தனஞ்சயன் இல்லையென்றால் உயிர் இல்லை!

இருக்குந் தனஞ்சயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற் றிருபத்து நான்கின்
இருக்கு முடலி லிருந்தில தாகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே. – (திருமந்திரம் – 654)

விளக்கம்:
நமது உடலில் இருக்கும் ஒன்பது வாயுக்களோடும் தனஞ்சயன் என்னும் காற்று பொருந்தியிருக்கிறது. தனஞ்சயன் என்னும் காற்று இல்லாவிட்டால் இந்த உடலில் உயிர் இல்லை என்று அர்த்தம். தனஞ்சயன் நீங்கிய உடல் அழுகத் தொடங்கி விடும். இருநூற்று இருபத்து நான்கு உலகங்களிலும் இது தான் நடைமுறை.

தனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று

ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்சயன்
ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே. – (திருமந்திரம் – 653)

விளக்கம்:
நமது உடலில் ஒன்பது வாயுக்கள் ஒன்றுகொன்று சேர்ந்திருந்து இயங்குகின்றன. அவை பிராணன், அபானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், உதானன் ஆகியன ஆகும். இந்த ஒன்பது காற்றுக்களோடு தனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று சேர்ந்து இயங்கினால் தான் நம்முடைய உடலும் உயிரும் சேர்ந்திருக்கும்.

சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே!

சித்தந் திரிந்து சிவமய மாகியே
முத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாக ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தின் திருநடத் தோரே. – (திருமந்திரம் – 652)

விளக்கம்:
சிவத்தைப் பற்றியே நினைத்திருந்து சித்தமெல்லாம் சிவமயம் ஆகிய சிவமுத்தர் மௌனமே முத்தி அடையும் வழி என்னும் உண்மையை உணர்ந்தவர்கள். அவர்கள் ஐம்புலன்களின் தொடர்பையும் அறுத்து எறிந்து மனம் சுத்தம் பெற்றவர்கள். சுத்தம் பெற்ற அவர்களின் சித்தமெல்லாம் சிவபெருமானின் திருநடனமே நிறைந்திருக்கும். அந்நடனத்திலேயே அவர்கள் மனம் லயித்திருப்பார்கள்.

தினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்

முந்திய முந்நூற் றறுபது காலமும்
வந்தது நாழிகை வான்முத லாயிடச்
சிந்தைசெய் மண்முதல் தேர்ந்தறி வார்வலர்
உந்தியுள் நின்று உதித்தெழு மாறே. – (திருமந்திரம் – 651)

விளக்கம்:
இத்தனை காலமும் தினமும் காலை வானம் வெளிச்சம் பெற்று விடிகிறது. அன்றைய நாழிகைக் கணக்கு ஆரம்பிக்கிறது. ஆனால் நமக்கு அந்நேரம் ஆன்மிகச் சிந்தனை வருவதில்லை. நாம் தினந்தோறும் அதிகாலையில் மண் முதலான பஞ்ச பூதங்களோடு மனம் ஒன்றித் தியானம் செய்ய வேண்டும். அப்படி தினமும் செய்து வந்தால் சுவாதிட்டானம் எனப்படும் கொப்பூழ் பகுதியில் இருந்து குண்டலினி மேலெழுவதை உணரலாம்.

சித்தியை விட முக்தியே சிறந்தது!

தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் குறையில்லை
யாங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமிக்
கோங்கி வரமுத்தி முந்திய வாறே. – (திருமந்திரம் – 650)

விளக்கம்:
அட்டாங்க யோகத்தில் நிற்கும் யோகி அணுவின் தன்மையான அணிமா எனும் சித்தியையும், உலகத்தின் மொத்த உயிர்களையும் தாங்கி நிற்கும் தன்மையான மகிமா எனும் சித்தியையும்  அடைகிறார். அவற்றைப் பெறுவதில் குறை ஏதும் இல்லை. ஆனால் இந்தச் சித்திகள் வந்து சேர்வதற்கு முன்பே அட்டாங்க யோகத்தின் போது ஓம் என்னும் நாதம் எழுந்து சகசிரதளத்தை அடைந்து முக்தி வந்து சேரும். சித்தி பெறுவதை விட முக்தி பெறுவதே சிறந்ததாகும்.

அட்டமா சித்திகள்!

தானே அணுவுஞ் சகத்துத்தன் நோன்மையும்
மானாக் கனமும் பரகாயத் தேகமுந்
தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்
ஆனாத வுண்மையும் வியாபியு மாம்எட்டே. – (திருமந்திரம் – 649)

விளக்கம்:
அட்டாங்க யோகத்தை பயில்வதால் நாம் அடையும் எட்டுச் சித்திகள் இவையாகும்.

1. அணிமா – அணுவைப் போல நுட்பமான உடல் ஆதல்
2. மகிமா – உலகளவு பெரிய உருவம் கொள்ளுதல்
3. கரிமா – அளவிட முடியாத கனம் கொள்ளுதல்
4. இலகிமா – வானத்தைப் போல லேசாக இருத்தல்
5. பிராத்தி – அழியாத உடலைப் பெறுதல்
6. பிராகாமியம் – பிற உடலில் புகுதல்
7. ஈசத்துவம் – மேம்பட்ட நிலையை அடைதல்
8. வசித்துவம் – யாவரையும் தன்வயப் படுத்துதல்

பன்னிரெண்டாம் ஆண்டு அட்டமாசித்தி!

ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்
ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி
சீரொன்று மேலேழ் கீழேழ் புவிச்சென்று
ஏரொன்று வியாபியாய் நிற்றல்ஈ ராறே. – (திருமந்திரம் – 648)

விளக்கம்:
மூச்சுப்பயிற்சியின் போது நாம் மூச்சை இழுக்கும் போது பூரித்து நிற்கிறோம். தொடர்ந்து பத்தாண்டுகள் பூரித்துப் பயிற்சி செய்தால் குண்டலினி கீழிறங்காமல் மேலேறியவாறு இருக்கும். உருத்திரனைப் போல விளங்கலாம். இன்னும் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் பதினோறாம் ஆண்டு குண்டலினி  இன்னும் மேல் ஏறுவதைக் காணலாம். பன்னிரெண்டாம் ஆண்டு அட்டமா சித்திகளைப் பெறலாம். அட்டமாசித்தி பெற்றால் மேலே உள்ள ஏழு உலகங்களுக்கும், கீழே உள்ள ஏழு உலகங்களுக்கும் தடையின்றிப் போய் வரலாம். பன்னிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து யோகப் பயிற்சி செய்தால் பொலிவு பெறுவதுடன் எங்கும் நிறைந்து நிற்கும் ஆற்றல் பெறலாம்.

யோகத்தினால் உடல் பொலிவு பெறலாம்

ஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாந்
தாழா நடைபல யோசனை சார்ந்திடுஞ்
சூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை
தாழான ஒன்பதிற் றான்பர காயமே. – (திருமந்திரம் – 647)

விளக்கம்:
தொடர்ந்து ஏழு ஆண்டுகள் யோகத்தில் நிற்பவர்களுக்கு சண்டமாருதம் போல் வேகமாக நடக்கும் திறன் வாய்க்கும். அவர்களால் தளராமல் பல யோசனை தூரம் நடக்க முடியும். எட்டாவது ஆண்டில் யோகத்தினால் சூழப்பட்டிருக்கும் போது முடி நரைப்பதும் தோல் சுருங்குவதும் நின்று விடும். ஒன்பதாம் ஆண்டு யோக வாழ்வில் அமிழ்ந்திருக்கும் போது உடல் தேவ சரீரம் போல் பொலிவுடன் காணப்படும்.

அறிவால் அட்டமாசித்தி கிடைக்காது!

நாடும் பிணியாகு நஞ்சனஞ்சூழ்ந்தக்கால்
நீடுங் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்
பீடொன்றி னால்வாயாச் சித்திபே தத்தின்
நீடுங் துரங்கேட்டல் நீண்முடி வீராறே. – (திருமந்திரம் – 646)

விளக்கம்:
உறவினர்களும் சுற்றத்தாரும் நம்மை சூழ்ந்திருந்தால், நோய் தான் நம்மை நாடி வரும். மிகுந்த கலை அறிவு, மேதைமை, கூர்ந்த ஞானம், வலிமை ஆகியவற்றால் அட்டமாசித்திகளை அடைய முடியாது. உலக வாழ்க்கையில் இருந்து வேறுபட்டு, பன்னிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து யோகத்தில் நின்று, தியானத்தில் மட்டுமே கேட்கக் கூடிய ஒலியைக் கேட்டு இருந்தால் அட்டமாசித்தி கிடைக்கப் பெறலாம்.

மூச்சுப் பயிற்சியால் அட்டமாசித்தி பெறலாம்

மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின்
உதய மதுநா லொழியவோ ரெட்டுப்
பதியுமஈ ராறாண்டு பற்றறப் பார்க்கில்
திதமான ஈராறு சித்திக ளாமே.– (திருமந்திரம் – 645)

விளக்கம்:
மூச்சுப்பயிற்சியின் போது, சந்திரகலை எனப்படும் இடது பக்கம் இழுக்கப் பெறும் மூச்சு பன்னிரெண்டு அங்குல அளவில் இருக்கும். அவற்றில் எட்டு அங்குல அளவு மூச்சு உள்ளே பதிந்து நான்கு அங்குல அளவு பிங்கலை எனப்படும் வலது பக்கம் வெளி வரும். பன்னிரெண்டு ஆண்டுகள் பற்றில்லாமல் தொடர்ந்து மூச்சுப் பயிற்சி செய்து இதைக் கவனித்து வந்தால், அட்டமாசித்தி எனப்படும் எட்டுச் சித்திகளை உறுதியாக அடையலாம்.