கண்டு கொண்டேன்

தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாங்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே. – (திருமந்திரம் – 1589)

விளக்கம்:
உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் தலைவன் சிவபெருமான். அவன் உயிர்களில் பொருந்தியிருக்கும் தன்மையை யாரும் அறிந்திருக்கவில்லை. இது பற்றி ஒவ்வொருவருக்கும் மாறுபாடான பல கருத்துக்கள் உள்ளன. நான் இந்த சச்சரவுகளுக்குள் சிக்காமல் எல்லா உயிர்களையும் தம் கருவில் கொண்ட ஈசனை கண்டு கொண்டேன்.

For all living things in the world, He is the Lord
No one knows his state of existence.
I am not involved in the conflicts about the concepts on Him.
I found that God, who is the seed of all living things.

தாமரை முகத்தான்

சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்து
அந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே. – (திருமந்திரம் – 27)

விளக்கம்:
‘என்னை நேராகப் பார்’ என்று ஈர்க்கும்படியான தாமரை போன்ற முகம் கொண்டவன் ஈசன். முடிவில்லாத ஈசன் அருள் நமக்கே என்று நாள்தோறும் நந்தியை வணங்குகிறோம். அப்படி வணங்கப்படும் அவன் நம் மனத்தினில் புகுந்து நின்றானே.

(சந்தி – நேருக்கு நேராக பார்த்தல்,  அந்தம் – முடிவு,   புந்தி – மனம், அறிவு).

The Lotus like face of Siva, urge us to face it
For getting His endless Grace
We pray Nandi Daily, into our heart
the Lord Siva comes and stands there.

நம் செல்வமெல்லாம் சிவனடிக்கே!

போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடி
தேற்றுமின் என்றும் சிவனடிக் கேசெல்வம்
ஆற்றிய தென்று மயலுற்ற சிந்தையை
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.  – (திருமந்திரம் –24)

விளக்கம்:
புனிதனான அந்த சிவபெருமானின் திருவடியை புகழ்ந்து போற்றிப் பாடுவோம். மயங்கிக் கிடக்கும் நம் சிந்தையை மாற்றி நம்முடைய செல்வமெல்லாம் சிவனடிக்கே உரியதாகும் என தெளிவு பெறுவோம். அப்படி தெளிவு பெற்றவரிடத்தில் சிவன் நிலையாய் விளங்குவான்.

(மயலுற்ற – மயக்கம் அடைந்த, தேற்றுமின் – தெளியுங்கள்)

We praise and sing of his Holy Feet,
We dedicate all our treasures to his Holy Feet.
Thus who get cleared from their disturbed mind,
the Lord being with them firmly.

பொருள் உணர்ந்து வேதம் ஓதுவோம்!

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.  – (திருமந்திரம் – 52)

விளக்கம்:
வேதத்தை அதன் பொருள் உணராமல், ஓசையளவில் ஓதுபவர் எல்லாம் வேதியர் ஆக மாட்டார். வேதம் இறைவனால் கொடுக்கப்பட்டது பிரம்மப் பொருளை உணரவும், அந்தணர் செய்யும் வேள்விக்காகவும். நாமெல்லாம் மெய்ப் பொருளை உணர்ந்து கொள்வதற்காகவே வேதம் உரைக்கப்பட்டது!

Those who speak the Vedas, without know the meaning are not pundits.
God spoke the Vedas to reveal its meaning,
God spoke the Vedas to perform the Holy Poojas,
God spoke them to make us manifesting the truth.

நாண மாட்டேன் தழுவிக்கொள்ள!

காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே.  – (திருமந்திரம்)

விளக்கம்:
சிவபெருமானே! நீ நாங்கள் கண்களால் பார்க்கும்படி  நிற்பது இல்லை. எனக்கு உன்னையன்றி வேறு உறவு யாரும் இல்லை. நான் உன்னை தழுவிக் கொள்ள வெட்கப்பட மாட்டேன். மாறுபாடு இல்லாத மனம் உடைய அடியவர் மனத்தில் ஆழப் பதிந்தவனாய் அமர்ந்திருக்கிறாய்.

(இறைவன் நம்முடைய புறக்கண்களுக்கு காட்சி தருவதில்லை. அவன் நமது மனத்தினுள் பதிந்து இருக்கிறான்.அவனை நினைத்து தியானிப்பதின் மூலம் அந்த இறைவனை நாம் உணரலாம்).

Oh the Unseen God, Who else is kin to me but You?
I'm not feeling shy to embrace You!
In the Pure Heart of your Devotee
You ever Stood Firmly.

பசுவை அழைக்கும் கன்று

வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தானின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்
ஆன்நின்று அழைக்கு மதுபோல்என் நந்தியை
நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே – (திருமந்திரம்)

விளக்கம்:
வானத்திலிருந்து தானே மழை பெய்வது போல இறைவனும் தானே வந்து அருள் செய்யட்டும் என்று தயங்கி சிலர் அழைக்க மாட்டார். கன்று தன் தாய்ப் பசுவை அழைப்பது போல் நான் என் சிவபெருமானை அழைக்கிறேன், ஞானம் பெறுவதற்காகவே.

Like the rain falling from sky
The GOD will descend himself - a few think so.
I call him as if the calf calling his mother
Seeking him the true knowledge.