நிர்வாகத்தில் உதவும் பழமொழிகள்

முத்தையா ஒரு செங்கல் வியாபாரம் ஆரம்பித்தான். முதலில் நூறு கல் வித்தாலே பெரிய வியாபாரமா இருந்தது. வேலைக்கு ஆள் வச்சுக்கலை. தனக்கே சம்பள அளவில் ஏதாவது கிடைச்சா போதும்னு நடத்தினான். கொஞ்ச கொஞ்சமா வியாபாரம் கூடிச்சு. செங்கலை லோடாக கேட்க ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் வருமானம் ஏறுச்சு. வேலைக்கு ஒரு ஆள் வச்சா இன்னும் கொஞ்சம் வியாபாரம் கூட்டலாம்னு நெலமை வந்தது. வர்ற வருமானத்தில சின்ன பங்கு சம்பளமா குடுத்தா என்னன்னு தைரியமா வேலைக்கு ஆள் வச்சான். ஒரு ஆள் பத்து ஆள் ஆச்சு. ஒரு லாரி வாங்கி அதுவும் ஏழெட்டு ஆயிருச்சு. பர பரன்னு எல்லாருமா வேலை பார்த்து பெரிய வியாபாரமா வளர்த்துட்டாங்க.

முத்தையாவுக்கு இப்போ தன்கிட்ட வேலை பார்க்கிற பத்து பதினஞ்சி பேரை சரியா வேலை வாங்கினாலே போதும். வியாபாரம் தன்னால நடக்கும். அவன் ரொம்ப படிச்சிருக்கலைன்னாலும் தன்னோட அனுபவத்தினால யார்கிட்ட என்ன வேலை குடுக்கலாம், எப்படி அவங்களை சோர்வடையாம வேலை வாங்கலாம்னு தெரிஞ்சிகிட்டான். ஒருத்தன வச்சு இன்னொருத்தன கண்காணிக்கிறது எப்படிங்கிறது கூட கத்துகிட்டான்.

Mary Parker Follett என்னும் அமெரிக்க மேலாண்மை ஆலோசகர் (அவர் வாழ்ந்து முடிந்து 80 வருஷம் ஆகுது) ”management is the art of getting things done through people” என்கிறார். இவர் எழுதிய மேலாண்மையப் பற்றிய தத்துவங்கள் முக்கியமானவையாக பேசப்படுகிறது. முத்தையாவுக்கு இதெல்லாம் தெரியாது, ஆனால் இதத்தான் அவன் செஞ்சிகிட்டு இருக்கான்.

மேலாண்மையை ஆறு செயல்பாடுகளாக பிரிக்கிறார்கள்.

  1. Planning
  2. Organizing
  3. Staffing
  4. Leading
  5. Monitoring
  6. Motivation

Planning – திட்டமிடுதல். எவ்வளவு செங்கல் வித்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும், எவ்வளவு செங்கல் இங்கே விற்க முடியும், நாம் எவ்வளவு கொள்முதல் செய்து இருப்பு வைக்கலாம் என்பதெல்லாம் யோசித்து முடிவு செய்வது. பழமொழி நானூற்றில் உள்ள ஒரு பாடல் இது.

தற்றூக்கித் தன்துணையுந்தூக்கிப் பயன்தூக்கி
மற்றவை கொள்வ மதிவல்லார் - அற்றன்றி
யாதானும் ஒன்றுகொண்டு யாதானும் செய்தக்கால்
யாதானும் ஆகி விடும்.

இதில் உள்ள பழமொழி – ’யாதானும் ஒன்று கொண்டு யாதானும் செய்தக்கால் யாதானும் ஆகிவிடும்’.

இது நம்மால் செய்ய முடியுமா, இதை செய்து முடிக்கும் அளவு நமக்கு துணை உள்ளதா (ஆள் துணை மட்டுமில்லாமல் storage, transportation போன்றவையும் சேர்த்து), இதை முடிப்பதால் நமக்கு போதுமான பயன் உண்டா (வருமானம்) என்பதெல்லாம் யோசித்து அப்புறம் காரியத்தில் இறங்குபவர் வல்லவர்.

Organizing ஒருங்கிணைத்தல். அதாவது செயல்முறை வகுப்பது. செங்கலின் இருப்பை பராமரிக்க ஒருவர், வரவு செலவு எழுதி வைக்க ஒருவர், வசூல் செய்ய ஒருவர், இப்படி வேலைகளை பிரித்து கொடுத்து அவர்களுக்குள் ஒரு நல்ல பிணைப்பை ஏற்படுத்துவது.

முடிந்ததற்கு இல்லை முயற்சி முடியாது
ஒடிந்ததற்கு இல்லை பெருக்கம் வடிந்தற
வல்லதற்கு இல்லை வருத்தம் உலகினுள்
இல்லதற்கு இல்லை பெயர்.

இதில்  ‘வடிந்தற வல்லதற்கில்லை வருத்தம்’ என்று பழமொழி ஆசிரியர் சொல்வது organizing என்பதற்கு பொருத்தமாக உள்ளது. அதாவது எந்த ஒரு வேலையையும், அது எவ்வளவு கடினமானதா இருந்தாலும், தெளிவா ப்ளான் பண்ணி பிரிச்சிகிட்டோம்னா அது நல்லபடியா முடியும்..

Staffing சரியான ஆட்களை வேலைக்கு அமர்த்துவது. அவர்கள் தகுதி தெரிந்து சரியான வேலை கொடுப்பது. பழமொழி  நானூறில் இதற்கு நிறைய பாடங்கள் உள்ளது.

தெற்ற அறிவுடையார்க் கல்லால் திறனிலா
முற்றலை நாடிக் கருமஞ் செயவையார்
கற்றொன் றறிந்து கசடற்ற காலையும்
மற்றதன் பாற்றேம்பல் நன்று.

தெளிந்த அறிவுடையவர் திறன் இல்லாதவனை வேலையில் அமர்த்த மாட்டார். கற்று அறிந்தவரையும் குற்றம் இல்லாதவரையும் வேலைக்கு வைத்துக் கொள்வார்கள். யார் யாரை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு நிறைய பழமொழிகள் உள்ளன.

Leading வழி நடத்துதல். இது ஒரு மேனேஜரின் வேலை. எந்த சூழ்நிலையிலும் சரியான முடிவெடுக்கும் திறன். உதாரணத்திற்கு வேலை செய்பவர்கள் ஸ்ட்ரைக் செய்தால் அவர்களை வழிக்கு கொண்டு வர தெரிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்க்கு சப்ளை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்
அந்நீர் அவரவர்க்குத் தக்காங் கொழுகுபவே
வெந்நீரின் தண்ணீர் தெளித்து.

சிலரிடம் தன்மையாக நடந்து கொண்டால் தான் வேலை வாங்க முடியும். வேறு சிலரிடம் கடுமை காட்டினால் தான் வேலை நடக்கும். குளிக்கும் போது தேவைக்கேற்ப தண்ணீரில் வெந்நீர் கலப்பது போல அவரவர் தன்மைக்கேற்ப வேலை வாங்க வேண்டும். ஒரு மேனேஜருக்கு உபயோகமான பாடம் இது.

Monitoring – கண்காணித்தல். அவரவர் வேலையை பிரித்து ஒப்படைத்து விட்டாலும், அவர்கள் நல்லவர் ஆனாலும் வல்லவர் ஆனாலும் அவர்களிடம் வேலையின் நடப்பு நிலை பற்றி தொடர்ந்து விசாரித்து வர வேண்டும். இதற்கு ரொம்பவே பொருத்தமான பாடல் ஒன்று உண்டு.

விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்
முட்டா தவரை வியங்கொளல் வேண்டுமால்
தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும்
தட்டாமல் செல்லா துளி.

தொட்டாலே துவளும் துளிரின் மேல் உளியை வைத்தாலும், அந்த உளியை தட்டினால் ஒழிய அது தளிரை வெட்டாது. அது போல பிறரிடம் ஒரு காரியத்தை ஒப்படைத்தால் தொடர்ந்து அவரிடம் அது என்னாயிற்று என்று விசாரித்து வர வேண்டும்.

Motivation ஊக்கப்படுத்துதல். வேலை பார்ப்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், கொஞ்சம் ஊக்கம் சேர்த்து கொடுத்தால் அங்கே வேலை நன்றாக நடக்கும். எல்லாருமே ஒரு அங்கீகாரத்திற்காக ஏங்குபவர்கள் தான். இங்கே ஒரு ஊக்கம் தரும் பாடல்.

வீங்குதோட் செம்பியன்சீற்றம் விறல்விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால் - ஆங்கு
முடியும் திறத்தால் முயல்கதாம் கூரம்
படியிழுப்பின் இல்லை யரண்.

கூர்மையான அம்பை வில்லில் பொருத்தி அதன் அடியை இழுத்தால் எதிரே இருக்கும் எந்த தடையும் பொடி பொடியாகி விடும். நம்முடைய முயற்சி அந்த வகையில் இருந்தால் எவ்வளவு கடினமான காரியத்தையும் சாதிக்கலாம்.

மேலே சொன்ன செய்யுள்கள் பழங்காலத்தில் எழுதப்பட்டதால் புரிவதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனால் அதன் பொருள் உணர்ந்து பார்க்கும் போது இப்போதுள்ள மேலாண்மைக்கும் அது பொருத்தமாகவே உள்ளது. பழமொழி நானூறு மொத்தம் நானூறு பாடல்கள் கொண்டது. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் வருகிறது. இதன் ஆசிரியர் முன்றுறையரையனார். இதன் காலம் ஐந்தாம் நூற்றாண்டு என கருதப்படுகிறது. தற்சிறப்பு பாயிரத்தில் ‘பண்டைப் பழமொழி நானூறும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஐந்தாம் நூற்றாண்டிலேயே இந்தப் பழமொழிகள் பழமையானது என்றால் அவை வழக்கத்தில் தோன்றிய காலத்தை யோசித்துப் பார்த்தால் அதன் தொன்மை புரியும்.

பழமொழி நானூறு பல விஷயங்கள் பற்றி பேசுகிறது. கல்வி, ஒழுக்கம், பொருள், முயற்சி, நட்பு, அரசியல், நன்றி, காரியம் முடிக்கும் சாதுர்யம், இல்வாழ்க்கை, இப்படி அது தொட்டுச் செல்லும் தலைப்புகள் அதிகம். பகைவனை எப்படி சமாளிப்பது என்று கூட பாடல்கள் உண்டு. இதோ ஒரு உதாரணம்.

இயற்பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே
அயற்பகை தூண்டி விடுத்தோர் - நயத்தால்
கறுவழங்கிக் கைக்கெளிதாய்ச் செய்க அதுவே
சிறுகுரங்கின் கையாற் றுழா.

தனது பகைவனை வெல்ல நினைப்பவன், முதலில் தனது பகைவனுக்கு எதிராக இன்னொரு பகையை வெளியே இருந்து தூண்டி விட்டு ஒரு குழப்ப நிலையை உருவாக்கி, தமது பகை தீர்ப்பதற்கு சாதகமான நிலையை உருவாக்கலாம். பெரிய குரங்கு வேகின்ற கூழை சிறிய குரங்கின் கையாயால் கிளறி விடுவது போல. ’சிறுகுரங்கின் கையாற் றுழா’ என்பது பழமொழி. பகையைப் பற்றிய வகையில்  இந்த பழமொழி வந்தாலும், இதை வணிகத்தில், செய்யும் தொழிலில், போட்டியாளர்களை சமாளிக்கும் விஷயத்தில் பொருத்திப் பார்க்கலாம்.

இந்த பழமொழியெல்லாம் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பே பேச்சு வழக்கில் இருந்துள்ளது. சிக்கலான நிர்வாக தத்துவமெல்லாம் சர்வ சாதாரணமா பழமொழியா பேசியிருக்காங்க. வரலாற்றில் படிச்சிருக்கோம், பழங்காலத்தில் தமிழர்கள் வாணிபத்தில் வல்லவராய் இருந்தார்கள், கடல் கடந்து வாணிபம் செய்து நிறைய பொருள் சம்பாதித்தார்கள் என்று. இந்த நிர்வாகத் தெளிவு கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அதுதான் இன்றைக்கும் முத்தையா மாதிரி வியாபாரிகளுக்கு இரத்தத்திலேயே ஊறியிருக்கு போல.

8 thoughts on “நிர்வாகத்தில் உதவும் பழமொழிகள்

  1. சிறப்பான பயனுள்ள நிர்வாகப்பழமொழிகள் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  2. சுவையுள்ள பதிவு;
    மிகவும் விரும்பிப் படித்தேன்; வாழ்த்துக்கள் Rie!

    // வரலாற்றில் படிச்சிருக்கோம், பழங்காலத்தில் தமிழர்கள் வாணிபத்தில் வல்லவராய் இருந்தார்கள், கடல் கடந்து வாணிபம் செய்து நிறைய பொருள் சம்பாதித்தார்கள் என்று.
    இந்த நிர்வாகத் தெளிவு கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்//

    I like this point of your thinking!
    தமிழ் இலக்கியம் சொல்வது: வெறுமனே நேர் நேர் தேமாவோ நக்மாவோ அல்ல:)
    அகம்/ புறம், திணை/ துறை, சொல்லழகு மட்டும் தானா? -ன்னா… அதுவும் இல்லை!

    அதையும் தாண்டி, இப்படி வாழ்வியல் கருத்துக்கள்!
    எதற்கும் உடையாத காதல், எதற்கும் அசங்காத வீரம்…
    எந்த நிலைக்கும் உள்வாங்கி வெற்றி கொள்ளும் வணிகம் -ன்னு பல முகங்கள் சங்கத் தமிழுக்கு!

    Myself being a Risk Analytic in Structured Financial Products…
    Have seen & quoted திருக்குறள் Risk Techniques in my presentations in New York!
    Disaster Recovery/ BCP புறநானூற்றில் உண்டு; அதன் அடிப்படை என்ன? -ன்னு சொல்லிக் குடுக்கும்!

    இது போல், வாழ்வியல்-இலக்கியப் பதிவுகளைத் தொடர்ந்து தாருங்கள்!
    Best Wishes!:)

    1. Just one small correction, Rie, With your permission:)
      வடிந்தற வல்லதற்கில்லை வருத்தம் என்பது பழமொழி அன்று; அது கருத்து!
      அதற்கு வந்த பழமொழி = உலகினுள், இல்லதற்கு இல்லை பெயர்!

      உலகத்துல இல்லாத ஒன்னுக்குப் பேரு இருக்கா?
      கண்டோ, கேட்டோ, உணர்ந்தோ…. இருக்குற பொருளுக்குத் தானே பேரு வைக்கிறோம்?
      அதே போல்…
      * முடிந்து போன விசயத்துக்கு முயற்சி இல்லை,
      * முடியாது ஒடிந்து போனதுக்கு பெருக்கம் (வளர்ச்சி) இல்லை; So we shd not break, even if not complete
      * வடிந்தற வல்லதற்கு வருத்தம் இல்லை = குற்றம் ஏற்படாம ஒரு பொருளைச் செஞ்சா வருத்தம் இல்லை = Defect free product/process results in Satisfaction
      ———————-

      For the sake of summary,
      நீங்கள் பதிவிலிட்ட பழமொழிகளை மட்டும் தொகுக்கட்டுமா?:)

      1. யாதானும் ஒன்றுகொண்டு, யாதானும் செய்தக்கால், யாதானும் ஆகி விடும்
      = No Random Management

      2. உலகினுள், இல்லதற்கு இல்லை பெயர்
      = As non existent objects of the world dont have name, non defect products dont have (customer) dissatisfaction

      3 கற்று ஒன்று அறிந்து, கசடற்ற காலையும், மற்று அதன் பால் தேம்பல் நன்று
      = Even if highly qualified, if they are unethical, stay away

      4 வெந்நீரின் தண்ணீர் தெளித்து
      = Even if opposites, use combination of techniques

      5. தட்டாமல் செல்லா துளி
      = Only Motivation moves things in the process chain

      6. கூர் அம்பு, அடி இழுப்பின், இல்லை அரண்
      = Bullet Proofing;
      = With a very high velocity/momentum, if u hit an armour, even that will break;

      7. சிறு குரங்கின் கையால் துழா
      = If a big monkey’s hands doesnt get in the pot, it will not get stuck; It uses small monkey’s hand and extract it

      1. நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். அந்த பாடலின் பழமொழி ‘உலகினுள், இல்லதற்கு இல்லை பெயர்’ என்பதுதான். ஆனால் கட்டுரையின் நோக்கம் மேலாண்மையின் ஆறு நிலை செயல்பாட்டுக்குள் பழமொழி நானூறை கொண்டு வருவது. அதனால் தான் அந்தப் பாடலில் பழமொழியை விட்டு விட்டு ‘வடிந்தற வல்லதிற்கு இல்லை வருத்தம்’ என்பதைக் காட்டியிருக்கிறேன். பழமொழியை விட இந்த வரியை powerful ஆக உணர்கிறேன்.

  3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்

    அன்புடன்
    மதுரைத்தமிழன்

Comments are closed.