பேரொளியை மூச்சுக்காற்றிலே உணரலாம்

பேரொளி யாகிய பெரியஅவ் வெட்டையும்
பாரொளி யாகப் பதைப்பறக் கண்டவன்
தாரொளி யாகத் தரணி முழுதுமாம்
ஓரொளி யாகிய காலொளி காணுமே. – (திருமந்திரம் – 693)

விளக்கம்:
உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் அந்தப் பேரொளியை, அந்த சிவ ஒளியை, அட்டமாசித்தி பெற்ற யோகியர் தமது பிராணாயாமத்தின் மூச்சுக்காற்றிலே உணர்வார்கள். சக்தி வாய்ந்த அவ்வொளியை நடுக்கம் இல்லாமல் காணும் பக்குவம் யோகிகளுக்கு மட்டுமே உண்டு.


தினமும் ஒரு நாழிகை பிராணாயாமம்

முக்குண மூடற வாயுவை மூலத்தே
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
தக்க வலமிடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயர்நிலை வானவர் கோனே.  –  (திருமந்திரம் – 615)

விளக்கம்:
மூன்று குணங்களான தாமத, இராச, சாத்துவிகம் ஆகியவற்றால் ஏற்பட்ட இருள் நீங்க, உயிர்ப்பை மூலத்திடத்து சிக்கெனெப் பிடித்து முறைப்படி மூச்சுப் பயிற்சி செய்வோம். இதை தினமும் காலையில் ஒரு நாழிகை பயின்று வந்தால், சிவபெருமான் நம் உயிரை நல்ல முறையில் நிலை நிறுத்தி வைப்பான்.

வானவர் கோன் – தேவர்களின் தலைவனான சிவபெருமான்


எந்தச் சூழ்நிலையையும் எளிதாகக் கடக்கலாம்

பன்னிரண் டானைக்குப் பகலஇர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண் டானைக்குப் பகல்இர வில்லையே.   – (திருமந்திரம் – 577)

விளக்கம்:
பன்னிரண்டு அங்குல நீளத்தில் ஓடும் நம்முடைய மூச்சுக்காற்று, இரவும் பகலுமாக மாறும் நமது வாழ்க்கையின் சூழல்களில் சிக்கித் தவிக்கிறது. அந்தப் பிராணனை கட்டுப்படுத்தும் முறையை பாகனாகிய நாம் அறிந்து கொள்ளவில்லை. பிராணனை கட்டுப்படுத்தும் பிராணாயாமப் பயிற்சியை நாம் அறிந்து கொண்டால், நமது மூச்சுக்காற்றின் நீளம் சூழல்களில் சிக்கிக் குறையாது. எந்தச் சூழ்நிலையையும் நாம் எளிதாகக் கடக்கலாம்.

இப்பாடலில் நம் மூச்சுக்காற்று யானையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.  யானையை பாகன் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல் நாம் நம் மூச்சுக்காற்றை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம்.


பிராணாயாமத்தால் அழகு பெறலாம்

கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளிற்கோல அஞ்செழுத் தாமே.   – (திருமந்திரம் – 576)

விளக்கம்:
சிறு வயதில், நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரண்டு அங்குல நீளம் உள்ளே புகுவதும், ஓடுவதுமாய் உள்ளது. கொஞ்சம் வயதான பிறகு எட்டு அங்குல அளவே முச்சை இழுக்கிறோம், நாலு அங்குல நீளத்தை துண்டிக்கிறோம். பிராணாயாமப் பயிற்சி செய்து விடுபட்ட நான்கு அங்குலமும் சேர்த்து சுவாசித்து வந்தால் திருவைந்தெழுத்தைப் போல அழகு பெறலாம்.

பிராணாயாமப் பயிற்சியின் மூலம் மூச்சு விடும் அளவை பன்னிரண்டு அங்குல அளவுக்கு நீளச்செய்தால் தெய்வீக அழகு பெறலாம்.

கூடம் – உடல்,   மங்கையர் – பிராண சக்தி,   கோலம் – அழகு


பிராணாயாமத்தினால் உடல் சிவக்கும், முடி கறுக்கும்

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.   – (திருமந்திரம் – 575)

விளக்கம்:
தன் விருப்பப்படி அலைந்து திரிகின்ற மூச்சுக்காற்றை நெறிப்படுத்துதலே பிராணாயாமம் ஆகும். அவ்வாறு செய்யும் போது பிராணவாயு தூய்மைப்படும், உடலில் இரத்தம் நன்கு பாய்ந்து சிவந்த நிறம் கொடுக்கும், தலைமுடி கறுக்கும். நம் உள்ளத்தில் வசிக்கும் சிவபெருமான் நம்மை விட்டு நீங்க மாட்டான்.

பிராணாயாமம் செய்து மூச்சை நெறிப்படுத்தினால், இரத்த ஓட்டம் மேம்படும்.

நின்மலம் – மாசற்ற,   புரிசடையோன் – சிவபெருமான்


பிராணாயாமம் – யமனை விரட்டலாம்

இட்டதவ் வீ டிள காதே யிரேசித்துப்
புட்டிப் படத்தச நாடியும் பூரித்துக்
கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து
நட்டம் இருக்க நமனில்லை நமக்கே.   – (திருமந்திரம் – 574)

விளக்கம்:
பிராணாயாமம் தொடர்ந்து செய்து வந்தால் இந்த உடல் தளர்ச்சி அடையாது. இரேசகம் செய்து, அடுத்து  பத்து நாடிகளும் விம்முமாறு பூரகம் செய்வோம். பிறகு உள்ளே இருக்கும் பிராணன், அபானன் ஆகிய காற்றை நிறுத்தி கும்பகம் செய்வோம். இந்தப் பயிற்சியை உடல் வளையாமல் நேராக அமர்ந்து செய்து வந்தால் யமனுக்கு அங்கே வேலை இல்லை.

பத்து நாடிகள் எனப்படுபவை – சுத்தி, அலம்புடை, இடை, காந்தாரி, குரு, சங்கினி, சிங்குவை, சுழுமுனை, பிங்கலை, புருடன்.

இட்ட – உண்டாக்கப்பட்ட,   புட்டிப்பட – விம்முமாறு,   தசநாடி – பத்து நாடிகள்,     நட்டம் – நிமிர்ந்து இருத்தல்


பிராணாயாமம் – கும்பகத்தின் அளவு

வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்
டோ மத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.   – (திருமந்திரம் – 573)

விளக்கம்:
இடைகலை வழியாக பதினாறு மாத்திரை கால அளவு பூரகம் செய்வோம். பிறகு  முப்பத்திரண்டு மாத்திரை கால அளவு பிங்கலை வழியாக இரேசகம் செய்வோம். இவ்விரண்டு வேள்விகளுக்கும் இடையே அறுபத்தி நான்கு மாத்திரை கால அளவு கும்பகம் செய்து வந்தால், அது உண்மையான பிராணாயாமம் ஆகும்.

உபதேசிக்கப்பட்டுள்ள கால அளவுகளின்படி பிராணாயாமத்தை விருப்பத்துடன்  செய்வோம்.

வாமம் – இடப்பக்கம்,   ஏமுற்ற –  பாதுகாப்போடு,   காமுற்ற – விரும்பத்தக்க,    ஓமம் – வேள்வி


பிராணாயாமம் – கும்பகத்தால் அருள் பெறலாம்

மேல்கீழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப்
பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து
மாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே.   – (திருமந்திரம் – 572)

விளக்கம்:
நம் உடலின் எல்லா பாகங்களிலும் காற்று நிரம்பும் வண்ணம், மிகுதியாகக் காற்றை உள்வாங்கிப் பூரகம் செய்வோம். பூரகத்தின் மறுபகுதியான இரேசகத்தினை, காற்று உடல் உள்ளே பதியும்படி மெலிதாக வெளியேறச் செய்ய வேண்டும். இரண்டுக்கும் இடையே விருப்பத்துடன் வயிற்றில் கும்பகம் செய்தால் திருநீலகண்டப் பெருமானின் அருளைப் பெறலாம்.

பிராணாயாமத்தை விருப்பத்துடன் முறையாகச் செய்தால் சிவபெருமானின் அருளைப் பெறலாம்.

மிக்குற – மிகுதியாக,     மாலாகி – விருப்பத்துடன்,    ஆலாலம் உண்டான் – திரு நீலகண்டன்


பிராணாயாமம் – கும்பகத்தின் பலன்

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.   – (திருமந்திரம் – 571)

விளக்கம்:
இடைகலை, பிங்கலை வழியாக மூச்சுக் காற்றை ஏற்றி இறக்கி பூரிப்பு பெறுவோம். இடையே காற்றைப் பிடித்து நிறுத்தி கும்பகம் செய்யும் முறையை அறிந்தோம் இல்லை. கும்பகம் செய்யும் முறையை அறிந்து கொண்டால் யமனை வெல்லும் குறிக்கோளை அடையலாம்.

இடைகலை என்பது இடது பக்க மூச்சு, பிங்கலை என்பது வலது பக்க மூச்சாகும். கும்பகம் செய்யும் முறையை நன்றாக கற்றவர் நோயில்லாமல் அதிக நாள் வாழலாம்.

கால்  – காற்று,  கூற்று – யமன்,    குறி – குறிக்கோள்


பிராணாயாமம் – பூரகத்தினால் பூரிப்பு உண்டாகும்

எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே யதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை
அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனு மாமே.   – (திருமந்திரம் – 570)

விளக்கம்:
நாம் எந்த இடத்தில் இருந்தாலும் இடது பக்க மூக்கு வழியாக மூச்சை இழுத்து நிறைவு செய்யும் பயிற்சியைத் தொடர்ந்து செய்வோம். அவ்வாறு பூரகம் செய்தால் இந்த உடலுக்கு அழிவு உண்டாகாது. அவ்வாறு இழுத்த மூச்சை நிறுத்தி கும்பகம் செய்து, வலது பக்க மூக்கு வழியாக மூச்சை வெளியேறச் செய்தால் சங்க நாதம் உண்டாகி மேன்மை ஏற்படும்.

பூரகம் செய்து பூரிப்பு பெறுவோம்.

பூரி – பூரகம்,    இடத்திலே – இடப்பக்கமாக,   தலைவன் – மேன்மையானவன்