பழைய பாடலை நீங்களே DTSக்கு மாற்றலாம்

அரட்டைக்கு அடுத்தபடியா பாட்டு கேட்குறதுன்னா நமக்கு ரொம்ப பிடிக்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை. பாட்டு கேட்கும் முறையிலும் தனித்தனி ரசனை உண்டு. முப்பது வருஷத்துக்கு முன்னால, பரமசிவத்தோட அண்ணன் ஸ்பீக்கருக்கு மேல மண்பானைய கவுத்திப் போட்டு பாடலின் தாளத்தை ரசிப்பார். பக்கத்து வீட்டு ஆசாரி அண்ணன் 10 band equalizer உள்ள டேப் ரிக்கார்டர் வைத்திருந்தார். ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு விதமா equalizerயை அட்ஜஸ்ட் பண்ணுவார். ரமாக்கா வீட்ல சோனி வாக்மேன். அதில் தென்பாண்டி சீம ஓரமா பாட்டு கேட்டது இன்னும் ஞாபகம் இருக்கு. மத்தபடி நிறைய வீட்டுல ரேடியோ தான். இப்போ நெலமையே வேற மாதிரி இருக்கு. ஃபோன் பேசுற கருவியில பாட்டு கேட்கிற ஐடியா எந்தப் படுபாவிக்கு வந்ததுன்னு தெரியல. ரயில்ல நடு ராத்திரி மூணு மணிக்கு சோதனை மேல் சோதனை, போதுமடா சாமின்னு அலற விடுறாங்க. சினிமா தியேட்டர வீட்டுக்குள்ள கொண்டு வந்துட்டோம். ஹோம் தியேட்டர்ங்கிற ஆறு ஸ்பீக்கர் செட்ட ஹால்ல மாட்டி,  ப்ளுரே டிஸ்க்ல படத்த ஓட விட்டு LED TVல படம் பார்ப்போம்னு 20 வருஷத்துக்கு முன்னால நாம யாருமே நெனச்சுக் கூட பார்த்திருக்க மாட்டோம். சரவுண்ட் சவுண்ட்ல படம் பார்க்கிறவர்களுக்கு பழைய பாடல்களை இன்னும் ஸ்டீரியோவில தான் கேட்க வேண்டியிருக்கேன்னு ஒரு வருத்தம் இருக்கு.

ஸ்டீரியோவில் உள்ள ஒரு mp3 பாடலை நீங்களே 5.1 DTS க்கு மாற்றிக் கொள்ளலாம். Goldwave என்றொரு software உள்ளது. இதை பயன்படுத்தி பாடலில் உள்ள இரண்டு சேனல்களை ஆறு சேனல்களாக ஹோம் தியேட்டரக்கு ஏற்றவாறு பிரிக்கலாம். இது பற்றி விவரமாகச் சொல்லித்தரும் ஒரு வலைப்பக்கத்தின் இணைப்பை கீழே கொடுத்திருக்கிறேன். பிரித்து வைத்த ஆறு சேனல்களை SurCode DTS encoder  பயன்படுத்தி 5.1 DTS பாடலாக மாற்றிக் கொள்ளலாம். Mp3ல் நாலரை mb இருக்கும் பாடல் dts பாடலாக 53 mb வருகிறது. கணினியில் windows media player பாடாது. VLC media playerல் கேட்கலாம்.

பழைய பாடல்களை DTS முறையில் கேட்பது நல்ல அனுபவமாகத் தான் இருக்க வேண்டும். ஆனால் சில விஷயங்களை அதற்கு முன் தெரிந்து கொள்ளுங்கள்.

  • பாடல் ரெக்கார்ட் செய்யும் போது ஆறு ட்ராக்காக பதிவது தான் உண்மையான DTS அனுபவத்தை தரும். software கொண்டு ட்ராக் பிரிப்பதை மேம்படுத்துதல் (enhancement) என்று வேண்டுமானால் சொல்லலாம். (சில பாடல்கள் வேறு விதமாகவும் ஆகலாம்.)
  • எந்த சாஃப்ட்வேராலும் ஒரு இசைக் கருவியின் சத்தத்தை மட்டும் தனியாக பிரித்து எடுக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட frequency rangeஐ தனியாகப் பிரித்து எடுக்கிறது. அவ்வளவு தான்.
  • இந்த DTS பாடலை ஸ்டீரியோ ஸ்பீக்கரிலோ, ஹெட்ஃபோனிலோ கேட்டால் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருக்காது.
  • 5.1 ஹெட்ஃபோன் என்றொன்று விற்கிறது. இது அடிப்படையிலேயே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சரவுண்ட் சவுண்ட் என்பது ஒரு பெரிய அறையில், தியேட்டர் எஃபக்ட்டில் படம் பார்ப்பதற்கானது. ரொம்பப் பெரிய அறையாக இருந்தால் 7.1 தேவைப்படும்.
  • 5.1 ஹோம் தியேட்டரையே நாம் இன்னும் முறைப்படி உபயோக்கவில்லை. ஒவ்வொரு ஸ்பீக்கருக்கும் இடையே உள்ள தூரத்தை அளந்து DVD ப்ளேயரில் இன்புட் செய்து calibrate செய்ய வேண்டும். ஆனால் இந்த வசதி நிறைய ப்ளேயர்களில் கிடையாது. இருந்தாலும் நிறைய பேருக்கு இது பற்றித் தெரியாது.
  • அப்புறம் இன்னொரு விஷயம். இந்த  DTS ஆக மாற்றப்பட்ட பாடலை நீங்கள் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொள்ளலாம். இதை நீங்கள் விற்க முடியாது. அதற்கான உரிமை உங்களுக்குக் கிடையாது. உரிமை கோருவதும் அர்த்தமில்லாதது.

ஸ்டீரியோ பாடலை DTS முறைக்கு மாற்றுவது பற்றி விவரமாக இங்கே – http://originaltrilogy.com/forum/topic.cfm/You-can-convert-your-stereo-audio-to-51-channel-DTS-audio/topic/15177/


கிராஃபிக் டிசைனிங் – சில உதவிக்குறிப்புகள் பாகம்-01

கிராஃபிக் டிசைனிங்கில் ஆர்வம் உடையவர்களுக்கு எனக்குத் தெரிந்த சில உதவிக் குறிப்புகளை (tips) இங்கே பகிரலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். இதில் ஃபோட்டோ ஷாப்பிலோ அல்லது கோரல் ட்ராவிலோ உள்ள கருவிகளின் உபயோகம் பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை. நாம் வேலை செய்யும் டிசைனின் தோற்றத்தை மேம்படுத்துவது பற்றி மட்டுமே எழுதுவதாக உள்ளேன். உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம் – டிப்ஸ் தரும் அளவுக்கு இவன் யார்? இவனுக்கு என்ன தெரியும்? என்று. அதைப் பற்றி முதலில் சொல்லி விடுகிறேன்.

நடிகர் சுருளிராஜன் ஒரு வில்லுப்பாட்டில் சொல்லுவார் ‘தெரியாதது எதுவோ, அதில தான் நாம முன்னுக்கு வர முடியும்’ன்னு. என் கதை அப்படித்தான். பதினஞ்சு வருஷமா இன்னும் எனக்கு புரிபடாத இந்த கிராஃபிக் டிசைனிங் தான் உண்ண உணவும், வசிக்க இடமும் தந்திருக்கிறது. இப்போதும் வாடிக்கையாளரை பக்கத்தில் வைத்துக் கொண்டு டிசைன் செய்வதை தவிர்த்து விடுகிறேன். அதற்கு காரணம், ஒரு டிசைனின் அடிப்படைத் தோற்றம் உருவாக நான் படும் பாட்டை பார்த்தால், எனக்கு டிசைனிங் தெரியாது என்னும் உண்மை வெளியே தெரிந்து விடும் என்பதால். சில சமயம் டிசைன் நன்றாக அமைந்து விடுவது உண்டு, அதற்கு காரணம் வாடிக்கையாளரின் ஜாதக விஷேசமே ஆகும். ஒவ்வொரு டிசைனுக்கும் அதிக நேரமும், முயற்சியும் எடுத்துக் கொள்வதால், அந்த அனுபவங்களில் இருந்து பகிர்ந்து கொள்ள சில விஷயங்கள் இருப்பதாக நம்புகிறேன்.

மிகவும் அடிப்படையான விஷயமாக நான் நினைப்பது, வாடிக்கையாளர் கொடுக்கும் இன்புட். நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது முதலில் தெளிவாகத் தெரிய வேண்டும். டிசைன் செய்யப்பட வேண்டியது லேபிளா, போஸ்டரா, அட்டைப்பெட்டியா, புக் கவரா என்பதுடன் அதன் அளவு கண்டிப்பாக வேண்டும். நிறைய பேர் முதலில் சரியான அளவு தருவதில்லை. “ஒரு டிசைன் போடுங்க, சைஸ் பிறகு மாத்திக்கிடலாம்” என்பார்கள். கடுமையான சொல்லுக்கு மன்னிக்கவும், மிகவும் முட்டாள்தனமான வேலை வாங்கும் முறை இது. சைஸ் மாற்றுவது எளிய வேலை தானே என்பார்கள். அது கஷ்டமா அல்லது எளிதா என்பது ஒரு பிரச்சனை இல்லை. நன்றாக அமைந்த ஒரு டிசைன் பிறகு சைஸ் மாற்றப்படும் போது, அதுவும் அதன் நீள அகல விகிதம் மாறினால், டிசைனின் தோற்றப்பொலிவு குறைந்து போகும். ஒரு டெய்லரிடம் போய் யாரும் குத்து மதிப்பா ஒரு சட்டை தைங்க, அளவு சேரலைன்னா பிறகு ஆல்டர் பண்னிக்கிடலாம்ன்னு சொல்லுவதில்லை. எல்லாம் நம்மிடம் மட்டும்தான். இன்னொரு விஷயம், A4 size என்பார்கள். A4 size என்பது 210 mm x 297 mm, ஆனால் நம் ஊரில் letter size முதல் foolscap size வரை எல்லாமே A4 என்று சொல்வது வழக்கம். சரியான A4 size ப்ரிண்ட் செய்ய 63,5 cm x 86 cm பேப்பர் அவசியம், பொதுவாக நமது ப்ரிண்டர்கள் உபயோகிப்பது 58.5 cm x 91 cm ஆகும். அதனால் அளவு மில்லி மீட்டரில் இருந்தால் நல்லது.

வாடிக்கையாளரிடம் அளவு உட்பட எல்லா விபரங்களும் தயங்காமல் கேட்டு வாங்குவது ஒரு நல்ல டிசைனின் ஆரம்பம். ஒரு உற்பத்திப் பொருளுக்கு பேக்கிங் டிசைன் கேட்டால், அதன் விற்பனை விலை முதல் எல்லா விபரங்களும் நான் வாங்கி விடுவதுண்டு. காரணம், பேக்கிங்கிற்கு ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ அதிகமாக செலவழிக்க வாய்ப்பிருந்தால் அதற்கேற்ற மாதிரி spot color printing, foils அல்லது UV ஏதோவொன்று டிசைனிங்கின் போது திட்டமிட்டுக் கொள்ளலாம் என்பதால். அடுத்து பொருளின் பெயர், அதைத் தயாரிக்கும் கம்பெனியின் பெயர் இவற்றில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்வது. சில பெயர்கள் அர்த்தம் புரியாது, ஆனால் அந்த பெயருக்கு ஏதாவது காரணம் இருக்கும். அதை கேட்டுத் தெரிந்து கொண்டால் பொருத்தமான டிசைன் அமைப்பது சுலபமாக இருக்கும்.

வேலை ஆரம்பிக்கும் போது சரியான document size மற்றும் key line அமைத்து விடுவது அவசியம். இது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

இப்போதைய trend
drop shadow, outer glow, outline போன்ற எதுவும் உபயோகிக்காமல்,
ஆனால் text எல்லாம் தெளிவாகத் தெரியும்படி layout செய்வது தான்.


சில பல கிறுக்கல்கள்

[liveblog]காலம் நம்மைக் கடப்பதில்லை. நாமும் காலத்தைக் கடப்பதில்லை. காலத்துடன் ஒருங்கிணைந்த பயணம் நம்முடையது.

மனிதன் வடிவமைத்த கான்செப்ட்களில் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று கடவுள், மற்றொன்று பணம்.

மனிதன் கண்டுபிடித்த கடவுளை மறுப்பவர்கள் பணத்தையும் மறுப்பது தான் நியாயம்.

கடவுள், பணம் இரண்டுமே உருவமாகவும், அருவமாகவும் அருள் பாலிப்பவை.

முட்டைகள் தங்கள் இனத்தை பெருக்கிக் கொள்வதற்காக கோழிகளை இடுகின்றன.


ரஜினிகாந்த், ஓஷோ, டார்வின் மற்றும் திருமூலர்

ஃபேஸ்புக்கில் பார்த்த ஒரு வீடியோ நிறைய விஷயங்களை மனத்தில் அலசச் செய்தது. அந்த வீடியோவில் ரஜினிகாந்த் கடவுள் உண்டா இல்லையா என்பது பற்றி தான் கேட்ட ஒரு சொற்பொழிவை மேற்கோள் காட்டிப் பேசியிருந்தார். அவர் சொன்னது இது தான் – “where there is a creation, there must be a creator. அந்த creator தான் கடவுள்”. இதை கேட்ட போது ஓஷோ நினைவில் வந்தார். அவர் ஏற்கனவே இதற்கு பதில் சொல்லியிருக்கிறார்.

அந்த ஓஷோவின் சொற்பொழிவில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி “கடவுள் இல்லை என்று நிஜமாகவே நம்புகிறீர்களா?” ஓஷோவின் நிதானமான பதில் இது “கடவுள் என்பவர் இல்லை, எனக்கு இது உறுதியாகத் தெரியும். அப்படி ஒருவர் இல்லை என்பதற்காக அந்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். கடவுள் என்னும் ஒருவரின் இருப்பு நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தும்”. மேலும் இது விஷயமாகப் பேசும் போது அவர் சார்லஸ் டார்வினின் சித்தாந்தத்தை கையில் எடுத்து ஒரு அருமையான விளையாட்டு ஆடியிருப்பார்.

“படைப்பு என்பது, ஒரு படைப்பாளியால் செய்து முடிக்கப்பட்ட  வேலையாகும். அவர் அந்த வேலையை முடித்து விட்டு வேறு வேலையை பார்க்கப் போய் விடுவார். அந்த படைப்பு தன்னளவில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும். ஆனால் இந்த உலகம் அப்படிப்பட்ட ஒரு படைப்பு கிடையாது, டார்வினின் தத்துவப்படி இந்த உலகம் தன்னளவில் பரிணாம வளர்ச்சி (evolution) அடைந்து கொண்டே இருக்கிறது, இனியும் அப்படித்தான் இருக்கும். இந்த பரிணாம வளர்ச்சி ஒரு பரிபூரண நிலையை, தன்னுடைய இலக்காக நோக்கி பயணம் செய்கிறது. அந்த பரிபூரண நிலை ஒரு நாளும் கிட்டப்போவதில்லை, இந்த வளர்ச்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதனால் இந்த உலகத்தை creator, creativity என்று தொடர்புபடுத்திப் பேசுவது பொருத்தமில்லாதது” இது ஓஷோவின் வாதம்.

ஓஷோவின் இந்த வாதத்துக்கு பதில் கிடைக்குமா என்று தேடினால், அந்த பதில் திருமூலரிடம் இருக்கிறது.

அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரியயற் காமே.

டார்வின் விஞ்ஞான பூர்வமாகச் சொன்ன விஷயத்தை திருமூலர் எப்படிச் சொல்கிறார் என்று பாருங்கள். “ இந்த உலகம் தன்னளவில் எப்போதுமே இளமையாகவும், அழகோடும், ஒரு எல்லைக்குள்ளேயும் இருக்கிறது. Evolution என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார்! உலகம் தோன்றி கோடிக்கணக்கான வருடம் ஆன பிறகும், நாம் யாரும் இன்னும் இது பழைய உலகம், இந்த உலகத்திற்கு வயசாகி விட்டது என்று சொல்வதில்லை. டார்வினின் வார்த்தையில் இது evolution, திருமூலர் சொல்வது எப்போதும் இளமை. அது மட்டுமில்லை, இந்த உலகத்தின் அழகு (அந்தம்) எப்போதுமே குறையாமல் இருக்கிறது. இதன் வளர்ச்சியில் எல்லாம் ஒரு ஒழுங்கு இருக்கிறது, அதைத்தான் எல்லை (ஈறு) என்கிறார். இது பற்றி கீதையிலும் வியந்து பேசப்படுகிறது. இன்னொரு விஷயம் திருமூலர் இந்தப் பாடலில் சொல்வது ‘அளவியல் காலம்’. இந்த உலகம் இது வரை இருந்த காலம், இனி இருக்கப் போகும் காலம் – இதெல்லாம கணக்கிட முடியாதது, எல்லையில்லாதது ஆகும்.

இதையெல்லாம் சொல்லி விட்டு திருமுலர் வைக்கும் பன்ச் இது தான் “இந்த விஷயங்களை கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கள். அந்த சங்கரன் எவ்வளவு சோர்வில்லாதவன் என்பது உங்களுக்குப் புரியும்”. Got it?

ஓஷோ மாதிரி யாராவது வந்து குழப்புவாங்கன்னு தெரிஞ்சு தான், நம்மாளுங்க எப்பவுமே படைப்பு என்பதை படைத்தல், காத்தல், அழித்தல் – இந்த மூணையும் சேர்த்தே சொல்வாங்க.


சத்தாதி நான்கிலும் இளையராஜா

உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்
திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த
சொரூபத் திருத்தினன் சொல்லிறந் தோமே. – (திருமந்திரம் – 1593)

விளக்கம்:
குண்டலினி சிரசினில் பொருந்தியிருக்கும் நிலை சமாதியாகும். அதுவே திருவடிப் பேறுமாகும். நாம் அந்நிலை அனுபவிக்கும் போது பேச்சு அற்று போகும், உணர்வு அழிந்து நான் என்ற நிலை மறந்து போகும். அலையில்லாத தெளிந்த நீரைப் போன்ற சிவத்தன்மை அனுபவமாகும். நான்கு வகை ஓசைகளான செவியோசை, மிடற்றோசை, நினைவோசை, நுண்ணோசை ஆகியவற்றைக் கடந்து விடலாம். அந்த சிவபெருமான் நம்மை நம்முடைய உண்மையான சொரூபத்தில் இருத்தினான், அதனால் பேச்சற்றுப் போனோமே.

சமாதி நிலையில் சிரசினில் இறைவன் திருவடியை மட்டுமே உணர்ந்திருப்போம். மற்ற எல்லா உணர்வுகளும் அற்றுப் போகும்.

சத்தாதி என்பது நான்கு வகை ஓசைகளைக் குறிக்கும். இது பற்றி எளிதாகப் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், இளையராஜா ரசிகர்களை வைத்து உதாரணம் சொல்லலாம். முதலில் செவியோசை, நம் காதில் விழும் சுற்றுப்புற ஒசை. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு ராஜாவின் இசை தவிர மற்ற இசை கேட்டால் காது சிவந்து ஒவ்வாமை ஏற்படுகிறது. அடுத்து மிடற்றோசை, நம் தொண்டையிலிருந்து வந்து நமக்கே கேட்கும் ஓசை. ராஜாவின் பாடல்களைக் கேட்டு ஹம் செய்வோமே, அதேதான். மூன்றாவது நினைவோசை, அந்த தென்றல் வந்து பாட்டு மண்டைக்குள்ளயே சுத்திகிட்டு இருக்குன்னு சொல்வாங்களே, அதேதான். ஒரு முறை கேட்ட பாட்டு திரும்பத் திரும்ப நினைவில் சுற்றி வரும் ஓசை அது. கடைசியாக நுண்ணோசை, இது அவ்வளவு எளிதாகக் கேட்க முடியாதது. நம் உடலினுள் ரத்தம் பாய்வது, மூச்சு உள்ளே சென்று வருவது போன்ற கேட்க முடியாத நிறைய ஓசைகள் உண்டாம். ஒரு பூ மலர்ந்து விரியும் போது அங்கே ஒரு நுண்ணோசை நிகழுமாம். ராஜா ரசிகர்களைக் கேட்டுப் பாருங்கள், மனம் நெகிழும் ஓசையை நிறைய முறை கேட்டிருப்பதாகச் சொல்வார்கள்.

In the state of Samadhi, we'll be speechless,
There will be no other feelings. Our egotism will be dissolved.
We'll be unite with Lord Siva. We'll not hear any sound surround us.
The Lord will keep us in our natural state .

கடவுள் ஸார்!

ஸார்! கடவுள் ஸார்! நாம் கூப்பிடுறது கேட்கலையா ஸார்?

“கேக்குது சேதனன் ஸார். சொல்லுங்க ஸார். என்ன வேணும்?”

“ஸார், ஒரு வரம் வேணும் ஸார்”

“தயங்காம கேளுங்க ஸார்”

“ஒரு ஞாயிறு சாயங்காலம் என்னோட இருக்கணும்”

“என்ன புரோகிராம் சேதனன் ஸார்?”

“நான் எழுதின சில கதைகள நீங்க வாசிக்கணும் கடவுள் ஸார்”

“வாசிச்சா?”

“ஒரு வடையும் டீயும் வாங்கித் தருவேன் ஸார்”

“நல்ல மசாலா டீயா இருக்கட்டும் சேதனன் ஸார்”

“ஆனா ஒரு கண்டிஷன் ஸார். படிக்கும் போது கொஞ்சமும் முகம் சுளிக்கக் கூடாது. சுளிச்சா வடைய பிடுங்கிருவேன்”

“ம்ம். அடுத்த புரோகிராம் என்ன ஸார்?”

“ஒரு சினிமாவுக்கு போறோம் கடவுள் ஸார்”

“என்ன படம் ஸார்?”

“பரதேசி ஸார்”

“ஓ! விகடன் கூட நிறைய மார்க் போட்டிருக்கு. போலாம் ஸார்”

“ஒரு சின்ன விண்ணப்பம் கடவுள் ஸார்”

“சொல்லுங்க ஸார்”

“படம் பார்த்துட்டு ஒரு விமர்சனம் எழுதித் தரணும் ஸார். அதுல யாருமே யோசிக்காத கோணமெல்லாம் இருக்கணும் ஸார்”

“ஓண்ணும் ப்ரச்சனை இல்ல ஸார், சத்யம் சினிமாஸ்ல என்னோட ஆத்துக்காரிக்கும் சேர்த்து டிக்கட் புக் பண்ணிருங்க. போக வர என் டி எல் டாக்ஸிக்கு சொல்லிருங்க”

“ஸார்…”

“ஏன் சேதனன் ஸார் தலைய சொறியுறீங்க?”

“கடவுள் ஸார்! இதுக்கெல்லம் நீங்க காசு கொடுப்பீங்களா? என்கிட்ட வடையும் டீயும் வாங்கத்தான் காசு இருக்கு. நீங்க தான் நெறைய காசு வச்சுருப்பீங்களே ஸார்”

“சேதனன் ஸார்! காசில்லாதவனுக்கு எதுக்கு ஸார் பரதேசியும் விமர்சனமும்? போய் பொழப்பப் பாருங்க ஸார்”

________________________________________________________________________________________________________________________

Note to self – நாளைலருந்து ஒழுங்கா பொழப்பப் பாக்கணும்.


ஊர்வம்பில் தீம்பில்லை

“அந்த மொத வீட்டு கணேசன் பஸ்லேருந்து கீழ விழுந்துட்டானாம். ஆஸ்பத்திரில சீரியஸா இருக்கான்”

“அடப்பாவமே! தான் உண்டு பாட்டில் உண்டுன்னு இருப்பானே. எங்க  வச்சு விழுந்தான்?”

“மெட்ராஸ்லருந்து மதுர வர்ற வழில”

“அவ்ளோ தூரம் படியிலயா நின்னுக்கிட்டு வந்தான்?”

“பஸ்ஸோட டாப்புல படுத்தவன் அசந்து தூங்கிட்டான் போல”

“டாப்புலயா? அவன் ஏங்க அங்க போய் படுத்தான்?”

“கைல காசில்ல போல. யாருக்கும் தெரியாம மேல ஏறி படுத்துகிட்டான்”

“அடப்பாவி! இப்பிடி விழுந்தான்னா பொழைக்க முடியாத? எப்டி இருக்கான் இப்போ?”

“பொழச்சுக்கிட்டானாம். அவன் வீட்ல யாருக்கும் தெரியாது. நீ எதுவும் சொல்லிராத”

“யாரு? அந்த அழகி கிட்டயா? நான் ஏங்க அவகிட்ட பேசப்போறேன்!”

“அவ அழகியா? இந்த விஷயம் இவ்வளவு நாள் தெரியாம போச்சே”

“அப்பிடித்தான அலட்டிக்கிடுறா அவ”

“சரி இருக்கு அலட்றா. இங்க ஏன் தீயுற வாசம் வருது? ஆனா இதில ஒரு காமெடி என்னன்னா…  ஸாரிப்பா அது காமெடி இல்ல. விழுந்தவன் வலியே தெரிலன்றானாம்.”

“ஏன்? அவ்ளோ மப்பா?”

“அவன் சொல்றானாம், என் பொண்டாட்டி பண்றதெல்லாம் நெனச்சுப் பாத்தா இதெல்லாம் ஒரு வலியே இல்ல அப்படின்னு சொன்னானாம்”

“பாவங்க அவன். கல்யாணத்துக்கு முன்னால நல்லாருந்தான். ஒரு கெட்ட பழக்கம் கெடையாது. இந்த அழகி வந்தா, எல்லாம் போச்சு”

கொஞ்ச நேரம் அங்கே அப்பாடாங்கிற மாதிரி இருந்தது. ”இவ கூடத்தான் சண்டை போடுவா, ஆனா இப்படியா?  யோசிச்சுப் பார்த்தா இவள் சண்டையிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யுது.”

“இவரெல்லாம் என்னைக்காச்சும் குடிச்சிருக்கிறாரா? இல்ல வேற எதுவும் கெட்ட பழக்கம்தான் உண்டா? என்ன கொஞ்சம் தொண தொணம்பாரு”

ஒரு ஊர்வம்பின் முடிவு இது.

காதில் வந்து விழுந்த இன்னொரு ஊர்வம்பு  இது.

“ஏடி! உங்க அக்கா திருச்செந்தூர் கடல பாத்திட்டு இவ்ளோ தண்ணியா அப்படின்னுருக்கா. அடுத்த நாள் கடல் பத்தடி உள்ள போயிருச்சு. உன் பவிசையெல்லாம் அவகிட்ட காம்பிச்சிராத”


தலையெழுத்து – மாறுதலுக்கு உட்பட்டது

சில பேர் தெளிவாத்தான் இருப்பாங்க. ஆனால் ரொம்ப சோதனை வரும் போது ‘நம்ம நேரம் சரியில்லையோ’ அப்படிங்கிற நினைப்பு வரும். அது அந்த நெருக்கடி நேரம் மட்டும் தான், பிறகு அந்த நினைப்பை உதறிட்டு  களத்துல இறங்கிடுவாங்க.  இது நார்மலான விஷயம். இன்னொரு வகையானவர்கள் உண்டு, ’எல்லாமே விதிப்படி தான் நடக்குது. நாம என்ன தான் முட்டி மோதினாலும் நடக்குறது தான் நடக்கும்’ அப்படின்னுட்டு பெரிசா முயற்சி எதுவும் எடுக்க மாட்டாங்க. இப்படி தலைவிதியை மட்டுமே நம்பி நொந்து கொள்பவர்கள் இந்த பழமொழி நானூறு பாடலைப் படித்துப் பார்க்கலாம்.

முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று
தொழுதிருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல்
இழுகினா னாகாப்ப தில்லையே முன்னம்
எழுதினான் ஓலை பழுது.

எல்லாம் ஏற்கனவே அவன் எழுதி வைத்த தலையெழுத்துப்படி தான் நடக்கும், அப்படின்னு முயற்சி எதுவும் இல்லாமல் அந்த சாமியை கும்பிட்டுகிட்டே இருந்தால் துன்பம் தீராது. “எதனாலேயோ தலையெழுத்தை தப்பா எழுதிட்டான், நாம செய்யுற முயற்சியைப் பார்த்து அந்த தவறைத்  திருத்தி கண்டிப்பாக மாற்றி எழுதுவான்” அப்படிங்கிறது தான் சரியான அணுகுமுறை.

இழுகினானாகக் காப்பதில்லையே, முன்னம் எழுதினான் ஓலை பழுது” என்பது பழமொழி.

சோம்பலை விரட்ட உதவும் இன்னும் சில பழமொழிகளைப் பார்க்கலாம்.

தம்மால் முடிவதனைத் தாமாற்றிச் செய்கல்லார்
பின்னை ஒருவரால் செய்வித்தும் என்றிருத்தல்
சென்னீர் அருவி மலைநாட! பாய்பவோ
வெந்நீரு மாடாதார் தீ.

 தானே செய்து முடிக்கக் கூடிய சிறிய காரியத்தை கூட, வேறு ஒருவரிடம் தள்ளி விட்டு முடிக்கச் செய்பவரிடம், முக்கியமான பெரிய பொறுப்பை கொடுத்தால், அது வேலைக்கு ஆகாது. “பாய்பவோ வெந்நீரு மாடாதார் தீ” என்பது பழமொழி. வெந்நீரில் குளிக்க முடியாதவரை தீயில் பாயச் சொன்னால் பாய்வாரோ!

ஒன்றால் சிறிதால் உதவுவதொன் றில்லையால்
என்றாங் கிருப்பின் இழுக்கம் பெரிதாகும்
அன்றைப் பகலேயும் வாழ்கலார் நின்றது
சென்றது பேரா தவர்.

ஒரு வியாபாரி விற்பனைக்கு வைத்திருக்கும் பொருள் ஒன்றெனினும் , அதுவும் சிறிதெனினும், அதை விற்க போதிய உதவி கிடைக்கவில்லை எனினும், முயற்சி இல்லாமல் சோம்பி இருந்தால் அதனால் கெடுதலே விளையும். ஒரு நாள் தன்னாலேயே அழிந்து விடுவர். விடா முயற்சியாய் சிறிய அளவிலாவது கொடுக்கல் வாங்கல் செய்து வர வேண்டும். “வாழ்கலார் நின்றது சென்றது பேராதவர்” என்பது பழமொழி. அதாவது கொடுக்கல் வாங்கல் செய்யாதவரின் வாழ்வு கடினம்.

வெற்றி வேல் வேந்தன் வியங்கொண்டால் யாம் ஒன்றும்
பெற்றிலேம் என்பது பேதைமையே, மற்று அதனை
எவ்வம் இலராகிச் செய்க, அது அன்றோ
செய்க என்றான், உண்க என்னுமாறு

வெற்றிவேல் வேந்தன் ஏவல் செய்தால், நம்மால் முடியுமோ முடியாதோ என்று நினைப்பது அறியாமையே! வெறுப்பு எதுவும் இல்லாதவராக அந்த வேலையை சிறப்பாக செய்க. அது எப்படியென்றால் “செய்க என்றான் உண்க என்னுமாறு”.

வெற்றிவேல் வேந்தன்னு சொல்கிறார் முன்றுறையரையனார். அதாவது சக்ஸஸ்ஃபுல் பாஸ்.  அந்த பாஸுக்கு நம் வேலைத் திறன் என்ன, நம் வேலைக்கு என்ன சம்பளம் கொடுக்கணும் எல்லாமே தெரியும். அதெல்லாம் தெரிஞ்சதால தான் வெற்றி வேல் வேந்தன். அவர் நம் திறமையை நம்பி ஒரு அசைன்மண்ட் சொன்னா ஸ்பெசல் மீல்ஸ் ஆர்டர் பண்ணின மாதிரி. அள்ளி சாப்பிட வேண்டியது தான்.

புதிய வருடத்தில் கூர் அம்பு அடி இழுத்து, தடைகளைத் தகர்த்து எறிந்திட வாழ்த்துகள்!


நிர்வாகத்தில் உதவும் பழமொழிகள்

முத்தையா ஒரு செங்கல் வியாபாரம் ஆரம்பித்தான். முதலில் நூறு கல் வித்தாலே பெரிய வியாபாரமா இருந்தது. வேலைக்கு ஆள் வச்சுக்கலை. தனக்கே சம்பள அளவில் ஏதாவது கிடைச்சா போதும்னு நடத்தினான். கொஞ்ச கொஞ்சமா வியாபாரம் கூடிச்சு. செங்கலை லோடாக கேட்க ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் வருமானம் ஏறுச்சு. வேலைக்கு ஒரு ஆள் வச்சா இன்னும் கொஞ்சம் வியாபாரம் கூட்டலாம்னு நெலமை வந்தது. வர்ற வருமானத்தில சின்ன பங்கு சம்பளமா குடுத்தா என்னன்னு தைரியமா வேலைக்கு ஆள் வச்சான். ஒரு ஆள் பத்து ஆள் ஆச்சு. ஒரு லாரி வாங்கி அதுவும் ஏழெட்டு ஆயிருச்சு. பர பரன்னு எல்லாருமா வேலை பார்த்து பெரிய வியாபாரமா வளர்த்துட்டாங்க.

முத்தையாவுக்கு இப்போ தன்கிட்ட வேலை பார்க்கிற பத்து பதினஞ்சி பேரை சரியா வேலை வாங்கினாலே போதும். வியாபாரம் தன்னால நடக்கும். அவன் ரொம்ப படிச்சிருக்கலைன்னாலும் தன்னோட அனுபவத்தினால யார்கிட்ட என்ன வேலை குடுக்கலாம், எப்படி அவங்களை சோர்வடையாம வேலை வாங்கலாம்னு தெரிஞ்சிகிட்டான். ஒருத்தன வச்சு இன்னொருத்தன கண்காணிக்கிறது எப்படிங்கிறது கூட கத்துகிட்டான்.

Mary Parker Follett என்னும் அமெரிக்க மேலாண்மை ஆலோசகர் (அவர் வாழ்ந்து முடிந்து 80 வருஷம் ஆகுது) ”management is the art of getting things done through people” என்கிறார். இவர் எழுதிய மேலாண்மையப் பற்றிய தத்துவங்கள் முக்கியமானவையாக பேசப்படுகிறது. முத்தையாவுக்கு இதெல்லாம் தெரியாது, ஆனால் இதத்தான் அவன் செஞ்சிகிட்டு இருக்கான்.

மேலாண்மையை ஆறு செயல்பாடுகளாக பிரிக்கிறார்கள்.

  1. Planning
  2. Organizing
  3. Staffing
  4. Leading
  5. Monitoring
  6. Motivation

Planning – திட்டமிடுதல். எவ்வளவு செங்கல் வித்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும், எவ்வளவு செங்கல் இங்கே விற்க முடியும், நாம் எவ்வளவு கொள்முதல் செய்து இருப்பு வைக்கலாம் என்பதெல்லாம் யோசித்து முடிவு செய்வது. பழமொழி நானூற்றில் உள்ள ஒரு பாடல் இது.

தற்றூக்கித் தன்துணையுந்தூக்கிப் பயன்தூக்கி
மற்றவை கொள்வ மதிவல்லார் - அற்றன்றி
யாதானும் ஒன்றுகொண்டு யாதானும் செய்தக்கால்
யாதானும் ஆகி விடும்.

இதில் உள்ள பழமொழி – ’யாதானும் ஒன்று கொண்டு யாதானும் செய்தக்கால் யாதானும் ஆகிவிடும்’.

இது நம்மால் செய்ய முடியுமா, இதை செய்து முடிக்கும் அளவு நமக்கு துணை உள்ளதா (ஆள் துணை மட்டுமில்லாமல் storage, transportation போன்றவையும் சேர்த்து), இதை முடிப்பதால் நமக்கு போதுமான பயன் உண்டா (வருமானம்) என்பதெல்லாம் யோசித்து அப்புறம் காரியத்தில் இறங்குபவர் வல்லவர்.

Organizing ஒருங்கிணைத்தல். அதாவது செயல்முறை வகுப்பது. செங்கலின் இருப்பை பராமரிக்க ஒருவர், வரவு செலவு எழுதி வைக்க ஒருவர், வசூல் செய்ய ஒருவர், இப்படி வேலைகளை பிரித்து கொடுத்து அவர்களுக்குள் ஒரு நல்ல பிணைப்பை ஏற்படுத்துவது.

முடிந்ததற்கு இல்லை முயற்சி முடியாது
ஒடிந்ததற்கு இல்லை பெருக்கம் வடிந்தற
வல்லதற்கு இல்லை வருத்தம் உலகினுள்
இல்லதற்கு இல்லை பெயர்.

இதில்  ‘வடிந்தற வல்லதற்கில்லை வருத்தம்’ என்று பழமொழி ஆசிரியர் சொல்வது organizing என்பதற்கு பொருத்தமாக உள்ளது. அதாவது எந்த ஒரு வேலையையும், அது எவ்வளவு கடினமானதா இருந்தாலும், தெளிவா ப்ளான் பண்ணி பிரிச்சிகிட்டோம்னா அது நல்லபடியா முடியும்..

Staffing சரியான ஆட்களை வேலைக்கு அமர்த்துவது. அவர்கள் தகுதி தெரிந்து சரியான வேலை கொடுப்பது. பழமொழி  நானூறில் இதற்கு நிறைய பாடங்கள் உள்ளது.

தெற்ற அறிவுடையார்க் கல்லால் திறனிலா
முற்றலை நாடிக் கருமஞ் செயவையார்
கற்றொன் றறிந்து கசடற்ற காலையும்
மற்றதன் பாற்றேம்பல் நன்று.

தெளிந்த அறிவுடையவர் திறன் இல்லாதவனை வேலையில் அமர்த்த மாட்டார். கற்று அறிந்தவரையும் குற்றம் இல்லாதவரையும் வேலைக்கு வைத்துக் கொள்வார்கள். யார் யாரை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு நிறைய பழமொழிகள் உள்ளன.

Leading வழி நடத்துதல். இது ஒரு மேனேஜரின் வேலை. எந்த சூழ்நிலையிலும் சரியான முடிவெடுக்கும் திறன். உதாரணத்திற்கு வேலை செய்பவர்கள் ஸ்ட்ரைக் செய்தால் அவர்களை வழிக்கு கொண்டு வர தெரிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்க்கு சப்ளை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்
அந்நீர் அவரவர்க்குத் தக்காங் கொழுகுபவே
வெந்நீரின் தண்ணீர் தெளித்து.

சிலரிடம் தன்மையாக நடந்து கொண்டால் தான் வேலை வாங்க முடியும். வேறு சிலரிடம் கடுமை காட்டினால் தான் வேலை நடக்கும். குளிக்கும் போது தேவைக்கேற்ப தண்ணீரில் வெந்நீர் கலப்பது போல அவரவர் தன்மைக்கேற்ப வேலை வாங்க வேண்டும். ஒரு மேனேஜருக்கு உபயோகமான பாடம் இது.

Monitoring – கண்காணித்தல். அவரவர் வேலையை பிரித்து ஒப்படைத்து விட்டாலும், அவர்கள் நல்லவர் ஆனாலும் வல்லவர் ஆனாலும் அவர்களிடம் வேலையின் நடப்பு நிலை பற்றி தொடர்ந்து விசாரித்து வர வேண்டும். இதற்கு ரொம்பவே பொருத்தமான பாடல் ஒன்று உண்டு.

விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்
முட்டா தவரை வியங்கொளல் வேண்டுமால்
தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும்
தட்டாமல் செல்லா துளி.

தொட்டாலே துவளும் துளிரின் மேல் உளியை வைத்தாலும், அந்த உளியை தட்டினால் ஒழிய அது தளிரை வெட்டாது. அது போல பிறரிடம் ஒரு காரியத்தை ஒப்படைத்தால் தொடர்ந்து அவரிடம் அது என்னாயிற்று என்று விசாரித்து வர வேண்டும்.

Motivation ஊக்கப்படுத்துதல். வேலை பார்ப்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், கொஞ்சம் ஊக்கம் சேர்த்து கொடுத்தால் அங்கே வேலை நன்றாக நடக்கும். எல்லாருமே ஒரு அங்கீகாரத்திற்காக ஏங்குபவர்கள் தான். இங்கே ஒரு ஊக்கம் தரும் பாடல்.

வீங்குதோட் செம்பியன்சீற்றம் விறல்விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால் - ஆங்கு
முடியும் திறத்தால் முயல்கதாம் கூரம்
படியிழுப்பின் இல்லை யரண்.

கூர்மையான அம்பை வில்லில் பொருத்தி அதன் அடியை இழுத்தால் எதிரே இருக்கும் எந்த தடையும் பொடி பொடியாகி விடும். நம்முடைய முயற்சி அந்த வகையில் இருந்தால் எவ்வளவு கடினமான காரியத்தையும் சாதிக்கலாம்.

மேலே சொன்ன செய்யுள்கள் பழங்காலத்தில் எழுதப்பட்டதால் புரிவதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனால் அதன் பொருள் உணர்ந்து பார்க்கும் போது இப்போதுள்ள மேலாண்மைக்கும் அது பொருத்தமாகவே உள்ளது. பழமொழி நானூறு மொத்தம் நானூறு பாடல்கள் கொண்டது. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் வருகிறது. இதன் ஆசிரியர் முன்றுறையரையனார். இதன் காலம் ஐந்தாம் நூற்றாண்டு என கருதப்படுகிறது. தற்சிறப்பு பாயிரத்தில் ‘பண்டைப் பழமொழி நானூறும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஐந்தாம் நூற்றாண்டிலேயே இந்தப் பழமொழிகள் பழமையானது என்றால் அவை வழக்கத்தில் தோன்றிய காலத்தை யோசித்துப் பார்த்தால் அதன் தொன்மை புரியும்.

பழமொழி நானூறு பல விஷயங்கள் பற்றி பேசுகிறது. கல்வி, ஒழுக்கம், பொருள், முயற்சி, நட்பு, அரசியல், நன்றி, காரியம் முடிக்கும் சாதுர்யம், இல்வாழ்க்கை, இப்படி அது தொட்டுச் செல்லும் தலைப்புகள் அதிகம். பகைவனை எப்படி சமாளிப்பது என்று கூட பாடல்கள் உண்டு. இதோ ஒரு உதாரணம்.

இயற்பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே
அயற்பகை தூண்டி விடுத்தோர் - நயத்தால்
கறுவழங்கிக் கைக்கெளிதாய்ச் செய்க அதுவே
சிறுகுரங்கின் கையாற் றுழா.

தனது பகைவனை வெல்ல நினைப்பவன், முதலில் தனது பகைவனுக்கு எதிராக இன்னொரு பகையை வெளியே இருந்து தூண்டி விட்டு ஒரு குழப்ப நிலையை உருவாக்கி, தமது பகை தீர்ப்பதற்கு சாதகமான நிலையை உருவாக்கலாம். பெரிய குரங்கு வேகின்ற கூழை சிறிய குரங்கின் கையாயால் கிளறி விடுவது போல. ’சிறுகுரங்கின் கையாற் றுழா’ என்பது பழமொழி. பகையைப் பற்றிய வகையில்  இந்த பழமொழி வந்தாலும், இதை வணிகத்தில், செய்யும் தொழிலில், போட்டியாளர்களை சமாளிக்கும் விஷயத்தில் பொருத்திப் பார்க்கலாம்.

இந்த பழமொழியெல்லாம் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பே பேச்சு வழக்கில் இருந்துள்ளது. சிக்கலான நிர்வாக தத்துவமெல்லாம் சர்வ சாதாரணமா பழமொழியா பேசியிருக்காங்க. வரலாற்றில் படிச்சிருக்கோம், பழங்காலத்தில் தமிழர்கள் வாணிபத்தில் வல்லவராய் இருந்தார்கள், கடல் கடந்து வாணிபம் செய்து நிறைய பொருள் சம்பாதித்தார்கள் என்று. இந்த நிர்வாகத் தெளிவு கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அதுதான் இன்றைக்கும் முத்தையா மாதிரி வியாபாரிகளுக்கு இரத்தத்திலேயே ஊறியிருக்கு போல.


வெள்ளி கறுத்தால் சனி

வியாழக்கிழமைக்கும் வெள்ளிக்கிழமைக்கும் ஒரே சண்டை. இடையில் மாட்டிக் கொண்ட ஒரு ராகு காலம் மயிரிழையில் செத்துப்போனது. இருவருக்கும் இடையே சமரசம் பண்ண இறங்கி வந்த டிசம்பர் மாசம் வாங்கிக் கட்டிக்கொண்டது.

“ஒனக்கே ஒரு நெலையான எடம் கெடையாது. பாதி நாள் கார்த்திகைலயும் மீதி நாள் மார்கழிலயும் இருக்கே. நீ எங்களுக்கு நாட்டாமையா?” எப்பிடி மடக்கினேன் பாத்தியா என்று தொலைக்காட்சி விவாத்தில் கலந்து கொண்டவர் போல பெருமிதப்பட்டுக் கொண்டது வியாழன்.

“உங்களுக்குள்ள என்ன பிரச்சனை?” பஞ்சாயத்துக்காரரின் ஆர்வம் வெளிப்படையாகவே தெரிந்தது.

“ஏன்? பிரச்சனை இருந்தாத்தான் சண்டை போடணுமா?” இப்போ வெள்ளி ‘இது எப்படி’ என்பது போல் வியாழனைப் பார்த்தது. வெளியில் இருந்து ஒருவர் எட்டி எட்டிப்பார்த்தார், பார்க்க வெளிநாட்டுக்காரர் போல இருந்தது.

“என்னை நான் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்.  முகநூல் என்ற பெயரில் அறியப்படுபவன் நான். என்னைத் தவிர்த்து இந்த உலகில் எந்த சச்சரவும் நடக்க முடியாது. இங்கே ஒரு வன்கொடுமை நடப்பதாக அவதானித்து உணர்ந்தேன். உங்கள் கருத்து மோதலை என் இடத்தில் வந்து நீங்கள் நிகழ்த்தலாம்”

“ஸார், நீங்க ஆங்கிலத்திலேயே பேசுவது தமிழுக்கு நல்லது” வியாழனும் வெள்ளியும் சேர்ந்து கொண்டன.

“ஓகே. வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்?”

“இட் இஸ் அவர் ப்ராப்ளம்!”

சம்பந்தம் இல்லாமல் வந்தவர்களை விரட்டி விட்ட சந்தோஷத்தில் இரண்டு வயது முதிர்ந்தவர்களும் (இளமைக்கு எதிர்ப் பதம் கிழமை தானே) சிரித்துக் கொண்டார்கள். திடீரென வெள்ளி கறுப்பாக மாற ஆரம்பித்தார்.

“நீ ஒரிஜினல் தான்” வியாழன் சொன்னார். “கறுக்கிற வெள்ளி தான் ஒரிஜினலாமே!”