வேதம் தெரிந்த அந்தணர்

மறையோர் அவரே மறையவர் ஆனால்
மறையோர்தம் வேதாந்த வாய்மையினால் தூய்மை
குறையோர்தன் மற்றுள்ள கோலா கலமென்று
அறிவோர் மறைதெரிந்து அந்தண ராமே. – (திருமந்திரம் – 233)

விளக்கம்:
பிறப்பினால் அந்தணராக இருப்பது முக்கியமில்லை. உண்மையான அந்தணர்கள் தமக்குரிய வேதங்களைப் படித்து உண்மையை அறிவார்கள். அதனால் தூய்மையான பாதை எது, குறை உள்ள பாதை எது என்பதைத் தெரிந்து கொள்வார்கள். மற்றபடி பூணூல், குடுமி போன்றவை எல்லாம் வெறும் கோலாகலம் தான் என்பதை உணர்வார்கள். எல்லாவற்றிலும் நன்மை தீமைகளைப் பார்க்கத் தெரிந்தவர்களே வேதம் தெரிந்த அந்தணர் ஆவார்கள்.


தூய்மையான அந்தணர்கள்

திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்
குருநெறி யாலே குருபதம் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணும்
துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே. – (திருமந்திரம் – 232)

விளக்கம்:
அறிவு, அறியாமை – இவை இரண்டுமே தேவை இல்லாத வழி சிறந்த வழியாகும். தூய்மையான அந்தணர்கள் அந்தச் சிறந்த வழியிலே சென்று குருவின் உபதேசத்தினால் சிவனின் திருவடியை அடைவார்கள். தம்முடைய விதி, வினைப்பயன் ஆகியவற்றிற்குக் காரணமான புறக்காரியங்களை விட்டு விட்டு யோக வழியிலே சென்று சமாதி நிலையை அடைவார்கள்.


அவர் பிராமணர் இல்லை

சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி
ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை யின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே.  – (திருமந்திரம் – 231)

விளக்கம்:
சத்தியத்தைக் கடைபிடிக்காமல், தனக்கென்று எந்த ஞானமும் இல்லாமல், மனத்தில் பதிந்து விட்ட ஆசைகளை விட்டு உண்மைப் பொருளை ஆராயும் உணர்வு இல்லாமல், பக்தியும் இல்லாமல், பரம்பொருளைப் பற்றிய உண்மையும் புரியாமல் இருப்பவர் பிராமணர் ஆக மாட்டார். அவர் பித்து பிடித்த மூடராவார்.

விட்டோரும் – விட்டு + ஓரும்


உண்மையான பூணூல் எது?

நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.  – (திருமந்திரம் – 230)

விளக்கம்:
அந்தணர்கள் அணிகின்ற நூலும் குடுமியுமே பிரம்மம் ஆகிவிடுமா? அவர்கள் அணியும் பூணூல் என்பது வெறும் பருத்திப்பஞ்சாகும். குடுமி என்பது கொஞ்சம் தலைமுடி, அவ்வளவுதான். ஆனால் உண்மையான பூணூல் என்பது வேதாந்தத்தின் நுண்மையான நெருப்பாகிய ஞானமாகும். அந்த உண்மையான பூணூலை அணிந்திருக்கும் அந்தணர்கள் பிரம்மத்தைக் காண்பது வேதங்களின் சொற்களிலே!

நுவல் – சொல்,  கார்ப்பாசம் – பருத்திப்பஞ்சு,  நூல் – பூணூல்


வேதங்களைப் புரிந்து கொள்ளும் ஆசை

வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டாரே.  – (திருமந்திரம் – 229)

விளக்கம்:
வேதங்களின் நோக்கம் நமது ஆசைகளை ஒழிப்பதாகும். பொதுவாக வேதாந்தம் கேட்பவர்கள் தமது ஆசைகளை விட்டு விடுவார்கள். ஆனால் அந்தணர்கள் விருப்பத்தோடு வேதாந்தம் கேட்பது, வேதங்களை ஆராய்ந்து அவற்றின் பொருள் புரிந்து கொள்வதற்காக! வேதங்களின் உட்பொருளைப் புரிந்து கொள்ளும் ஆசையை அவர்கள் விடுவதில்லை.


பிரம்ம ஞானம்

சத்திய மும்தவம் தானவன் ஆதலும்
எய்த்தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்கள் உண்டா யுணர்வுற்று
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே.  – (திருமந்திரம் – 228)

விளக்கம்:
சத்திய வழியில் நின்று, தவத்தினால் தான் சிவம் ஆகி, மனத்தை ஐம்பொறிகளின் வழியே செல்ல விடாமல் தடுத்து, உயிரும் உணர்வும் ஒருமித்து நிற்கும் யோகப்பயிற்சிகளைச் செய்து பந்தங்களை அறுத்து பிரம்ம ஞானத்தை அடைபவர்களே அந்தணர் ஆவார்கள்.


குற்றமில்லாத அந்தணர் யார்?

பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறி யான கிரியை யிருந்து
சொரூபமது ஆனோர் துகளில்பார்ப் பாரே.  – (திருமந்திரம் – 227)

விளக்கம்:
குற்றமில்லாத அந்தணர் யார் தெரியமா? அவர்கள் தலை சிறந்த நெறியான பிரணவத்தை ஆராய்ந்து அறிந்து, தம் குருவிடமிருந்து நான்கு வேதங்களுக்கும் பொருள் அறிந்து கொள்வார்கள். அந்த வேதங்களில் சொல்லப்பட்ட திருநெறிப்படி நடந்து, சிவத்தின் உண்மை சொரூபத்தை சிறிய துகளில் கூட பார்ப்பார்கள்.


அன்பெனும் தேரில் ஏறி

காயத் திரியே கருதுசா வித்திரி
ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி
நேயத் தேரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே.  – (திருமந்திரம் – 226)

விளக்கம்:
அந்தணர்கள் காயத்திரி, சாவித்திரி ஆகிய ஞான சக்திகளை ஆய்வு செய்ய விரும்புவார்கள். அதற்காக அவர்கள் மந்திரங்களை எல்லாம் மனனம் செய்கிறார்கள். அன்பெனும் தேரில் ஏறி தம்முடைய கடமைகளை நினைவில் கொண்டு, மாயத்தில் சிக்காமல் இருப்பவர்கள் சிறந்த பிராமணர் ஆவார்கள்.


தத்துவமசி

வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாந்தம் எனாதுகண்டு இன்புறு வோர்களே  – (திருமந்திரம் – 225)

விளக்கம்:
அந்தணர் என்பவர்கள் வேதத்தின் நிறைவுப் பகுதியாகிய உபநிடத்தின் உண்மைப் பொருளை அறியும் விருப்பத்துடன் இருப்பார்கள். தத்துவமசி என்பதைப் புரிந்து கொள்ளும் அறிவின் எல்லையில் நின்று பிரணவத்தில் பொருந்தி நிற்பார்கள். நாதம், வேதம், அறிவு ஆகிய அனைத்தின் முடிவிலும் இருப்பது சிவபெருமானே என்பதைப் புரிந்து கொள்வார்கள். தமது ஆன்மிகப் பாதையில் இதுதான் முடிவு என்று எதையும் எண்ணாமல், தொடர்ந்து பயணம் செய்து இன்புறுவார்கள்.

தத்துவமசி – தத் + த்வம் + அசி. இதன் பொருள் நீ அதுவாகிறாய், அதாவது சீவனும் பரமனும் வேறு வேறானவை இல்லை. இதைப் புரிந்து கொள்வதே அறிவின் எல்லையாகும்.


அந்தணரின் கடமைகள்

அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தந்தவ நற்கரு மத்துநின்று ஆங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.  – (திருமந்திரம் – 224)

விளக்கம்:
அந்தணர் என்போர் ஆறு தொழில்களைக் கடமையாகக் கொண்டவர் ஆவார். அந்த ஆறு தொழில்கள் ஓதல், ஓதுவித்தல், தவம், வேட்டல், ஈட்டல், ஈதல் ஆகியவை ஆகும். அவர்கள் நியமத்தில் நின்று, மூன்று பொழுதும் அக்னிக் காரியங்களைச் செய்கிறார்கள். இந்த வேள்விகளைக் கடமையாக இல்லாமல், ஒரு தவம் போலக் கருத்துடன் செய்கிறார்கள். மேலும் அவர்கள்  மாலை நேரத்திலும் வேதங்கள் ஓதித் தங்கள் கடமைகளைத் தவறாது செய்கிறார்கள்.