உயிர் ஊறும் இடம்!

மாறி வரும்இரு பால்மதி வெய்யவன்
ஏறி இழியும் இடைபிங் கலையிடை
ஊறும் உயிர்நடு வேஉயிர் உக்கிரம்
தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே – 793

விளக்கம்:
நம்முடைய மூச்சுக்காற்று சந்திரகலை எனப்படும் இடைகலை வழியாகவும், சூரியகலை எனப்படும் பிங்கலை வழியாகவும் மாறி மாறி இயங்குகிறது. தியானத்தின் போது, மாறி மாறி இயங்கும் மூச்சுக்காற்றைக் கவனித்தால், சுழுமுனை எனப்படும் நடு நாடியில் உயிர் ஊறுவதைக் காணலாம். இன்னும் உற்று நோக்கினால், சுழுமுனையில் ஊறும் உயிரில் சிவபெருமானின் உக்கிரத்தை உணரலாம். இவ்வாறு மூச்சுக்காற்றைக் கவனித்து தியானித்து வந்தால், நம் உயிர் இயங்கும் முறையை தெளிந்து அறியலாம்.

மதி – சந்திரகலை எனப்படும் இடைகலை, இது இடது பக்க மூக்கில் ஓடும் மூச்சுக்காற்று, வெய்யவன் – சூரியகலை எனப்படும் பிங்கலை, இது வலது பக்க மூக்கில் ஓடும் மூச்சுக்காற்று, ஏறி இழியும் – ஏறி இறங்கும், தேறி அறிமின் – ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.


கிழமை அறிந்து மூச்சு இயங்கினால் பேரானந்தம்!

செவ்வாய் வியாழம் சனிஞாயி றேஎன்னும்
இவ்வா றறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்
டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே – 792

விளக்கம்:
செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மூச்சுக்காற்று வலப்பக்கமாக இயங்க வேண்டும் என்பதை உணர்ந்த யோகிகள் சிவனைப் போன்றவர் ஆவார்கள்.  மேற்கூறிய கிழமைகளில், மூச்சுக்காற்று மாறி இடப்பக்கமாக இயங்கினாலும், அவர்கள் வலப்பக்கமாக மாற்றி இயங்கச் செய்து ஆனந்தமடைவார்கள்.

ஒவ்வாத வாயு – மூச்சுக்காற்று மாறி இயங்குதல்


மூச்சு ஒளி பெறும்!

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றும்
தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்
ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே – 791

விளக்கம்:
முந்தைய பாடலில் சொல்லப்பட்டதைப் போல வெள்ளி, திங்கள், புதன் ஆகிய கிழமைகளில் மூச்சுக்காற்று இடப்பக்கமாக தள்ளி விடப்பட்டவாறு இயங்குமாகில், அம்மூச்சுக்காற்று ஒளி பெறும். இந்த உடல் அறிவு பெற்று வெகு காலத்திற்கு நிலைத்து இருக்கும். இந்த விஷயத்தை வள்ளல் தன்மை கொண்ட நந்தியம்பெருமான் நமக்கு எடுத்து உரைத்திருக்கிறான்.

ஒள்ளிய காயம் – அறிவு மிகுந்த இந்த உடல், தயங்குமே ஆகில் – ஒளி விடுமே ஆகில்


வாரசரம்

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்
தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே – 790

விளக்கம்:
திருமந்திரத்தில் வாரசரம் என்னும் தலைப்பில் ஆறு பாடல்கள் உண்டு. சரம் என்றால் சுவாசம் எனப்படும் முச்சுகாற்று. எந்தெந்தக் கிழமைகளில் மூச்சுக்காற்று எப்படி இயங்குகிறது என்பது பற்றி திருமூலர் அழகாக விவரிக்கிறார்.

வெள்ளி, திங்கள், புதன் ஆகிய கிழமைகளில் சுவாசம் இடநாடி இயங்கும். சனி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய கிழமைகளில் மூச்சு வலநாடி வழியாக இயங்கும். வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இடநாடி வழியாகவும், தேய்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் வலநாடி வழியாகவும் மூச்சு இயங்கும்.

ஒள்ளிய மந்தன் – அறிவு மிகுந்த சனி, வள்ளிய பொன் – பெருந்தன்மை உடைய வியாழன், இரவி – ஞாயிறு