அறிவே உருவானவள் பராசக்தி

அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவா ரருவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே. – (திருமந்திரம் – 1054)

விளக்கம்:
நிறைந்த அறிவுடையவர்க்கு பராசக்தி ஆனந்த வடிவானவள். அவள் அறிவு வடிவமாக இருக்கிறாள். நடக்கும் எல்லா செயலும் அவள் விருப்பத்தின்படியே. அவர்கள் பராசக்தியிடம் ஈசனை காண்பார்கள்.

Those who know say, Parasakthi is in bliss form.
Those who know say, Parasakthi is in knowledge form.
Those who know say, all our deeds are as per Her desire.
They can see the Lord Siva with in Her.

அறியாப் பாவிகள்

வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார்
அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள்
உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்
முற்றொளி தீயின் முனிகின்ற வாறே. – (திருமந்திரம் – 2084)

விளக்கம்:
ஒவ்வொரு கணமும் தன் வாழ்நாள் கழிந்து கொண்டிருப்பதை அறியாத பாவிகள் வினையாகிய விதைகளை மூட்டை கட்டிக் கொள்வர். அந்த வினைகளை விதைத்து முளைக்கச் செய்து இன்னும் தீவினைகளை பெருக்கிக் கொள்வர். தீய வினைகளை பெருக்கிக் கொள்வதால் உண்டாகும் துன்பங்களை இப்போது அவர் அறிய மாட்டார். இவர்களின் செயல் கொழுந்து விட்டு எரிகின்ற தீயினில் அழிவதைப் போன்றதாகும்.

Those who bundle up bad karmas, plant them to multiply,
they don't aware of their life time being diminished.
They don't know the sorrows behind their bad karmas.
They perish in the blazing fire.

நாள்தோறும் !

நாடோ றும் ஈசன் நடத்தும் தொழில்உன்னார்
நாடோ றும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்
நாடோ றும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால்
நாடோ றும் நாடார்கள் நாள்வினை யாளரே. – (திருமந்திரம் – 2022)

விளக்கம்:
நாள்தோறும் ஈசன் நடத்தும் தொழிலை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. நாள்தோறும் நயமாய் நல்ல பலன் ஊட்டும் ஈசனை நாடுவதில்லை. நாள்தோறும் ஈசன் நல்லோர்க்கு அருள் செய்து வந்தாலும், நாள்தோறும் அவனை நாடாமல் நம்முடைய அன்றாட வேலைகளில் சிக்கிக் கொள்கிறோம்.

We don't think of Lord Siva's daily deeds.
We don't think of His   good  feeding to us.
He is bestowing His Grace daily to good people.
We don't seek Him daily, we are entangled in our daily works.

சீவனும் சிவனும் வேறில்லை

சீவன் எனச்சிவன் என்னவே றில்லை
சீவ னார்சிவ னாரை அறிகிலர்
சீவ னார்சிவ னாரை அறிந்தபின்
சீவ னார்சிவ னாயிட்டு இருப்பரே. – (திருமந்திரம் – 2017)

விளக்கம்:
சீவனும் சிவனும் வேறு வேறு பொருள்களில்லை. இரண்டும் ஒன்றாய் கலந்திருப்பவை. ஆனால் சீவன்கள் தன்னிடம் உள்ள சிவனை அறிந்திருக்கவில்லை. ஞானம் பெற்று சிவனை அறிந்த பின் சீவனார் சிவனாகவே ஆகி விடுவார்.

Jiva and Siva are not seperated
But the jivas do not know this truth.
When the jiva realize this truth,
that jiva will become Siva.

நிரந்தர முதல்வர்

பரந்துலகு ஏழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர்கள் எற்றுக்கு இரக்கும்
நிரந்தக மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே. – (திருமந்திரம் – 1888)

விளக்கம்:
ஏழு உலகையும் படைத்து அவற்றில் நிறைந்திருக்கும் சிவபெருமானை சிலர் யாசித்து உண்பவன் என்று சொல்கிறார்கள். படைத்தவனான அவனுக்கு யாசிக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி இகழ்வாக பேசாமல் அந்த சிவபெருமானை நிரந்தரமாக நினைந்திருப்போம். அப்படி நினைந்திருக்கும் அடியாரின் பக்தியினை யாசித்து ஏற்று அவர்களுக்கு தன் திருவடி எட்டுமாறு செய்வான் அவன்.

(இரந்துணி – யாசித்து உண்பவன்,   எற்றுக்கு – எதற்கு,  கழல் – திருவடி)

He created the seven worlds and spread over them
Some people call him a beggar, why he have to beg?
The devotees who constantly think of the lord,
He accept the devotion from them and make them reach His Holy Feet.

அடியார்க்கு அடியார்

அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்
சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன்
அவன்பால் அணுகியே நாடும் அடியார்
இவன்பால் பெருமை இலயமது ஆமே. – (திருமந்திரம் – 1880)

விளக்கம்:
சிவனடியார்களை அணுகி அன்பு செய்பவர்கள் சிவபெருமானை அணுகவும் வல்லவர் ஆவார்கள். சிவனடியாரை நாடி இருக்கும் அடியவர்களுக்கும் சிவனடியாரின் பெருமை வந்து சேரும்.

அடியாரை வணங்குவதும் சிவனை வணங்குவது போன்றதே!

Those who seek love of Lord Siva's followers
can attain Siva's feet too.
The devotees who seek Siva's follower
will get the same reputation of whom they seek.

உயிரிலே கலந்தவன்

அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுஅற நின்ற கலப்பது உணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்
தணிவற நின்றான் சராசரம் தானே. – (திருமந்திரம் – 2010)

விளக்கம்:
ஆன்மாவில் சிவனும், சிவனில் ஆன்மாவும் ஒன்றாக கலந்திருப்பதை நிறைய பேர் உணர்ந்திருக்கவில்லை. ஒப்பில்லாத ஈசன் அவன், பிரபஞ்சம் முழுவதும் வற்றாமல் எங்கும் நிறைந்திருக்கிறான்.

(அணு – ஆன்மா,    சராசரம் – பிரபஞ்சம்)

He is inside the soul, the souls are inside Him.
Such the Soul and Siva are combined, but most people unaware of this.
Incomparable is His Grace, He spreads everywhere
in this universe, with out any abatement.

அவனுக்கா தெரியாது?

வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன்
தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம்
பொரஇருந் தான்புக லேபுக லாக
வரஇருந் தால்அறி யான்என்ப தாமே. – (திருமந்திரம் – 1889)

விளக்கம்:
தன்னை தேடி வருபவர்களை வரவேற்க வழியிலேயே நின்றிருப்பான் ஈசன். தன் அடியவரான நல்லவர்க்கு இன்பம் தரும் விதமாக தன்னையே தர இருக்கிறான் அவன். தன்னை சரணடைய வருபவரிடம் கலந்து கொள்ள தயாராக இருக்கிறான். அவனைப் போய் அறியாதவன் என்று சொல்லலாமா?

(பொர – பொருந்த,    புகல் – சரண்)

He is standing in the path to receive them who seek Him.
He wants to give Himself to his holy devotees.
He likes to unite with them, who stands waiting
to surrender his feet. How can we say 'He don't know me'!

புலன்களை அடக்காதீர்

அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சும் அடக்கிய அசேதன மாம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே. – (திருமந்திரம் – 2033)

விளக்கம்:
ஐந்து பொறிகளையும் அடக்கு என்று வலியுறுத்துபவர்கள் எதுவும் அறியாதவர்கள். ஐந்தும் அடக்கிய தேவர்கள் அங்கே வானுலகிலும் இல்லை. ஐந்து பொறிகளையும் அடக்கி விட்டால் நாம் சடப் பொருள் போல் ஆகி விடுவோம் என்பதை உணர்ந்து அடக்காமல் இருக்கும் அறிவை அறிந்து கொண்டேனே!

புலனடக்கம் என்பது அவற்றை வேலை செய்யாமல் அடக்குவது என்று அர்த்தம் ஆகாது. அப்படி புலன்களை இயங்காமல் செய்தால் நாம் அறிவற்ற சடப் பொருள் போல ஆகி விடுவோம். அவற்றை சரியான நெறியில் இயங்கச் செய்வதே அறிவுடைய செயலாகும்.

(அசேதனம் – அறிவற்ற சடப் பொருள்)

Those are ignorant, who insist to repress the five senses.
Not even the immortals could not do that.
If we repress the five senses, we'll be a insensible thing.
Thus we learnt not to suppress the senses.

அணையா விளக்கு அவன்

அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கென்று மேவிநின் றேனே. – (திருமந்திரம் – 48)

விளக்கம்:
அடியார் வணங்கும் தேவர்களின் தலைவன் சிவபெருமான். அந்த முதல்வனை நினைத்து தலையால் வணங்குவேன். இந்த உலகத்தாருக்கு அருளும் எம் தந்தையான முழுமுதற் கடவுள் அவனை அணையாத விளக்காய் நினைத்து பொருந்தி நின்றேனே!

(முன்னி – நினைத்து,  படி – உலகம்,  பரம்பரன் – முழுமுதற் கடவுள்,   விடியா விளக்கு – அணையா விளக்கு)

The Lord of Devas whom the devotees adore,
Seeking Him, I bow my head to worship
The Lord, our Father, he is blessing this whole world.
I seek that ever glowing lamp.