பரியங்க யோகம்

பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திக்
காயக் குழலி கலவி யொடுங்கலந்
தூசித் துளையுறத் தூங்காது போகமே – 825

விளக்கம்:
வாசனைத் திரவியங்கள் பூசிய தலை மயிரை உலர வைத்து, மணம் மிகுந்த பூக்களைச் சூட்டி சிவ கலவிக்குத் தயார் ஆகிறாள் நம்முடைய மூலாதாரத்தில் குடியிருக்கும் குண்டலினி ஆகிய சக்தி. சிவ கலவிக்கு தயாராக இருக்கும் சக்தியை, நாம் நமது யோகப் பயிற்சியால் சகசிரதளத்தில் இருக்கும் சிவனோடு சேர்ந்து கலவி கொள்ளச் செய்யலாம். முந்தைய பாடல்களில் பார்த்தது போல், மனத்தை ஊசி துளைப்பது போல் சுழுமுனையில் ஒன்றச் செய்து யோகப்பயிற்சி செய்தால், சகசிரதளத்திற்கான படிக்கதவு திறக்கப் பெறும். சக்தியும் அவ்வழியே மேலே சென்று சிவனோடு கலவி கொள்வாள். அக்கலவியினால் நீடித்த இன்பம் பெறலாம்.

அகக் கலவியினால் நீடித்த இன்பம் பெறலாம்.

காயக்குழலி – குண்டலினி, போகம் – இன்பம்

சிவன் நம்முள்ளே குடி கொள்வான்!

முன்னெழு நாபிக்கு முந்நால் விரற்கீழே
பன்னெழு வேதப் பகலொளி யுண்டென்னும்
நன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திடத்
தன்னெழு கோயில் தலைவனு மாமே – 824

விளக்கம்:
தாமரை மலரைப் போல விரிந்து மேலே எழும் தன்மையுடைய குண்டலினி சக்தி நம்முடைய கொப்பூழுக்கு பன்னிரெண்டு விரற்கடை அளவு கீழே உள்ளது. இந்த குண்டலினி சக்தி பகலொளியைப் போன்றது என வேதங்களால் போற்றப்படுகிறது. நன்மை தரும் அந்த குண்டலினியின் எழுச்சியில் நம் சிந்தையை ஒளி விடும் தீபம் போல நேராக நிறுத்துவோம். சிந்தையில் குண்டலினியின் எழுச்சியைக் கவனித்து, நம் கவனத்தை அதிலேயே நிறுத்தினால், நம் உடல் என்னும் கோயிலில் சிவபெருமான் குடி கொள்வான்.

கேசரியோகத்தினால் சிவன் நம்முள்ளே குடி கொள்வான்.

பன்மம் – தாமரை, வேதப் பகலொளி – வேதத்தில் பகல் ஒளி எனப் போற்றப்படும் குண்டலினி

தீபம் போன்ற அழகான சிந்தை!

தூர தரிசனஞ் சொல்லுவன் காணலாங்
காராருங் கண்ணி கடைஞான முட்பெய்தி
ஏராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற்
பாரா ருலகம் பகன்முன்ன தாமே – 823

விளக்கம்:
தொடர்ந்து கேசரியோகப் பயிற்சி செய்பவர்கள் ஐம்பூதங்களின் இயக்கத்தையும் தம்முள்ளே கண்டு, இந்த உலகம் இயங்கும் முறையைப் பற்றிய தூரதரிசனம் பெறுவார்கள். தூரதரிசனம் பெற்ற அவர்கள் கருமை நிறக் கண்களை உடைய பராசக்தியின் அருள் பெற்று ஞானத்தின் எல்லையை அறிவார்கள். எழுச்சி கொண்டு ஒளி விடும் தீபம் போன்ற அழகான சிந்தையைக் கொண்டவர்களுக்கு, பரந்த இவ்வுலகம் வெளிச்சம் நிறைந்ததாகத் தெரியும்.

கேசரியோகத்தினால் சிந்தை தெளிவு பெறும்.

காராரும் – கருமை நிறம் பொருந்திய, கடைஞானம் – ஞானத்தின் எல்லை, ஏராரும் – எழுச்சி நிறைந்த, பாராரும் – பரந்த, பகன் – சூரியன்

தூர தரிசனம் பெறலாம்!

சொல்லலு மாயிடு மாகத்து வாயுவுஞ்
சொல்லலு மாகு மண்ணீர்க் கடினமுஞ்
சொல்லலு மாகும் இவையஞ்சுங் கூடிடிற்
சொல்லலு மாந்தூர தெரிசனந் தானே – 822

விளக்கம்:
கேசரியோகப் பயிற்சி செய்யும் போது நம் உடலில் வாயு இயங்கும் முறையை உணரலாம். கடினம் தான் என்றாலும், இன்னும் சிறிது முயற்சி செய்தால், நம் உடலின் உள்ளே நிலத்தையும் நீரையும் உணரலாம். இன்னும் கடுமையாக யோகப்பயிற்சி செய்தால், ஐம்பூதங்களின் தன்மையையும் நம் உடலின் உள்ளே அறிந்து உணரலாம். அகத்தினுள் ஐம்பூதங்களின் இயக்கத்தை உணர்ந்தால், இந்த உலகம் இயங்கும் முறையையும் அறியலாம்.

கேசரியோகத்தினால் ஐம்பூதங்களின் இயல்பை, செயல்படும் முறையை தூரதரிசனத்தில் அறிந்து கொள்ளலாம்.

ஆகம் – உடல், தூர தரிசனம் – தூரத்தில் உள்ளவற்றை இங்கிருந்தே பார்க்கும் திறன்

நம் அனுபவத்திலேயே தெரிந்து கொள்ளலாமே!

விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னி
நலங்கிடுங் கண்டத்து நாபியி னுள்ளே
வணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச்
சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே – 821

விளக்கம்:
மூலாதாரத்தில் விளங்கும் பிராணனை மேல் எழ தியானித்து கேசரியோகப் பயிற்சி செய்வோம். பயிற்சியின் போது, சுருங்கி விரிந்து அசையும் நாபியின் உள்ளும் தொண்டைப்பகுதியின் உள்ளும் பிராணனை மேலே ஏற்றி கும்பகம் செய்வோம். அப்படி பிராணனை மேலே ஏற்றி கும்பகம் செய்தால், மதி மண்டலத்தில் அமுதம் ஊறும். அமுதம் ஊறும் இந்நிலை வாய்த்தால், நாம் அதிலேயே மூழ்கி இருக்கலாம், மற்ற உலக விஷயங்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

கேசரியோகத்தினால் ஏற்படும் பலன்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ? நம் அனுபவத்திலேயே தெரிந்து கொள்ளலாமே!

உன்னி – நினைத்து, நலங்கிடுதல் – அசைதல், கண்டம் – தொண்டை, கும்பிச்சு – கும்பகம் செய்து, உணங்கிட – செயலற

நம்முள்ளே ஒரு விளக்கேற்றுவோம்

பையினி னுள்ளே படிக்கத வொன்றிடின்
மெய்யினி னுள்ளே விளங்கும் ஒளியதாங்
கையினுள் வாயுக் கதித்தங் கெழுந்திடின்
மையணி கோயில் மணிவிளக் காமே – 820

விளக்கம்:
கேசரியோகப் பயிற்சி செய்து, நம் தொண்டைப் பகுதியில் உள்ள அண்ணாக்கில் மனத்தை ஒன்றச் செய்வோம். படிக்கதவாகிய அண்ணாக்கில் மனம் ஒன்றினால், உள்ளே ஒளி பாய்ச்சியது போல நம் உடல் புத்துணர்ச்சி பெறும். நம் மூச்சுக்காற்று நாம் சொன்னபடி இயங்கி, நம் கைவசப்படும். மூச்சுக்காற்று நம் வசப்பட்டு, குண்டலினி சக்தியை மேலே ஏற்றினால், இருளாக இருக்கும் நம் உடல் என்னும் கோயில், மணி விளக்கு ஏற்றியது போல் வெளிச்சம் பெறும்.

கேசரியோகத்தினால் உடல் என்னும் கோயிலில் விளக்கேற்றலாம்.

பை – உடல், படிக்கதவு – அண்ணாக்கு, கையினுள் – கைவசப்படுதல், மையணி கோயில் – இருளாய் இருக்கும் கோயில்

உடலை அழியாமல் காக்கலாம்!

ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமருங்
கழிகின்ற வாயுவுங் காக்கலு மாகும்
வழிகின்ற காலத்து வட்டக் கழலைப்
பழிக்கின்ற காலத்துப் பையகற் றீரே – 819

விளக்கம்:
கேசரியோகப் பயிற்சியில் நாம் வெளியேறும் மூச்சுக்காற்றை வீணாகாமல் காக்க வேண்டும். வெளியேறும் மூச்சுக்காற்றை வீணாகாமல் உள்ளே அமரச் செய்தால், தலை உச்சியில் சுரக்கும் அமுதம் மதி மண்டலத்தில் வழிந்தோடும். அமுதம் வழிந்தோடும் காலத்தில், வட்ட வடிவில் நம்மைச் சுற்றியிருக்கும் உலக விஷயங்களில் இருந்து விலகி இருப்போம். உலக விஷயங்களை வெறுத்து நாம் ஒதுங்கி நின்றால், நம்முடைய உடல் நெடுங்காலத்துக்கு அழியாமல் இருக்கும்.

கேசரியோகத்தினால் உடல் அழியாமல் காக்கலாம்.

வட்டக்கழலை – வட்ட வடிவிலான வளை, பை – உடல்

கர்ம வினைகள் தீரும்!

மண்டலத் துள்ளே மனவொட்டி யாணத்தைக்
கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிற்
பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக்
குண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே – 818

விளக்கம்:
கேசரியோகப் பயிற்சியால் மதி மண்டலம் மலர்ந்து நிற்கும் நிலையை முந்தையப் பாடலில் பார்த்தோம். மதி மண்டலத்தில் ஊறும் அவ்வமுதத்தை கழுத்துப் பகுதிக்குக் கீழே போகாதவாறு, மூச்சைக் கட்டி, நாம் பயிற்சி செய்ய வேண்டும். மனத்தளவில் ஒரு ஒட்டியாணத்தைக் கட்டி, நம் பிராணன் கீழே இறங்காதவாறு  பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பயிலும் போது, நம் உடலுக்குள்ளே சூரிய ஒளி பாய்வது போன்ற ஒரு வெளிச்சமும் தெளிவும் உண்டாகும். தனது காதுகளில் குண்டலங்களை அணிந்திருக்கும் நம் சிவபெருமானும், நம்மை நம் கர்மவினைகளில் இருந்து விலக்கிக் காப்பான்.

கேசரியோகத்தினால் கர்ம வினைகள் தீரும்.

கண்டகம் – கண்டம், தொண்டைப்பகுதி, பண்டகம் – உடலின் உள்ளே, கூத்தொழிந் தானே – கர்ம வினைகளில் இருந்து காத்து நிற்பானே

மதி மண்டலம் மலரும்

இருந்த பிராணனும் உள்ளே எழுமாம்
பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய
விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே – 817

விளக்கம்:
தொடர்ந்து கேசரியோகப் பயிற்சி செய்யும் போது, மூலாதாரத்திலேயே இருக்கும் பிராணன், மேலே எழும். மேலே எழும் அந்த மூச்சுக்க்காற்று, பிரியத்துடன் சுழுமுனை நாடியை நாடி இன்னும் மேலே எழும். இன்னும் மேலே சென்றால், சகசிரதளத்தில், அந்த சிவபெருமானின் உலகத்தில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட அந்தத் தாமரையை நம் பிராணன் தொட்டு இன்னும் மேலே எழும். அப்படி உச்சியில் பிராணன் எழும்போது, நம் மதி மண்டலமே மலர்ந்து நிற்கும். நாம் மகிழ்வுடன் வாழலாம்.

கேசரியோகத்தினால் மதி மண்டலம் மலர்ந்து, நாம் மகிழ்வுடன் வாழலாம்.

பரிதல் – பிரியம் கொள்ளுதல், தண்டு – சுழுமுனை நாடி,

தத்துவஞானம் என்னும் செல்வத்தைப் பெறலாம்

குணமது வாகிய கோமள வல்லி
மணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில்
தனமது வாகிய தத்துவ ஞானம்
இனமது வாக இருந்தனன் தானே – 816

விளக்கம்:
கேசரியோகத்தின் போது, அழகும் இளமையும் கொண்ட பராசக்தி நம்முள்ளே குடி கொள்வாள் என்பதை முந்தைய பாடல்களில் பார்த்தோம். குண்டலினி சக்தியாகிய பராசக்தி, சகசிரதளத்தில் இருக்கும் சிவபெருமானுடன் கூடி மகிழ்ந்தால், அவர்கள் அருளாலே நமக்கு தத்துவ ஞானம் எல்லாம் விளங்கப் பெறும். நாமும் அந்த சிவபெருமானின் அருள் பெற்று அவனுடைய ஆளுகையில் நீங்காது இருப்போம்.

கேசரியோகத்தினால் தத்துவஞானம் என்னும் செல்வத்தைப் பெறலாம்.

கோமளம் – இளமை, மென்மை, அழகு, மணம் – கூடுதல்