உயிரின் விதி விந்திலேயே தீர்மானமாகிறது!

கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்துமற் றோரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே.  – (திருமந்திரம் – 454)

விளக்கம்:
மெய்யுணர்வு பெற்ற ஞானிகளால் மட்டுமே நிலம் முதல் புருடன் வரை ஆன இருபத்தைந்து தத்துவங்களையும் அறிய முடியும். பெண்ணின் கருப்பைக்குள் புகும் முன்னரே, ஆணின் விந்தில் அந்த இருபத்தைந்து தத்துவங்களும் பொருந்தி இருக்கிறது. இந்த உண்மையை ஞானிகளைத் தவிர மற்றவர்கள் உணர மாட்டார்கள். ஆணின் உடலில் உள்ள விந்து ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ, பெண்ணின் கருப்பைக்குள் ஓடிச்சென்று விழுகிறது.

வினை தீர்க்கப் பிறந்திருக்கிறோம்!

இன்புறு காலத் திருவர்முன் பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத் தமைத்தொழிந் தானே.  – (திருமந்திரம் – 453)

விளக்கம்:
ஓர் உயிர் கருவாக இந்த பூமியில் உருவாகக் காரணம், தன்னுடைய முன் வினைகளைத் தீர்ப்பதற்காகவே! துன்பம் மிகுந்த இந்தத் துயர வாழ்க்கையின் ஆயுளையும், வாழ்க்கை முறையையும் நம் சிவபெருமானே அமைத்துக் கொடுக்கிறான். ஒரு தாய் தந்தையின் கூடலின் போதே பிறக்கப் போகும் உயிரின் விதி தீர்மானம் ஆகிவிடுகிறது.

கருவிலேயே துணையாக இருப்பவன்!

அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே.  – (திருமந்திரம் – 452)

விளக்கம்:
தியானத்தினால் உணரக்கூடிய மூலாதாரத்தின் மேலே, நெருப்பும் நீரும் செறிந்துள்ள இடம் ஒன்று உள்ளது. அதுவே கரு உருவாகும் இடம். ஓர் உயிர் கருவாக உருவாகும் போது, ஞானமே உருவான நமது சிவபெருமான், தமது திருவடியை அங்கே பதிக்கிறான். தாம் முழுமையாக உருவாகும் வரை பொறுமையுடன் காத்திருக்கும் கருவான இனிய உயிரில் தானும் கலந்து நிற்கிறான் நம் இறைவன். கருவில் இருக்கும் அந்த உயிரைப் பத்து மாதங்களும் உடன் இருந்து காத்து அருள்பவன், நம் சிவபெருமானே!

கருவில் உயிரைக் காப்பவன்!

ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
சாக்குகின் றானவ னாதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே.  – (திருமந்திரம் – 451)

விளக்கம்:
ஓர் உயிரைக் கர்ப்பப்பையில் தோற்றுவிப்பவன் நம் சிவபெருமான். அந்த உயிர் தனது முந்தைய பிறவியில் விட்டுப் பிரிந்த இருபத்தைந்து தத்துவங்களையும் மறுபடியும் தோற்றுவிக்கிறான். அந்தத் தத்துவங்களை கருவில் உள்ள உயிருடன் சேர்க்கிறான். உயிரை உருவாக்கிய நம் சிவபெருமான் அந்த உயிருடன் கலந்திருந்து, அந்த உயிருக்குத் தேவையானவற்றைச் செய்து அருள்கிறான்.

இருபத்தைந்து தத்துவங்கள் – ஐம்பூதங்கள், ஐந்து தன்மாத்திரைகள், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், நான்கு அந்தக்கரணங்கள், ஒரு புருடன்.

நீரில் கலந்த பால் போல் நம்மில் கலந்திருக்கிறான்!

ஆரும் அறியாத அண்டத் திருவுருப்
பார்முத லாகப் பயிலுங் கடத்திலே
நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே.  – (திருமந்திரம் – 450)

விளக்கம்:
இந்த உலகின் மொத்த வடிவமே சிவபெருமானின் திருவுருவமாகும். அதனால் அவன் உருவத்தை யாராலும் காண முடியாது. பூமி முதலான ஐந்து பூதங்களால் ஆன இந்த உடலில் சிவபெருமான் நீரில் கலந்த பால் போல, பிரிக்க முடியாதவாறு கலந்திருக்கிறான். அவனது அந்த அருள் தரும் தன்மையை நாம் மனச்சோர்வினால் மறக்கக்கூடாது. சிவபெருமான் நம் உடலிலும் உயிரிலும் கலந்திருக்கிறான் என்பதை நாம் எப்போதும் உணர்ந்திருந்தால், இடையறாத இன்பம் பெறலாம்.

ஞானமே வடிவானவன்!

உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்
விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்
மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்ணின்ற மாமணி மாபோத மாமே.  – (திருமந்திரம் – 449)

விளக்கம்:
சிவபெருமான் நம்முள்ளே ஒளி விடும் சோதியாகவும், நம் உயிருடன் பொருந்தி இருக்கும் உடலாகவும் விளங்குகிறான். விண்ணில் வாழும் தேவர்கள் விரும்பும் மேலான பொருளாகவும், இந்த மண்ணுலகில் வாழும் பக்தர்களால் புகழப்படும் திருமேனியனாகவும் அவனே விளங்குகிறான். மிகப்பெரிய ஞான வடிவமாக விளங்குபவன் நம் சிவபெருமான்.

மிக அகலமானவன்!

அகன்றான் அகலிடம் ஏழுமொன் றாகி
இவன்றா னெனநின் றெளியனும் அல்லன்
சிவன்றான் பலபல சீவனும் ஆகி
நவின்றான் உலகுறு நம்பனு மாமே.  – (திருமந்திரம் – 448)

விளக்கம்:
சிவபெருமான் ஏழு உலகங்களையும் தனக்குள் அடங்கி இருக்கச் செய்கின்றவன். அவ்வளவு அகலமான உருவத்தை உடையவன் அவன். இவன் தான் கடவுள் என எளிதில் சுட்டிக் காட்ட முடியாத அரியவன் அவன்! அவனே இந்த உலகில் எல்லா உயிர்களிலும் கலந்திருக்கிறான். உலகின் ஒரே நம்பத் தகுந்தவனான நம் சிவபெருமான் நமக்களிக்கும் உபதேசத்தைக் கேட்டுப் பயன் பெறுவோம்.

அனைத்துக்கும் ஆதாரமானவன்!

ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம்
ஆதி படைத்தனன் ஆசில்பல் ஊழி
ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை
ஆதி படைத்தவை தாங்கிநின் றானே.  – (திருமந்திரம் – 447)

விளக்கம்:
முதன்மையானவன் ஆன சிவபெருமானே இந்த உலகின் ஆதாரமான ஐந்து பூதங்களைப் படைத்தான். அவனே பல யுகங்களைப் படைத்து அருள் செய்தான். எண்ணில்லாத தேவர்களைப் படைத்தவன் நம் சிவபெருமானே! அவன் தான் படைத்த அனைத்தையும் அருள் செய்து காக்கின்றான்.

படைத்தவன் அவனே! ஆள்பவனும் அவனே!

படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே.  – (திருமந்திரம் – 446)

விளக்கம்:
சிவபெருமான் ஏழு உலகங்களையும் படைத்து அவற்றை எல்லாம் தன்னுடைய உடைமையாகக் கொண்டான். வானுலகில் உள்ள தேவர்களை எல்லாம் படைத்தவன் அவனே! அவர்களை எல்லாம் ஆள்பவனும் அவனே! இந்த உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் அவனே படைத்து ஆள்கிறான். எல்லாவற்றையும் படைத்தவன் நம் சிவபெருமான் என்பதால், அவனே மேலானவனாகிறான்.

நான் அவன் விருப்பத்திற்கு உரியவன்!

உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்
உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.  – (திருமந்திரம் – 445)

விளக்கம்:
சிவபெருமான் ஏழு உலகங்களையும் தன்னுடைய விருப்பத்தினால் படைத்தான். பல யுகங்களையும் விரும்பிப் படைத்தான். மண், காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களையும் விரும்பியே படைத்தான். இந்த உடலும் உயிரும்  படைக்கப் பட்டதும் அவன் விருப்பப்படியே !

நாமெல்லாம் சிவபெருமானின் விருப்பத்திற்கு உரியவர்களே.