கருவுக்கு உரு கொடுத்தவன்!

கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்
கூட்டுகின் றான்குழம் பின்கரு வையுரு
நீட்டுநின் றாகத்து நேர்ப்பட்ட வாறே.  – (திருமந்திரம் – 471)

விளக்கம்:
அனைத்து வேதங்களிலும் இருந்து நான் கேட்டுத் தெரிந்து கொண்டது என்னவென்றால், இந்த உலகத்தைப் படைத்தவன் நம் சிவபெருமான் என்பதையே! அழிவில்லாத பெரும் சுடராகிய அவன், இந்த உலகின் முதல் படைப்பாளி ஆவான். ஆண் பெண் கூட்டுறவின் போது சேரும் விந்து மற்றும் சுரோணிதத்திலிருந்து கருவை உருவாக்குபவன் அவனே! உருவான கருவுக்கு உருவம் கொடுத்து நல்லதொரு உடலை உருவாக்குபவனும் அவனே!


உடலும் உயிரும் மட்டுமில்லை! இன்னொன்று இருக்கிறது!

உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே.  – (திருமந்திரம் – 470)

விளக்கம்:
நமக்கு உடல் அமைத்துக் கொடுத்தது போலவே, அதில் உயிர் வைத்தது போலவே, உடல் சரியாக இயங்க ஒன்பது வாசல்களை வைத்தது போலவே, உறுதி கொண்ட நமது சிரசின் மேலே ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரையின் உச்சியில் குண்டலினி என்னும் அக்னியை வைத்திருக்கிறான் ஈசன். சகசிரதளமான நமது சிரசின் உச்சியில் இருக்கும் அந்த ஈசனை, தியானத்தினால் கண்டடைந்து அவனுடன் கலந்திருந்தேனே!

நாம் உடலும் உயிருமாய் மட்டும் ஆனவர்கள் இல்லை. நமக்குள்ளே ஒரு அக்னி இருக்கிறது. அதை உணர்ந்தால், நாம் ஈசனை உணரலாம்.


நாம் சந்திக்கும் ஆறு விதமான துன்பங்கள்!

அறியீ ருடம்பினி லாகிய வாறும்
பிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள்
செறியீ ரவற்றினுட் சித்திகள் இட்ட
தறியவீ ரைந்தினு ளானது பிண்டமே.  – (திருமந்திரம் – 469)

விளக்கம்:
நம்முடைய உடல் ஆறு விதமான துன்பங்களை எதிர்கொள்கிறது என்பதை நாம் அறிவதில்லை. நம்முள்ளே பெருகும் தாமச, ராசத, சாத்துவீக குணங்களை விட்டு நாம் பிரிவதில்லை. நமக்குக் கிடைத்துள்ள எட்டு சித்திகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதில்லை, அவற்றில் நமது மனத்தை செலுத்துவதும் இல்லை. பத்து மாதங்கள் கருவில் இருந்து தோன்றிய பிண்டங்களாகிய நாம் இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆறு துன்பங்கள் – பேறு, இழவு, துன்பம், பிணி, மூப்பு, சாக்காடு.  எட்டு சித்திகள் – அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்வம், வசித்வம்.


இந்த உடல் என்னும் மண்பானை!

இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே.  – (திருமந்திரம் – 468)

விளக்கம்:
ஆணும் பெண்ணும் இன்பமாகக் கூடும்போது, துன்பம் மிகுந்த பிறவியைத் துவக்கும் ஒரு உயிரை அங்கே உருவாக்குகிறான் நம் சிவபெருமான். தண்ணீரை இறைக்கும் கலங்களான ஒன்பது வாசல்களையும், அவற்றை செயல்படுத்தும் பதினெட்டு உறுப்புக்களையும் கொண்டு இந்த உடல் என்னும் மண்பானையை அவன் படைக்கிறான்.


ஒன்பது வாசல்களைக் கொண்ட உடல்

இலைபொறி யேற்றி யெனதுடல் ஈசன்
துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டி
நிலைப்பொறி முப்பது நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே.  – (திருமந்திரம் – 467)

விளக்கம்:
எனது உடலினுள் நிற்கின்ற சிவபெருமான், எனது விதியை ஏற்கனவே ஓலையில் எழுதி என் தலையில் ஏற்றி விட்டான். அழியக்கூடிய ஐந்து புலன்கள், முப்பது கருவிகள், ஒன்பது வாசல்கள் ஆகியவிற்றின் நடுவே என் உயிரை அமைத்திருக்கிறான் அவன்.

துலை – அழியக்கூடிய


பேதைப் புலன்கள்!

பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலன்ஐந்தும்
பிண்டத்தி னூடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத் தமர்ந்திருந் தானே.  – (திருமந்திரம் – 466)

விளக்கம்:
பிண்டமெனும் இந்த உடலில் தோன்றும் அறியாமை கொண்ட ஐந்து புலன்களும், இறுதியில் இந்த உடலிலேயே அழிகின்றன. இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றும் உயிரும் அவ்வாறே! இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றும் உயிர்கள் இங்கேயே அழிகின்றன. இதெல்லாம் தெரிந்து தான் உயிர்கள் விந்துவில் தோன்றிப் பிறக்கின்றன.


போகத்துள் புகுந்தான்!

போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனுங்
கோசத்துள் ஆகங்கொணர்ந்த கொடைத்தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து
மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே.  – (திருமந்திரம் – 465)

விளக்கம்:
ஆணும் பெண்ணும்  இன்ப நுகர்ச்சி கொள்ளும் போது, அங்கே ஒரு கருவை உருவாக்க, சிவபெருமான் தோன்றுகிறான். பாய்ந்து வரும் விந்துக்களில் ஒரு துளியை மட்டும் தேர்ந்தெடுத்து, அதில் முப்பத்தொரு தத்துவங்களைச் சேர்த்து, கர்ப்பப் பைக்குள் ஒரு உடலை உருவாக்கும் கொடைத்தொழிலை அவன் செய்கிறான். ஆணும் பெண்ணும் மோகத்தினால் மயங்கி இருக்கும் நிலையில், சிவபெருமான் உள்ளே கரு என்னும் முட்டையைச் செய்து விடுகிறான்.


விந்து பாயும் தூரம்!

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே.  – (திருமந்திரம் – 464)

விளக்கம்:
ஆண் பெண் கூட்டுறவின் போது, சுக்கில நாடியில் தோன்றும் விந்துவும், யோனியிலிருந்து தோன்றும் சுரோணிதமும் தாம் புறப்படுகிற இடத்தில் எட்டு விரல் அளவு பாயும். பாய்ந்து தனது துணையின் உடலுக்குள் நான்கு விரல் அளவு பாயும். அதன் விளைவாக புதிதாக ஒரு உயிர் தோன்றி பிறகு எண்சான் உடலாக வளருகிறது.


பாவச் சுழிகளிலிருந்து நம்மைக் காக்கிறான்!

ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே
வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே.  – (திருமந்திரம் – 463)

விளக்கம்:
ஒரு உயிர் தன்னுடைய முன்வினைகளைத் தீர்ப்பதற்காகவே புதிதாகப் பிறவி எடுக்கிறது. நாம் கருவில் தோன்றிய நாளில் இருந்தே, சிவபெருமான் நம்மை பல வழிகளிலும் மேன்மை அடையச் செய்து, நம்முடைய முன்வினைகளைத் தீர்க்கிறான். பாசப் பற்றினில் எளிதாகச் சிக்கி விடக்கூடிய நம்மை, நாம் கருவினில் தோன்றிய நாளில் இருந்தே, பாவங்களில் விழுந்து விடாமல் காத்து அருள்கின்றான்.


கருவில் இருக்கும் குழந்தை சுவாசம் பெறும் முறை!

பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோன்
இதஞ்செய்யு மொத்துடல் எங்கும் புகுந்து
குதஞ்செய்யும் அங்கியின் கோபந் தணிப்பான்
விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே.  – (திருமந்திரம் – 462)

விளக்கம்:
கருவில் உள்ள குழந்தை, தாயின் சுவாசத்தையே தானும் சுவாசமாகப் பெறுகிறது. தாயின் சந்திரகலையாகிய மூச்சுக்காற்று குழந்தைக்குக் குளிர்ச்சியைத் தருகிறது. தாயின் சூரியகலையாகிய மூச்சுக்காற்று வெப்பத்தைத் தந்து குழந்தையைக் காக்கிறது. நமது சிவபெருமான், வயிற்றில் குழந்தையைச் சுமக்கும் தாயின் மூலாதாரத்தில் வெப்பம் மிகாதவாறு தடுத்துக் குழந்தையை காக்கின்றான்.