பகை எல்லாம் விலகி ஓடும்

ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும்
பாரஞ்சி நின்ற பகைபத்து நாளாகும்
வாரஞ்செய் கின்ற வகைஆறஞ் சாமாகில்
ஓரஞ்சொ டொன்றொன் றெனவொன்றும் நாளே – 783

விளக்கம்:
10+5+6+8 =29. யோகப்பயிற்சி இருபத்து ஒன்பது நாட்கள் தொடர்ந்தால், அடுத்த பத்து நாட்களில் எப்படிப்பட்ட பகையும் விலகி ஓடும். முப்பதாவது நாளும் பயிற்சியைத் தொடர்ந்தால், அடுத்த எழாவது நாளிலே பகை எல்லாம் ஓடி விடும்.


தொடர்ந்த பயிற்சியில் இருபத்து எட்டாவது நாள்

காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில்
காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றெனக்
காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற்
காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே – 782

விளக்கம்:
தொடர்ந்த யோகப்பயிற்சியின் இருபத்து ஆறாவது நாளில் விசுத்தி, ஆக்கினை ஆகிய இரண்டு ஆதாரங்களில் மட்டும் மனம் நிலைபெறும் என்பதை முந்தைய பாடலில் பார்த்தோம். தொடர்ந்து இருபத்து ஏழாவது நாளில், ஆறு ஆதாரங்களில் இருந்து மேலே எழும் சக்தியை ஒன்றாகக் காணலாம். இருபத்து எட்டாவது நாளில் ஆறு ஆதாரங்களின் சக்தியும், ஏழாவது ஆதாரமான துரியம் எனப்படும் சகசிரதளத்தில் கலந்து நிற்பதைக் காணலாம்.


மனம் கீழ் நோக்கிச் செல்லாது!

கருதும் இருபதிற் காணஆ றாகும்
கருதிய ஐயைந்திற் காண்பது மூன்றாம்
கருதும் இருப துடன்ஆறு காணில்
கருதும் இரண்டெனக் காட்டலு மாமே – 781

விளக்கம்:
சுழுமுனையில் கருத்து ஊன்றி, இருபது நாட்கள் தொடர்ந்து யோகப்பயிற்சி செய்து வந்தால், ஆறு ஆதாரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை ஆகியவற்றை உணரலாம். தொடர்ந்த பயிற்சியின் இருபத்து ஐந்தாவது நாளில் மனம் கீழ் நோக்கிச் செல்லாமல் அனாகதம், விசுத்தி, ஆக்கினை ஆகிய மூன்று ஆதாரங்களில் மட்டும் மனம் ஈடுபடும். இருபத்து ஆறாவது நாளில் விசுத்தி, ஆக்கினை ஆகிய இரண்டு ஆதாரங்களில் மட்டும் மனம் நிலைபெறும்.

தொடர்ந்த யோகப்பயிற்சியில் மனம் கீழ் நோக்கிச் செல்வதை தவிர்த்து மேல் நோக்கிச் செல்லும்.


மூச்சுப்பயிற்சியில் பதினைந்தாவது நாள்

காணலு மாகுங் கருதிய பத்தோடிற்
காணலு மாகுங் கலந்த இரண்டையும்
காணலு மாகுங் கலப்பற மூவைந்தேற்
காணலு மாகுங் கருத்துற ஒன்றே – 780

விளக்கம்:
திருமூலர் அளிக்கும் பயிற்சி முறையைக் கருத்தில் கொண்டு, பத்து நாட்கள் தொடர்ந்து மூச்சுப்பயிற்சி செய்து வந்தால், நம்முள்ளே சிவன், சக்தி ஆகிய இருவரையும் காணலாம். மேலும் தொடர்ந்து, சுழுமுனையில் கருத்தூன்றி, பதினைந்து நாட்கள் மூச்சுப்பயிற்சி செய்தால், சிவசக்தியர் ஒன்றாகக் கலந்து ஒரே பரம்பொருளாக இருப்பதைக் காணலாம்.


மூச்சுப்பயிற்சியில் ஐந்தாவது நாள்

அளக்கும் வகைநாலும் அவ்வழி ஓடில்
விளக்கும் ஒருநாலு மெய்ப்பட நிற்கும்
துளக்கும் வகையைந்துந் தூய்நெறி ஓடில்
களக்க மறமூன்றிற் காணலு மாமே – 779

விளக்கம்:
பூரகம், கும்பகம், இரேசகம் ஆகியவற்றின் சரியான கால அளவுகளைத் தெரிந்து, அதன்படி தொடர்ந்து நான்கு நாட்கள் மூச்சுப்பயிற்சி செய்தால், சிவம், சக்தி, நாதம், விந்து ஆகியவற்றை மெய்ப்படக் காணலாம். அறிவு ஒளி பெறும் வகையறிந்து தொடர்ந்து ஐந்தாவது நாளாக மூச்சுப்பயிற்சி செய்தால், மூன்று வளைவுகளைக் கொண்ட குண்டலினியை தெளிவாக உணரலாம்.


மூன்று நாட்கள் தொடர்ந்து மூச்சுப்பயிற்சி செய்தால்…

ஏயிரு நாளும் இயல்புற ஓடிடிற்
பாயுரு நாளும் பகையற நின்றிடும்
தேய்வுற மூன்றுந் திகழவே நின்றிடில்
ஆயுரு வாறென் றளக்கலு மாமே – 778

விளக்கம்:
யோகப்பயிற்சியில் நமக்குப் பகையாக இருப்பது, கீழ் நோக்கிச் செல்லும் தன்மை உடைய அபான வாயு ஆகும். இரண்டு நாட்கள் தொடர்ந்து சுழுமுனையில் பொருந்தி இருந்து, மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் கீழ் நோக்கிப் பாயும் அபான வாயு நின்று விடும். மேலும் தொடர்ந்து மூன்றாவது நாளாகப் பயிற்சி செய்தால், ஆயுள் விருத்தி ஆகும் என்பதை அந்த யோக அனுபவமே நமக்கு உணர்த்தி விடும்.

ஏயிரு நாளும்- பொருந்தி இரு நாளும்


நாள் முழுவதும் மூச்சுப்பயிற்சி செய்தால் வாழ்நாளை நீட்டிக்கலாம்

பார்க்கலு மாகும் பகல்முப் பதுமாகில்
ஆக்கலு மாகுமவ் வாறிரண் டுள்ளிட்டுப்
போக்கலு மாகும் புகலற ஒன்றெனில்
தேக்கலு மாகுந் திருத்திய பத்தே – 777

விளக்கம்:
சுழுமுனையில் ஒன்றி நின்று மூச்சுப்பயிற்சி செய்தால் ஆயுள் விருத்தி பெறலாம். ஒரு நாளின் பகல் பொழுது முழுவதும், அதாவது முப்பது நாழிகைக் காலம் தொடர்ந்து மூச்சுப்பயிற்சி செய்தால் நம்முடைய வாழ்நாளை நீடிக்கச் செய்யலாம். நம்முடைய உடல் திருத்திய வயலைப் போல ஒழுங்கு பெறுவதைக் காணலாம்.


ஆயுள் பரீட்சை

மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடில்
எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும்
ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற்
பன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே – 776

விளக்கம்:
முந்தைய பாடல்களில், மூச்சுக்காற்றைக் கவனித்தால் ஆயுளை அறியலாம் என்பதைப் பார்த்தோம். நம்மிடம் இருந்து வெளியேறும் மூச்சுக்காற்று, பத்து விரற்கடை அளவு நீண்டால் ஆயுள் இருபத்து எட்டு ஆண்டுகளாம். பதினைந்து விரற்கடை அளவு நீண்டால், ஆயுள் இருபத்து ஐந்து ஆண்டுகளாம்.


ஆயுள் அறியும் வகை

இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில்
அவ்வகை ஐம்பதே யென்ன அறியலாம்
செவ்வகை ஒன்பதுஞ் சேரவே நின்றிடின்
முவ்வகை யாமது முப்பத்து மூன்றே – 775

விளக்கம்:
முந்தைய பாடலில், மூச்சுக்காற்றைக் கவனித்தால் ஆயுளை அறியலாம் என்பதைப் பார்த்தோம். நம்மிடம் இருந்து வெளியேறும் மூச்சுக்காற்று, எட்டு விரற்கடை அளவு நீண்டால் ஆயுள் ஐம்பது ஆண்டுகள் என்பதை அறியலாம். ஒன்பது விரற்கடை அளவு நீண்டால் ஆயுள் முப்பத்து மூன்று ஆண்டுகளாம்.


மூச்சுக்காற்றை வைத்து ஆயுளைக் கணிக்கலாம்

ஏறிய ஆறினில் எண்பது சென்றிடும்
தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில்
ஆறொரு பத்தாம் அமர்ந்த இரண்டையுந்
தேறியே நின்று தெளிஇவ் வகையே  – 774

விளக்கம்:
நம்மிடம் இருந்து வெளியேறும் மூச்சுக்காற்று, ஆறு விரற்கடை அளவு நீண்டால் நம்முடைய ஆயுள் எண்பது ஆண்டுகளாம். ஏழு விரற்கடை நீண்டால் ஆயுள் அறுபது ஆண்டுகளாம். நாம் உள்ளே இழுக்கும் மூச்சு, மற்றும் வெளியே விடும் மூச்சு ஆகிய இரண்டையும் கவனித்து ஆராய்ந்தால் நம்முடைய ஆயுளை கணிக்கலாம்.