அவனே நம்மைக் காக்கிறான்!

தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்குந்
தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்குந்
தானொரு காலந் தண்மழை யாய்நிற்குந்
தானொரு காலந்தண் மாயனு மாமே.   – (திருமந்திரம் – 415)

விளக்கம்:
தனிச்சுடராய் நிற்கும் சூரியன் நம் சிவபெருமானே. சுழன்று வீசும் சூறாவளிக் காற்றும் அவனே. குளிர்ந்த மழையாகப் பொழிபவனும் நம் சிவபெருமான் தான். இவற்றில் இருந்து நம்மைக் காப்பவனும் அதே சிவபெருமான் தான்!


நான் அவள் அல்லள்!

ரயில் இன்ஜின் போன்ற
மூச்சுக் காத்தும்
வெட்கம் மறந்த
கண்ணீரும் அவன்
சுக்கிலத்தின் பழமையைச்
சொன்னது!

இடுப்பசைத்து அவள்
ஏந்திக் கொண்ட விதம்
“நான் உன்னை விலக மாட்டேன்”
என்பதாம்!

“நான் அவளைப் போன்றவளில்லை”
என்பதை
அடுத்த உடலசைவு
உறுதி செய்தது!


எங்கள் அண்ணல்!

உடலாய் உயிராய் உலகம தாகிக்
கடலாய் கார்முகில் நீர்ப்பொழி வானாய்
இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி
அடையார் பெருவெளி அண்ணல் நின்றானே.   – (திருமந்திரம் – 413)

விளக்கம்:
உடலாகவும், உயிராகவும், உலகமாகவும் தானே உள்ளான் சிவபெருமான். அவனே கடலாகவும், மேகமாகவும், மழையாகவும் விளங்குபவன். எங்கும் குறைவில்லாமல் உட்பொருளாய் இருப்பவன் அவனே. அவன் நம்மால் அடைய முடியாத பெருவெளியில் இருக்கிறான்.


அவன்தான் எல்லாம்!

தானே திசையொடு தேவரு மாய்நிற்குந்
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந்
தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந்
தானே உலகில் தலைவனு மாமே. – (திருமந்திரம் – 412)

விளக்கம்:
நம் தலைவனான சிவபெருமானே இந்த உலகுக்கும் தலைவனாவான். அவனே எல்லாத் திசைகளாகவும் இருக்கிறான். எல்லாத் திசைகளிலும் அவனே இருக்கிறான். திசைகளைக் காக்கும் தேவர்களாக இருக்கிறான். ஆதிக்கடவுளான அவன் நமது உடலாகவும், உயிராகவும், உடலும் உயிரும் பொருந்தியிருக்கும் தத்துவமாகவும் விளங்குகிறான். அவனே கடலாகவும் மலையாகவும் மற்ற அனைத்துமாகவும் இருக்கிறான்.


அறிவுக்கு அறிவாய் விளங்குபவன்!

புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே. – (திருமந்திரம் – 411)

விளக்கம்:
இன்பம், துன்பம் ஆகிய இரு வேறுபட்ட நிலைகளால் ஆனது தான் நம் வாழ்க்கை. இது போன்ற எல்லாவிதமான இரு வேறுபட்ட நிலைகளிலிலும் சிவபெருமான் இருக்கிறான். விடியலாகவும் இருக்கிறான், அவனே இருளாகவும் இருக்கிறான். அவன் புகழிலும் இருக்கிறான், இகழிலும் இருக்கிறான். அவன் நம் உடலில் புகுந்திருக்கிறான். நம் உயிராக இருக்கிறான். நம் அறிவினில் நிரந்தரமாகக் கலந்திருக்கிறான்.


சுத்த மாயையில் தோன்றியவை!

ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள்
போதித்த வானொலி பொங்கிய நீர்ப்புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே. – (திருமந்திரம் – 410)

விளக்கம்:
இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோர் எட்டுத்திசைகளுக்கான காவலர் ஆவார்கள். இந்த எட்டுத்திசைக் காவலர்கள், சூரியன், சந்திரன், போதனை தரும் நாதம் நிரம்பிய வானம், நீர், நிலம் ஆகிய அனைத்தும் சுத்த மாயையின் விந்துவில் இருந்து தோன்றியவை.  சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் ஐந்து தன்மாத்திரைகளும் சித்தம், மனம், அகங்காரம், புத்தி ஆகியவையும் அதே சுத்த மாயையில் இருந்து தோன்றியவையே!


8400000 உயிரினங்கள்!

அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்
மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்
பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்
கிப்பரி சேஇருள் மூடிநின் றானே. – (திருமந்திரம் – 409)

விளக்கம்:
ஊர்வன, பறப்பன, நீரில் வாழ்வன, விலங்குகள், மனித இனம், தாவரங்கள் ஆகிய எல்லாம் சேர்த்து, உலகின் மொத்த உயிரின வகைகளின் எண்ணிக்கை எண்பத்து நான்கு நூறாயிரம் (8400000) ஆகும். இவை அனைத்திலும் பரவியிருக்கும் சிவபெருமானே நமக்குத் தக்க புகலிடம் தருவான். அவனைத் தஞ்சம் அடைவதே நமக்குக் கிடைக்கும் உண்மையான பரிசாகும். வாழ்வில் நமக்குக் கிடைக்கும் பொருள், புகழ் போன்ற மற்ற எதுவும் பொய்யான பரிசாகும். பொய்யான அவற்றை உண்மை என்று நம்பினால், நாம் ஆணவம் என்னும் இருளில் மூழ்கி விடுவோம்.


நன்மையும் தீமையும் சேர்ந்தது தான் உலகம்!

நாதன் ஒருவனும் நல்ல இருவருங்
கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்
ஏது பணியென் றிசையும் இருவருக்
காதி இவனே அருளுகின் றானே. – (திருமந்திரம் – 408)

விளக்கம்:
நன்மைகளையும் தீமைகளையும் கூட்டிக் குழைத்து உருவாக்கப்பட்டது தான் இந்த உலகம். நன்மை தீமைகளைக் கூட்டிக் குழைப்பவர்கள் தலைவனாகிய சிவபெருமான், பிரமன், திருமால் ஆகியோர் ஆவர். பிரமனும் திருமாலும் ‘எனக்கு அடுத்து என்ன வேலை?’ என்று சிவபெருமானிடம் கேட்டு ஆர்வத்தோடு தமது தொழிலைச் செய்கிறார்கள். நமது ஆதிக்கடவுளும் அவர்கள் இருவரையும் வழி நடத்துகிறார்.


சிவசக்தியரின் தலைமை கொண்ட அமைப்பு!

ஓராய மேஉல கேழும் படைப்பதும்
ஓராய மேஉல கேழும் அளிப்பதும்
ஓராய மேஉல கேழுந் துடைப்பதும்
ஓராய மேஉல கோடுயிர் தானே. – (திருமந்திரம் – 407)

விளக்கம்:
சிவசக்தியரின் தலைமையில் பிரமன், திருமால், உருத்திரன் ஆகியோரைக் கொண்ட அமைப்புத் தான் உலகின் அனைத்துக்கும் காரணமாகும். ஏழு உலகங்கள் தோன்றுவது இந்த அமைப்பினால் தான். ஏழு உலகங்களும் காக்கப்படுவதும் இந்த அமைப்பினால் தான். உலகேழும் அழிக்கப்படுவதும் இந்த சிவசக்தியரின் தலைமை கொண்ட அமைப்பினால் தான். உலகின் சீவன்களுக்கெல்லாம் உயிர்களைப் பொருத்துவது இந்த அமைப்புத் தான்.


எங்கேயும் போய் தேட வேண்டியதில்லை!

தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்
கூடும் பிறவிக் குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம் துள்ளத்துள் ளேநின்று
நாடும் வழக்கமும் நான்அறிந் தேனே. – (திருமந்திரம் – 406)

விளக்கம்:
நம் உடலும் உயிரும் இசைந்திருக்க ஒரு தன்மை தேவை. அந்தத் தன்மையைக் கொடுக்கும் நந்தியம்பெருமானை நாம் எட்டுத் திசைகளிலும் தேடுகிறோம். நம் பெருமான் நம் மனத்துள்ளே தான் வசிக்கிறான். வெளியே எங்கேயும் தேட வேண்டியதில்லை. நம் மனத்துள் வசிக்கும் பெருமானை நோக்கி அக வழிபாடு செய்வதை நாம் வழக்கமாகக் கொள்வோம்.