும் இருக்கும், வயிறும் சரியாகி விடும்” அப்படின்னாங்க.

அவனும் தன்னோட வாகனமான எலியின் மேல் ஏறி பூமிக்கு மேல ஒரு ரவுண்ட் வந்தான். நல்ல நிலா வெளிச்சம். நட்சத்திரமெல்லாம் மினு மினுன்னு கோலம் போட்ட மாதிரி இருந்தது. வினாயகன் இதையெல்லாம் ரசிச்சுகிட்டு எலி கூட பேசிக்கிட்டே வந்தான். அப்போ திடீர்ன்னு ஒரு பெரிய பாம்பு, பெரிசுன்ன்னா ரொம்ப பெரிசு, எதிர வந்து எலிய தாக்கப் பார்த்துச்சு. பயந்து போன எலி வினாயகனை விட்டுட்டு ஓடப் பார்த்துச்சு. பாம்பைப் பார்த்த வினாயகனுக்கு ரொம்பவே குஷி ஆகிடுச்சு. எலிய தன்னோட காலுக்குள்ள இறுக்கி பிடிச்சுகிட்டு, சீறி வந்த பாம்பை சரியா கழுத்தில ஒரு பிடி போட்டான். பிடிச்சு கிறு கிறுன்னு நாலு சுத்து சுத்தினான். அப்புறம் அதை எடுத்து தன்னோட இடுப்பில பெல்ட்டா கட்டிகிட்டான்.

பாம்பு கூட போட்ட சண்டைல வயிறு நல்ல செரிமானம் ஆச்சு. இதையெல்லாம் பார்த்துக்கிட்டிருந்த சந்திரன் (அதான் நிலா) சிரிச்சிட்டான். வினாயகனுக்கு கோபம் வந்து அதை முறைச்சு பார்த்தான். பயந்து போன சந்திரன் பூமியோட இன்னொரு பக்கம் போய் ஒளிஞ்சுகிட்டான். பிறகு வினாயகனுக்கு கோபம் தணிஞ்சிருச்சான்னு பார்த்து மெல்ல மெல்ல எட்டி பார்க்க ஆரம்பிச்சான். பிறகு சந்திரனுக்கு இப்படியே ஒளியிறதும் பிறகு எட்டி பார்த்து வர்றதுமா பழக்கம் ஆகிடிச்சு.