நிகழும் தன்மை அவன்

ஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன்
வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன்
ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே. – (திருமந்திரம் – 395)

விளக்கம்:
கடவுள் எங்கே? ‘ஆகின்ற தன்மையில்’ என்கிறார் திருமூலர். நிகழும் யாவற்றிலும் அந்த நிகழும் தன்மையாக இருக்கிறான், எலும்புகளை அணிந்து கொன்றை மலரைச் சூடியிருக்கும் சிவபெருமான். உருகுகின்ற தங்கம் போன்ற மினுமினுப்பான உடல் கொண்டவன் அவன். ஆயுள் முடிந்த உடன் நீங்கிவிடும் நம்முடைய சீவனுக்கு அவன் துணையாக வருவான். நம்முடைய அடுத்த பிறவி நிகழும் தன்மையிலும் அவனே துணையாக இருப்பான்.


என் ஆருயிர் அவன்!

நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர்
ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற
முன்துய ராக்கும் உடற்குந் துணையதா
நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே. – (திருமந்திரம் – 394)

விளக்கம்:
படைப்பெனும் இயக்கத்திலே நின்று உயிர்களை உருவாக்கும் இறைவன் குற்றம் காணமுடியாதவன். அவன் என் ஆருயுராய் இருக்கிறான். இந்த உடல் உயிரோடு ஒன்றி இருக்க ஒரு தன்மை வேண்டும். அந்தத் தன்மையை உடலுக்குத் தருபவன் அவனே! முன் வினைகளால் துயர் கொடுக்கும் நம் உடலிலும் நடுவாக பொருந்தி இருந்து நம்மை உயிர்ப்போடு வைத்திருந்து துணையாக இருக்கிறான்.


பிறப்பும் இறப்பும் பரிணாம வளர்ச்சி காண உதவும்

போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்
தாக்கமுஞ் சிந்தைய தாகின்ற காலத்து
மேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந்
தாக்குங் கலக்குந் தயாபரன் தானே. – (திருமந்திரம் – 393)

விளக்கம்:
பிறப்பும் இறப்பும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருப்பதால் தான் இந்த உலகம் பரிணாம வளர்ச்சி அடைகிறது. புனிதனான சிவபெருமானின் இந்த உன்னதச் செயலை நாம் உணர்ந்தால், நம் இறைவன் நம் எண்ணங்களுக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறான் என்பதையும், எட்டுத்திசைகளில் உள்ள எல்லாவற்றிலும் அவன் கலந்து பரவியிருக்கிறான் என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.


எல்லாப் படைப்பிலும் உள்ளொளியாக இருக்கிறான்

பயன்எளி தாம்பரு மாமணி செய்ய
நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு
அயனொளி யாயிருந் தங்கே படைக்கும்
பயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே. – (திருமந்திரம் – 392)

விளக்கம்:
சிவபெருமானை வழிபட்டால், அவன் நம் வாழ்வில், மாணிக்கம் ஒளி வீசுவது போன்ற ஒளியைக் கொடுப்பான். நன்மைகளை எளிதாக வாரி வளங்கும் நம் சிவபெருமானிடம் இருந்து அந்தப் பயனைப் பெறுவது எளிது. படைப்புத் தொழிலைச் செய்பவன் பிரமன். ஆனால் அவனது ஒவ்வொரு படைப்பிலும் நம் சிவபெருமான் உள்ளொளியாக விளங்கும் விதத்தை நாம் புரிந்து கொண்டால், அவனிடமிருந்து பயன் பெறுவது எளிதான வேலையாகும்.


எல்லாம் நீயே!

காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும்
பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
ஆரண மாஉல காயமர்ந் தானே. – (திருமந்திரம் – 391)

விளக்கம்:
இந்த உலகில் நிகழும் அனைத்திற்கும் காரணமானவன் நம் சிவபெருமான். அவன் எல்லாப் படைப்புக்களிலும் அன்பே உருவாய்க் கலந்திருக்கிறான். நாராயணன் செய்யும் காத்தல் தொழிலும், நடுவே சிவபெருமானின் பங்கு உண்டு. பிரமனின் படைத்தல் தொழிலிலும் அவனுடைய பங்கு உண்டு. அவனே வேதமாக இருக்கிறான். இந்த உலகமே நம் சிவபெருமான் தான்.


கயிலை வாழ் பராபரன்!

ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்
பாங்கார் கயிலைப் பராபரன் தானும்
வீங்குங் கமல மலர்மிசை மேலயன்
ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே. – (திருமந்திரம் – 390)

விளக்கம்:
ஓங்கி எழும் அலைகளைக் கொண்ட பெரும்கடலில் வசிக்கும் திருமாலுக்கும், மலர்ந்த தாமரையில் வீற்றிருக்கும் பிரமனுக்கும், தமக்கு மேலே நன்மை எல்லாம் தரும் பராபரன் ஒருவன் கயிலையிலே வசிக்கிறான் என்பது தெரியும். உலகில் ஒவ்வொரு உயிரும் உருவாகும் பொழுது, அவர்கள் அந்தப் பராபரனை உணர்வார்கள்!


பழமையான பரம்பொருள்

உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி
அண்டத் தமரர் தலைவனும் ஆதியுங்
கண்டச் சதுர்முகக் காரணன் தன்னொடும்
பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே. – (திருமந்திரம் – 389)

விளக்கம்:
ஏழு உலகங்களையும் உண்டு உமிழ்ந்தவனான திருமால், தேவர்களுக்கெல்லாம் தலைவனான உருத்திரன், தன்னுடைய கழுத்துக்கு மேல் நான்கு முகங்கள் கொண்ட பிரமன் ஆகியோர் தத்தம் தொழிலைச் செய்து படைப்பை நிகழ்த்துகிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் மேலே பழமையான பரம்பொருள் ஒன்று இருக்கிறது. திருமால், உருத்திரன், பிரமன் ஆகியோருக்கு அவரவர்க்கு உரிய தன்மையைக் கொடுத்தது அந்தப் பரம்பொருளே!


அனைத்தின் தன்மையாகவும் சக்தி விளங்குகிறாள்

நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
காயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடை
ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைபிறப் பாமே. – (திருமந்திரம் – 388)

விளக்கம்:
சிவனின் ஒரு பாகமாக விளங்கும் சக்தி, நீரின் சுவையாக விளங்குகிறாள். எரிகின்ற நெருப்பில் ஒளியாகவும், வீசுகின்ற காற்று தரும் உணர்வாகவும், வான்வெளியில் உள்ள சப்தங்களின் ஒலியாகவும் சக்தியே இருக்கிறாள். நீரினால் சூழப்பட்ட நிலப்பகுதி பல உயிர்களும் தோன்றக் காரணமாக இருக்கிறது. நிலத்தின் அந்தப் பிறப்பு தரும் தன்மையாக விளங்குபவள் சக்தியே ஆவாள்.