திராணி இல்லாத பிராணிகள்

பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய பிரானடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே. – (திருமந்திரம் – 2090)

விளக்கம்:
பெறுவதற்கு அரியதான பிறவியைப் பெற்றிருந்தாலும், நாம் அதன் அருமை தெரியாமல், பெறுவதற்க்கு அரியதான சிவபெருமானின் திருவடியை போற்றாமல் இருக்கிறோம்.

மனிதனாக பிறப்பது மிக அரிய விஷயம். அதை நாம் உணராமல் பெறுதற்கரிய சிவபேற்றை அடையும் வாய்ப்பை இழக்கிறோம்.

It is rare to get this birth
Yet we are not seeking Lord's feet.
It is rare to get birth as human
Yet we are missing the rare to get blessings of Siva.

முதலைக்கு பயந்து கரடியிடம் மாட்டிக் கொண்ட கதை

ஆற்றிக் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும்
நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே. – (திருமந்திரம் – 1642)

விளக்கம்:
விரதம் இருந்து தவம் செய்ய முயலாதவர் சாஸ்திரம் அறியாதவர் ஆவார். அவர்கள் உணவுக்காக பொருள் தேடி அலைந்து வருந்துகின்றனர். இது எப்படி இருக்கிறது என்றால், ஒருவன் ஆற்றில் கிடக்கும் முதலைக்கு பயந்து ஓடிப் போய் குட்டியை ஈன்றுள்ள கரடியிடம் மாட்டிக் கொள்வதை போலாகும்.

In fear of crocodile, they ran out of river
but get caught by the bear having a cub.
Like this the unlearned people run away from Holy practices,
They are always roaming in search for food.

உயிரின் வடிவம்

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே. – (திருமந்திரம் – 2011)

விளக்கம்:
உடலில் பொருந்தியுள்ள உயிரின் வடிவத்தை இப்படி சொல்லலாம். பசுவின் மயிர் ஒன்றை நூறாக பிளந்து, அந்த நூறில் ஒன்றை ஆயிரம் பகுதியாக்கினால் அது உயிரின் வடிவம்.

உயிரின் வடிவம், பசுவின் ஒரு மயிரில் நூறாயிரத்தில் ஒரு பங்கு. அதாவது உயிரின் வடிவம் மிகவும் நுன்மையானது, காண முடியாதது.

(மேவிய – பொருந்திய,  சிவன் – உயிர்,   கோ – பசு).

To speak about the size of the soul, it is like
splitting a cow's hair in hundred parts
and divide each part into thousand.
The size of Soul is thus one of hundred thousand parts.

விரதம் அவசியம்

பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்
ஈட்டும் இடஞ்சென்று இகலல்உற் றாரே. – (திருமந்திரம் – 56)

விளக்கம்:
பாட்டும், இசையும், பரந்து ஆடும் பொது மகளிர் ஆட்டமும் நீங்காத இந்த உலகில், அவற்றில்  மாட்டிக் கொள்ளாதவர்கள் உண்டு. அவர்கள் வேள்வி செய்யும் விருப்பம் கொண்டவராய் இருப்பர். அப்படி உறுதி இல்லாதவர் பயன் அனுபவிக்கும் இடம் சென்று சிக்கலில் மாட்டிக் கொண்டாரே.

(ஆட்டு – நடனம்,   அவனி – உலகம்,   விரதம் – உறுதி,   இகல் – சிக்கல்).

Detach from the world of song, music and prostitute's dance
Such people Seek the Holy Sacrifice to perform.
Those who don't have observance, seek the
world of desire, get caught in misery.