பொறுமை பயில்வது அவசியம்

வல்வகை யானும் மனையிலும் மன்றிலும்
பல்வகை யானும் பயிற்றி பதஞ்செய்யும்
கொல்லையி னின்று குதிகொள்ளும் கூத்தனுக்கு
எல்லையி லாத இலயம்உண் டாமே. –  (திருமந்திரம் – 542)

விளக்கம்:
காட்டில் நின்று குதித்து ஆடும் கூத்தனுக்கு எல்லை இல்லாத பொறுமை உண்டு. அதனால் தான் அவன் லயத்தோடு ஆடுகிறான். நாம் வீட்டிலும் வெளியே பொது இடங்களிலும் உறுதியோடு பொறுமை காக்க வேண்டும். அதற்காக பல வகையிலும் நமது மனத்தை பக்குவப்படுத்தி பயிற்றுவிக்க வேண்டும்.


ஞானியை மன்னனும் வணங்குவான்

ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்
சேனை வளைந்து திசைதொறும் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை விளைந்தருள் எட்டலு மாமே. –  (திருமந்திரம் – 541)

விளக்கம்:
ஞானம் விளைந்த பொறுமை மிக்க ஞானிகள் அனைவராலும் வணங்கப்படுவார்கள். அந்நாட்டின் மன்னனும் தனது சேனைகளுடன் அந்த ஞானி இருக்கும் திசை நோக்கி பணிந்து வணங்குவான். இவ்வளவு பெருமை படைத்த ஞானிகள் நம்மையெல்லாம் படைத்த ஆதிக்கடவுளான சிவபெருமானை அடைவார்கள். மற்றவர்கள் எல்லாம் தமது பொறுமையினாலே ஞானத்தைப் பெறும் போது சிவபெருமானை அடைவார்கள்.


பொறுமை உடைய ஞானி!

ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய
மாலுக்கும் ஆதி பிரமற்கும் .மன்னவன்.
ஞாலத் திவன்மிக நல்லன்என் றாரே. –  (திருமந்திரம் – 540)

விளக்கம்:
தேவலோகத்தின் கொலுமண்டபத்தில் சூழ்ந்திருக்கும் தேவர்கள் எல்லாம் பாலைப் போன்ற தூய்மையான மேனியைக் கொண்ட சிவனின் பாதம் பணிந்தார்கள். அவர்களிடம் சிவபெருமான் சொல்கிறான் – “பொறுமை உடைய ஞானி உலகத்திலேயே மிக நல்லவன் ஆவான். பொறுமை உடையவன் திருமாலையும் பிரமனையும் விட மேலானவன் ஆகிறான்”.


பொறாமை என்னும் பல்லி

பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே. –  (திருமந்திரம் – 539)

விளக்கம்:
பொறாமையைப் பற்றி நிற்பவர்கள் நெஞ்சில் பல்லி ஒன்றுண்டு. பொறாமை கொண்டவர்களால் தன்னைச் சுற்றி உள்ள நல்ல விஷயங்களைக் கவனிக்க முடியாது. நல்ல சுவையையும் நறுமணத்தையும் கூட நுகர முடியாதபடி  அவர்களது மனத்தில் உள்ள பல்லி நாவையும் மூக்கையும் கட்டிப்போடுகிறது. இப்படித் தடைப்பட்டு சிதைகின்ற மனத்தை செழுமைப்படுத்துவது வற்றாத பொறுமையே!


ஞானியை நாடினால் தீவினை தீரும்

ஞானியை நிந்திப் பவனும் நலன் என்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வார் அவன்வயம்
போன பொழுதே புகுஞ்சிவ போகமே. –  (திருமந்திரம் – 538)

விளக்கம்:
சிவஞானிகளை நிந்திப்பவர்கள், இதுவரை தாம் சேர்த்து வைத்த நல்வினைகளின் பலனை இழப்பார்கள். நன்மையை நாடி ஞானிகளை வணங்குபவர்கள், தம்முடைய தீவினைகள் எல்லாம் நீங்கப்பெறுவார்கள். சிவஞானிகளுக்கு அடியவர் ஆனவர்கள் சிவனருளில் திளைப்பார்கள்.


சிவனடியாரை இகழாதீர்!

ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்
ஆண்டான் அடியரை வேண்டாது பேசினோர்
தாம்தாம் விழுவது தாழ்நர காகுமே. –  (திருமந்திரம் – 537)

விளக்கம்:
சிவனடியார்கள் யாருக்கு விரோதமாக இருக்க முடியும்? ஆனால் அனைவரும் சிவனடியார்களை விரோதிகளாகவே பார்க்கிறார்கள். சிவனடியார்கள் பிச்சை எடுத்து உண்பவர்கள், யாருடைய வம்புக்கும் அவர்கள் போவதில்லை. தானுண்டு சிவனுண்டு என இருக்கும் அடியாரை இகழ்ந்து பேசக்கூடாது. அப்படி சிவனடியாரை இகழ்பவர்கள் கீழான நரகத்தை அடைவார்கள்.


ஞானாசிரியரை குருவாக ஏற்க வேண்டும்

கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
மெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்
கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக்
கைப்பிட்டுண் பான்போன்றுங் கன்மிஞானிக் கொப்பே. –  (திருமந்திரம் – 536)

விளக்கம்:
முன்வினைகளைச் சுமப்பவர்கள் கன்மிகள். அவர்களை குருவாக ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஞானாசிரியர்களை விட்டு கன்மிகளை குருவாக ஏற்கும் செயல், கையில் உள்ள மாணிக்கத்தை எறிந்து விட்டு காலில் அகப்படும் சாதாரணக் கல்லைத் தூக்கிச் சுமப்பவனின் விதி போன்றதாகும். கையில் உள்ள நெய், பால், தயிர் ஆகியவற்றை விட்டு விட்டு ஒன்றுக்கும் உதவாத மாவை எடுத்து சாப்பிடுவது போன்றதாகும், கன்மிகளை நாடி குருவாக ஏற்றுக்கொள்ளும் செயல்.


ஞானகுருவுக்கு அவதூறு நேரக்கூடாது

சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்
நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே. –  (திருமந்திரம் – 535)

விளக்கம்:
நமக்கெல்லாம் ஞானவழியைக் காண்பிக்கும் குருவை நோக்கி பொய்யான குற்றச்சாட்டுக்கள் வரக்கூடாது, அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அந்நாட்டில் நன்னெறியும் ஞானமும் தங்காது. நெடுங்காலமாக விளங்கி வரும் பல்வேறு துறைகளின் திறமைகள் எல்லாம் அழியும். நாடு பலவழிகளிலும் கெட்டு பஞ்சமும் வந்து சேரும்.


சிவனடியார்க்கு தீமை செய்யக்கூடாது

ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே. –  (திருமந்திரம் – 534)

விளக்கம்:
சிவனடியார்கள் மனம் கலங்கும்படியான நிலை ஒரு நாட்டில் ஏற்படக்கூடாது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அந்நாடும் அந்நாட்டின் சிறப்பும் அழிந்திடும். இந்திரனின் ஆட்சிப் பீடமும், நாட்டின் மன்னரின் ஆட்சிப் பீடமும் நாசமாகும். இது நம் நந்தியம்பெருமானின் ஆணை!


குருவுக்கு தீமையிழைக்கக் கூடாது!

மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.  –  (திருமந்திரம் – 533)

விளக்கம்:
ஓர் எழுத்து மந்திரமான பிரணவத்தை உபதேசம் செய்த தவஞானியான குருவின் மனம் நோகும்படியான செயல் எதையும் நாம் செய்யக்கூடாது. குருவின் மனம் நோகும்படியான தீமைகளைச் செய்தவர்கள் நூறு பிறவிகள் நாயாகப் பிறந்து கீழான வாழ்வு பெற்று மண்ணோடு மண்ணாவார்கள்.