திருமந்திரத்தில் பிராணாயாமம் – ஒரு தொகுப்பு

திருமந்திரத்தில் உள்ள பிராணாயாமம் பற்றிய பாடல்களின் விளக்க உரைகள் ஒரே தொகுப்பாக இங்கே:

  • பறவையை விட விரைவாக ஓடக்கூடிய நம் மூச்சுக்காற்றாகிய குதிரையை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம். அப்படி கட்டுப்படுத்தினால் கள் உண்ணாமலே மகிழ்வு உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும், சோம்பல் நீக்கி சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். இக்கருத்து பிராணாயாமப் பயிற்சி செய்வோர்க்கு சொல்லப்பட்டது.
  • நம்முடைய உயிர், ஐம்பொறிகளுக்கும் இந்த உடலெனும் ஊருக்கும் தலைவன் ஆகும். அந்த உயிர் உய்வு பெற பிராணன் என்ற குதிரை ஒன்று உண்டு. அக்குதிரையை வசப்படுத்தக் கற்று ஏறிக் கொள்வோம். அது மெஞ்ஞானம் கொண்ட பயிற்சி உடையவர்க்கு வசப்படும். பயிற்சி இல்லாத பொய்யர்க்கு வசப்படாது தள்ளிவிட்டு தன் இஷ்டப்படி ஓடும். நம் மூச்சுக்காற்றை வசப்படுத்துதலே உய்வு பெறும் வழி ஆகும். பிராணாயாமம் செய்ய முறையான பயிற்சியும், மெஞ்ஞானமும் தேவை.
  • பதினாறு மாத்திரை அளவு இடது பக்க மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பது பூரகம் ஆகும். இழுத்த மூச்சுக் காற்றை அறுபத்தி நான்கு மாத்திரை அளவு உள்ளே நிறுத்தி வைப்பது கும்பகம். வலது பக்க மூக்கு வழியாக முப்பத்தியிரண்டு மாத்திரை அளவில் மூச்சை வெளியே விடுவது ரேசகம் ஆகும். அடுத்த முறை வலப்பக்கம் மூச்சை இழுத்து, உள்ளே நிறுத்தி இடப்பக்கம் மூச்சை வெளியே விடுவது தந்திரமாகும். இவ்வாறு முடிந்த வரை மாறி மாறி பயிற்சி செய்து வர வேண்டும். இந்த பிராணாயாமப் பயிற்சியை ஒரு ஆசிரியர் மூலம் முறையாக கற்றுக் கொள்வது அவசியம்.
  • பிராணாயாமப் பயிற்சியின் போது மனம் மூச்சின் பாதையிலேயே இருக்க வேண்டும். மனமும் மூச்சும் லயித்திருந்தால் பிறப்பும் இறப்பும் இல்லை. மூச்சை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் மாற்றி மாற்றி பயிற்சி செய்வோம். பயிற்சியின் போது மூச்சின் சம்பாஷணைகளை உணர்ந்து, அவ்வுணர்வு நம்முள் பரவுவதை அனுபவிப்போம். பிராண வாயுவால் அடையக்கூடிய சிறந்த பலனை அடைவோம். பிராணாயாமப் பயிற்சியின் போது மனமும் மூச்சும் லயித்திருப்பது அவசியம்.
  • நம்முடைய உடலில் பிராணன், அபானன் என இரண்டு குதிரைகள் ஓடுகின்றன. அறிவுடைய நம் மனம் நல்லவனாக இருந்தாலும், அக்குதிரைகளை இழுத்துப் பிடிக்கும் வழிமுறைஅறிந்தோம் இல்லை. அன்பு கொண்ட குருநாதரின் அருள் பெற்றால் அக்குதிரைகளை நம் வசப்படுத்தலாம். குருவருள் பெற்றால் பிராணாயாமப் பயிற்சியின் சூட்சுமம் வசப்படும்.
  • பிராணாயாமப் பயிற்சி செய்பவர், மூச்சுக் காற்றை உள்வாங்கித் தன் வசப்படுத்தி அடக்குவதில் வெற்றி பெற்று விட்டால், அவர் உடல் பளிங்கு போல் மாசு இல்லாது தூய்மையுடையதாய் மாறும். வயதினால் முதுமை அடைந்தாலும், இளமையாய்த் தோற்றம் அளிப்பர். இதனைத் தெளிந்து குருவின் திருவருளும் பெற்று விட்டால், அவர் உடல் காற்றை விட மென்மையாய் மாறும். எல்லோராலும் விரும்பப்படுவர். பிராணாயாமம் தொடர்ந்து செய்வோம், என்றும் இளமையாக இருப்போம்.
  • நாம் எந்த இடத்தில் இருந்தாலும் இடது பக்க மூக்கு வழியாக மூச்சை இழுத்து நிறைவு பெறுவோம். அவ்வாறு பூரகம் செய்தால் இந்த உடலுக்கு அழிவு உண்டாகாது. அங்கே இழுத்த மூச்சை நிறுத்தி கும்பகம் செய்து, வலது பக்க மூக்கு வழியாக மூச்சை வெளியேறச் செய்தால் சங்க நாதம் உண்டாகி மேன்மை ஏற்படும். பூரகம் செய்து பூரிப்பு பெறுவோம்.
  • இடைகலை, பிங்கலை வழியாக மூச்சுக் காற்றை ஏற்றி இறக்கி பூரிப்பு பெறுவோம். இடையே காற்றைப் பிடித்து நிறுத்தி கும்பகம் செய்யும் முறையை அறிந்தோம் இல்லை. கும்பகம் செய்யும் முறையை அறிந்து கொண்டால் யமனை வெல்லும் குறிக்கோளை அடையலாம். இடைகலை என்பது இடது பக்க மூச்சு, பிங்கலை என்பது வலது பக்க மூச்சாகும். கும்பகம் செய்யும் முறையை நன்றாக கற்றவர் நோயில்லாமல் அதிக நாள் வாழலாம்.
  • நம் உடலின் எல்லா பாகங்களிலும் காற்று நிரம்பும் வண்ணம், மிகுதியாகக் காற்றை உள்வாங்கிப் பூரகம் செய்வோம். பூரகத்தின் மறுபகுதியான இரேசகத்தினை, காற்று உடல் உள்ளே பதியும்படி மெலிதாக வெளியேறச் செய்ய வேண்டும். இரண்டுக்கும் இடையே விருப்பத்துடன் வயிற்றில் கும்பகம் செய்தால் திருநீலகண்டப் பெருமானின் அருளைப் பெறலாம். பிராணாயாமத்தை விருப்பத்துடன் முறையாகச் செய்தால் சிவபெருமானின் அருளைப் பெறலாம்.
  • இடைகலை வழியாக பதினாறு மாத்திரை கால அளவு பூரகம் செய்வோம். பிறகு  முப்பத்திரண்டு மாத்திரை கால அளவு பிங்கலை வழியாக இரேசகம் செய்வோம். இவ்விரண்டு வேள்வியோடு அறுபத்தி நான்கு மாத்திரை கால அளவு கும்பகம் செய்து வந்தால் ஆன்மிக உண்மை புலப்படும். உபதேசிக்கப்பட்டுள்ள கால அளவுகளின்படி பிராணாயாமத்தை விருப்பத்துடன்  செய்து வந்தால் ஆன்மிக உண்மை விளங்கிடும்.
  • பிராணாயாமம் தொடர்ந்து செய்து வந்தால் இந்த உடல் தளர்ச்சி அடையாது. இரேசகம் செய்து, பத்து நாடிகளும் விம்முமாறு பூரகம் செய்வோம். பிறகு உள்ளே இருக்கும் பிராணன், அபானன் ஆகிய காற்றை நிறுத்தி கும்பகம் செய்வோம். இந்தப் பயிற்சியை உடல் வளையாமல் நேராக அமர்ந்து செய்து வந்தால் யமனுக்கு அங்கே வேலை இல்லை. பத்து நாடிகள் எனப்படுபவை – சுத்தி, அலம்புடை, இடை, காந்தாரி, குரு, சங்கினி, சிங்குவை, சுழுமுனை, பிங்கலை, புருடன்.
  • தன் விருப்பப்படி அலைந்து திரிகின்ற மூச்சுக்காற்றை நெறிப்படுத்துதலே பிராணாயாமம் ஆகும். அவ்வாறு செய்யும் போது பிராணவாயு தூய்மைப்படும், உடலில் இரத்தம் நன்கு பாய்ந்து சிவந்த நிறம் கொடுக்கும், தலைமுடி கறுக்கும். நம் உள்ளத்தில் வசிக்கும் சிவபெருமான் நம்மை விட்டு நீங்க மாட்டான். பிராணாயாமம் செய்து மூச்சை நெறிப்படுத்தினால், இரத்த ஓட்டம் மேம்படும்.
  • சிறு வயதில், நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரண்டு அங்குல நீளம் உள்ளே புகுவதும், ஓடுவதுமாய் உள்ளது. கொஞ்சம் வயதான பிறகு எட்டு அங்குல அளவே முச்சை இழுக்கிறோம், நாலு அங்குல நீளத்தை துண்டிக்கிறோம். பிராணாயாமப் பயிற்சி செய்து விடுபட்ட நான்கு அங்குலமும் சேர்த்து சுவாசித்து வந்தால் திருவைந்தெழுத்தைப் போல அழகு பெறலாம். பிராணாயாமப் பயிற்சி மூலம் மூச்சு விடும் அளவை பன்னிரண்டு அங்குல அளவுக்கு நீளச்செய்தால் தெய்வீக அழகு பெறலாம்.
  • பன்னிரண்டு அங்குல நீளத்தில் ஓடும் முச்சு, இரவும் பகலும் தன் விருப்பப்படி செயல்படுகிறது. அந்த பிராணனை கட்டுப்படுத்தும் முறையை பாகனாகிய நாம் அறிந்து கொள்ளவில்லை. பிராணனை கட்டுப்படுத்தும் பிராணாயாமப் பயிற்சியை நாம் அறிந்து கொண்டால் பகலும் இரவும் வீணாகக் கழியாது. நம் வாழ்நாள் பொழுது பயனுள்ளதாய் இருக்கும். இப்பாடலில் நம் மூச்சுக்காற்று யானையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.  யானையை பாகன் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல் நாம் நம் மூச்சுக்காற்றை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம்.

நிர்வாகத்தில் உதவும் பழமொழிகள்

முத்தையா ஒரு செங்கல் வியாபாரம் ஆரம்பித்தான். முதலில் நூறு கல் வித்தாலே பெரிய வியாபாரமா இருந்தது. வேலைக்கு ஆள் வச்சுக்கலை. தனக்கே சம்பள அளவில் ஏதாவது கிடைச்சா போதும்னு நடத்தினான். கொஞ்ச கொஞ்சமா வியாபாரம் கூடிச்சு. செங்கலை லோடாக கேட்க ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் வருமானம் ஏறுச்சு. வேலைக்கு ஒரு ஆள் வச்சா இன்னும் கொஞ்சம் வியாபாரம் கூட்டலாம்னு நெலமை வந்தது. வர்ற வருமானத்தில சின்ன பங்கு சம்பளமா குடுத்தா என்னன்னு தைரியமா வேலைக்கு ஆள் வச்சான். ஒரு ஆள் பத்து ஆள் ஆச்சு. ஒரு லாரி வாங்கி அதுவும் ஏழெட்டு ஆயிருச்சு. பர பரன்னு எல்லாருமா வேலை பார்த்து பெரிய வியாபாரமா வளர்த்துட்டாங்க.

முத்தையாவுக்கு இப்போ தன்கிட்ட வேலை பார்க்கிற பத்து பதினஞ்சி பேரை சரியா வேலை வாங்கினாலே போதும். வியாபாரம் தன்னால நடக்கும். அவன் ரொம்ப படிச்சிருக்கலைன்னாலும் தன்னோட அனுபவத்தினால யார்கிட்ட என்ன வேலை குடுக்கலாம், எப்படி அவங்களை சோர்வடையாம வேலை வாங்கலாம்னு தெரிஞ்சிகிட்டான். ஒருத்தன வச்சு இன்னொருத்தன கண்காணிக்கிறது எப்படிங்கிறது கூட கத்துகிட்டான்.

Mary Parker Follett என்னும் அமெரிக்க மேலாண்மை ஆலோசகர் (அவர் வாழ்ந்து முடிந்து 80 வருஷம் ஆகுது) ”management is the art of getting things done through people” என்கிறார். இவர் எழுதிய மேலாண்மையப் பற்றிய தத்துவங்கள் முக்கியமானவையாக பேசப்படுகிறது. முத்தையாவுக்கு இதெல்லாம் தெரியாது, ஆனால் இதத்தான் அவன் செஞ்சிகிட்டு இருக்கான்.

மேலாண்மையை ஆறு செயல்பாடுகளாக பிரிக்கிறார்கள்.

  1. Planning
  2. Organizing
  3. Staffing
  4. Leading
  5. Monitoring
  6. Motivation

Planning – திட்டமிடுதல். எவ்வளவு செங்கல் வித்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும், எவ்வளவு செங்கல் இங்கே விற்க முடியும், நாம் எவ்வளவு கொள்முதல் செய்து இருப்பு வைக்கலாம் என்பதெல்லாம் யோசித்து முடிவு செய்வது. பழமொழி நானூற்றில் உள்ள ஒரு பாடல் இது.

தற்றூக்கித் தன்துணையுந்தூக்கிப் பயன்தூக்கி
மற்றவை கொள்வ மதிவல்லார் - அற்றன்றி
யாதானும் ஒன்றுகொண்டு யாதானும் செய்தக்கால்
யாதானும் ஆகி விடும்.

இதில் உள்ள பழமொழி – ’யாதானும் ஒன்று கொண்டு யாதானும் செய்தக்கால் யாதானும் ஆகிவிடும்’.

இது நம்மால் செய்ய முடியுமா, இதை செய்து முடிக்கும் அளவு நமக்கு துணை உள்ளதா (ஆள் துணை மட்டுமில்லாமல் storage, transportation போன்றவையும் சேர்த்து), இதை முடிப்பதால் நமக்கு போதுமான பயன் உண்டா (வருமானம்) என்பதெல்லாம் யோசித்து அப்புறம் காரியத்தில் இறங்குபவர் வல்லவர்.

Organizing ஒருங்கிணைத்தல். அதாவது செயல்முறை வகுப்பது. செங்கலின் இருப்பை பராமரிக்க ஒருவர், வரவு செலவு எழுதி வைக்க ஒருவர், வசூல் செய்ய ஒருவர், இப்படி வேலைகளை பிரித்து கொடுத்து அவர்களுக்குள் ஒரு நல்ல பிணைப்பை ஏற்படுத்துவது.

முடிந்ததற்கு இல்லை முயற்சி முடியாது
ஒடிந்ததற்கு இல்லை பெருக்கம் வடிந்தற
வல்லதற்கு இல்லை வருத்தம் உலகினுள்
இல்லதற்கு இல்லை பெயர்.

இதில்  ‘வடிந்தற வல்லதற்கில்லை வருத்தம்’ என்று பழமொழி ஆசிரியர் சொல்வது organizing என்பதற்கு பொருத்தமாக உள்ளது. அதாவது எந்த ஒரு வேலையையும், அது எவ்வளவு கடினமானதா இருந்தாலும், தெளிவா ப்ளான் பண்ணி பிரிச்சிகிட்டோம்னா அது நல்லபடியா முடியும்..

Staffing சரியான ஆட்களை வேலைக்கு அமர்த்துவது. அவர்கள் தகுதி தெரிந்து சரியான வேலை கொடுப்பது. பழமொழி  நானூறில் இதற்கு நிறைய பாடங்கள் உள்ளது.

தெற்ற அறிவுடையார்க் கல்லால் திறனிலா
முற்றலை நாடிக் கருமஞ் செயவையார்
கற்றொன் றறிந்து கசடற்ற காலையும்
மற்றதன் பாற்றேம்பல் நன்று.

தெளிந்த அறிவுடையவர் திறன் இல்லாதவனை வேலையில் அமர்த்த மாட்டார். கற்று அறிந்தவரையும் குற்றம் இல்லாதவரையும் வேலைக்கு வைத்துக் கொள்வார்கள். யார் யாரை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு நிறைய பழமொழிகள் உள்ளன.

Leading வழி நடத்துதல். இது ஒரு மேனேஜரின் வேலை. எந்த சூழ்நிலையிலும் சரியான முடிவெடுக்கும் திறன். உதாரணத்திற்கு வேலை செய்பவர்கள் ஸ்ட்ரைக் செய்தால் அவர்களை வழிக்கு கொண்டு வர தெரிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்க்கு சப்ளை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்
அந்நீர் அவரவர்க்குத் தக்காங் கொழுகுபவே
வெந்நீரின் தண்ணீர் தெளித்து.

சிலரிடம் தன்மையாக நடந்து கொண்டால் தான் வேலை வாங்க முடியும். வேறு சிலரிடம் கடுமை காட்டினால் தான் வேலை நடக்கும். குளிக்கும் போது தேவைக்கேற்ப தண்ணீரில் வெந்நீர் கலப்பது போல அவரவர் தன்மைக்கேற்ப வேலை வாங்க வேண்டும். ஒரு மேனேஜருக்கு உபயோகமான பாடம் இது.

Monitoring – கண்காணித்தல். அவரவர் வேலையை பிரித்து ஒப்படைத்து விட்டாலும், அவர்கள் நல்லவர் ஆனாலும் வல்லவர் ஆனாலும் அவர்களிடம் வேலையின் நடப்பு நிலை பற்றி தொடர்ந்து விசாரித்து வர வேண்டும். இதற்கு ரொம்பவே பொருத்தமான பாடல் ஒன்று உண்டு.

விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்
முட்டா தவரை வியங்கொளல் வேண்டுமால்
தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும்
தட்டாமல் செல்லா துளி.

தொட்டாலே துவளும் துளிரின் மேல் உளியை வைத்தாலும், அந்த உளியை தட்டினால் ஒழிய அது தளிரை வெட்டாது. அது போல பிறரிடம் ஒரு காரியத்தை ஒப்படைத்தால் தொடர்ந்து அவரிடம் அது என்னாயிற்று என்று விசாரித்து வர வேண்டும்.

Motivation ஊக்கப்படுத்துதல். வேலை பார்ப்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், கொஞ்சம் ஊக்கம் சேர்த்து கொடுத்தால் அங்கே வேலை நன்றாக நடக்கும். எல்லாருமே ஒரு அங்கீகாரத்திற்காக ஏங்குபவர்கள் தான். இங்கே ஒரு ஊக்கம் தரும் பாடல்.

வீங்குதோட் செம்பியன்சீற்றம் விறல்விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால் - ஆங்கு
முடியும் திறத்தால் முயல்கதாம் கூரம்
படியிழுப்பின் இல்லை யரண்.

கூர்மையான அம்பை வில்லில் பொருத்தி அதன் அடியை இழுத்தால் எதிரே இருக்கும் எந்த தடையும் பொடி பொடியாகி விடும். நம்முடைய முயற்சி அந்த வகையில் இருந்தால் எவ்வளவு கடினமான காரியத்தையும் சாதிக்கலாம்.

மேலே சொன்ன செய்யுள்கள் பழங்காலத்தில் எழுதப்பட்டதால் புரிவதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனால் அதன் பொருள் உணர்ந்து பார்க்கும் போது இப்போதுள்ள மேலாண்மைக்கும் அது பொருத்தமாகவே உள்ளது. பழமொழி நானூறு மொத்தம் நானூறு பாடல்கள் கொண்டது. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் வருகிறது. இதன் ஆசிரியர் முன்றுறையரையனார். இதன் காலம் ஐந்தாம் நூற்றாண்டு என கருதப்படுகிறது. தற்சிறப்பு பாயிரத்தில் ‘பண்டைப் பழமொழி நானூறும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஐந்தாம் நூற்றாண்டிலேயே இந்தப் பழமொழிகள் பழமையானது என்றால் அவை வழக்கத்தில் தோன்றிய காலத்தை யோசித்துப் பார்த்தால் அதன் தொன்மை புரியும்.

பழமொழி நானூறு பல விஷயங்கள் பற்றி பேசுகிறது. கல்வி, ஒழுக்கம், பொருள், முயற்சி, நட்பு, அரசியல், நன்றி, காரியம் முடிக்கும் சாதுர்யம், இல்வாழ்க்கை, இப்படி அது தொட்டுச் செல்லும் தலைப்புகள் அதிகம். பகைவனை எப்படி சமாளிப்பது என்று கூட பாடல்கள் உண்டு. இதோ ஒரு உதாரணம்.

இயற்பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே
அயற்பகை தூண்டி விடுத்தோர் - நயத்தால்
கறுவழங்கிக் கைக்கெளிதாய்ச் செய்க அதுவே
சிறுகுரங்கின் கையாற் றுழா.

தனது பகைவனை வெல்ல நினைப்பவன், முதலில் தனது பகைவனுக்கு எதிராக இன்னொரு பகையை வெளியே இருந்து தூண்டி விட்டு ஒரு குழப்ப நிலையை உருவாக்கி, தமது பகை தீர்ப்பதற்கு சாதகமான நிலையை உருவாக்கலாம். பெரிய குரங்கு வேகின்ற கூழை சிறிய குரங்கின் கையாயால் கிளறி விடுவது போல. ’சிறுகுரங்கின் கையாற் றுழா’ என்பது பழமொழி. பகையைப் பற்றிய வகையில்  இந்த பழமொழி வந்தாலும், இதை வணிகத்தில், செய்யும் தொழிலில், போட்டியாளர்களை சமாளிக்கும் விஷயத்தில் பொருத்திப் பார்க்கலாம்.

இந்த பழமொழியெல்லாம் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பே பேச்சு வழக்கில் இருந்துள்ளது. சிக்கலான நிர்வாக தத்துவமெல்லாம் சர்வ சாதாரணமா பழமொழியா பேசியிருக்காங்க. வரலாற்றில் படிச்சிருக்கோம், பழங்காலத்தில் தமிழர்கள் வாணிபத்தில் வல்லவராய் இருந்தார்கள், கடல் கடந்து வாணிபம் செய்து நிறைய பொருள் சம்பாதித்தார்கள் என்று. இந்த நிர்வாகத் தெளிவு கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அதுதான் இன்றைக்கும் முத்தையா மாதிரி வியாபாரிகளுக்கு இரத்தத்திலேயே ஊறியிருக்கு போல.


சேதனன், விமலை மற்றும் கொஞ்சம் தனிமை

“வா. என் மடி மேலே வந்து மண்டியிட்டு உட்கார்” சேதனன் குரலில் கடுமை இல்லை. ஆனால் உறுதி இருந்தது. அவன் கண்கள் மூடிய நிலையிலேயே இருந்தது. மிச்சமிருந்த கொஞ்ச தயக்கத்தையும் கழற்றி விடலாமா என்ற யோசனை தோன்ற ஆரம்பித்து விட்டது விமலைக்கு.

“மன மயக்கத்தினால் வருவது தயக்கம். உனக்கென்று ஒரு யோசனையும் வேண்டாம், நான் சொல்வதை மட்டுமே உன் மனம் கேட்கட்டும்” சேதனனின் வசீகரக்குரலில் விமலை தன்னை மறந்து ஒரு மாய உலகத்துக்குள் நுழைய தயாரானாள்.

தான் இருக்கும் இடத்தை சுற்றிலும் ஒரு முறை பார்த்தாள். அது ஒரு சிறிய அறை, ரொம்ப சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது. மங்கலான வெளிச்சம், செயற்கையான குளிர். தரை முழுவதும் தடிமனான சிவப்பு நிற விரிப்பு ஒன்று பரவி இருந்தது. ஒரு சிறிய மெத்தை மேல் சேதனன் சம்மணமிட்டு அமர்ந்திருந்தான், இடுப்பில் ஒரு நான்கு முழ வேட்டி மடித்து கட்டிய நிலையில் இருந்தது. மேலே சட்டை எதுவும் அணியவில்லை, உடல் முழுவதும் சந்தனம் பூசப்பட்டிருந்தது. கண்கள் மூடிய நிலையில் அவன் முகம் எந்தவொரு சலனமும் இல்லாமல் தெளிவாய் இருந்தது. கழுத்திலே ஒரு மலர் மாலை அணிந்திருந்தான். அறையில் அவர்கள் இருவரைத் தவிர ஒரு சிறிய பொருள் கூட கிடையாது.

“எப்போதும் நீ தான் அதிகம் பேசுவாய், இன்று உன் குரலையே நான் இன்னும் கேட்கவில்லை” கண்கள் இன்னும் மூடிய நிலையிலேயே கேட்டான் சேதனன்.

“அதான் நீ பேசுறியே சேர்த்து” அவள் குரலில் லேசான கிண்டல் இருந்தது.

“பயமாயிருக்கா?”

“இல்லை. என் சம்மதம் இல்லாமல் இங்கே எதுவும் நடக்காது”

“நான் ஒன்றும் செய்யப் போவதில்லை”

“சரி. அப்போ நான் வரட்டுமா?”

“பொறு. ஒரு அனுபவம் உன்னைச் சந்திக்க காத்திருக்கிறது!”

”அது எனக்கு இப்போ தேவை இல்லை.”

“நீ நினைப்பது இல்லை இது. அதை விட இது பெரிய அனுபவம். என் விரல் உன்மேல் படாது”

“சரி சரி. அந்த அனுபவத்தை சீக்கிரம் வரச் சொல்லு.”

விமலை மெதுவாக நடந்து சேதனன் பக்கத்தில் வந்தாள். அவள் சேலை தரையில் உரசிய சத்தம் அவனிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாதது அவளுக்கும் கொஞ்சம் சுவாரசியத்தையும் தைரியத்தையும் கொடுத்தது. லேசாக இருமிக் காட்டினாள்.

“அமரலாமே!” அவன் குரல் இன்னும் என்ன தயக்கம் என்பது போல் இருந்தது.

“உன் முன்னால தானே உட்காரணும்?”

“இல்லை. என் மடியில் வந்து மண்டியிடு. என் மடியை உயிரில்லாத ஒரு தலையணை போல நினைத்துக்கொள்.”

“அது சரி!” இந்த நேரம் சிரிப்பது அபத்தமாய் இருக்குமோ என்று கட்டுப்படுத்திக் கொண்டாள்.

அவள் சேலை நுனியை அவன் காலில் படச் செய்து அவன் முகத்தையே பார்த்தாள்.

“ஆற்றில் இறங்க ஆழம் பார்க்கிறாயா?” கண்களைத் திறக்காமலே கேட்டான்.

“பொம்பளைங்க எதுலயும் ஆழம் பார்த்துத் தான் இறங்குவோம்.”

மெதுவாக தன் கால் முட்டி இரண்டும் அவன் தொடையில் வைத்து அவன் மேல் தன் பாரத்தை ஏற்றினாள். அவன் மேல் பூசியிருந்த சந்தனத்தின் வாசம் அவளை கிறுகிறுக்கச் செய்தது.

“இது கோவில் கடைகளில் விற்கப்படும் வாசனைப் பொருள் இல்லை. அரைக்கப்பட்ட அசல் சந்தனம். அப்புறம் ஒரு முக்கிய விஷயம். நீ நிலை தடுமாறும் போது கைத்தாங்கலுக்காக என்னைத் தொட்டு விடாதே.”

இப்போது தான் அவளுக்கு நிலை தடுமாறும் போல இருந்தது.

“நீ உன் சுட்டு விரலால் என் மேல் உள்ள மாலையை லேசாகத் தொட்டுப் பார். கவனம், ரொம்ப லேசாக மட்டும் தொடு.”

விமலை பயத்தோடு பட்டாசு பற்ற வைப்பது போல் லேசாக தொடப்போனாள். அரை விநாடி கூட தொட்டிருக்க மாட்டாள், விரல் சூடு தாங்காமல் பொத்து விட்டது. பயம் கூடினாலும் அவளுடைய வயது ஆர்வத்தையே வெகுவாகத் தூண்டியது.

“ஏன் இப்படி?”

“சொல்லுகிறேன். உன்னிடம் பதட்டம் தெரிகிறது. அது தேவையில்லாதது மட்டுமில்லை, நம்முடைய அனுபவத்துக்கும் இடைஞ்சலானது. உன் மூச்சை சீராக வைத்துக் கொள்ள முயற்சி செய்.”

அடுத்து ஒரு அரை மணி நேரம் அங்கே மௌனம் மட்டுமே நிலவியது. விமலை ஒரு பத்து நிமிடம் சிறுதுயிலில் ஆழ்ந்து கனவு கூட கண்டு விட்டாள். கனவில் உருவமேயில்லாத ஒருவன் அவள் உடலெங்கும் தொடுவதை உணர்ந்தாள். பதிலுக்கு அவளால் அவனை தொட முடியவில்லை. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பாய்ந்த அந்த தொடுகை அவளுடைய பதில் உணர்வு எதையும் எதிர்பாராமல் தன் போக்கிலே சென்றது. கனவு கலைந்தவளுக்கு தான் அணிந்திருந்த உடைகள் அனைத்தும் இறுக்கமாக தோன்றியது. உடலின் பல பாகங்கள் விரிவடைந்து கடினமாக மாறி, உடைகளெல்லாம் தெறித்து விடும் போல் இருந்தது.

“இதனால உனக்கு என்ன கிடைக்கும்?” பேச்சு கொடுத்தாள்.

“காமத்தை கடந்து செல்வது ஒரு சாதனை. அது அனுபவிச்சா தான் தெரியும்.”

“அதுக்கு ஏன் நான்?”

“அழகான பெண்ணிடம் ஜெயிப்பது தான் பெரிய சாதனை.”

“உன்னால் மனத்தை அடக்க முடிஞ்சதா?”

“அது அடங்கியே தான் உள்ளது. என் மனம் இப்போது மிகவும் ஆனந்தமாக உள்ளது.”

“பெரிய சாதனை தான் நீ செய்யுறது.  எனக்கும் இது பிடிச்சிருக்கு. இன்னும் ஒரு பத்து நிமிஷம் தாங்குவோமே!”

“உனக்கும் இந்த முறை இன்பம் அளிப்பது எனக்கு மகிழ்ச்சி தான். உன் இஷ்டப்பட்ட நேரத்தை எடுத்துக்கொள்.”

விமலை மெதுவாக தன்னுடைய விரலால் அவன் அணிந்திருந்த அந்த மாலையை தொட்டாள். மார்பில் சூடு தாங்காமல் சேதனன் பதறினான்.

“என்ன செய்கிறாய் நீ?” கோபத்தை விட பயம் தான் அதிகம் இருந்தது அவன் குரலில். விமலை விடவில்லை, மாலையை மேலும் வருட ஆரம்பித்தாள். வெப்பம் தாங்காமல் மாலையை கழற்றி வீசி எறிந்தான்.

“இவ்வளவு நேரம் நீ சொன்னதை நான் கேட்டேன். இப்போ நான் சொல்றதை நீ கேட்கணும்” அவன் காதின் பக்கம் குனிந்து கிசு கிசுத்தாள்.

மறுநாள் காலையில் யாரோ வந்து பார்க்கும் போது சேதனன் ரொம்பவே சேதமாகி செத்துப் போயிருந்தான்.


வெள்ளி கறுத்தால் சனி

வியாழக்கிழமைக்கும் வெள்ளிக்கிழமைக்கும் ஒரே சண்டை. இடையில் மாட்டிக் கொண்ட ஒரு ராகு காலம் மயிரிழையில் செத்துப்போனது. இருவருக்கும் இடையே சமரசம் பண்ண இறங்கி வந்த டிசம்பர் மாசம் வாங்கிக் கட்டிக்கொண்டது.

“ஒனக்கே ஒரு நெலையான எடம் கெடையாது. பாதி நாள் கார்த்திகைலயும் மீதி நாள் மார்கழிலயும் இருக்கே. நீ எங்களுக்கு நாட்டாமையா?” எப்பிடி மடக்கினேன் பாத்தியா என்று தொலைக்காட்சி விவாத்தில் கலந்து கொண்டவர் போல பெருமிதப்பட்டுக் கொண்டது வியாழன்.

“உங்களுக்குள்ள என்ன பிரச்சனை?” பஞ்சாயத்துக்காரரின் ஆர்வம் வெளிப்படையாகவே தெரிந்தது.

“ஏன்? பிரச்சனை இருந்தாத்தான் சண்டை போடணுமா?” இப்போ வெள்ளி ‘இது எப்படி’ என்பது போல் வியாழனைப் பார்த்தது. வெளியில் இருந்து ஒருவர் எட்டி எட்டிப்பார்த்தார், பார்க்க வெளிநாட்டுக்காரர் போல இருந்தது.

“என்னை நான் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்.  முகநூல் என்ற பெயரில் அறியப்படுபவன் நான். என்னைத் தவிர்த்து இந்த உலகில் எந்த சச்சரவும் நடக்க முடியாது. இங்கே ஒரு வன்கொடுமை நடப்பதாக அவதானித்து உணர்ந்தேன். உங்கள் கருத்து மோதலை என் இடத்தில் வந்து நீங்கள் நிகழ்த்தலாம்”

“ஸார், நீங்க ஆங்கிலத்திலேயே பேசுவது தமிழுக்கு நல்லது” வியாழனும் வெள்ளியும் சேர்ந்து கொண்டன.

“ஓகே. வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்?”

“இட் இஸ் அவர் ப்ராப்ளம்!”

சம்பந்தம் இல்லாமல் வந்தவர்களை விரட்டி விட்ட சந்தோஷத்தில் இரண்டு வயது முதிர்ந்தவர்களும் (இளமைக்கு எதிர்ப் பதம் கிழமை தானே) சிரித்துக் கொண்டார்கள். திடீரென வெள்ளி கறுப்பாக மாற ஆரம்பித்தார்.

“நீ ஒரிஜினல் தான்” வியாழன் சொன்னார். “கறுக்கிற வெள்ளி தான் ஒரிஜினலாமே!”


மரணம் என்னும் ஒரு வசீகர மர்மம்

மரணத்தைப் போல ஒரு வசீகரமான விஷயம் இருக்குமான்னு தெரியலை. அந்த வசீகரத்தின் முக்கிய காரணம் அதன் பின்னால் இருக்கும் மர்மம். மர்மமான விஷயங்கள் வசீகரித்தை உண்டாக்குவது தானே இயற்கை? மரணம் வாழ்வுக்கு எதிரான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது, ஆனால் சாவு என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியே. கவிஞர் வைரமுத்து தவம் என்றொரு கவிதையில் எழுதியிருப்பார் “எனக்குத் தெரியாமல் என் பிறப்பு நேர்ந்தது போல், எனக்குத் தெரியாமல் என் இறப்பும் நேர வேண்டும்”. எவ்வளவு அர்த்தமுள்ள தவம்!

சமீபத்தில் நேர்ந்த அம்மாவின் மரணம் இப்படி ஒரு ஏக்கத்தை தான் ஏற்படுத்தியது. அப்பேர்ப்பட்ட சாவு அது, விஜயதசமி அன்று மதிய நேரம், கொஞ்சம் அசௌகரியமாக உணர்ந்தார். சிகிச்சைக்காக போன ஆஸ்பத்திரியின் உள்ளே நடந்தே தான் போனார், நாடி பிடித்துப் பார்த்த டாக்டர் பல்ஸ் ரொம்ப குறைந்து விட்டதாக சொல்லி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதற்குள் உயிரை விட்டு விட்டார்.

தன்னைத் தேடி வந்த மரணத்திடம் கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் தன்னை ஒப்படைத்ததாகவே தோன்றியது எனக்கு.  சாகும் கலை என்னும் தலைப்பில் ஓஷோ மணிக்கணக்கில் பேசியிருக்கிறார், நானும் கேட்டிருக்கிறேன். ’நீங்க எல்லாம் பேசுவீங்க, எழுதுவீங்க, படிப்பீங்க, ஆனா அது எனக்கு கை வந்த கலை’ன்னு பத்து நிமிஷத்தில் செய்து காட்டி விட்டார் அம்மா.

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.  – (திருமந்திரம் – 145)

திருமூலர் சொன்ன மாதிரி காலப்போக்கில் இறந்து போன அம்மாவை மறந்தாலும் ‘dead like me’ எனச் சொல்லாமல் சொன்ன செய்தியை மறக்க முடியாது.