சிவனடி போற்றி!

போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே. – (திருமந்திரம்)

விளக்கம்:
தேவர்கள் சிவபெருமான் திருவடியை போற்றி வணங்குகிறார்கள். அசுரர்களும், மனிதர்களும் அவ்வாறே வணங்குறார்கள். நானும் அப்பெருமானை போற்றி என் அன்பினுள் ஒளிரச் செய்தேனே.

The Devas worship His Feet
The Asuras worship His Feet
The Humans worship His Feet
Thus I too Worship Him, and in my love He shone.

பேரின்பம்

அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிலர்தத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியார் உடன்கூடல் பேரின்ப மாமே. – (திருமந்திரம்)

விளக்கம்:
உண்மையை நாடி அறியும் விருப்பம் உள்ளவர் தேவர்களின் தலைவனான சிவபெருமானின் நெருக்கத்தை நாடுவார், சிவதத்துவத்தை விளங்கப் பெறுவார். அவர்கள் நல்ல நெறியில் நின்று பிறரையும் அவ்வாறு நிற்கும்படி செய்வார். அப்படிப்பட்ட பெரியார்களுடன் பழகுதல் பேரின்பமே!

Who seek the Truth will seek the Lord,
Will attain Siva Truth,
Will stand in good virtue.
To be friend with them Is indeed a Bliss.

முதல்வன்

அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே. – (திருமந்திரம்)

விளக்கம்:
என் அப்பனை, நந்தியை, தெவிட்டாத அமுதம் போன்றவனை, ஒப்பு இல்லாத வள்ளலை, இந்த உலகின் முதல்வனை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வழிபடுவோம். அப்படி வணங்கினால் அந்த ஈசனின் அருளைப் பரிசாக பெறலாம்.

Oh my Divine Father, Nandi, the unsurfeiting nectar!
Bounteous One, not Comparable, Head of this World!
We shall Praise him ever,
By praising, we’ll get reward of His Grace.


பிஞ்ஞகன் !

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே. – (திருமந்திரம்)

விளக்கம்:
பேரருள் தரும் சிவபெருமான் பிறப்பு, இறப்பு இல்லாதவன். பிஞ்ஞகன் என்று அழைக்கப்படுபவன். தொடர்ந்து யாவர்க்கும் இன்பம் அருளும் அவனைத் தொழுவோம். தொழுதால் அந்த சிவன் நம்மை மறவாமல் நினைந்து நம்முடய மன மயக்கத்தை அகற்றுவான்.

(வள்ளலார்  இராமலிங்க அடிகள் பிஞ்ஞகன் என்னும் பெயர் பற்றி இப்படிச் சொல்கிறார் – “பிஞ்ஞகப் பேர் மெல்லினத்தின் நல்லிசை” என்றும், அந்த பெயர் ஒலியாத நாசியை “நல்லிசைதான் தோயாத நாசித்துளை” என்று கூறுகின்றார்).

Birth-less He, having Vast Compassion,
Deathless He, Grants Joy to all,
He Never desert his devotee, We kneel to him.
By kneeling towards him we'll get free from Maya.

நாண மாட்டேன் தழுவிக்கொள்ள!

காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே.  – (திருமந்திரம்)

விளக்கம்:
சிவபெருமானே! நீ நாங்கள் கண்களால் பார்க்கும்படி  நிற்பது இல்லை. எனக்கு உன்னையன்றி வேறு உறவு யாரும் இல்லை. நான் உன்னை தழுவிக் கொள்ள வெட்கப்பட மாட்டேன். மாறுபாடு இல்லாத மனம் உடைய அடியவர் மனத்தில் ஆழப் பதிந்தவனாய் அமர்ந்திருக்கிறாய்.

(இறைவன் நம்முடைய புறக்கண்களுக்கு காட்சி தருவதில்லை. அவன் நமது மனத்தினுள் பதிந்து இருக்கிறான்.அவனை நினைத்து தியானிப்பதின் மூலம் அந்த இறைவனை நாம் உணரலாம்).

Oh the Unseen God, Who else is kin to me but You?
I'm not feeling shy to embrace You!
In the Pure Heart of your Devotee
You ever Stood Firmly.

ஆடுவேன் பாடுவேன்

சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்
றாடுவன் ஆடி அமரர்ப்பி ரான்என்று
நாடுவன் நான்இன் றறிவது தானே.  – (திருமந்திரம்)

விளக்கம்:
சிவபெருமானின் திருவருள் பெற்ற மாலையை சூடிக் கொள்வேன். அவன் நினைவை நெஞ்சிடையே வைத்துக் கொள்வேன். பெருமானே என்று போற்றிப் பாடல்கள் பாடுவேன். பல வகையான மலர்களால் அர்ச்சித்து வணங்கி ஆனந்தத்தில் ஆடுவேன். ஆடியபடி அந்த பெருமானையே நாடுவேன். நான் இன்று அறிவது இதுதானே!

I'll Wreathe him in Garland, Make his presence in my heart
I'll sing songs on Him, Dance with gift of Flowers
Singing and Dancing seek the Lord
These only I know today.

நினையாதவர்க்கும் அருள்பவன்!

மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன்
நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்
எனக்குஇறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே.  – (திருமந்திரம்)

விளக்கம்:
மனத்தில் தோன்றும் மாய நாடனான சிவபெருமான் நாம் மனத்தில் நினைப்பதை அறிவான் என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. சிலர் இறைவன் தன்னிடம் அன்பாய் இல்லை என்று சொல்லுவார், ஆனால் இறைவன் தன் ஆளுமையிலிருந்து தப்ப நினைப்பவருக்கும் அருள் செய்கிறான்.

(இறைவன் தன்னை நினையாதவரையும் காத்து நிற்கின்றான்).

The Lord who rise inside our mind
He knows our thoughts, but we are not aware of it
A few may tell 'God is not loving me'
But the Lord saves those people too who are not seeking him.

எல்லாம் சிவமயம்

தானே தனக்குத் தலைவனு மாய்நிற்கும்
தானே தனக்குத் தன்மலை யாய்நிற்கும்
தானே தனக்குத் தன்மய மாய்நிற்கும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.  – (திருமந்திரம்)

விளக்கம்:
தானே தன்னுடைய கடவுளாய் நிற்கின்றான். தான் வசிக்கும் மலைகளில் அவனே மலையாகவும் நிற்கின்றான். தனக்கு தானே சிவமயமாய் நிற்கின்றான். அந்த ஈசன் தனக்கு தலைவன் தானே ஆம்.

(இங்கே நிற்கும் என்று சொல்லப்படுவது அதன் தன்மையாய் உள்ளான் என எடுத்துக் கொள்ளலாம். அதாவது அவனே தலைவன், அந்த தலைவனின் தலைமைத் தன்மையும் அவனே. மலையில் இருப்பதும் அவனே, மலைக்கு அதன் தெய்வத் தன்மையை தருவதும் அவனே. சிவமயமாய் இருப்பது அவனே. அந்த சிவமயத்தன்மையும் அவனே. இதெல்லாம் எப்படி என்றால் அவன் தலைவனுக்கு தலைவனாய் இருப்பதால்).

Himself he stands as his Lord
Himself he stands as Mountain where he Resides
Himself he stands as His Pervasive Presence
Himself he is the God of Himself.

உருக்கும் உணர்வு அவனே

இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளே
உருக்குஉணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குஉரு வாகிய வேதியர் சொல்லும்
கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே.  – (திருமந்திரம்)

விளக்கம்:
கம்பீர ஒலியுடன் வேதியர் சொல்லும் அழகிய வேதத்தில் மந்திர வடிவமாகவும், மனதை உருக்கும் உணர்வாகவும், அந்த வேதத்தின் நுண்ணிய கருப்பொருளாகவும் உடையவன் முக்கண்களை உடைய சிவனே ஆம்.