திருக்கொறுக்கை

இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி இலிங்க வழியது போக்கித்
திருந்திய காமன் செயலழித் தங்கண்
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே. – (திருமந்திரம் – 346)

விளக்கம்:
தியானத்தினால் நமது மனத்தை காமத்தின் வழியில் செல்லாது  திருத்தி, சிவனை நினைத்து அவனது நினைவிலேயே இருக்கச் செய்வோம். சிவபெருமான் மன்மதன்  விளைவிக்கும் காமத்தை அழித்து, நம்மை தவயோகத்தில் நிலையாக இருக்கச் செய்யும் இடம் திருக்கொறுக்கை.

சிவபெருமானை வேண்டினால், தியானத்தில் நமக்கு இடையூறாக வரும் மன்மதனை எரித்து அழிப்பான்.


திருக்கடவூர்

மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே. – (திருமந்திரம் – 345)

விளக்கம்:
மூலாதாரத்தில் மூளும் குண்டலினியை, தியானத்தினால் சுழுமுனை நாடி வழியாக சகஸ்ரதளத்தில் பொருந்தி இருக்கச் செய்வது அங்கி யோகமாகும். இந்த யோகத்தைப் பயில்வதால் காலனை எட்டி உதைக்கலாம். நம்முடைய உடல் என்னும் இந்த ஊர் நலமாக இருக்கும்.

சிவபெருமான் காலனைக் காலால் எட்டி உதைத்த வீரச்செயல் நடந்த இடம் திருக்கடவூர். நம்முடைய இந்த உடலையும் கடவூர் என்று சொல்லலாம்.

கடம் – உடல்


திருவழுவூர்

முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள்
அத்தி யுரியர னாவ தறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயின் உள்ளெழுந் தன்று கொலையே. – (திருமந்திரம் – 344)

விளக்கம்:
முனிவர்கள் சிலர் வேள்வித்தீயை எழுப்பி மந்திரங்களை முழங்கிய போது, அந்த வேள்வியுள் யானை உருவில், கயாசுரன் என்னும் அசுரன் தோன்றினான். சிவபெருமான் அந்த யானை வடிவிலான அசுரனை அழித்து, அந்த யானைத் தோலை உரித்து தன் மேல் போர்த்திக் கொண்டான். சிவபெருமானின் இந்த வீரச்செயலைக் கண்டு உமையம்மையும் மற்ற தேவர்களும் நடுங்கினார்கள். இந்த வீரச்செயல் நடந்த இடம் திருவழுவூர்.

தியானத்தில், நம் உள்ளே முன்று வகையான அக்னியை எழுப்பி நாதம் வெளிப்படச் செய்தால், யானை போன்ற கரிய இருளான நம் மன இருளை சிவபெருமான் கிழித்து ஒளி தோன்றச்செய்வான்.


முப்புரம் அழித்த இடம் – திருவதிகை

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே. – (திருமந்திரம் – 343)

விளக்கம்:
செம்மை நிறம் கொண்ட தனது சடையில் கங்கை நீரை அணிந்துள்ள  சிவபெருமான் மிகப் பழமையான முதல் கடவுள் ஆவான். அவன் முப்புரமான மூன்று ஊர்களை அழித்தான் என்று சொல்பவர்கள் மூடர்கள். முப்புரம் என்பது மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியவை ஆகும்.  சிவபெருமான் அழித்தது அந்த மும்மலங்களை என்பதை யார் அறிவார்?

அப்பணி – அப்பு + அணி,   புராதனன் – பழமையானவன்


திருவிற்குடி

எங்குங் கலந்துமென் உள்ளத் தெழுகின்ற
அங்க முதல்வன் அருமறை யோதிபாற்
பொங்கும் சலந்தரன் போர்ச்செய்ய நீர்மையின்
அங்கு விரற்குறித் தாழிசெய் தானே. – (திருமந்திரம் – 342)

விளக்கம்:
எங்கும் கலந்திருக்கும் சிவபெருமான் நம் உள்ளத்திலும் எழுந்து அருள்கிறான். ஆறு அங்கங்களைக் கொண்ட அருமறைகளைத் தந்த நம் பெருமான், சினம் கொண்ட சலந்தரன் என்னும் அசுரனை, தன்னுடைய கால் விரலால் நிலத்தில் ஒரு சக்கரத்தைக் கீறி அதை அந்த அசுரனையே எடுக்க வைத்தான். அந்தச் சக்கரத்தை எடுத்த அசுரன் அழிந்து போனான். இந்த வீரச்செயல் நடந்த இடம் திருவிற்குடி.

யோகப் பயிற்சியின் போது, நீரை முகமாகக் கொண்ட சலந்தரன் என்னும் அசுரன், குண்டலினியை கீழ் நோக்கு முகமாக இறங்கச் செய்வான். அப்போது நாம் சிவபெருமானைத் தியானம் செய்தால், பெருமான் அந்த அசுரனை போர் செய்து அழித்து, குண்டலினியை மேல்நோக்கிச் செல்லுமாறு செய்வான்.


திருக்கண்டியூர்

எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியுந்
தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
அங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே. – (திருமந்திரம் – 341)

விளக்கம்:
இந்தப் பெரிய உலகத்தைத் தாங்கி நிற்கும் நம்முடைய சிவபெருமான், எங்கும் எல்லாவற்றிலும் பரவி இருக்கிறான். அவனுடைய திருவடியின் பெருமையை உணர்ந்த தேவர்கள், தியானத்தில் தங்கள் கவனத்தை சிரசிலேயே தங்கச் செய்தார்கள். பிரமனின் இடமான மூலாதாரத்தில் இருந்தும், திருமாலின் இடமாகிய மணிப்பூரகத்தில் இருந்தும் நம்முடைய கவனத்தை நீக்கி, நம் கவனத்தை சிரசிலேயே நிலைக்கச் செய்கிறான் சிவபெருமான்.

பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து, அந்த தலை ஓட்டில் திருமாலின் உதிரத்தையும் வாங்கிய செயல் நடந்த இடம் திருக்கண்டியூர். இந்தத் திருச்செயலின் தத்துவம், தியான நிலையில் நம்முடைய கவனம் சிவபெருமானின் இடமாகிய தலையுச்சியில் இருக்க வேண்டும் என்பதாகும்.


தக்கனுக்குக் கிடைத்த பாடம்

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையை யரிந்திட்டுச் சந்திசெய் தானே. – (திருமந்திரம் – 340)

விளக்கம்:
பிரமனின் மகனாகிய தக்கன், சிவபெருமானைப் புறக்கணித்து வேள்வி செய்தான். இதனால் சினம் கொண்ட சிவன், வீரபத்திரனை அனுப்பி, தக்கனின் தலையை வெட்டித் தீயில் எறியச் செய்தான். பிறகு தன் மனம் இரங்கி, இவனது செயல் உலகில் உள்ளோர்க்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்று எண்ணி, ஒரு ஆட்டுத்தலையை தக்கனுக்குப் பொருத்தி அவனை உயிர் பிழைக்கச் செய்தான். இந்தச் செயல் நிகழ்ந்த இடம் திருப்பறியலூர்.

நம்முள்ளே இருக்கும் வேள்வித்தீயாகிய குண்டலினி சக்தியை விரயம் செய்யக்கூடாது என்பது இந்நிகழ்வில் உள்ள தத்துவம்.


அந்தகன் எனப்படும் நம்முடைய ஆணவம்

கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்க்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே. – (திருமந்திரம் – 339)

விளக்கம்:
நம்முள்ளே அந்தகன் என்னும் அசுரன் ஒருவன் வாழ்கிறான். அவனால் மற்றவர்களுக்குத் துன்பம் உண்டாகிறது. இப்படி ஒருவருக்கு ஒருவர் துன்பம் விளைவிப்பதால், உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் வருந்துகிறார்கள். இது பற்றித் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, நம் பெருமான் தன்னுடைய சூலத்தின் நுனியினால் நம்முள்ளே இருக்கும் அந்த அசுரனைக் கொன்றான்.

சிவபெருமானை வேண்டினால், நம்முடைய ஆணவம் அழியும்.