சிவபெருமானை அணிந்து கொள்வேன்!

பணிந்தெண் திசையும் பரமனை நாடித்
துணிந்தெண் திசையுந் தொழுதெம் பிரானை
அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே.  –  (திருமந்திரம் – 640)

விளக்கம்:
அட்டமாசித்தி எனப்படும் எட்டு விதமான மாபெரும் சக்திகளைப் பெற நாம் எட்டுத் திசைகளிலும் சிவபெருமானைத் தேடிச் சென்று முழு நம்பிக்கையுடன் அவனை வணங்க வேண்டும். அன்பு மிகுதியால் சிவபெருமானை நாம் அணிந்து கொள்ள வேண்டும். உலக விஷயங்களின் மேல் உள்ள ஆசைகள் எல்லாம் தணிந்து சிவபெருமானைத் தொழுது இருந்தால் அட்டமாசித்திகளைப் பெற்று அச்சக்திகளை நிலை நிறுத்தலாம்.


பிறவிச் சுழலில் நீந்த உதவுவான்!

அருமைவல் லான்கலை ஞானத்துள் தோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன்உணர்ந்து ஊழி இருக்கும்
திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே.  –  (திருமந்திரம் – 548)

விளக்கம்:
யாரையும் விட  வல்லவன் சிவபெருமான். அவன் நாம் பெறும் ஞானத்தினுள் தோன்றி அருள்வான். அளவில்லாத பெருமை கொண்ட நம் பெருமான் நாம் பிறவிச்சுழலை நீந்திக் கடக்க உதவி செய்வான். நம்மிடம் மட்டில்லாத உரிமை கொண்டுள்ள அவன் நம்முடைய தேடலை உணர்ந்து நெடுங்காலம் நமக்குத் துணையாக இருப்பான். இவையெல்லாம் பெறுவதற்கு முதலில் நாம் ஞானம் பெற வேண்டும். அந்த ஞானம் பெற நாம் சிறந்த சிவனடியார்களின் துணையைப் பெற வேண்டும்.


சிவபுரத்தில் சிறப்பான வரவேற்பு உண்டு!

உடையான் அடியார் அடியா ருடன்போய்
படையார் அழல்மேனிப் பதிசென்று புக்கேன்
கடையார நின்றவர் கண்டறி விப்ப
உடையான் வருகென ஓலம் என் றாரே. –  (திருமந்திரம் – 547)

விளக்கம்:
எல்லாம் உடையவனான சிவபெருமானின் அடியார்களைத் தேடிச் சென்று நாமும் சிவனடியாராய் ஆவோம். அப்பெரியவர்களின் துணையோடு நாம் தழல் போன்ற மேனியன் ஆன சிவபெருமான் தனது படைகளுடன் வசிக்கும் சிவபுரத்தை அடையலாம். சிவபுர வாயிலை நாம் அடையும் போது நாம் அங்கே வரும் செய்தியை சிவபெருமானிடம் அறிவிக்க, பெருமானும் நம்மை வருக என வரவேற்பார். நாமும் மகிழ்ச்சி தாங்காமல் ஓலமிட்டு அழுவோம்.


சிவனை உறவினராய் நினைப்பவர்!

தாழ்சடை யான்தன் தமராய் உலகினில்
போர் புகழால் எந்தை பொன்னடி சேருவர்
வாயடை யாவுள்ளம் தேர்வார்க்கு அருள்செய்யும்
கோவடைந்து அந்நெறி கூடலு மாமே. –  (திருமந்திரம் – 546)

விளக்கம்:
நீண்ட சடை கொண்ட சிவபெருமானை தம் உறவினனாய் பாவித்து வாழும் பெரியவர்கள் நிறைந்த புகழைப் பெறுவார்கள். அவர்கள் இறுதியில் தாம் விரும்பிய சிவனடியை அடைவார்கள். நாம் அந்தப் பெரியவர்களைத் தேடிச் சென்று அவர்களுடன் பழகி நம் உள்ளம் தெளியப் பெற வேண்டும். தெளிவடையும் உள்ளத்தை சிவபெருமான் வந்தடைவான். அதனால் நாம் பெரியவர்களின் துணையைப் பெற்று அவர்கள் காட்டும் நன்னெறியில் நடப்போம்.

போர் புகழால் – போர்த்த புகழால்


நன்னெறி தான் அருள் தரும்!

அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிலர்தத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியார் உடன்கூடல் பேரின்ப மாமே. –  (திருமந்திரம் – 545)

விளக்கம்:
விஷயம் தெரிந்தவர்கள் தேவர்களுக்கெல்லாம் தலைவனான சிவபெருமானை நாடிச் சென்று அவனுடன் நெருக்கமாக இருப்பார்கள். நன்னெறி தான் அருள் பெறுவதற்கு சிறந்த வழியாகும். அப்படி நன்னெறியில் நின்று சிவபெருமானை நாடி நிற்பவர்கள் பரமான்மா பற்றிய உண்மையை உணர்வார்கள். அப்படிப்பட்ட பெரியவர்களை நாம் தேடிச்சென்று அவர்கள் காட்டும் வழியில் நடப்போம். அதுவே பேரின்பமாகும்.


திருமூலர் சென்ற இடத்துக்கு நாமும் செல்லலாம்!

தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்
மாமனத்து அங்குஅன்பு வைத்த திலையாகும்
நீஇடர்ப் பட்டிருந்து என்செய்வாய் நெஞ்சமே
போமிடத் து என்னொடும் போதுகண் டாயே. –  (திருமந்திரம் – 544)

விளக்கம்:
தளிர் போன்ற நம்முடைய மனம் உலக விஷயங்களில் சிக்கி இடர்ப்பட்டு வாடிவிடுகிறது. நமது இடர்களுக்குக் காரணம் உலக விஷயங்களில் நாட்டம் கொள்வது தான் என்பதைப் புரிந்து கொண்டு, இறைவனிடம் அன்பு வைத்ததில்லை.

“ஏன் இப்படி உங்கள் மனத்தை இடர்பாட்டிலேயே வைத்திருக்கிறீர்கள்? ஞானம் பெற்ற பெரியவர்களின் துணை கொண்டு உங்கள் மனத்தை இறை வழியில் திருப்புங்கள். அப்படிச் செய்தால் நீங்களும் நான் போகும் இடத்துக்கு வருவீர்கள்” எனத் திருமூலர் சொல்கிறார்.


ஒட வல்லவர்களுடன் நடப்பேன்!

ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
பாடவல் லாரொளி பார்மிசை வாழ்குவன்
தேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடும்
கூடவல் லாரடி கூடுவன் யானே. –  (திருமந்திரம் – 543)

விளக்கம்:
ஆன்மிக பாதையில் ஓட வல்லவர்களுடன், என்னால் ஓட முடியா விட்டாலும் நடக்கவாவது செய்வேன். எனக்கு பாடத் தெரியாவிட்டாலும், சிவபெருமான் குறித்த பாடல்களைக் கேட்டு வாழ்வேன். தேட வல்லார்க்கு அருள் செய்பவன் சிவபெருமான். சிவனருள் பெற்றவர்கள் அவன் திருவடியைச் சரண் அடைவார்கள். என்னால் சிவனடியை அடைய முடியாவிட்டாலும், சிவனடியைத் தேடும் ஞானிகளின் திருவடியைப் பற்றி வணங்குவேன்.


பொறுமை பயில்வது அவசியம்

வல்வகை யானும் மனையிலும் மன்றிலும்
பல்வகை யானும் பயிற்றி பதஞ்செய்யும்
கொல்லையி னின்று குதிகொள்ளும் கூத்தனுக்கு
எல்லையி லாத இலயம்உண் டாமே. –  (திருமந்திரம் – 542)

விளக்கம்:
காட்டில் நின்று குதித்து ஆடும் கூத்தனுக்கு எல்லை இல்லாத பொறுமை உண்டு. அதனால் தான் அவன் லயத்தோடு ஆடுகிறான். நாம் வீட்டிலும் வெளியே பொது இடங்களிலும் உறுதியோடு பொறுமை காக்க வேண்டும். அதற்காக பல வகையிலும் நமது மனத்தை பக்குவப்படுத்தி பயிற்றுவிக்க வேண்டும்.


ஞானியை மன்னனும் வணங்குவான்

ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்
சேனை வளைந்து திசைதொறும் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை விளைந்தருள் எட்டலு மாமே. –  (திருமந்திரம் – 541)

விளக்கம்:
ஞானம் விளைந்த பொறுமை மிக்க ஞானிகள் அனைவராலும் வணங்கப்படுவார்கள். அந்நாட்டின் மன்னனும் தனது சேனைகளுடன் அந்த ஞானி இருக்கும் திசை நோக்கி பணிந்து வணங்குவான். இவ்வளவு பெருமை படைத்த ஞானிகள் நம்மையெல்லாம் படைத்த ஆதிக்கடவுளான சிவபெருமானை அடைவார்கள். மற்றவர்கள் எல்லாம் தமது பொறுமையினாலே ஞானத்தைப் பெறும் போது சிவபெருமானை அடைவார்கள்.


பொறுமை உடைய ஞானி!

ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய
மாலுக்கும் ஆதி பிரமற்கும் .மன்னவன்.
ஞாலத் திவன்மிக நல்லன்என் றாரே. –  (திருமந்திரம் – 540)

விளக்கம்:
தேவலோகத்தின் கொலுமண்டபத்தில் சூழ்ந்திருக்கும் தேவர்கள் எல்லாம் பாலைப் போன்ற தூய்மையான மேனியைக் கொண்ட சிவனின் பாதம் பணிந்தார்கள். அவர்களிடம் சிவபெருமான் சொல்கிறான் – “பொறுமை உடைய ஞானி உலகத்திலேயே மிக நல்லவன் ஆவான். பொறுமை உடையவன் திருமாலையும் பிரமனையும் விட மேலானவன் ஆகிறான்”.