ஞானம் பெற உடல் உறுதி முக்கியம்

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே – 724

விளக்கம்:
நம்முடைய உடல் நோயினால் வருந்தினால், உயிரும் சேர்ந்து வருந்திக் கஷ்டப்படும். உடலும் உயிரும் அவதிப்படும் வேளையில் மெய்ஞ்ஞானம் அடையும் வழியான அட்டாங்கயோகத்தை பயில்வது கடினம். அதனால் நம் உடலை உறுதிப்படுத்தும் வழிகளைப் பின்பற்றி உடலை வலிமையாக வைத்துக் கொள்வோம். உடல் உறுதியாக இருந்தால் உயிரும் உறுதியாக இருக்கும், யோக வழியில் தொய்வில்லாமல் நிற்கலாம்.

அழியில் – வருந்தினால்


மாசறு சோதி வகுத்து வைத்தானே!

ஓசையில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும்
நாசி யினில்மூன்றும் நாவில் இரண்டும்
தேசியும் தேசனுந் தம்மிற் பிரியுநாள்
மாசறு சோதி வகுத்துவைத் தானே – 723

விளக்கம்:
நடுநாடியான சுழுமுனையில் பொருந்தி இருந்து தியானம் செய்து, உச்சந்தலையில் குண்டலினியான சக்தியில் இருந்து சிவன் பிரிந்து சென்று மேல் அமர்வதை உணர்ந்தவர்கள் பெருஞ்செவம் பெற்றவர்கள். அவர்களை ஓசை, காட்சி, வாசனை, ருசி ஆகிய வெளிவுலக விஷயங்கள் பாதிக்காது, எப்போதும் சிவ ஆனந்தத்தில் திளைத்திருப்பார்கள். குற்றங்களை நீக்கும் சோதி வடிவான நம் சிவபெருமான் இவ்வாறு வகுத்து வைத்துள்ளான்.

ஓசையில் ஏழு – சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், எரித்தல்,சேர்த்தல்
ஒளியின்கண் ஐந்து – சுவை, ஒளி, நாற்றம், வெம்மை, எரித்தல்
நாசியில் மூன்று – நாற்றம், உயிர்ப்பு, உணர்தல்
நாவில் இரண்டு – எடுத்தல், சுவைத்தல்


பிராணன் என்னும் குதிரையைக் கட்டுப்படுத்துவோம்

ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லீரேல்
நீரா யிரமும் நிலமாயிரத் தாண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே – 722

விளக்கம்:
இடைகலை, பிங்கலை ஆகிய இரண்டு நாடிகளின் வழியாக மேலெ எழும் பிராணன் ஆகிய குதிரையை வசப்படுத்தி, அங்கும் இங்கும் வழி மாறாமல் நேராக மேலே ஏறச் செய்வோம். பிராணன் தடுமாறாமல் நேரான பாதையில் பயணம் செய்தால், உச்சந்தலையில் அமுதம் ஊறும். அவ்வமுதத்தை அதிகமாக பெருக்கி, அவற்றை உட்கொள்ள வல்லவர்கள், நீரில் ஆயிரம் ஆண்டுகளும் நிலத்தில் ஆயிரம் ஆண்டுகளும் சமாதியில் இருக்கும் அளவுக்கு உடல் உறுதியோடு இருக்கும். இது நந்தியம்பெருமானின் ஆணை.

ஈராறு கால் – இடைகலை, பிங்கலை ஆகிய இரண்டு வழிகளைக் கொண்ட மூச்சுக்காற்று


சிவ அருள் பெருஞ்செல்வம்

சோதனை தன்னில் துரிசறக் காணலாம்
நாதனும் நாயகி தன்னிற் பிரியும்நாள்
சாதன மாகுங் குருவை வழிபட்டு
மாதன மாக மதித்துக்கொ ளீரே – 721

விளக்கம்:
யோகப்பயிற்சியின் போது, குண்டலினியின் வழியே மேலே ஏறும் பிராணவாயு சிரசிற்கு மேலே செல்லும். அங்கே குண்டலினியாகிய சக்தியில் இருந்து சிவன் பிரிந்து மேற்செல்லும் போது சிவயோக சமாதி உண்டாகும். சக்தியில் இருந்து சிவன் பிரியும் இக்கணத்தை ஆத்ம சோதனையில் தெளிவாகக் காணலாம். அங்கே குருவாகக் காட்சி தரும் சிவபெருமானை வழிபட்டு, அவ்வருளைப் பெருஞ்செல்வமாக ஏற்றுக் கொள்வோம்.


பிராணவாயு ஒடுங்கும் முறை அறிவோம்

திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகிலர் ஆரும்
அழியும் படியை அறிந்தபின் நந்தி
திகழ்கின்ற வாயுவைச் சேர்தலு மாமே – 720

விளக்கம்:
மூச்சுக்காற்றைத் திரட்டி பிராணாயாமம் செய்து வருவதால் சிறப்புடன் விளங்குகிறோம். ஆனாலும் பயிற்சியின் போது பிராணவாயு ஒடுங்கும் நிலையை யாரும் அறிந்து கொள்வதில்லை. தியானத்தில் ஊன்றி நின்று பிராணவாயு ஒடுங்கும் நிலையை அறிந்து கொண்டால், நந்தியம்பெருமான் வீற்றிருக்கும் அருள்வெளியில் கலந்து திளைக்கலாம்.


நம்முடைய உடலே சிவாலயம் ஆகும்

தானே எழுந்தஅத் தத்துவ நாயகி
ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும்
வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகச் சிவாலய மாகுமே – 719

விளக்கம்:
வானமண்டலத்தில் தேவர்களுக்காக ஒரு உலகத்தைப் படைத்தவள், தத்துவ நாயகியாகிய நம் பராசக்தி. அத்தனை சக்தி கொண்ட அப்பராசக்தி, அட்டாங்கயோகப் பயிற்சி செய்யும் நம் உடலில் தாமே ஒரு வழியை உருவாக்கி உள்ளே வந்து அமர்கிறாள். அந்த அம்மையை நாம் மதித்துத் தொழுது, அவளுடைய அருளில் திளைத்திருந்தால் நம்முடைய உடல் சிவாலயம் ஆகும்.


உள்நாடியில் ஒடுங்கி நிற்போம்

கிடந்தது தானே கிளர்பயன் மூன்று
நடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப்
படர்ந்தது தானே அப் பங்கய மாகத்
தொடர்ந்தது தானே அச் சோதியுள் நின்றே – 718

விளக்கம்:
பிராணாயாமத்தில் நம்முடைய மூச்சுக்காற்று உள்நாடியான சுழுமுனையில் இருந்து விலகாது இருக்க வேண்டும். அந்நிலையில் நம் மூச்சு சகசிரதளத்தில் படர்ந்து அங்கே வீற்றிருக்கும் சிவசோதியுள் ஒன்றி நிற்கும். இதனால் இம்மை, மறுமை, முத்தி ஆகிய மூன்று நிலைகளிலும் பெருகுகின்ற பயன்களைப் பெறலாம்.

கிளர் பயன் – தொடர்ந்து வளர்கின்ற பயன்,   பங்கயம் – தாமரை


மூச்சுக்காற்று ஒளிமயமாய் மாறும்

சாதக மானஅத் தன்மையை நோக்கியே
மாதவ மான வழிபாடு செய்திடும்
போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால்
வேதக மாக விளைந்து கிடக்குமே – 717

விளக்கம்:
இரும்பினைப் பொன்னாக மாற்றும் இரசவாதம் போல், அட்டாங்கயோகத்தில் நின்று நம் மூச்சுக்காற்றை ஒளிமயமாக மாற்ற முடியும். நடுநாடியில் கருத்தை நிறுத்திப் பெருந்தவம் செய்து மூச்சுக்காற்றை சகசிரதளத்தில் புகச்செய்தால் அக்காற்று ஒளிமயமாக மாறும். அதனால் நாம் பல சாதகங்களைப் பெறலாம்.

வேதகம் – இரும்பைப் பொன்னாக்கும் இரசவாதம்.


ஊக்கமுடன் தொடர்ந்து தியானம் செய்வோம்

இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
ஒருக்கின்ற வாயு ஒளிபெற நிற்கத்
தருக்கொன்றி நின்றிடும் சாதக னாமே – 716

விளக்கம்:
தியானத்தில் உண்மையாக மனம் ஒன்றி சமாதி நிலையில் நிற்பவர், தாம் எவ்வளவு நேரம் அந்நிலையில் இருந்தோம் என்பதை உணர மாட்டார்கள். அந்த அளவுக்கு மனம் அருள் வெளியில் நிலைத்திருக்கும். தொடர்ந்த பயிற்சியில், சமாதி நிலையில் இருக்கும் கால அளவு பெருகி பெருமை மிக்க சிவ ஆனந்தத்தைப் பெறுவார்கள். பிராணாயாமத்தில் ஒருங்கும் நம் மூச்சுக்காற்று ஒளி பெற்று விளங்கும். இவ்வாறு ஊக்கம் மிகுந்து தொடர்ந்து யோகப் பயிற்சி செய்பவர் சிறந்த சாதகர் ஆவார்.

ஒருக்கு – ஒருங்கு,  தருக்கு – ஊக்கம் மிகுந்து


கருத்தை நடு நாடியில் நிறுத்துவோம்

புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை
மடையொன்றி நின்றிட வாய்த்த வழியில்
சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன்
விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே – 715

விளக்கம்:
தியானத்தில் நமது ஐம்பொறிகளும் நடுவழியான சுழுமுனையில் நில்லாமல், அங்கும் இங்குமாக வேறு விஷயங்களில் ஒன்றி அலைகிறது. மனத்தை பக்குவப்படுத்தி நம்முடைய கவனம் எல்லாம் நடு நாடியில் அசையாமல் நிறுத்தினால், சிரசின் மேலே சடையுடன் கூடிய சிவபெருமான் காளையில் அமர்ந்திருக்கும் காட்சியைக் காணலாம்.

புடை ஒன்றி – மனம் நேராக நில்லாமல் அருகில் உள்ள வேறு விஷயங்களில் ஒன்றுதல்.