பிரிந்த உயிர் மீண்டும் உடலில் புக முடியாது

காலும் இரண்டு முகட்டலகு ஒன்றுள
பாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளப் புக அறி யாதே.  – (திருமந்திரம் – 146)

விளக்கம்:
இரண்டு கால்களும், அதற்கு மேலே ஒரு முதுகுத்தண்டும், அதன் பக்கத்தில் பருங்குச்சி போன்ற முப்பத்திரண்டு விலா எலும்புகளையும் கொண்டது நம்முடைய உடல். நாம் இறந்த பின் நம் உடலின் கூரையாகிய தோல், எலும்புகளை விட்டு நீங்கிவிடும். அதன் பிறகு நம்முடைய உயிர் இந்த உடலுக்குள் திரும்பப் புக முடியாது.


இறந்தால் மறந்து விடுவார்கள்

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.  – (திருமந்திரம் – 145)

விளக்கம்:
ஒருவர் தன் வாழ்நாள் முடிந்து இறந்தவுடன் அவரின் உற்றாரும் உறவினரும் கூடி ஓலமிட்டு அழுவார்கள். இறந்தவரின் பெயர் நீங்கி பிணம் என்று ஆகிவிடும். இறந்த அவர் உடலை முட்செடியான தூதுவளை நிறைந்த சுடுகாட்டில் வைத்து எரித்து விட்டு, நீரினில் மூழ்கிக் குளிப்பார்கள். சிறிது நாட்களுக்குப் பிறகு அவரை மறந்து விடுவார்கள். இது மனிதரின் சுபாவம்.


தவமும் ஞானமும் துணை வரும்

பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே.  – (திருமந்திரம் – 144)

விளக்கம்:
ஒரு குடும்பத்தலைவன் தன் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கித்தந்து, தன் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அன்போடு இருக்கிறான். ஆயுள் முடிந்து அவன் இறந்து போகும் போது, அவன் யாருக்காக உழைத்தானோ, அந்த மனைவியும் பிள்ளைகளும் அவனுடன் செல்லமுடியாது. வாழ்நாளில் அவன் செய்த தவமும், பெற்ற ஞானமும் மட்டுமே அவனுக்குத் துணையாக வரும். வேறு எதுவும் அவனுடன் செல்ல முடியாது.


சுட்ட மண்பாத்திரமாக இருப்போம்!

மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீயினைச் சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்
எண்ணின்ற மாந்தர் இறக்கின்ற வாறே.  – (திருமந்திரம் – 143)

விளக்கம்:
ஒரே மண்ணினால் செய்யப்பட்ட இரு வகைப் பாத்திரங்களை நாம் பார்க்கலாம். ஒன்று தீயினால் நன்கு சுடப்பட்டு வலிமையாக இருக்கும். இன்னொன்று சுடப்படாத பாத்திரம், இது மழை பெய்யும் போது கரைந்து மீண்டும் மண்ணாகி விடும். இப்படித்தான் எண்ணில்லாத மக்கள் பக்குவப்படாமல் இறக்கின்றார்கள்.

சுடப்பட்ட மண் பாத்திரம் மழையில் கரைந்து விடாமல் வலிமையாய் இருப்பது போல் ஆன்மிகத்தில் பக்குவப்பட்டவர்களுக்கு மீண்டும் பிறப்பு கிடையாது. பச்சை மண்ணாய் பக்குவமில்லாதவர்கள் மீண்டும் பிறப்பிற்கு ஆளாவார்கள்.


ஞானம் தரும் நந்தி!

போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணியர் ஆயினார்
நாதன் நடத்தால் நயனங் களிகூர
வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.   – (திருமந்திரம் –142)

விளக்கம்:
ஞானத்தை தரும் புண்ணிய வடிவான எங்கள் நந்தியம் பெருமானை புத்தியில் வைத்து வழிபடுவர் புண்ணியர் ஆயினர். அவர் தம் வாழ்நாள் முடிந்த பின்னர் விண்ணை அடைந்து நாதனான சிவபெருமானின் நடனத்தை கண்குளிரக் கண்டு மகிழ்ந்து, அப் பெருமானை நோக்கி வேதம் துதித்திடுவார்.

(போதம் – ஞானம், அறிவு.   நயனம் – கண்)


திருவடி ஞானம்

சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் பாதமே.  – (திருமந்திரம் –141)

விளக்கம்:
நான் எப்போதும் சேர்ந்திருப்பது நந்தியம்பெருமானின் திருவடியை. என் நினைவில் எப்போதும் இருப்பது அப்பெருமானின் திருமேனி. நான் வணங்குவதும், பெயர் சொல்லித் துதிப்பதும் நந்தியின் திருநாமத்தை. என் அறிவில் நிலைத்து நிற்பது நந்தியின் திருவடி பற்றிய ஞானமே!


புலன்கள் எல்லாம் நம் வசமாகும்

தானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே.  – (திருமந்திரம் –140)

விளக்கம்:
நம் தலைவனான சிவபெருமானை விருப்பத்தோடு சந்தித்தால், புலன்கள் ஐந்தும் நம் வசம் ஆகிவிடும். ஆசையின் வசம் இருந்து புலன்கள் விடுபட்டு உள்முகமாகத் திரும்பும்.

புலன்களை அடக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டியதில்லை. சிவபெருமானின் தரிசனம் கிடைத்தால் அதெல்லாம் தானே நடக்கும்.


குருவே சரணம்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.  – (திருமந்திரம் –139)

விளக்கம்:
குருவை நேரில் பார்த்தால் நமக்கு மனத்தில் தெளிவு உண்டாகும். குருவின் பெயரை உச்சரித்தாலும் தெளிவு உண்டாகும். குரு சொல்லும் வார்த்தைகள் தெளிவு தரக்கூடியவை. குருவின் உருவத்தை நினைத்துப் பார்த்தால் கூட தெளிவு கிடைக்கும்.


சிவலோகம் அவன் திருவடியில்

திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.  – (திருமந்திரம் –138)

விளக்கம்:
ஆராய்ந்து பார்த்தால், சிவனின் திருவடியே சிவம் என்பது நமக்குப் புரியும். இன்னும் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் திருவடியே சிவலோகம் என்பதும் புரியும். சொல்லப் போனால் திருவடியே மோட்சத்திற்குரிய வழியாகும். உள்ளம் தெளிந்தவர்க்கு சிவனின் திருவடியே புகல் இடம் ஆகும்.

(தேரில் – ஆராய்ந்தால்)


திருவடியை உறுதியாகப் பற்றுவோம்

அடங்குபேர் அண்டத்து அணுஅண்டம் சென்றங்கு
இடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்க்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே. – (திருமந்திரம் – 137)

விளக்கம்:
சிறு அணுவாகிய நாம், படைப்பு அனைத்தையும் தன்னுள்ளே கொண்டுள்ள அந்த சிவபெருமானின் திருவடியைக் கண்டாலும், அங்கே நிலை கொண்டு தங்குவதில்லை. நமக்கு அவன் திருவடியை விட்டால் வேறு போக்கிடம் ஏது?   தன் உடலில் நிற்கும் உயிர் கடைசியாகச் சேரும் இடம் எதுவென்று உணர்ந்து கொள்பவர்கள், இறைவனின் திருவடியை  உறுதியாகப் பற்றிக் கொள்வார்கள்.

https://www.youtube.com/watch?v=xL9omtbwqcw