யோகத்தினால் குளிர்ந்த தன்மை பெறுவோம்!

ஆகின்ற சந்திரன் தன்னொளி யாயவன்
ஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும்
ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தானவ னாமே. – (திருமந்திரம் – 685)

விளக்கம்:
தொடர்ந்த தியானத்தில் சந்திரகலை கைகூடும் போது, மனம் நிலவைப் போன்ற குளிர்ச்சியைப் பெறும். நாமும் சந்திரனைப் போன்ற ஒளி கொண்டவராக இருப்போம். அட்டமாசித்தியான ஈசத்துவத்தைப் பெறும் போது நாமும் சந்திரனைப் போல உலகத்துக்கே குளிர்ந்த நன்மை அளிப்பவராய் ஆவோம்.


ஈசத்துவம்!

நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை எல்லாங்
கொண்டவை யோராண்டு கூடி யிருந்திடிற்
பண்டையவ் வீசன் தத்துவ மாகுமே. – (திருமந்திரம் – 684)

விளக்கம்:
சதாசிவத்தைத் தேடி உச்சிக்குச் செல்லும் நாயகியான குண்டலினி, நிலைத்து உச்சியிலேயே நிற்கும் போது, ஐம்பூதங்கள் இயங்கும் விதத்தைப் புரிந்து கொள்ளலாம். அதனால் ஏற்பட்ட தெளிவுடன் தொடர்ந்து ஓராண்டு தியானித்து வந்தால் மிகப் பழமையான ஈசனின் தத்துவம் புரிய வரும். அதுவே ஈசத்துவம் என்னும் சித்தியாகும்.


பிராகாமியம்!

ஆன விளக்கொளி யாவ தறிகிலர்
மூல விளக்கொளி முன்னே யுடையவர்
கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு
மேலை விளக்கொளி வீடெளி தாநின்றே. – (திருமந்திரம் – 683)

விளக்கம்:
நம்மிடம் மூலாதாரத்தில் ஒரு விளக்கொளி உள்ளது. அதைத் தூண்டி விட்டு, சுடர் மிகச் செய்யும் வழி தெரியாமல் இருக்கிறோம். நறுமணம் மிகுந்த அந்த குண்டலினி என்னும் விளக்கொளியைத் தூண்டி விட்டு அதன் சுடரை உணர்ந்தவர்கள், பெருஞ்சுடரான அந்த சிவபெருமானை எளிதாக உணரலாம்.


கரிமா என்னும் சித்தி அடையும் வழி!

அறிந்த பராசத்தி யுள்ளே அமரில்
பறிந்தது பூதப் படையவை யெல்லாங்
குவிந்தவை யோராண்டு கூட இருக்கில்
விரிந்தது பரகாய மேவலு மாமே. – (திருமந்திரம் – 682)

விளக்கம்:
யோகப்பயிற்சியில் நாம் உணரும் பராசக்தி, நம்முள்ளே நீங்காது அமர்ந்தால் ஐம்பூதங்களால் ஏற்படும் துன்பம் நம்மை நெருங்காது. அந்நிலையில் மனம் இன்னும் தியானத்தில் குவியும். ஓராண்டு காலம் இவ்வாறு மனம் குவிந்து பயிற்சி செய்தால் கரிமா என்னும் சித்தி வாய்க்கும். விண்ணிலிருந்து கவனிப்பது போல் நம்மைச் சுற்றி நடப்பதைக் கவனிக்கலாம்.


கரிமாவில் உண்மையை உணரலாம்!

போவதொன் றில்லை வருவது தானில்லை
சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை
தாமத மில்லை தமரகத் தின்னொளி
யாவது மில்லை யறிந்துகொள் வார்க்கே. – (திருமந்திரம் – 681)

விளக்கம்:
கரிமா என்னும் சித்தியினால் விண்ணின் தன்மை பெறலாம். அதாவது எதையும் பற்றில்லாமல் மேலிருந்து பார்க்கும் அனுபவம் கிடைக்கும். பற்றில்லாமல் வாழ்க்கையை பார்க்கும் போது பல உண்மைகள் விளங்கும்.

1. நாம் எதையும் இழப்பதில்லை, ஏதாவது கொண்டு வந்தால் தானே இழப்பதற்கு?
2. நாம் சாவதில்லை, காரணம் இந்த உலக வயதை ஒப்பிடும் போது நமது வாழ்நாள் என்பது மிக சொற்ப காலமே ஆகும். ஏதாவது வாழ்ந்திருந்தால் தானே சாவு?
3. நாம் எதிலும் தாமதம் செய்யவில்லை, கண நேரம் தோன்றி மறையும் நம் வாழ்நாளில் பெரிதாக எதுவும் ஆகப் போவதில்லை. அதனால் குற்றவுணர்வு தேவையில்லை.

அட்டாங்கயோகத்தில் நின்று அகத்தின் ஒளியை காண்பவர்க்கே இந்த உண்மைகள் புரியும்.


கரிமா எனப்படும் சித்தி!

ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின்
பாகின்ற பூவிற் பரப்பவை காணலா
மேகின்ற காலம் வெளியுற நின்றது
போகின்ற காலங்கள் போவது மில்லையே. – (திருமந்திரம் – 680)

விளக்கம்:
பிராத்தி எனும் சித்தி பெற்று குண்டலினியின் தன்மையையும், ஐம்பூதங்களின் இயக்கத்தையும் தள்ளி நின்று கவனிக்கும் போது எல்லாவற்றையும் மேலிருந்து பார்க்கும் அனுபவம் கிடைக்கும். விண்ணின்று பார்க்கும் இத்தன்மையே கரிமா எனப்படும் சித்தியாகும். இப்படிப் பார்க்கும் போது இந்தப் பூமியின் பரப்பளவை ஒப்பிட்டு நாமெல்லாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை உனரலாம். இந்த உலகத்தின் வயதை ஒப்பிடும் போது நமது வாழ்நாள் எல்லாம் மிக சொற்ப காலமே என்பதும் புரியும். இதனால் காலத்தைப் பற்றிய கவலை இல்லாமல் வாழலாம்.


பிராத்தி எனப்படும் சித்தி பெறலாம்

நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை யெல்லாங்
கொண்டவை யோராண்டு கூட இருந்திடில்
விண்டது வேநல்ல பிராத்தி யதாகுமே. – (திருமந்திரம் – 679)

விளக்கம்:
அட்டாங்கயோகம் பயிலும் காலத்தில் தத்துவ நாயகியான பராசக்தியை அறிந்து கொள்வதுடன், ஐம்பூதங்களின் இயக்கத்தையும் தள்ளி நின்று உணரலாம். இவ்வாறு ஐம்பூதங்களின் இயக்கத்தால் பாதிக்கப்படாமல் ஓராண்டு காலம் அவற்றை கவனித்து வந்தால், பிராத்தி எனப்படும் சித்தி பெறலாம்.


மகிமா – எதற்கும் அசைந்து கொடுக்காத தன்மை

தன்வழி யாகத் தழைத்திடுஞானமுந்
தன்வழி யாகத் தழைத்திடும் வையகந்
தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாந்
தன்வழி தன்னரு ளாகிநின் றானே. – (திருமந்திரம் – 678)

விளக்கம்:
அட்டாங்கயோகத்தில் மகிமா என்னும் சித்தி பெறும் போது எல்லாம் நம் வசப்படும். மாயையால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது, எதற்கும் நாம் அசைந்து கொடுக்க மாட்டோம். நாமே நம் வசப்பட்டுத் தன்வழியில் நிற்கும் போது ஞானம் பெருகும். நாம் ஞானம் பெறும் போது நம்மைச் சுற்றி உள்ள  உலகம் துயர் நீங்கித் தழைத்திடும். நம்மால் துயர் நீங்கிய உலகம் தானும் யோக வழியில் நின்று சிவனருள் பெறும்.


காற்று ஒளியாவதைக் காணலாம்!

ஆகின்ற காலொளி யாவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவது மில்லையாம்
மேனின்ற காலம் வெளியுற நின்றன
தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே. – (திருமந்திரம் – 677)

விளக்கம்:
மூச்சுப்பயிற்சியின் போது நாம் விடும் மூச்சு ஒளிமயமாகிறது. அதை நாம் உணர்ந்து கொண்டால், பிறகு நாம் வாழ்நாள் வீணாகக் கழியாது. யோக வழியில் நின்று தூய்மையான வாழ்வு பெறலாம். அவ்வழியில் நிற்கும் போது காலம் கூட நம் வசப்படும்.


மெய்ப்பொருள் சொல்லிய மெல்லியலாள்!

மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்
தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்
கைப்பொரு ளாகக் கலந்திடு மோராண்டின்
மைப்பொரு ளாகு மகிமாவ தாகுமே. – (திருமந்திரம் – 676)

விளக்கம்:
மெய்ப்பொருளை உணர்த்தும் குண்டலினிச் சக்தியின் துணை கொண்டு இலகிமா என்னும் சித்தி பெறுவதைப் பற்றிப் பார்த்தோம். இலகிமா என்னும் மென்மை பெற்று, தொடர்ந்து ஒரு வருடம் தியானத்தில் லயித்திருந்தால், சிவதத்துவம் பற்றிய ஞானம் கைகூடும். மறைபொருளாகிய அத்தத்துவத்தை உணர்வதே மகிமா என்னும் சித்தி ஆகும்.