பனை மரத்தின் மேல் ஒரு பருந்து

மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நின்இன்பந் தானே.  – (திருமந்திரம் – 47)

விளக்கம்:
இல்லறத்தில் இருந்தபடி ஈசனை வழிபட்டு வருபவர் பெருந்தவம் செய்பவர்க்கு ஒப்பாவர். அப்பெருமான் தம் உள்ளத்தில் எழுந்தருளி இருப்பதை உணர்ந்திருப்பவர் அன்புடையவராய் இருப்பர். பனை மரத்தின் மேல் அமர்ந்திருக்கும் பருந்து, அந்த மரத்தில் உள்ள பனம் பழத்தைப் பற்றி நினையாமல் உணவுக்காக கீழிறங்கி வரும். அது போலவே சிலர் தம்முள்ளே இருக்கும் ஈசனைப் பற்றிய நினைவில்லாமல் இன்பத்தை வெளியே தேடுகிறார்கள். அவர்களுக்கு உண்மையான இன்பம் கிடைக்காது.

(மனை – இல்லறம்,  மாதவர் – பெருந்தவம் செய்பவர்)

Those who worship the Lord, even while in domestic life, are equal to sages.
Those who feel the existence of God in their heart, will have great affection.
Like the kite over the palm tree not aware of the fruit in the tree,
some people do not feel the inside God. They won't find the real Bliss.

கரும்பு கசக்கும் தேன் புளிக்கும்

கரும்புந் தேனுங் கலந்ததோர் காயத்தில்
அரும்புங் கந்தமு மாகிய வானந்தம்
விரும்பியே யுள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்புங் கைத்தது தேனும் புளித்ததே.  – (திருமந்திரம் – 2976)

விளக்கம்:
நம் உடலில் காமமாகிய கரும்பும், அதன் சுவையாகிய தேனும் கலந்துள்ளது. அதே உடலில் தோன்றும் சிவானந்த வாசனையை உணர்ந்து நமது உள்ளம் அதை விரும்பியிருந்தால் மனம் மேலான உணர்வு அடையும். அதன் பிறகு கரும்பின் சுவை கசப்பாகவும், தேனின் சுவை புளிப்பாகவும் இருக்கும்.

சிவானந்த உணர்வை அடைந்து மனம் அதிலே பொருந்தி விட்டால், காம உணர்வு நம்மை விட்டு அகலும்.

(அரும்பும் – தோன்றும்,  கந்தம் – வாசனை)

In this body, cane like sexual desire and honey like its pleasure are there.
We have to feel the sprouted fragrance of Siva Bliss in our body,
Our mind soak in that feeling, reaching a higher state.
Then the sugarcane will be bitter in taste and the honey will be sour.

துரை


தனக்கு ஒரு உவமை இல்லாதவன்

சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.  – (திருமந்திரம் – 5)

விளக்கம்:
சிவபெருமானைப் போல் ஒரு தெய்வத்தை உலகமெங்கும் தேடினாலும் பார்க்க முடியாது. அப்பெருமானுக்கு உவமையாய் மனிதர்கள் யாரையும் ஒப்பிட முடியாது. அந்தச் சிவபெருமான் இந்த உலகத்தையும் கடந்து நின்று பொன்னொளியாய் மின்னுகிறான். செந்நிறமான சடை முடி கொண்ட தாமரையான் அவன்.

Even if we make a search, we can't find a God like Siva.
He is beyond comparison, not resembling anybody.
Glittering like gold, He stands beyond this world.
He who has red color hair, possess lotus like nature.

நஞ்சு உண்ட சிவபெருமான்

சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்
கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.   – (திருமந்திரம் – 41)

விளக்கம்:
திருப்பாற்கடலில் சீறி எழுந்த நஞ்சினை உண்டு தேவர்களை காத்தவன் சிவபெருமான். நாம் நம் மனதை திருத்தி பண்படுத்தி அக்கடவுளை  வணங்குவோம்.  ஒளியான நெற்றியுடைய உமையாளை தன்னுடைய ஒரு பாகமாய் கொண்டு பெருமை செய்த சிவபெருமான், நம்மிடம் பெண் மானைக் கண்ட ஆண் மானைப் போல கூடி நின்றானே!

(புனம் – திருத்தப்பட்ட நிலம்,  கனம் – பெருமை,   வாள் – ஒளி,  நுதல் – நெற்றி)

Our Lord consumed deathly poison to save Devas.
We worship Him in our reformed heart.
The Lord who possess Uma as a part of Him,
conjoint with us like pairing deer.

சிவனை வணங்க எளிமையான முறை

வரைத்து வலஞ்செய்யு மாறுஇங்குஒன்று உண்டு
நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி
உரைத்து அவன் நாமம் உணரவல் லார்க்குப்
புரைத்துஎங்கும் போகான் புரிசடை யோனே.   – (திருமந்திரம் – 1774)

விளக்கம்:
நம் சிவபெருமானை வழிபடும் முறையை நாம் இவ்வாறு நிர்ணயம் செய்து, அதன்படி தொடர்ந்து செய்யலாம். பொங்கி வரும் கங்கை நீரையும், மலர்களையும் ஏந்தி சிவநாமம் சொல்லி பூஜித்து அவன் அருளை உணரலாம். அப்படி செய்து வருபவரை விட்டு சுருள் முடி கொண்ட ஈசன் நீங்க மாட்டான்.

தினமும் சிவபெருமானை நீரும், பூக்களும் கொண்டு வணங்கி சிவநாமம் சொல்லி வந்தால் அந்த ஈசன் நம்மை விட்டு நீங்காதிருப்பான். இது மிகவும் எளிமையான முறையாகும்.

(வரை – நிர்ணயம்,  நிரைத்து – பொங்கி,   புரைத்து – தப்புதல்)

There is a simple way to worship Lord Siva.
For those who worship with water & flowers in hand, 
Chanting his Holy name to feel His Grace,
the Lord will be with them always.

மவுனமான நேரம்

வாக்கும் மனமும் இரண்டும் மவுனமாம்
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்
வாக்கும் மனமும் மவுனமாம் சுத்தரே
ஆக்கும்அச் சுத்தத்தை யார்அறி வார்களே.  – (திருமந்திரம் – 1896)

விளக்கம்:
மவுனம் என்பது வாக்கு, மனம் இரண்டுமே அமைதியாக இருத்தல். வாய் மட்டும் பேசாமல் இருப்பது ஊமையாகும். வாக்கு, மனம் ஆகியவற்றை அமைதியாக, செயலற்றவையாக வைத்திருப்பவரே தூய்மை உடையவர் ஆவர். அத்தகைய தூய்மை நிலையை இங்கு யார் அறிந்திருக்கிறார்கள்!

யோக நிலையில் இருப்பவர்கள் வாய் பேசாமல் இருந்தால் மட்டும் போதாது. மனமும் செயலற்று அமைதியாய் இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்கள் தூய்மை அடைவார்கள்.

(மூங்கை – ஊமை,   சுத்தர் – தூய்மை உடையவர்)

State of silence is stillness of speech and thought.
Remaining speechless is the state of dumbness.
When we attain speechless and thoughtless state, we become pure.
But who knows this pure state to bring in.

தாய் வீடென என்னுள் புகுந்தான்

கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்
வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர்
தாயில்கொண் டாற்போல் தலைவன்என் உட்புக
வாயில்கொண் டு ஈசனும் ஆளவந் தானே.  – (திருமந்திரம் – 1728)

விளக்கம்:
கருவில் நாம் உருவான அன்றே ஐம்பூதங்களும் நம்முள்ளே குடி வந்தன. ஐந்து பூதங்களும் தம் இடத்தில் வாசல் வைத்து வழி ஏற்படுத்தி அருளினர். நம் தலைவனான சிவபெருமான், தன் தாய் வீடென உரிமையுடன் உள்ளே புகுந்தான் அவ்வாசல்கள் வழியாக. அவன் வந்துள்ள நோக்கம் நம்மை தன் அருளினால் ஆள்வதற்காகவே.

ஐம்பூதங்களின் இயக்கமே நாம் உயிர் வாழக் காரணமாய் உள்ளது. அந்த பூதங்களின் இடத்தில் ஈசன் வந்து ஆட்சி செய்யும் போது நம் வாழ்க்கை பயணம் சிறப்பாகவே இருக்கும். நாம் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.

(தாயில் – தாய் + இல் – தாய் வீடு)

The five elements entered our body, once it formed in mother’s womb.
They made gates for their places and ruling us in their ways.
Lord Siva entered our body, as if His mother’s house,
through the gates, became the master of us.


உபசாந்தம் – மன அமைதி

முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.  – (திருமந்திரம் – 2506)

விளக்கம்:
முக்திக்கு வித்து சிவஞானம். பக்திக்கு வித்து பணிந்து அவன் திருவடி பற்றி இருத்தல். சித்திக்கு வித்து சிவனுடன் பொருந்தி இருந்து தானும் சிவம் ஆதல். சக்திக்கு வித்து உயிர்களிடையே விருப்பு வெறுப்பு இல்லாமல் மன அமைதியுடன் இருத்தலே.

ஆன்மீக வாழ்வில் மன அமைதியே மிகவும் முக்கியமானதாகும், மன அமைதி மிகுந்த சக்தி தரும். மனம் அமைதி பெற, விருப்பு வெறுப்பு இல்லாதிருப்போம்.

(உபசாந்தம் – விருப்பு வெறுப்பு இல்லாமை, மன அமைதி)

Seed for mukthi (self realization) is knowledge about our primal God Siva.
Seed for bakthi (devotion) is seeking his Holy Feet.
Seed for siddhi (spiritual power) is one becoming Siva
Seed for sakthi (strength) is the state of upasanta – being peaceful.


தூங்கும் போதும் நின் திருவடியே சரண்

நெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரான்என்று
துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று
மஞ்சு தவழும் வடவரை மீதுறை
அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே.  – (திருமந்திரம் – 2707)

விளக்கம்:
நம் சிவபெருமானை நெஞ்சில் நினைந்து, வாயால் சிவாயநம என்று சொல்லி, தூங்கும் பொழுதும் நின் திருவடியே சரண் என்று இருக்க வேண்டும். அப்படி இருந்தால் பனி தவழும் கைலாய மலையில் வசிக்கும், ‘சிவாயநம’ என்னும் திருவைந்தெழுத்தின் அம்சமான சிவபெருமானின் அருளைப் பெறலாம்.

(துஞ்சு – தூங்கு,   தாள் – திருவடி,    மஞ்சு – பனி)

Thinking of the Lord in our heart, we chant SIVAYANAMA,
Even while sleeping, we seek His Holy Feet.
If so we behave, sure we’ll get the Grace of the Lord,
Who resides in the snow clad mountain Kailas, in the form of the Letters ‘SIVAYANAMA’


ஈசனைத் தின்பேன், கடிப்பேன்

அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே.  – (திருமந்திரம் – 2980)

விளக்கம்:
என் சிவபெருமானை நினைந்து உள்ளம் உருகி அழுவேன், புலம்புவேன். எலும்புகள் உருகும் அளவுக்கு இரவும் பகலும் அவனை வணங்கி இருப்பேன். என் பொன்மணியாம் அந்த இறைவனை, ஈசனைத் தின்பேன், கடிப்பேன். அவனை உறவாக்கி நட்பு கொள்வேன்.

கடிப்பேன், தின்பேன் என்பவை பக்தி மேலீட்டால் சொல்லப்பட்டவை.

(அரற்றுவன் – புலம்புவேன்,    என்பு – எலும்பு,   திருத்து – உறவாக்கு)

With melting heart, I moan and cry,
I adore you day and night, as if my bones are melting.
He is my gold, my Lord, my Siva,
I eat Him, bite Him in passion and make him friendly.