இருள் சூழ்ந்த இப்பிறவியை அறுப்பவன்!

செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம் இறை
மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்
கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும்
அந்தார் பிறவி அறுத்துநின் றானே. – (திருமந்திரம் – 405)

விளக்கம்:
சிவபெருமானே செந்தாமரை மலரில் வசிக்கும் பிரமனாக இருக்கிறான். அவனே தீயின் நிறம் கொண்ட உருத்திரனாக இருக்கிறான். மேகம் போன்ற கரிய நிறம் கொண்ட திருமாலாகவும் நம் சிவபெருமானே இருக்கிறான். பூங்கொத்துக்களைச் சூடி இருக்கும் பெண்களை ஆடவர் நாடுவதற்குக் காரணமான மாயையாக இருப்பவனும் சிவபெருமான் தான். இருள் சூழ்ந்த இந்தப் பிறவியை அறுக்கக் கூடியவனும் நம் சிவபெருமானே!

எல்லாமாய் இருப்பவன் ஒருவனே!

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழுந் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே. – (திருமந்திரம் – 404)

விளக்கம்:
ஏழு உலகங்களையும் படைத்தவன் ஆதிக்கடவுளான சிவபெருமான் ஆவான். தான் படைத்த உலகங்களைக் காப்பவனும் அவனே. உலகின் அனைத்து உயிர்களையும் அழிப்பவனும் மறுபடியும் படைப்பவனும் அவனே! அவனே உலகமாகவும் உள்ளான். அவனே உலகில் வாழும் உயிர்களாகவும் உள்ளான்.

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்!

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கும் அரந்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராக இசைந்திருந் தானே. – (திருமந்திரம் – 403)

விளக்கம்:
தானாய் நின்று நிறைந்தவன் மகேசுரன். அவனது ஆணைக்கிணங்க சென்று இயங்கும் உருத்திரன், திருமால், வாசனை நிறைந்த தாமரை மலரில் வசிக்கும் பிரமன் ஆகியோரின் செயல்களிலெல்லாம் மகேசுரன் பொருந்தி இருக்கிறான்.

மனோன்மணி மங்கலி!

வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரணி காரிய மாகக் கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி போதாதி போதமு மாமே. – (திருமந்திரம் – 402)

விளக்கம்:
கச்சினை அணிந்த கொங்கைகளை உடைய மனோன்மணி மங்கலமானவள். உலகில் அனைத்துக் காரியங்களுக்கும் அவளே காரணமாக இருக்கிறாள். அந்தக் காரியங்களில் கலந்தும் இருக்கிறாள். அவளே வேதப்பொருளாக இருக்கிறாள். வானவர்களும் மயங்கும் மாயையாக இருக்கிறாள். முழுமையான சக்தி கொண்ட அவள் நம் அறிவினில் ஞானமாக விளங்குகிறாள்.

திரிபுரை அனைத்திலும் நிறைந்திருக்கிறாள்

அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில்
அளியார் திரிபுரை யாமவள் தானே
அளியார் சதாசிவ மாகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே. – (திருமந்திரம் – 401)

விளக்கம்:
திருவருள் நிறைந்தவள் சக்தி. அவளே திரிபுரையாகவும் விளங்குகிறாள். அவள் சதாசிவனுடன் நீங்காதிருந்து ஐந்தொழில்களிலும் துணையாக இருக்கிறாள். சுத்தமாயையின் காரியமாகிய பரவிந்து, அபர நாதம், அபரவிந்து என்னும் மூன்று நிலைக்களங்களிலும் அவள்  இருக்கிறாள்.

ஐவரின் ஐந்து தொழில்கள்

ஆகாய மாதி சதாசிவ ராதியென்
போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர்
மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம்
ஆகாயம் பூமி காண அளித்தலே. – (திருமந்திரம் – 400)

விளக்கம்:
வானம், காற்று, தீ, நீர், நிலம் ஆகிய ஐந்து பூதங்களுக்கும் முறையே சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரமன் ஆகியோர் தலைவராக இருக்கிறார்கள். எதிலும் நீங்காமல் இருக்கும் சிவசக்தி ஆனவர்கள், இந்த ஐவரின் தொழிலிலும் பங்கு கொள்கிறார்கள். மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரமன் ஆகிய நால்வரும் உருவம் உடையவர்கள். சதாசிவம் அரூபமானவர். இந்த ஐவரின் தொழிலைத்தான் நாம் பூமியாகப் பார்க்கிறோம்.

உலக இயக்கம் சிவசக்தி விளையாட்டாகும்

உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமா
மற்றைய மூன்று மாயோ தயம்விந்து
பெற்றவன் நாதம் பரையிற் பிறத்தலால்
துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே. – (திருமந்திரம் – 399)

விளக்கம்:
இதற்கு முந்தைய பாடல்களில் பார்த்தபடி, இந்த உலக இயக்கம் என்பது சிவசக்தி இடையில் நடைபெறும் விளையாட்டாகும்.

காரியக் கடவுளும் காரணக் கடவுளும்

ஆணவச் சத்தியும் ஆம்அதில் ஐவருங்
காரிய காரண ஈசர் கடைமுறை
பேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்து
ஆணவம் நீங்கா தவரென லாகுமே. – (திருமந்திரம் – 398)

விளக்கம்:
பிரமன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆகிய ஐவரின் ஐந்தொழிலால் இந்த உலகம் இயங்குகிறது. ஆணவ மலம் நீங்கப்பெறாத இந்த ஐவரும் காரியக் கடவுள் ஆவார்கள். இவர்களுக்கெல்லாம் மேலே காரணக் கடவுள் ஒருவன் இருக்கிறான். ஆணவம் இல்லாத அவன் நம் சிவபெருமான் ஆவான்.

எல்லாவற்றிலும் புகுந்திருக்கிறான்!

புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்
புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்
புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்
புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே. – (திருமந்திரம் – 397)

விளக்கம்:
உலகத்துக்கு எல்லாம் தலைவனான உருத்திரனின் செயல்களில் எல்லாம் நம் சிவபெருமான் புகுந்திருக்கிறான். கையில் சக்கரத்தை வைத்துள்ள திருமாலின் செயல்களிலும் சிவபெருமான் புகுந்திருக்கிறான். தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனின் செயல்களிலும் சிவபெருமான் புகுந்திருக்கிறான். அவன் இல்லாத செயல் என்று எதுவுமே இல்லை என்பதால் அவனே எல்லோருக்கும் தலைவனாகிறான்.

சிவசக்தி விளையாட்டு!

ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே. – (திருமந்திரம் – 396)

விளக்கம்:
எல்லாப் படைப்பிலும் சிவன் அறிவு வடிவாகவும், சக்தி செயல் வடிவாகவும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இணக்கம் மிகுந்தவர்கள். இவர்களின் விளையாட்டுத் தான் இந்த உலகத்தின் இயக்கமாகும். பருவங்கள் மாறுவதும், பயன்கள் மாறுவதும் சிவசக்தி விளையாட்டே! உலகம் முழுவதும் உள்ள எல்லாவற்றிலும் சிவசக்தியானவர்கள் ஒன்றி இருக்கிறார்கள். அவர்கள் இல்லாத இடம் என்று எதுவுமில்லை, அவர்கள் இல்லாத பொருளும் எதுவுமில்லை.